search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
    • முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக்கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள் தன் உடல் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள்.

    இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

    அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.

    ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள்.

    ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப் பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லாத நிலை ஏற்படும்.

    இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்...

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பன்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது?

    இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதங்களுடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிருக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்ப்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.

    அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும். பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப்பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டை ஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம் இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள், சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள், வேலனைப் போற்றுங்கள்.

    • கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
    • உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.

    வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது கந்தசஷ்டி விரதமாகும்.

    ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கர்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி லட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    எல்லா முருகன் ஆலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நிறைந்த பக்தியான விரதமாக செய்ய பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்படும்.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்தி சிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறி தவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலைநாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெருபேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர்.

    சஷ்டி விரத அனுஷ்டானங்களும், விதிமுறைகளும்:

    கந்த சஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும் (கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது).

    உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து கடைசி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து (நிறுத்தி) பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    கந்த சஷ்டி என்னும்போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாக்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும்.

    கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும்.

    விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.

    தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (பானக்கம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமமான விரதமாகும். பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும்.

    பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் நாம் இருக்க வேண்டும்.

    உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதம். அதற்குரிய பலன் மும்மலம் நீங்கி ஆன்மா முக்தியைப் பெறுவதே ஆகும்..

    இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும்.

    ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பபூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும்.

    உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும். விரதத்துக்குரிய மூர்த்தியின் வடிவத்தைப் பொன் பிரதிமையாகச் செய்து வீட்டிலே வைத்து முறைப்படி கும்பங்கள் ஸ்தாபித்து சங்கல்ப பூர்வமாகப் புண்ணியாகவாசனம் முதலிய பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பித்து சமஸ்தோபசார பூசைகளையும் செய்துமுடித்து அன்று முழுவதும் உபவாசமாயிருத்தல் வேண்டும்.

    மறுநாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்கள் செய்து மறுபடியும் அவற்றுக்குப் பூசைகள் நடத்திய பின் கும்பப் பொருட்கள் பொன் பிரதிமையும் மற்றும் தானப் பொருட்கள் யாவும் சேர்த்து வேட்டி, சால்வை, அரிசி, காய்கறி, தாம்பூலதஷிணைகள் பூஜைகளைச் செய்வித்த குருவுக்கு வழங்கி முறைப்படி நான் கைக்கொண்ட இந்த விரதத்தை இன்று உத்தியாபனம் செய்து முடிக்கின்றேன். சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட படி இவ்விரதத்திற்குரிய பலன்களைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    தம்பதிபூசை, சுமங்கலி பூசை முதலியன குறித்து விரதத்துக்கு சொல்லப்பட்டிருந்தால் அவற்றையும் செய்து முடிந்தபின் மாஹேஸ்வர பூசை செய்து வீடடுப் பாரணை பண்ண வேண்டும். பாரணை காலை எட்டரை மணிக்கு முன்செய்து முடிக்க வேண்டும் என்பது விதி. சிலர் உதயத்திற்கு முன் விரதத்திற்குரிய பாரணையை முடித்துவிடுவதுண்டு. ஆனால் சூரிய உதயத்திற்கு முன் பாரணை செய்தல் விதியன்று.

    உரிய நேரத்தில் பாரணை பண்ணுவதற்குத் தடைகள் ஏற்பட்டால் பாரணைக்காக சமைத்த உணவைச் சாமிப்படத்திற்கு முன்படைத்து அதனை இந்த உரிய நேரத்தில் முகர்ந்து விடுதல் போதுமானது. பின்னர் இயன்ற பொழுதில் சாப்பிடலாம்.

    சமையல் தயாரிப்பதிலும் தாமதம் ஏற்படின் சாமிபடத்திற்கு முன் ஒரு சிறு பாத்திரத்தில் நீரெடுத்து வைத்து அதில் துளசியை இரண்டு அடியிலைகளுடன் கூடிய கதிராக எடுத்து அந்த நீரை உரிய காலத்தில் அருந்தி பாரணையை நிறைவு செய்யலாம். பின்னர் வசதியானபோது சாப்பிடலாம்.

    ஒரு விரதத்தின் முடிவில் அதாவது பாரணை நாளில் இன்னொரு விரதம் வந்தால் இந்த முறையையே கடைபிடிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இரண்டாவது விரதமும், உபவாசமாக இருந்தால் முதலாவது விரத்தின் பாரணையைத் துளசி, தீர்த்தம் அருந்தி நிறைவேற்றி விட்டு இரண்டாவது விரதத்தை முறைப்படி உபவாசமாக அனுஷ்டித்து அதற்கு மறுநாள் பாரணை செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் கேதாரகௌரி நோன்பின் மறுநாள் கந்தசஷ்டி விரதாரம்பம் அல்லது கந்தசஷ்டி விரத முடிவில் அதாவது பாரணையன்று சோமவார விரதம் வருவதுண்டு, இச்சந்தர்ப்பத்தில் முதலில் நாம் பார்த்தவாறு தான் விதிமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

    விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்துவது கூடாது. விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி.

    தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும் இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும். ஆலயங்களில் ஆரம்ப தினத்திலேயே தர்ப்பையணிந்து காப்புகட்டி, சங்கல்பித்து ஆறு நாளும் நோன்பிருத்தல் முறை, இறுதி நாளில் காப்பை அவிழ்த்துத் தர்ப்பையுடன் சேர்த்துத் தாம்பூல தஷிணைகளுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிப்பர்.

    ஏழாம் நாள் அதிகாலையில் நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிப் பாரணைப் பூஜை என்று நடைபெறும் விசேஷ பூஜையையும் கண்டு வழிபட்டபின் மாஹேஸ்வர பூசை செய்து (அடியார்களுக்கு அன்னமிட்டு) பாரணை செய்ய வேண்டும்.

    இவ்விதம் கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பாலப்பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.

    விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. ஏனைய விரத அனுஷ்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தால் உடலின் சுமை குறைவதால் மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும். உண்ணா நோன்பின்போது, உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன.

    கொழுத்த உடல் கொண்ட மனிதன், உண்ணா நோன்பின்போது மறைமுகமாக உண்டு கொண்டே இருக்கிறார். உள்ளுறுப்புக்களை வீணாகச் சுற்றியிருந்த பகுதிகள் கரைக்கப்படுகின்றன. உண்ணா நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச்செயலாக அமைந்து, உடலைக் காக்கிறது.

    உண்ணா நோன்பின்போது, உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தன்மை ஏற்படுகிறது.

    கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய நினைவுகள் வளர்கின்றன.

    மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூரும் சக்தி, இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது. உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே

    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே

    குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

    மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே

    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

    ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்

    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

    முருகனின் ஆறு படை வீடுகள்

    பழனி:

    பழனி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழனி. பழனி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பப்படுகிறது.

    திருச்செந்ததூர்:

    கடல் அலை 'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின்போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்:

    தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது

    சுவாமிமலை:

    தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார். இதைக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவ மந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

    திருத்தணி:

    முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை:

    நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார். குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

    • சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான்.
    • ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.

    ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

    காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

    இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

    சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

    அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

    சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.

    அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரிக்க செய்தார்.

    அதன்படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6-வது நாள் சூரனை முருகப் பெருமான் வீழ்த்தினார். அது சூரசம்ஹாரம் எனப்படுகிறது. அந்த போர் எப்படி.

    ஆறுமுகன் அவதாரம்

    தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.

    அவற்றை வாயு பகவான் ஏந்திச்சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்து போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான்.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

    பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்பில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வைபட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர்.

    இவர்கள் ஆனைவரும் முருகனின் படைவீரர்களாயினர்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார்.

    ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச்செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

    பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப்படையும் கிளம்பிய முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர்.

    அதன் பிறகு முருகப்பெருமாள் சூரபத்மனுடன் போர் நடத்தினார்.

    • இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும்.
    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும்.

    திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் மலை : திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    தல வரலாறு

    கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுமுருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப்பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

    முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

    இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

    முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.

    அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

    திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

    பெயர்க்காரணம்

    பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

    இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

    இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

    சிறப்புகள்

    முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோவில்களில் இக்கோவில் அளவில் பெரியதாகும்.

    லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

    சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார்.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

    கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

    கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.. கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

    மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோவில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன.

    அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை,. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன.

    இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோவிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன

    கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோவில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

    பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோவில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.

    அமைவிடம்

    தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    • ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் முன் நின்று வணங்கி, மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து மாலை அணிந்து, சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    • மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.
    • ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

    தமிழ்க் கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதாக புராண வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகிறோம்.

    ஆறுமுகன் அவதரித்தல் :

    உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும். கருணையே வடிவான ஆறு திருமுகங்களையும், பன்னிரெண்டு கரங்களையும் தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர்.

    முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். "முருகு" என்னும் திருப்பெயரோடு "அன்" விகுதி சேர்த்து முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.

    அப்பேற்பட்ட முருகப்பெருமானின் அவதாரப் பெருமையையும், ஆறுபடை வீடுகளின் தலச் சிறப்பையும் வெப்உலகம் இணைய தளத்தின் ஆன்மீகம் - ஆலயம் பகுதியில் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

    சூரபத்மன் என்னும் அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் நூற்றியெட்டு யுகங்கள் வாழும் ஆயுளும், ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத மாபெரும் வரங்களைப் பெற்றான்.

    தான் பெற்ற வரங்களினால் அகங்காரம் கொண்டு, தேவர்களையும் - முனிவர்களையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்தான் சூரபத்மன்.

    நான்முகன், திருமால், இந்திரன், தேவர்கள் யாவரும் கயிலைவாழ் சிவபெருமானிடம் வந்து, சூரபத்மன் தேவர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைகள் புரிகின்றான் என்று முறையிட்டனர். சூரபத்மனின் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் சிவபெருமானை வேண்டினர்.

    "தேவர்களே நீங்கள் இனி வருந்த வேண்டாம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யாம் ஒரு புதல்வனை ஈந்தருள்வோம். அப்புதல்வன் எனது நெற்றிக் கண்ணிலிருந்து உண்டாகும் ஆறு தீப்பொறிகளிலிருந்து உரு பெறுவான். அவன் தங்களின் குறைகளைக் களைந்து காத்தருள்வான்" என்று கூறியருளினார் ஈஸ்வரன்.

    அதன்படியே சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் விட்டது, அவை ஆறு குழந்தைகளாக விசாக நட்சத்திரம் கொண்ட திருநாளில் அவதரித்தன. அக்கினிப் பொறியாய் இருந்து அவதரித்தமையால் "அக்கினி கர்ப்பன்" என்றும், கங்கையில் தவழ்ந்தமையால் "காங்கேயன்" என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியமையால் "சரவணன், சரவண பவன்" என்றும் திருப்பெயர்களுடன் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆறு குழந்தைகளையும் ஈசனின் கட்டளைப்படி கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால், கார்த்திகேயன் என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார்.

    திருக்கரத்தில் வேலை ஏந்தியதால் வேலாயுதன் என்றும், ஒளியுடைய வேலாக விளங்கியமையால் கதிர்வேலன் என்றும், தமிழ்த் தெய்வமாக விளங்குவதால் புலவன் என்றும், மயில் மீது ஊர்வதால் மயில் வாகனன் என்றும், சேவற்கொடியினை உடைய காரணத்தால் சேவற்கொடியோன் என்றும், கடம்பமலர் அணிவதால் கடம்பன் என்றும், அன்பர்களின் நெஞ்சத்தில் வாழ்வதால் குகன் என்றும், மாறாத இளமையோன் ஆதலால் குமரன் என்றும் பல்வேறு பெயர்களால் முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

    ஆறு உருவங்களும் ஓர் உருவாதல் :

    கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்ட ஆறு குழந்தைகளையும் சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வரும்படி பார்வதியிடம் சிவபெருமான் அருளினார். பார்வதி தேவியும் அதன்படியே ஆறு குமாரர்களையும் ஒரே சமயத்தில் தன்னுடைய இரண்டு திருக்கரத்தினால் வாரி அணைத்து எடுத்தாள். ஆறு உருவங்களும் ஒரே உருவமாகி, ஓருடல், ஆறு தலைகள், பன்னிரு கரங்கள், இரு பாதங்களை உடைய அற்புத உருவமாக மாறியது. அழகே வடிவமெடுத்து "கந்தன்" என்னும் நாமத்துடன் ஆறுமுகன் விளங்கினான்.

    ஆற்றுப்படையே ஆறுபடை வீடு :

    படைவீடு என்பது போர் புரியும் படைத் தலைவன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தைக் குறிக்கும்.

    ஆறுமுகப் பெருமான் சூரபத்மனுடன் போர் புரியும் பொருட்டு தங்கியிருந்த ஒரே இடம் திருச்செந்தூர். ஆயினும் ஏனையத் தலங்களும் படைவீடு என்றே அழைக்கப்படுகின்றன.

    நக்கீரர் "திருமுருகாற்றுப் படை" என்னும் தம்முடைய நூலில் ஆறுமுகப் பெருமான் தங்கியிருந்த தலங்களையும் ஆறுமுகப் பெருமானை வழிபடுவோர் எல்லா கஷ்டங்களையும் நீக்கப் பெற்று அருளைப் பெறுகின்றனர் என்றும் அவரது பெருமைகளை கூறி ஆற்றுப் படுத்துகிறார்.

    அதனையட்டி ஆறுமுகனுக்கு ஆற்றுப் படைவீடு என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே ஆறுபடை வீடாயிற்று. கச்சியப்ப சிவாச்சாரியார், அகத்திய மாமுனிவர், ஒளவையார், வள்ளலார் போன்ற எண்ணற்ற புலவர்களும் முருகன் புகழை பாடிப் பேறு பெற்றுள்ளனர்.

    ஆறுபடை வீடுகள் :

    1. திருப்பரங்குன்றம்

    2. திருச்செந்தூர்

    3. பழனி

    4. சுவாமி மலை

    5. திருத்தணி

    6. பழமுதிர்ச்சோலை என்பனவாகும்.

    ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள் :

    அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

    1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

    2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்

    3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்

    4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்

    5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி

    6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

    மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர். ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

    • முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.
    • 130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோவிலாகும்.

    பழமையான கோவில்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோவில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இதுவாகும். இக்கோவில் அமைந்துள்ள இடம் "திருச்சீரலைவாய்" என முன்னர் அழைக்கப்பட்டது.

    தல வரலாறு

    தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.130 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    திறக்கும் நேரம்:

    காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

    பொது தகவல்:

    தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம். வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார். முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

    பிரார்த்தனை

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை இந்து சமய மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது. கங்கை பூஜை தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    கந்த சஷ்டி

    முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்தகுருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார். ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்வார். அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். குத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.

    தெய்வானை திருக்கல்யாணம்

    சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.

    முருகனுக்கு மஞ்சள் நீராட்டு

    கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்க ளது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.

    மும்மூர்த்தி முருகன் திருச்செந்தூர் கோவில் ஆனை

    முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்தது போலவும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரையில் இருக்கும் "சந்தனமலை'யில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    குரு பெயர்ச்சி

    திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

    இரண்டு முருகன்

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது. அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடைகளை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர். இதை, தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    திருவிழா

    பங்குனி உத்திரம், திருகார்த்திகை , வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    தமிழ் இலக்கியங்களில்...

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

    தொல்காப்பியம்

    முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

    புறநானூறு

    வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

    நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

    அகநானூறு

    திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

    திருமுருகாற்றுப்படை

    உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

    சிலப்பதிகாரம்

    சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

    தேவாரப்பதிகம்

    நஞ்செந்தில் மேய வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்

    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

    அருணகிரிநாதர் பாடல்

    இக்கோவில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

    அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

    சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

    செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    • முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.
    • முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • 9 செவ்வாய்க்கிழமைகள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
    • கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் படிக்க வேண்டும்.

    ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்கள் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்.

    செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று வீடு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்து முருகனை உளமார வழிபடுவதால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மையான பலன்கள் உண்டாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துகள் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    • விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
    • செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான்.

    செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப்பெருமான். ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் 'செவ்வாய் தோஷம்' என்று கருதப்படும்.

    அவர்களுக்குத் திருமணத்தடை, புத்திரப் பேற்றில் தடை, குடும்ப ஒற்றுமை குறைவு, தொழிலில் இழப்பு, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவை ஏற்படலாம்.

    அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

    பழனி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில், செவ்வாய்க்குரிய பரிகாரத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

    • இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
    • வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரில் உள்ளது, பழமையான வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணிய சுவாமி ஆலயம். சூரபத்மனால் அமைக்கப்பட்ட கந்தபுஷ்கரணியை தல தீர்த்தமாக கொண்டது, சூரபத்மன் மயிலாக வந்து முருகனை வழிபட்டு ஞானோபதேசம் பெற்ற தலம், ஆறுமுகங்களுடன் அருளும் இறைவனை வழிபடுவதால் ஆறுபடை வீடுகளையும் வழிபட்ட பலனை தரும் ஆலயம், அகத்தியர் வழிபட்ட தலங்களில் ஒன்று, பிரம்பு என்னும் முள்செடியை தல விருட்சமாகக் கொண்ட ஆலயம், ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்த இடஞ்சுழி விநாயர் சன்னிதி அமைந்த ஆலயம் என பல்வேறு சிறப்புகளுடன் விளங்குகிறது, இந்த சுப்பிரமணியர் கோவில்.

    இவ்வாலய முருகப்பெருமானை, தொடர்ந்து 6 வாரங்கள் 6 அகல்விளக்கு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும். முருகப்பெருமானுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறப்பற்ற நிலை உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல முருகனை பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். இழந்தப் பதவியைப் பெற விரும்புபவர்கள், புதிய பதவி கிடைக்க வேண்டுவோரும், நம்பிக்கையுடன் இத்தல முருகப்பெருமானை வணங்கி வரலாம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், முருகனுக்கு காவடி எடுத்தும், பால் அபிஷேகம் செய்தும், சந்தனத்தால் அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுகின்றனர்.

    இந்தக் கோவிலில் சிவபெருமான், குபேர திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவரை திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வில்வம் சமர்ப்பித்து வழிபட்டால், கடன் நிவர்த்தி மற்றும் தொழில் அபிவிருத்தி ஏற்படும். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகுந்த சக்தி படைத்தவள். சாந்த துர்க்கையாக இருக்கும் அந்த தேவியை செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும், துர்க்காஷ்டமியின் போதும் தீபமேற்றி வழிபடுவோருக்கு, வேண்டும் வரம் அருள்வாள். ஆண்டுதோறும் தை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 501 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதில் பங்கேற்றால் சகல பலன்களும் கிடைப்பதுடன், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து செல்வம் கொழிக்கும்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் இந்த ஆலயம், ஆடுதுறையில் இருந்து பொறையார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலைகள் சந்திக்கும் மங்கநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கநல்லூர், சங்கரன்பந்தல் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் பெரம்பூர் வழியே செல்கின்றது. மயிலாடுதுறை, பொறையார், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உள்ளது.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×