search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
    • பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகவிழாவையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    வைகாசி விசாகத்தையொட்டி இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

    இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பர சுவாமிகள் சிறிய கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்தனர். சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றன.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவில் அடி வாரத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி விளக்கேற்றி வழிபட்டனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள 8-ம் படை முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் இன்று சிறப்பு பூஜை நடை பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தரிசனம் செய்தனர்.

    பாரிமுனை ராசப்பா செட்டி தெருவில் அமைந்துள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை முதல் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இன்று மாலையில் பூக்கடை பகுதியில் உள்ள தெருக்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    கீழ்க்கட்டளை பெரிய தெரு போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

    வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    • இன்று முருகனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
    • எந்த அபிஷேகத்தை பார்த்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    விசாக நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.

    பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்டகடன்கள் தீரும்.

    பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்துபார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகும்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர்.

    இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும்.

    எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

    மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும்.

    திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும்.

    சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும்.

    பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும்.

    தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகல வித பாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

    • மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது.
    • இன்று இரவு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத் தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

    பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் திருமண மேடையில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் பழனியில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று முருகனை வழிபட உகந்த நாள்.
    • முருகனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி இது.

    ஓம் அப்பா போற்றி

    ஓம் அரனே போற்றி

    ஓம் அழகா போற்றி

    ஓம் அருவே போற்றி

    ஓம் உருவே போற்றி

    ஓம் அபயா போற்றி

    ஓம் அதிகா போற்றி

    ஓம் அறுபடையோய் போற்றி

    ஓம் ஆறுமுகத்தரசே போற்றி

    ஓம் ஆதி போற்றி

    ஓம் அனாதி போற்றி

    ஓம் இச்சை போற்றி

    ஓம் கிரியை போற்றி

    ஓம் இறைவா போற்றி

    ஓம் இளையோய் போற்றி

    ஓம் ஈசா போற்றி

    ஓம் நேசா போற்றி

    ஒம் உத்தமா போற்றி

    ஓம் உயிரே போற்றி

    ஓம் உணர்வே போற்றி

    ஓம் உமைபாலா போற்றி

    ஓம் எளியோய் போற்றி

    ஓம் எண்குணா போற்றி

    ஓம் ஏகா போற்றி

    ஓம் அனேகா போற்றி

    ஓம் ஒலியே போற்றி

    ஓம் சுடரொளியே போற்றி

    ஓம் கந்தா போற்றி

    ஓம் கடம்பா போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் காவலா போற்றி

    ஓம் கார்த்திகேயா போற்றி

    ஓம் குகனே போற்றி

    ஓம் குமரா போற்றி

    ஓம் குறவா போற்றி

    ஓம் குன்றுதோர் நின்றாய் போற்றி

    ஓம் சரவணா போற்றி

    ஓம் சண்முகா போற்றி

    ஓம் சத்தியசீலா போற்றி

    ஓம் சிட்டானே போற்றி

    ஓம் சிவக்குமரா போற்றி

    ஓம் சிவக்கொழுந்தே போற்றி

    ஓம் சித்தி போற்றி

    ஓம் முத்தி போற்றி

    ஓம் தலைவா போற்றி

    ஓம் தவப்புதல்வா போற்றி

    ஓம் தணிகைமுருகா போற்றி

    ஓம் சூரா போற்றி

    ஓம் வீரா போற்றி

    ஓம் சுப்ரமண்யா போற்றி

    ஓம் செந்தமிழா போற்றி

    ஓம் செங்கல்வராயா போற்றி

    ஓம் சேவலா போற்றி

    ஓம் சேனாதிபதியே போற்றி

    ஓம் ஞானபண்டிதா போற்றி

    ஓம் தூயோய் போற்றி

    ஓம் துறையே போற்றி

    ஓம் நடுவா போற்றி

    ஓம் நல்லோய் போற்றி

    ஓம் நாதா போற்றி

    ஓம் போதா போற்றி

    ஓம் நாவலா போற்றி

    ஓம் பாவலா போற்றி

    ஓம் நித்தியா போற்றி

    ஓம் நிமலா போற்றி

    ஓம் பொன்னே போற்றி

    ஓம் பொருளே போற்றி

    ஓம் புலவா போற்றி

    ஓம் பூரணா போற்றி

    ஓம் மன்னா போற்றி

    ஓம் மயிலோய் போற்றி

    ஓம் மறையே போற்றி

    ஓம் மணக்கோலா போற்றி

    ஓம் மாசிலாய் போற்றி

    ஓம் மால்முருகா போற்றி

    ஓம் முருகா போற்றி

    ஓம் முதல்வா போற்றி

    ஓம் முத்தையா போற்றி

    ஓம் மூவர்க்கும் மேலோய் போற்றி

    ஓம் வரதா போற்றி

    ஓம் விரதா போற்றி

    ஓம் விவேகா போற்றி

    ஓம் விசாகா போற்றி

    ஓம் விதியே போற்றி

    ஓம் கதியே போற்றி

    ஓம் விண்ணோர் தொழும் விமலா போற்றி

    ஓம் குஞ்சரிமணாளா போற்றி

    ஓம் பரங்குன்றின் பரமா போற்றி

    ஓம் சூரனைமாய்த்தோய் போற்றி

    ஓம் செந்தில் செவ்வேலா போற்றி

    ஓம் ஆண்டியாய் நின்றாய் போற்றி

    ஓம் ஆவினன் குடியோய் போற்றி

    ஓம் ஏரகப் பெருமான் போற்றி

    ஓம் எம்பிரான் குருவே போற்றி

    ஓம் வள்ளி மணாளா போற்றி

    ஓம் வளர் தணிகேசா போற்றி

    ஓம் சோலையில் செல்வா போற்றி

    ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

    ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி

    ஓம் உடல் நலம் தருவாய் போற்றி

    ஓம் செறுக்கினை அறுப்பாய் போற்றி

    ஓம் சினம் காமம் தவிர்ப்பாய் போற்றி

    ஓம் அவாவினை அழிப்பாய் போற்றி

    ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி

    ஓம் அனைத்தும் நீயே போற்றி

    ஓம் அருள்வாய் வள்ளி

    மணாளா போற்றி

    ஓம் தேவசேனா சண்முகா

    போற்றி போற்றி போற்றியே.

    • வைகாசி விசாகம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • மாம்பழத்தை வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சுமரில் அஞ்சேலென வேல் தோன்றும்-நெஞ்சில்

    ஒருகால் நினைக்க இருகாலும் தோன்றும்

    முருகா என்றோதுவோர் முன்.

    -திருமுறை

    ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய தெய்வத்தை கொண்டாடினால் சிறப்பான வாழ்க்கை அமையும். அந்த அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகை திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுது தான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது.

    வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பனி ரெண்டைக் கொண்டவன் வடிவேலன். எனவே அவனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    வைகாசி விசாகம் தினத்தன்று விரதம் இருந்து தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டால் பகை விலகும். பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம், குடை, மோர், பாகனம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப் பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணெய் ஊற்றி, ஐந்து வித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான சுந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும். 'ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்' என்பதற்கிணங்க, மயிலில் பறந்து வந்து மால்மருகன் வரம் தருவான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகன். சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன் சிங்கமுகன் சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப்பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்ப சிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன், வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகப்பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    விசாகம் தினமான இன்று செய்யுங்கள். முருகன் அருள் நிரம்ப கிடைக்கும்.

    • விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
    • இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !

    -அருணகிரிநாதர்

    அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடு மையை களைந்து அவர்களைத் காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளை தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

    புராணங்களின்படி, சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் போற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார்.

    முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, அளவற்ற இன்பம், வரம்பில்லாத ஆற்றல், தன் வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு என்னும் ஆறு குணங்களாகின. இவை தவிர இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன.

    ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமானதால் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்ரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன் (சண்முகன்) போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். ஐம்பூதமும் உயிருமாகிய ஆறினையும் திருமுகங்களாக உருவகித்துக் கூறி, எங்கும் நிறைந்த கடவுள் தன்மையை மக்களுக்கு நினைவூட்டக் கருதிய பண்டைப் பெரியோர் இறைவனை ஆறுமுகப் பெருமான் என்றனர்.

    எனவே, உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவமக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும். இத்தினத்தில் கோவில்கள் வசந்தோற்சவமும், பிரம்மோற்சவமும் நடைபெறும். இத்தினம் பல சமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.

    • வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவு தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்க குதிரை என பல்வேறு வாகனங்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முத்துக்குமாரசுவாமி-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் தேரோட்டம், பழனி நகரின் நான்கு ரத வீதி வழியாக வந்து, மீண்டும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜை நடக்கிறது.
    • 108 கலச அபிஷேகம் நடக்கிறது.

    மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் வருகிற 2-ந் தேதி வைகாசி விசாகம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோரேகாவ் டீன் டோங்கிரி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாகம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. இன்று (புதன்கிழமை) காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குழந்தைகள் கலை நிகழ்ச்சி, பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.

    வரும் வெள்ளிக்கிழமை (2-ந் தேதி) வைகாசி விசாக தினத்தில் காலை 6 மணிக்கு சாமிக்கு மூலமந்திர ஜெப ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு, வேல்குத்தி, பால்குடம், காவடி எடுத்து ராமர் கோவில் வழியாக முருகன் கோவிலுக்கு ஊர்வலம் வருகின்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

    இரவு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. சனிக்கிழமை (3-ந் தேதி) மாலை 6.45 முதல் 8.30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருகல்யாணம் நடைபெறுகிறது. அதன்பிறகு வீதி உலா, அன்னதானம் நடக்கிறது.

    செம்பூர் திலக்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சார்பில் 65-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத்தன்று காலை 11 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, சக்தி கிரகம், அக்னி சட்டி எடுத்து ஸ்ரீபுலங்கேஷ்வர் சிவன் கோவிலில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். மாலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு நித்திய பூஜை நடந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜையும் நடக்கிறது.

    • தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார். இங்கு நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 4-ம் நாள் மண்டகப்படியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள்.
    • முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள்.

    மாதந்தோறும் வருகிற சஷ்டியில், விரதமிருந்து முருகனைத் தரிசித்து, வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள். விரதம் இருக்க இயலாதவர்கள், அந்தநாள் முழுவதும் சிவமைந்தனை நினைத்தபடி, கவசங்களைப் பாராயணம் செய்வார்கள். சஷ்டி கவசம் படிப்பார்கள். வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.

    சஷ்டி திதியில் கந்தனை விரதம் இருந்து வழிபடுவது ரொம்பவே விசேஷம். இந்தநாளில், காலையும் மாலையும் வீட்டு பூஜையறையில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், நம் சிக்கல்களெல்லாம் தீரும். கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும்!

    சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், காலை அல்லது மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தனிக்கோயில் என்றில்லாமல், சிவன், அம்மன் கோயில்களில் முருகனுக்கு சந்நிதி இருக்கும். அங்கு சென்றும் தரிசிக்கலாம். முருகக்கடவுளுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்குளிர தரிசிக்கலாம்.

    வீட்டில், முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். கஷ்டங்களெல்லாம் தீரும். வாழ்வில் நஷ்டங்களெல்லாம் முடிவுக்குக் கொண்டுவருவார் வள்ளிமணாளன். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வழக்கு முதலான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

    இன்று முருகனுக்கு உகந்த சஷ்டியில், பார்வதி மைந்தனை வழிபடுங்கள். மனதில் உள்ள பயமெல்லாம் போக்கி, காரியத்தில் வெற்றியைத் தேடித் தந்தருள்வார் ஞானகுமாரன்!

    • நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார்.
    • 16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.

    Thiruporur Kandaswamy temple

    தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் எல்லாம் இன்று ''கந்தனுக்கு அரோகரா'', ''முருகனுக்கு அரோகரா'', ''வெற்றி வேல்'', ''வீரவேல்'' போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் கோஷங்கள் கேட்டபடி உள்ளன.

    முருகப்பெருமான் இப்பூலவுகில் அவதாரம் எடுத்ததன் நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்து அழிப்பதற்குதான். அந்த அவதார நோக்கம் நிறைவு பெறும் திருநாளாக இன்றைய தினம் திகழ்கிறது.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதுவது போல முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் (திருத்தணி தவிர) இன்று சூரன் சம்ஹாரம் செய்யப்படுவான்.

    இந்த சூரன் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய 3 வடிவங்களில் தோன்றி கடும் அட்டகாசம் செய்து வந்தான்.

    திருச்செந்தூரில் சூரபத்மன் எனும் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் போரிட்ட முருகப்பெருமான் வினைப்பயன் எனும் கன்மத்தை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது.

    நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்த போர் விண்ணில் நடந்தது. இப்படி முருகப்பெருமான், தனது அவதார லட்சியத்தை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகிய மூன்று தலங்களில் நிறைவேற்றினார்.

    இந்த மூன்று தலங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் இரண்டும் அறுபடை வீடு தலங்களாகும். திருப்போரூர் தலம் படை வீடுகளில் ஒன்றாக இடம் பெறா விட்டாலும் அவற்றுக்கு நிகரான சிறப்பும், மகிமைகளும் கொண்டது. சென்னை அருகில் இருக்கும் இத்தலம், மிக மிக தொன்மையானது. பிரளயத்தால் 6 தடவை அழிந்த இத்தலம் 7-வது தடவையாக கட்டப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானே, சிதம்பரசாமி என்பவரை ஆட்கொண்டு, இங்கு தற்போதுள்ள கோவிலை கட்ட வைத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். தண்டபாணி சுவாமிகள், சீரடி சாய்பாபா போன்றே இவரது பெற்றோர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

    மதுரை மீனாட்சி அம்மையின் குழந்தை போல இவர் வளர்ந்தார். ஒருநாள் இவர் தியானம் செய்தபோது மயில் ஒன்று தோகை விரித்தாடுவது போன்ற காட்சியைக் கண்டார்.

    அதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று 45 நாட்கள் கடும் தவம் செய்தார். பிறகு மதுரை மீனாட்சி கலி வெண்பா பாடினார்.

    இதனால் மனம் மகிழ்ந்த மீனாட்சியம்மை, சிதம்பரசாமிக்கு காட்சி கொடுத்து, ''வடக்கில் யுத்தபுரி என்று ஒரு ஊர் உள்ளது. அங்கு குமரனின் திருமேனியையும், பழைய ஆலயத்தையும் கண்டுபிடித்து புதிய கோவில்கட்டு'' என்று உத்தரவிட்டாள்.

    உடனே சிதம்பர சாமிகள் யுத்தபுரி எனப்படும் திருப்போரூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த இடம் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அங்கு பெண் பனைமரம் ஒன்றின் கீழ் முருகப்பெருமான் ஒரு புற்றுக்குள் சுயம்பு உருவில் இருப்பதை கண்டுபிடித்தார். அதை எடுத்து சென்று தன் குடிலில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள் அவர் கனவில் பழைய முருகன் கோவில் அமைப்பும், அது பூமியில் புதைந்துகிடக்கும் இடமும் தெரியவந்தது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்த அந்த இடத்திலேயே சிதம்பரசாமிகள் புதிய கோவிலை கட்ட முடிவு செய்தார்.

    அந்த இடம் அப்போது ஆற்காடு முஸ்லிம் நவாப் மன்னரின் சொத்தாக இருந்தது. மன்னரின் மகளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

    அந்த வியாதியை சிதம்பரசாமிகள் குணப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆற்காடு நவாப், அங்கு முருகனுக்கு கோவில் கட்ட, 650 ஏக்கர் நிலத்தை கொடுத்து கோவில் கட்ட உதவிகள் செய்தார்.

    சிதம்பரசாமிகள் கோவில் கட்டும் தகவல் அறிந்ததும், நிறைய பேர் தாமாகவே முன் வந்து பொருள் உதவி செய்தனர். கோவிலை கட்டி முடித்த பிறகு, அந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சாமிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    அப்போது ஒரு சிறுவன் அவரிடம் வந்தான். ''என்ன பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?'' என்றான். சிதம்பரசாமிகள் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்க்க அவன், ''என் பெயர் கந்தன். உங்கள் பெயர் சிதம்பரசாமி. இரண்டையும் சேர்த்து ''கந்தசாமி கோவில்'' என்று வைக்கலாமே என்று கூறியபடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டான்.

    இதன் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்ததோடு, அதற்கு பெயர் சூட்டியதும் முருகப்பெருமானே என்பதை அறியலாம். இத்தலத்துக்கு ஆதிகாலத்தில் தாருகாபுரி, சமராபுரி, போரியூர், செருவூர், சமரப்பதி, சமதளப்பூர் என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. அந்த காலத்து மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.691-ல் இரண்டாம் நரசிம்ம பல்லவன், 1076-ல் முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்தில் திருப்பணிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால், முக்கிய பூஜைகள் நடத்துவதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் உள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த யந்திரத்துக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். வியாபாரம் பெருகும் என்பது ஐதீகம்.

    கோவில் சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் எனும் சேவல் வடிவசிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டும் சாத்துகிறார்கள். இவர் பிரம்மன் போன்று அட்சரமாலை, கண்டிகை கொண்டும் சிவன் போன்று வலது கையால் ஆசீர்வதிக்கும் அபயஹஸ்த நிலை கொண்டும், விஷ்ணு போன்று இடது கையை தொடையில் வைத்து ஊரு ஹஸ்த நிலையிலும் என மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார்.

    இதனால் ஐப்பசி மாதம் முருகனுக்கு அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி நாளில் 4 காலை பூஜை நவராத்திரி 9 நாட்களும் வள்ளி, தெய்வானைக்கு 9 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த முருகர் தலத்திலும் இத்தகைய வழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை.

    இத்தலத்தில் பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்றை புனிதமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். முருகன் சிலையை கண்டெடுத்த சிதம்பர சுவாமிகள் இந்த பனை பாத்திரத்தில்தான் முருகன் சிலையை வைத்திருந்தாராம்.

    கோவில் பிரகாரத்தில் சிவபெருமான், வான்மீகநாதர் என்ற பெயரில் குடும்பத்தோடு உள்ளார். அங்குள்ள அம்பிகைக்கு புண்ணிய காரணியம்மன் என்று பெயர். தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதமான கேதார கவுரி விரத தினத்தன்று இந்த அம்மனுக்கு இளம்பெண்கள் அதிரசம் படைத்து வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில்தான் அகத்திய முனிவர் பிரணவ பொருளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டார். இதனால் இத்தலத்து சன்னதிகள் ஓம் வடிவில் உள்ளன.

    ஒரு தடவை பெருமாள், லட்சுமி இருவருக்கும் கான்வ முனிவரால் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை பெருமாளும், லட்சுமியும் இத்தலத்துக்கு வந்து நிவர்த்தி பெற்றனர். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரை வழிபட்ட பிறகு ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வட்ட வடிவிலான மண்டபத்தில் கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் உள்ளது. பலி பீடம் முன்பு பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    ராஜகோபுரத்தை கடந்து 24 கால் மண்டபம் வழியாக சென்றால் வலது பக்கம் தெய்வானை சன்னதி, இடது பக்கம் வள்ளி சன்னதியை காணலாம். தெய்வானை சன்னதி அருகில் கோவில் கட்ட நிலம் கொடுத்த ஆற்காடு நவாப் படம் வரையப்பட்டுள்ளது. கருவறை எதிரே வெள்ளை யானையான ஐராவதம் உள்ளது.

    பக்கத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. நமது மனக்கவலைகள் தீர நாம் மறக்காமல் இந்த யந்திரத்தை வழிட வேண்டும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஆனால் சூரியன், சனி ஆகிய இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிய மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த மரத்தில் தொட்டி கட்டி சென்றால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

    திருமணம் வரம் கோரியும் இந்த மரத்தில் மஞ்சள் கயிற்றால் முடிச்சுப்போட்டு கட்டுகிறார்கள். அந்த வகையில் இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் கோவிலை கட்டிய சிதம்பர சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. திருப்போரூர் முருகன் மீது 726 பாடல்கள் பாடிய இவர், ஒரு வைகாசி விசாக தினத்தன்றுதான் முருகனோடு இரண்டற கலந்தார். எனவே வைகாசி விசாகத்தன்று முருகன் எதிரே, சிதம்பரசாமி சிலையை வைத்து, அவர் மூலவருடன் இரண்டற கலப்பது போல பாவனை செய்வார்கள்.

    ஆண்டு முழுவதும் விழா கோலமாக காணப்படும் இத்தலத்தில் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

    ×