search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன
    • ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கு மரியாதை வழங்கப்பட்டு வருகின்றன

    2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், "பிற மாநிலங்கள், பிற நாடுகளிலுள்ள கோவில்களுடன் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் வைகுண்ட பெருமாள் எம்பார் சுவாமி கோவிலில் இருந்து கர்நாடக மாநிலம் மேல்கோட்டை செல்வ நாராயண பெருமாள் கோவிலுக்கும், ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து மைசூர் ஸ்ரீ சாமுண்டீசுவரி அம்மன் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் இருந்து ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலுக்கும் வஸ்திர மரியாதை மற்றும் மாலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் மலேசியா நாட்டில் உள்ள பத்துமலை சுப்பிரமணியர் கோவில் மற்றும் கொடுமலை விநாயகர் கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து வஸ்திர மரியாதை, மாலை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் “பெரும்வெளிர்’ இனத்தவர் வாழ்ந்தனர்.
    • இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேறிய தலம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்குள்ள முருகனை வணங்கினால் பிறந்த பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

    தல வரலாறு:

    நொய்யல் ஆற்றங்கரையிலுள்ள கொடுமணல் கிராமத்தில் "பெரும்வெளிர்' இனத்தவர் வாழ்ந்தனர். இவர்கள், பண்ணையக்காரர்களிடம் மாடு மேய்க்கும் வேலைபார்த்தனர். ஒரு காராம்பசுவின் மடியில் தினமும் பால் இல்லாமல் இருந்ததை, ஒரு வேலையாள் கவனித்து பண்ணையாரிடம் கூறினார். மாடு ஒரு குறிப்பிட்ட இடத்தில், மடியில் இருந்த பால் முழுவதையும் தானாகவே சொரியவிட்டதை பண்ணையார் கவனித்தார். அந்த இடத்தைத் தோண்டியபோது, ஒரு சிலை கிடைத்தது. அதன் முகம் பொலிவுடன் இருந்தாலும், இடுப்புக்கு கீழ் சரியான வேலைப்பாடின்றி இருந்தது. அக்குறையைப்போக்க அந்தப் பகுதியை சிற்பியைக் கொண்டு உளியால் வேலையைத் துவக்கினார். உளிபட்ட இடத்தில் ரத்தம் பீறிட்டது. பணியை நிறுத்திவிட்டனர். "ஆண்டவர் அப்படியே இருக்க பிரியப்படுகிறார்", என்று சென்னிமலையின் மேல் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு "தண்டாயுதபாணி" என்ற திருநாமம் இட்டனர்.

    தம்பிக்கு முதல் பூஜை:

    எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை உண்டு. இங்கோ மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். முருகன் ஞானப்பழத்தால் கோபித்து வந்து மலைமேல் வீற்றிருப்பதால், அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு இவ்வாறு நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவுக்கென தனித்தேர் உள்ளது. நொய்யல் ஆறு, சென்னிமலையிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் ஓடுகிறது. கோவிலின் தென்புறம் உள்ள மாமாங்க தீர்த்தம், கோடையிலும் பொங்கி வழியும். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி மகிழ்வித்து முருகப்பெருமானிடம் படிக்காசு பெற்ற தலம்.

    கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்:

    "துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் நிமலன் அருள் கந்தசஷ்டி கவசம் தனை" என்று முருக பக்தர்கள் மனம் உருகி பாடும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள், காங்கேயத்தை அடுத்த மடவிளாகத்தைச் சேர்ந்தவர். இவர் மைசூர் தேராச உடையாரின் காரியஸ்தர். கவசத்தை அரங்கேற்றம் செய்ய வேண்டிய இடம், சென்னிமலை தான் என்பதை முருகனின் அருளாணையால் உணர்ந்தார். அதன்படி அங்கே அரங்கேற்றினார். "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக" என்ற புகழ்மிக்க வரியை அதில் எழுதியுள்ளார். "சிரம்" , "சென்னி" என்ற வார்த்தைகள் தலையைக் குறிக்கும். மலைகளில் தலையாயது சென்னிமலை என அவர் போற்றியுள்ளார். அடிவாரத்திலுள்ள நஞ்சுண்டேஸ்வரர், பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் கோவில்கள் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

    • என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
    • பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும்.

    விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர்.

    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாகஎடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.

    கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.

    • பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது.
    • முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம்.

    பழநி: பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

    திருச்செந்ததூர் : கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்: தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

    சுவாமிமலை: தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை

    திருத்தணி: முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை: நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

    • கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
    • கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திர கழுதிருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள், வைகாசி மாத முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த நாட்களில் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான சஞ்சீவி காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்து வழிபட்டனர்.

    இந்நிலையில் கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்தனர்.

    அப்போது பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடிக் கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். இதற்காக கிரிவீதியில் ஆங்காங்கே இலையுடன் கூடிய கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பக்தர்கள் கிரிவலம் வந்தபோது அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன், மகிஷாசூரமர்த்தினி அம்மன், வீரதுர்கை அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். இன்று திருவிழா நிறைவு பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
    • மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோவில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

    கந்த விரத மகிமை

    முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    • கந்தசஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும்.

    நாம் ஆறுமுகநாவலரின் "விரதம்" என்பதற்கான வரைவிலக்கணத்தை நோக்கின் "மனம்; பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும்; மனம், வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் இறை அன்போடு, கடவுளை விதிப்படி வழிபடல்" என்கிறார். அவ்வாறான கட்டுப்பாடுகளினூடாக ஐம்புலனடக்கி மன அடக்கத்தை கந்தசஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது.

    இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது). உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மூலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மூலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காகக் கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதிமையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூசைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

    உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

    சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியான போது சாப்பிடலாம்.

    ஓரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைப்பிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும் , உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுட்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச்சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.

    ஆலயங்களில் ஆரம்பதினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் கர்ப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

    ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் ப+ஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூஜை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

    இவ்விதம் கடும் விரதம் அநுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    ஆறாம் நாள் ஷஷ்டித்திதியில்; சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்கமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிராணுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிகவிஷேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விளித்திருத்தல்) பொருத்தமானதே. ஆயினும் அனைவராலும் இது கைக்கொள்ளப்படுவதில்லை. இயன்றவர்கள் கைக்கொள்க.

    விரதோயாபனத்தின் போது முருகன் ஆலயம் சென்று விரத பூர்த்தி சமயத்தில் விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விசேச பூஜையை செய்கின்றேன் என்று சங்கல்பித்து விஷேஷ அபிஷேகம் பூஜை, ஷண்முகார்ச்சனை அல்லது சஹஸ்ர நாமார்ச்சனை முதலியவற்றைச் செய்வித்து காப்பு தர்ப்பை இவற்றுடன் தாம்பூலம் தஷிணை, வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி முதலிய தானங்களையும் சேர்த்து அர்ச்சகரிடம் சமர்ப்பித்து மகிழ்ச்சியுடன் இந்தத் தானத்தை வழங்குகின்றேன். சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல இந்த விரதபலன்கள் எனக்கு உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

    விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    இங்கு குறிப்பிட்ட விதத்தில் வீட்டிலே பூசைகளைச் செய்வதும் பொன் பிரதிமைகளைச் செய்து தானம் கொடுப்பதும் யாவருக்கும் எளிதானதன்று இதனால் உத்தியாயனமே செய்யாது விடுவதும் முறையன்று எனவே உரிய காலத்தில் ஆலயம் சென்று விரத உத்தியாபனம் செய்யப் போகின்றேன் என்று குருமுகமாகச் சங்கல்பம் செய்து இயன்ற வகையில் விசேஷ அபிஷேகம் பூஜை அர்ச்சனை வழிபாடுகளைச் செய்து குருவுக்கு தாம்பூல தட்சணைகளும், தானங்களும் இயன்றவரையும் வழங்கி விரதத்தை மனநிறைவோடு முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

    உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின் போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுருப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

    உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

    • முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.
    • பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன்.

    சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.

    இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.

    அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.

    இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.

    அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.

    முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.

    தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார்.

    2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவை கொன்றார்.

    பிறகு முருகனிடம் திரும்பி வந்து நடந்தவற்றை வீரவாகு விளக்கமாக கூறினார்.

    இதையடுத்து 4-வது நாள் முருகனே களத்தில் குதித்தார். அவருக்கும் சூரனுக்கும் திருச்செந்தூர் கடலோரத்தில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது.

    அந்த 6 நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இப்போதும் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்கிறார்கள்.

    இந்த 6 நாள் போர் எப்படி நடந்தது என்பதை பாருங்கள்...

    பானுகோபன் வதைப் படலம்:

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் பேர் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்கு வந்தான்.

    பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அதன்பிறகு பானுகோபன் முருகன் வேலுக்கு பலியானான்.

    சிங்கமுகன் வதை:

    பானுகோபன் பலியான தகவவல் அறிந்தததும், சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்கு வந்தான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் செய்தான். இவனது தலை விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய தலை தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாமல் குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சம்காரம் செய்தான்.

    சூரன் சம்காரம்:

    சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.

    தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.

    அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.

    அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.

    வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.

    தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

    முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செயலானான்.

    சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான்.

    இந்திரஞாலம் என்ற தேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார்.

    இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.

    சூலப்படை முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரன், கடைசியாக தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது.

    முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராடினான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணினான்.

    எனவே, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

    தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து பதுங்கினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தது.

    ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனிடம் மன்றாடினான்.அவன்மேல் இரக்கம் கொண்ட முருகன் பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக்கொண்டார்.

    வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்பினார்.

    சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி தினமாகும்.

    சூரனை அழித்த பாவம் தீர, திருச்செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, முருகன் சிவ பூசை செய்தார். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காணும் முருகனின் கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.

    இங்கே முருகப் பெருமான் அபயம் / வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. சும்மா அலங்காரத்துக்கு வேல் அல்லது யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம் உள்ளது.

    முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம் உள்ளது. அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

    மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ்சிறு சிலைகள் உள்ளன, வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!

    கருவறையைக் காலையிலும், மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

    ஆலயத்தில் சிறு செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.

    பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

    கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

    சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காணலாம். கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்.

    சூரசம்காரங்கள் முடிந்த பின்னர், இந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க முடிவுசெய்தார். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வள்ளியை திருத்தணியில் திருமணம் புரிந்தார்.

    • பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன் மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.
    • ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

    ஆறுமுருகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

    இவ்விரதம் 21 வருடம் கைக்கொள்ள வேண்டுமென்பது இவ்விரத விதியாகும். சகல சௌபாக்கியங்களையும் நல்கும் இவ்விரதத்தினை முறைப்படி 12, 6, வருடங்கள் வரை மேற்கொண்டு இறுதியில் 'உத்யாபனம்' செய்து விரதத்தினை நிறைவு செய்து கொள்ள முடியும்.

    பொதுவாக எந்த விரதத்தினை அனுஷ்டித்தாலும் விரத பலன்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்பனவாம்.

    உத்தமம்:- (உபவாசம்) உணவொன்றும் அருந்தாமலிருப்பது. இயலாவிட்டால் பகல் சென்றபின் சுவாமி தரிசனம் செய்து கொண்டு இரவில் தீர்த்தம். நீர், பசும்பால், இளநீர், முதலிய நீராகரத்தை உட்கொள்ளலாம். மிக முக்கியமாக பரிசுத்தமாகி அலைபாயாது மனதை விரதத் தெய்வம் எதுவோ அதன் பால் நிறுத்திக் கொள்வதாகும்.

    மத்திமம்:- பகற்பொழுதைக் கழித்துத் தரிசனை செய்த பின் இரவில் ஏதாயினும் ஒருவகைப் பழங்களை சொற்பமாக அருந்தலாம். உத்தமம், மத்திம நிலைகளைக் கைக்கொள்வோர் விரதத்திற்கு முதல்நாள் ஒரு பொழுது உணவும் அன்றிரவு சொற்பமாக ஏதேனும் பலகாரமும் உண்ணலாம்.

    அதமம்:- பகற்பொழுது ஒரு நேரமாய் புற்கை வகைகளில் ஒன்றேனும், பலகார வகைகளில் ஒரு வகையையேனும் உண்ணலாம்.

    இதுவும் இயலாதவர்கள் ஒரு நேரமாய்ச் சோறு கறி உட்கொள்ளலாம். இவ்வகையோர் விரும்பினால் இரவில் அற்பமாய் பழமாயினும் நீரேனும் அருந்தலாம். ஆனாலும் சில விரதங்களுக்கு இரவில் யாதேனும் உண்பது விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    விரதம் முடிந்த மறுநாள் பாரணம் (விரதத்தை நிறைவு செய்தல்) காலை 5 மணிக்குள் செய்வது உத்தமம்.

    முக்கியமாக பாரணை செய்தபின் பகலில் நித்திரை கொள்ளல் ஆகாது. அன்றிரவு ஏதேனும் பலகாரம் உட்கொள்ளலாம்.

    சோறு உண்ணக் கூடாது. இது உபவாசம் இருந்த விரதங்களுக்கே உரியது. மேலே கூறப்பட்ட வகைகளெல்லாம் பொதுவாக விரதம் அனுஷ்டிக்கும் அன்பர்களுக்குப் பொருந்தும்.

    குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

    இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை (கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

    இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது பற்றிய சிறிய தகவல் வருமாறு:-

    கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

    அதிகாலை4.30- மணிக்குள் நீராடவேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால், பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம்.

    உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.

    * முருகனுக்குரிய மந்திரங்களான "ஓம் சரவணபவ "ஓம் சரவணபவாயநம "ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.

    * திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

    * முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும்.

    * கோவிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் "அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.

    * மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது. பணி காரணம் உள்ளவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதமிருக்கலாம்.

    பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன் மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள்.

    அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.

    நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

    இவ்விரதத்தினை கடைப்பிடித்தால் வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.

    • தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.
    • எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் தேவராய சுவாமிகளின் வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

    கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.

    கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?

    தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

    வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.

    அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

    நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.

    அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

    சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

    அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,

    'சஷ்டியை நோக்க சரவண பவனர்

    சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

    இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

    இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?

    இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

    பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.

    • ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர்.
    • முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோவிலாகும்.

    இக்கோவில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும். இக்கோவில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    தல வரலாறு

    தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார்.

    பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார்.

    அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.

    வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

    பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார்.

    பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

    சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண்ணீர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.

    கடலோரத்தில் உள்ள கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீராக இருப்பது குறிப்படத்தக்கது.

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

    வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒருவர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது.

    இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது.

    பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    பிரார்த்தனை

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர்.

    இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    கந்த சஷ்டி

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

    அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

    கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

    ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.

    அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்.

    போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

    தெய்வானை திருக்கல்யாணம்

    சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார்.

    இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

    நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

    முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

    கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும்.

    கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

    மும்மூர்த்தி முருகன்

    முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர்.

    அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.

    சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்.

    இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

    ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது.

    எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    குரு பெயர்ச்சி

    திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள்.

    வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

    இரண்டு முருகன்

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.

    அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.

    இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    திருவிழா

    பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர்.

    ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    ×