search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் முருகனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

    அரசியல் ஆதாயம், அரசு உத்தியோகம், ஆன்ம பலம், ஆரோக்கியம் பெருக்கும் ஆடிக்கிருத்திகை.

    ஆடிக் கிருத்திகையான இன்று விரதம் இருந்து ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப்பெருமான்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் விரத வழிபாடு சர்வரோக நிவாரணி. தன்னை வழிபடும் பக்தர்கள் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குபவர்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார்.

    கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம்.

    சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர பிராப்தம், திருமணம், உத்தியோகம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும்.

    வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

    • சென்னை வானகரத்தில் உள்ளது ஸ்ரீ மச்சக்கார சுவாமி நாத பாலமுருகன் கோவில்.
    • நாளை (சனிக்கிழமை) முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.

    சென்னை வானகரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மச்சக் கார சுவாமி நாத பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந் தோறும் கிருத்திகை அன்று பரிகாரம் செய்தால் பேச்சு வராத குழந்தைகளுக்கு குருஜியின் திருக்கரத்தால் நாவில் ஓம் என்ற அட்சரம் எழுதினால் சில மாதங்களில் அந்த குழந்தை பேசும் சக்தியை பெறுகிறது.

    இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிருத்திகை அன்று ஏராளமான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து முருகனின் அருள் பெற்று செல்கிறார்கள்.

    இத்தகைய சிறப்பு மிக்க மச்சக்கார பால முருகன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நாளை சனிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு 108 பால்குட விழா நடக்கிறது.

    விழாவில் முருக பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது. விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
    • மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது.

    மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.

    சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

    முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது.

    மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். 'மயூராசலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

    • முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
    • 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தினமும் மாலையில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று அஸ்வினியுடன் தொடங்கியது. விழா வருகிற 25-ந்தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனால் திருத்தணி நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. கோவில் முழுவதும் பக்தர்களாக நிரம்பி இருந்தனர்.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    குற்றசெயல்களை தடுக்க முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன 30 சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட 127 கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொது சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் , 5 அவசரக் கால வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    மின்சார வாரியம் மூலம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக 400-க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். தடையில்லா குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகளும், 60 தற்காலிக நவீன கழிவறைகளும், எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்படும். தீயணைப்புதுறை சார்பாக தீயணைப்பு ஊர்த்திகள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்தும் திருத்தணிக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் நாளை முதல் 25-ந் தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை- திருப்பதி சாலை, அரக்கோணம் - திருத்தணி சாலை, சித்தூர்- திருத்தணி சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவையொட்டி கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா செய்து வருகின்றனர்.

    • ஆடி கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு.
    • தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். திருத்தணி மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:- திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நாட்களில் 24 மணி நேரமும் அறநிலையத்துறை சார்பாக அன்னதானம் வழங்கப்படும். மேலும், பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும்.

    அதேபோல் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்ற ராஜ கோபுரத்தை இணைக்கின்ற படிக்கட்டுகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். புதிதாக அமைக்கப்படுகின்ற வெள்ளி தேர் பணிகளையும் தற்போது ஆய்வு செய்துள்ளோம்.

    கோவிலுக்கு மாற்றுப்பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் உடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதை குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம். 3 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இந்த விழாவின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பிரகாரத்தை சுற்றிவரும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவசர உதவிக்கான எண் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை வானகரத்தில் உள்ளது மச்சக்கார பாலமுருகன் கோவில்.
    • அஷ்டமிதோறும் இங்கு நடக்கும் யாகத்தில் கலந்துகொள்ள கடன் தொல்லை நீங்கும்.

    வேடர் குலத் தலைவன் நம்பிராஜனின் மகளைத் திருமணம் செய்துகொள்ள சிவனாக வந்து விநாயகர் உதவியுடன் முருகன் திருமணம் முடித்தது நமக்கெல்லாம் தெரிந்த கதை. வள்ளியைத் தீண்ட மச்சத்துடன் வந்த முருகன் சென்னையில் கோயில் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? சென்னை வானகரத்தில்தான் உள்ளது.

    மச்சக்காரன் சுவாமிநாத பாலமுருகன் என்பது சுவாமியின் திருநாமம். போரூர் ரவுண்டானாவில் இருந்து ஆற்காடு சாலையில் காரம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடது பக்கம் சென்றால் போரூர் தோட்டம் தொழிற்பேட்டை. அதனருகில் உள்ள வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது இத்தலம்.

    இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகன் விக்ரகத்தில் அபிஷேக வேளையில் முருகனின் கன்னத்தில் சிவப்பு நிற மச்சம் இருந்ததைக் கண்டு பரவசமாகி இருக்கிறார்கள். அன்று முதல் இவர் 'மச்சக்கார முருகன்' என்ற பெயரோடு விளங்குகிறார். இடுப்பில் கை வைத்தபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் முருகனின் கன்னத்தில் மச்சம் இருக்கிறது.

    இந்த வேலனை இரண்டு நெய்தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்ள, மூன்றே மாதங்களுக்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறுகிறது. இவர்களோடு இத்தலத்தில் அருளும் ஷீரடி பாபாவும் பைரவி சமேத ஸ்வர்ணாகர்ஷண பைரவரும் வேண்டியதெல்லாம் தரும் வரப்பிரசாதிகள். அஷ்டமிதோறும் இங்கு நடக்கும் யாகத்தில் கலந்துகொள்ள கடன் தொல்லை நீங்கும்.

    • இந்த கோவிலில் ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
    • பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று ஆடிகிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஆடி கிருத்திகை விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு நிர்மல்ய தரிசனமும் 6.15 மணிக்கு கணபதி ஹோமமும் நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அபிஷேகமும் 8.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாரதனையும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. அதன் பிறகு 6.30 மணிக்கு துளசி, பச்சை, சம்பங்கி, தாமரை, அரளி, சிவந்தி, ரோஸ், மல்லி, பிச்சி, கொழுந்து உள்ளிட்ட பல வகையான மலர்களால் வேல்முருகன் சுவாமிக்கு மலர் முழுக்கு விழா நடைபெறுகிறது.

    பின்னர் அலங்கார தீபாராதனையும் விசேஷ பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆடி கிருத்திகை திருவிழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நாளை (21ந்தேதி) தொடங்கி வருகிற 25-ந்தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடக்கிறது.

    விழா நாளை காலை அஸ்வினியுடன் தொடங்குகிறது. மறுநாள் (22-ந்தேதி) ஆடி பரணி, 23-ந்தேதி ஆடி கிருத்திகை விழா நடக்கிறது. அன்று இரவு முதல்நாள் தெப்ப விழா நடத்தப்படுகிறது. 24-ந்தேதி 2-ம் நாள் தெப்பமும் 25-ந்தேதி 3-ம் நாள் தெப்பமும் நடக்கிறது.

    ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வசதியாக அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை (21-ந்தேதி) முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை-திருப்பதி சாலை, அரக்கோணம்-திருத்தணி சாலை, சித்தூர்-திருத்தணி சாலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மேற்பார்வையில் திருத்தணி கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் தரிசனத்துக்காக ஆடிக்கிருத்திகை விழா நடைபெறும் 5 நாட்கள் முழுவதும் நடை திறந்து இருக்கும். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது.
    • ஆடி மாதம் தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    விடுமுறை தினம் மற்றும் ஆடிமாதம் தொடங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று காவடி எடுத்து வந்தனர். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளம் அருகே சூடம் ஏற்றி வழிப்பட்டு பின்னர் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளே மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பொதுவழியில் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வருகின்ற 23-ந்தேதி ஆடிக்கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழாவன்று லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், வருகின்ற 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக சரவணப்பொய்கை குளத்தில் இந்தாண்டிற்கான தெப்பம் கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வாலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் பேரல்களுக்கு வண்ணம் தீட்டபட்டு, தெப்பத்தை கட்டி குளத்தில் மிதக்க விட்டு பரிசோதித்தனர். ஓரிரு நாட்களில் தெப்பம் கட்டும் பணி முழுமை பெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் துவங்கியதை முன்னிட்டு நேற்று 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் விரதம் இருந்து கோவிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் நேற்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து திரளான பெண்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், நேர்த்தி கடனை செலுத்தி சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும், வேண்டுதல் நிறைவேற்ற 20-க்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு கோவில் வளாகத்திலேயே சீமந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து வாழ்த்தினார். திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத விழா நேற்று நடைபெற்றது.

    • பாலமுருகனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் மலர் முழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தபடி தெக்கத்தியான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலமுருகன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர் பாலமுருகனுக்கு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 8 மணிக்கு பாலமுருகனுக்கு மலர் முழுக்கும் நடைபெற்றது. முன்னதாக மேலும் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இன்று அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 22-ந்தேதி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • 23-ந்தேதி அக்னி சட்டி ஊர்வலம், தீமித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    செஞ்சி பி ஏரிக்கரையில் உள்ள பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவிலில் 49-ம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் ஆடி கிருத்திகை திருவிழா கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூட நெல், அரிசி, மணிலா, வியாபாரிகள் மற்றும் எடை போடும் தொழிலாளர்கள் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் வருகிற 22-ந்தேதி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சாமி வீதியுலா நிகழ்ச்சியும், 23-ந்தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால் குட ஊர்வலமும், அக்னி சட்டி ஊர்வலமும், தீமித்தல் நிகழ்ச்சியும், தேர் வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பணைக்கூட நெல் அரிசி, மணிலா, வியாபாரிகள் சங்கம் மற்றும் எடை பணி தொழிலாளர்கள், பொது மக்கள் செய்து வருகின்றனர்.

    • வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது.
    • வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

    முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள். இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யௌதேயர் காலத்து நாணயத்தில் (கி.மு.200) வேல், சேவலுடன் காணப்படும் கார்த்திகேயன் படம் உள்ளது.

    மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்லால் ஆன வேல். இது சங்க காலத்தைச் சேர்ந்தது.சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

    ×