search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 4-ம் நாளான நேற்று காலை 3.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு காலை 3.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கிருந்து காலை 4.30 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6 மணிக்கு மீண்டும் வாகன மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.45 மணிக்கு திருச்சி ஆரியவைசியாள் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள்ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தடைந்தார். காலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    பின்னர் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் ராமநவமி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாளுக்கும், ராமருக்கும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும், இரவில் சாமி வீதி உலாவும், ராமாயண பக்தி சொற்பொழிவும் நடைபெற்று வந்தது,

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேக விழா நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. விழாவில் ராமருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் அணிவிக்கப்பட்டு, பட்டாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் ராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகாதீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவையொட்டி கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் காலை 9.45 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 4-30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 26-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி மாலை கற்பக விருட்ச வாகனத்திலும், 27-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 28-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 29-ந் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 30-ந் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 1-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

    2-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி சப்தாவரணம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    சித்ரா பவுர்ணமியையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமான முனிவர், கந்தர்வனை முதலையாக மாற சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்ர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.

    இதே போல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும் போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக சபித்தார். அவர் கஜேந்திர யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க போனபோது தடாகத்தில் இருந்த முதலை கஜேந்திர யானையின் காலை பிடித்துக்கொண்டு விட மறுத்தது. எவ்வளவோ முயன்றும் அந்த முதலை யானையின் காலை விடவில்லை.

    இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ‘ரெங்கா, ரெங்கா’ என்று தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது ஏறி அங்கு வந்த பெருமாள், தனது சக்ராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையான கஜேந்திரனுக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் ஆகும். இந்த நிகழ்ச்்சி சித்ராபவுர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் அம்மாமண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும்.

    அதன்படி ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் நேற்று காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கு பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காவிரி ஆற்றிற்கு சென்றார். அங்கு நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி 6.15 மணிக்கு நடைபெற்றது. அப்போது ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் கஜேந்திரனாக நடித்து காட்டியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு 8.15 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியின் போது அம்மாமண்டபத்தில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்க பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
    தன்னை வழிபடும் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் தீர்த்து தனது அருட்கடாச்சத்தை தருபவர் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர். சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலாக இக்கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள். பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோயிலுக்கு அனுப்பப்படுகிறது.

    கோவில் முகவரி

    அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்
    ஸ்ரீரங்கம்
    திருச்சிராப்பள்ளி - 620006
    தொலைபேசி எண் 431 - 2432246
    சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சித்திரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
    சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவிலில் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தினமும் காலை, மாலை வேளைகளில் சித்திரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    13-ந்தேதி ராம நவமியையொட்டி ராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், 14-ந்தேதி விகாரி வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அங்கி சேவையும் நடைபெறுகிறது.
    மகத்துவம் வாய்ந்த நாளான மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் உங்களின் சகல பாவங்கள் நீங்கும்.
    பெருமாளை வழிபடுவதற்கு ஒரு அற்புதமான நாளாக ஷட்திலா ஏகாதசி விரத தினம் வருகிறது. இந்த ஏகாதசி விரத தினத்தின் முக்கியத்துவம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பூலோகத்தில் வாழ்ந்த பெண் ஒருத்தி தான் செய்த புண்ணிய பலன் காரணமாக மனித உடலோடு சொர்க்கம் செல்லும் பாக்கியம் பெற்றால். சொர்க்க லோகத்தில் தனக்கு அத்தனை வசதிகள் இருந்தாலும் தன்னால் நேரத்திற்கு தான் விரும்பிய உணவு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது அங்கே ஒரு துறவி உருவத்தில் வந்த பெருமாளிடம் தனது இந்த நிலை குறித்து கூறி, அதற்கான காரணம் என்ன என்று கேட்டாள்

    அதற்கு துறவி உருவில் இருந்த பெருமாள் அந்த பெண்ணிடம் அவள் பூலோகத்தில் அனைவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு தான தர்மங்களை செய்திருந்தாலும், ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுக்க இருக்கும் பிணியான பசி பிணியினை போக்கும் அன்னதானம் செய்ய மறந்து விட்டதாகவும், மேலும் ஒரு முறை துறவி ஒருவர் சாப்பிட உணவு கேட்டு பாத்திரத்துடன் அவள் வீட்டின் முன்பாக வந்த போது, அந்த பாத்திரத்தில் மண்ணை கொட்டி அவரை அவமதித்த பாவமே அந்த பெண் சொர்க்கலோகத்தில் இருந்தாலும் உணவு கிடைக்காமல் அவதியுற நேரிட்டதாக கூறினார் துறவி உருவத்தில் இருந்த பெருமாள்.

    இதையறிந்து வருந்திய அந்த பெண்ணிடம் பெருமாள் மண்ணுலகில் வாழும் மனிதர்கள் நன்மைகளை பெற பல விரதங்களை கடைபிடிக்கின்றனர். அதில் ஒன்று தான் மாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொள்ளவர்கள் வாழ்வில் பசிப்பிணி தீர்ந்து அன்னம் எனப்படும் உணவிற்கு பஞ்சமிருக்காது என்றும், உன்னை இங்கு தரிசிக்க வரும் தேவலோக பெண்களிடம் இந்த ஷட்திலா விரதத்தின் பலன்களை பெற்றால் உனது பசிப்பிணி தீரும் என்று கூறி மறைந்தார்.

    வந்தது நாராயணனே என்றறிந்த பெண் தேவலோக பெண்கள் அவளின் தரிசனம் பெற வந்த போது ஒரு அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள். வந்த தேவலோக பெண்கள் அப்பெண் தங்களுக்கு தரிசனம் தருமாறு கெஞ்ஜினர். அதற்கு அந்த பெண், தேவலோக பெண்கள் கடைபிடித்த ஷட்திலா விரதத்தின் பலனை தனக்கு தந்தால் தான் அவர்களுக்கு தரிசனம் தருவதாக கூறினாள். அதற்கு அவர்களும் ஒப்புக்கொள்ள, விரதத்தின் பலனை பெற்ற பெண் தனது பசிப்பிணி நீங்க பெற்றாள்.

    மகத்துவம் வாய்ந்த நாளான இந்த மாசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று, உணவேதும் அருந்தாமல் விரதம் இருந்து மகாவிஷ்ணுவான பெருமாளை விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் இதர பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிப்பட்டு உங்களால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், உங்களின் சகல பாவங்கள் நீங்குவதோடு, உங்கள் வாழ்நாளில் உணவிற்கு ஏங்கும் உணவு பஞ்சம், வறுமை போன்ற நிலை ஏற்படாமல் பெருமாள் காத்தருள்வார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    பங்குனிமாதம் நடைபெறும் உற்சவம் என்பதால், வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் சிரமப்படாமலிருக்க இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், தாயார் சன்னதியில் 12 இடங்களில் குளிர் சாதன வசதிகளும், 30 இடங்களில் மின் விசிறிகளும் வைத்து குளுமையூட்டப்பட்டது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டும் வழங்கப்பட்டது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில் பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (சனிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த புதன்கிழமை பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கத்திலிருந்து பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள் மேலூர் வழியாக வந்து காவிரி ஆற்றில் இறங்கி நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து பல்லக்கில் எழுந்தருளி அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் அருகிலுள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் தயிர்சாதமும், அரைக்கீரையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. நண்பகல் பூஜை முடிந்ததும், முத்துக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு மாலை வரை சேவை சாதித்தார். பின்னர் மீண்டும் பல்லக்கில் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்தார். 
    திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி விட அளவு குறைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    திருமலை- திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் சிலை பிரமாண்டமான அமைப்பு கொண்டதாகும். 9 அடி உயரத்துடன் அழகாக காட்சி அளிக்கும் ஏழுமலையானை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராது. அதிலும் அவருக்கு அனைத்து நகைகளையும் அணிவித்து அலங்காரம் செய்த பிறகு பார்த்தால் பரவசமாக இருக்கும்.

    திருமலை தெய்வம் வெங்கடாஜலபதிக்கு, உச்சி முதல் பாதம் வரை அங்கம் முழுக்க ஆபரணங்கள், தண்டை, பாடகம், சூரிய கடாரி, நாகாபரணம், கர்ணபத்திரம், திருநெற்றிப் பட்டம், காசுமாலை என அங்கமெல்லாம் தங்கம் அணிந்து அழகே உருவாகக் காட்சி அளிக்கிறார்.

    கமல பீடத்தின் மீது பாதம் ஊன்றி, நவரத்னங்களாலான அணிகள் பூண்டு, சுவர்ண மகுடம் தரித்து மகர குண்டலங்கள் செவி அணி ஆக, மகர கண்டி, நாகாபரணம் 108 லட்சுமிகள் பொறித்த மாலை, தங்கப்பூணூல் தரித்து ஏழுமலையான் நமக்கு அருள்பாலிக்கிறார். பத்து ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஏற்று ஷேத்ரய்யா, தியாகய்யா, புரந்தர தாசர், அன்னமாச்சார்யா சாகித்ய கர்த்தாக்களின் சங்கீதம் கேட்டு மலையே குனிய நின்று கொண்டு இருக்கிறார் வேங்கடவன். கண்களையே மறைத்துவிடும் திருமண் என்ற நாமம் அணிவிக்கப்படுகிறது.

    இதில் முழுப்பங்கு பச்சைக் கற்பூரம். இதைச் சாத்துவது வெள்ளிக்கிழமை, வேங்கடமுடையானுக்கு அபிஷேகமும், வெள்ளிக்கிழமையில்தான் நடத்தப்படுகிறது. இதிலும் ஒரு வினோதம் உள்ளது. அபிஷேகப் பொருட்களில் மஞ்சளும் இடம் பெறும். இத்தகைய சிறப்புகள் கொண்ட ஏழுமலையான் சிலை முதலில் இரண்டு கரத்துடன்தான் இருந்தது என்றும், பின்னர் உடையவர் ராமானுஜர் வேண்டுதல் செய்தபடி பெருமாள் சங்கு சக்கரங்களை ஏந்திய இரண்டு கரங்களுடன் நான்கு கரத்தவராகச் சேவை சாதித்ததாகவும் சொல்கிறார்கள்.

    பெருமாளின் கையிலுள்ள சக்கரம் சுகபோகங்கள் சுழலும் தத்துவத்தை குறிக்கிறது. இந்த சக்கரம் அவரது வலது கையில் இருக்கிறது. இடது கையில் உள்ளது சங்கு. அதர்மத்தை அழித்து எழும் சங்கின் ஒலி இதன் தத்துவமாகும்.

    ஏழுமலையானின் வலது மார்பில் பெரிய பிராட்டியான திருமகள் அமர்ந்த கோலமும், இடது மார்பில் பத்மாவதித்தாயார் அமர்ந்துள்ள கோலமும் இடம் பெற்றுள்ளன. இவ்விரண்டு தாய்மார்களும் தாமரை மலரின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கின்றனர்.

    இவர்கள் தங்களது இரண்டு கரங்களில் தாமரை மொட்டுகளை கையில் ஏந்திய கோலத்துடனும், கீழே நீட்டிய ஒரு கரத்திலிருந்து பொன்னை வாரி வழங்கியபடியும், இன்னொரு கரத்தில் அமுதகலசமும் கொண்டவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

    வேங்கடவன் எப்போதுமே தங்க, வைர நகைகள் ஜொலிக்க அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அழகிய கிரீடம், உடல் முழுக்கத் தங்க நகைகளின் அணிவகுப்பு! உலகிலேயே அதிக அளவு தங்க அணிகலன்களுடன் அபாரமாகக் காட்சியளிக்கும் கடவுள் வேங்கடவன் மாத்திரமே.

    மேரு பச்சை என்னும் மூன்று அங்குல விட்டம் கொண்ட பச்சைக்கல் பதிக்கப்பெற்ற கிரீடம் முதல், வைரமுடி, முதலை வடிவத்தில் காதணிகள், தோளில், வைர தங்க அணிகள், வைரம் பதித்த மகரகண்டி தங்க துளசிமாலை, நூற்று எட்டு லக்குமி உருவம் பதிக்கப்பெற்ற தங்கக்காசு, வேங்கடேஸ்வர சகஸ்ரநாமம் வரையப் பெற்ற தங்கக் கவசம் பூணப்பெற்ற சாளக்கிராம மாலை தங்கத்தால் ஆன பாதகவசம், தசாவதாரம் பதிக்கப்பட்ட இடுப்புப்பட்டை, இடுப்பில் தொங்கும் தங்கத்தால் ஆன ஆயுதம், வங்கியைப் போன்ற காலணித் தண்டை இப்படி பல்வேறு வகையான அணிகலன்கள் இவருக்கு மாத்திரமே உலகில் உள்ளது.

    இத்தகைய கோலத்தில் தினந்தினம் பக்தர்களுக்கு அருட்கடாட்சம் வழங்குகிறார் திருவேங்கடவன். அக்காலத்திய மன்னர்கள் ஏராளமான பொன் நகைகளை வேங்கடவனுக்கு அள்ளித் தந்துள்ளனர். அதையடுத்து பத்மாவதி தாயாரின் திரவுருவம் பதித்த தங்கப் பதக்கத்தை ராமானுஜர் செய்து, ஏழுமலையானின் கழுத்தில் அணிவித்ததாக வேங்கடேச இதிகாச மாலை கூறுகிறது.

    இதே அமைப்பில் இன்னொரு ஏழுமலையான் சிலையை உருவாக்குவது என்பது இயலாத காரியம். திருமலை தேவஸ்தானம் சார்பில் உருவாகும் கிளை ஆலயங்களில் இத்தகைய சிலையை நிறுவது இயலாது. திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி சிலைபோல் உருவாக்கப்பட்டாலும் அளவு குறைவாகவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. குமரிமுனையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி 7 1/2 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான்.
    திருப்பதிக்குச் செல்பவர்கள் தவறாமல் வேங்கடவனுக்குக் காணிக்கை செலுத்தத் தவறுவதில்லை. பணமும், நகைகளும் இறைவனுக்கு அள்ளித் தருகிறார்கள். இதன்மூலம் அவனது அருட்கடாட்சத்தைப் பெறுகிறார்கள். இதனினும் முக்கியமானது தலைமுடி காணிக்கை. இறைவன் பக்தர்களிடம் கேட்பது பணம், பொருள் என்றல்ல. ஏழை எளியவர்களின் தலைமுடி காணிக்கையையும் அவன் மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறான். இறைவனுக்கு பக்தர்கள் சமர்ப்பிப்பது தலைமுடி காணிக்கை.

    தங்களது கவலை, தொல்லை, துன்பம், துயரம், இப்படி வேதனைகளை எல்லாம் அவனிடம் சமர்ப்பித்து விட்டு தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நேர்த்திக் கடனே தலைமுடி காணிக்கை. இக்காணிக்கையை பக்தர்கள் கல்யாணக்கட்டம் என்ற இடத்தில் சமர்ப்பிக்கிறார்கள். கன்னியாகுமரி திருப்பதி ஆலயத்தில் இதற்கென இட வசதி செய்யப்பட்டுள்ளது.
    ×