search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • முருக மந்திரம் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடலாம்.
    • உங்கள் வாழ்க்கையிலிருந்த கஷ்டங்கள் தீரும்.

    சித்திரை மாதம் கிருத்திகை முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவதற்குச் சிறப்பான நாளாகும். சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரமாக இந்த கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. எனவே சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் அருள் பெற வேண்டுமென்றால், சித்திரை மாத கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    அதிகாலை எழுந்து குளித்துவிட்டு விரதத்தைத் தொடங்கினால், முருகப்பெருமானின் அருளும், ஆசியும் பூரணமாகக் கிடைக்கும். முருகப்பெருமானுக்கு மலர்கொண்டு பூஜித்து, விளக்கேற்றி வழிபட வேண்டும். அதிகாலை தொடங்கியது முதல் மாலை வரை உணவு எடுத்துக் கொள்ளாமல், முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்த பின்பு, பால் பழம் அல்லது பழச்சாறு அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    இந்நாளில் விரதம் ஏற்று வீட்டில் இருப்பவர்கள், முருக மந்திரம் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றைப் பாராயணம் செய்து வழிபடலாம், மேலும் கேசரி சக்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். விரதத்தை முடிக்கக் கூடிய மாலை நேரத்தில் செம்பருத்தி சிவப்பு ரோஜா செவ்வரளி போன்ற மலர்களைக் கொண்டு முருகப்பெருமானைப் பூசிக்கலாம்.

    காக்கும் கடவுளான முருகப் பெருமான், சித்திரை மாதத்தில் கிருத்திகை விரதம் மேற்கொள்பவர்களுக்கு, வீடு பிரச்சனை, குடும்ப பிரச்சனை, எதிரிகள் பிரச்சனை, பணப்பிரச்சனை, சொத்து பிரச்சனை என எல்லா விதமான தடைகளையும் நீக்குவார். குறிப்பாகச் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கும்.

    கார்த்திகை நாயகனான முருகப்பெருமானுக்காக, கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொண்டால், அன்பு அறிவு செல்வம் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் என அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    அதேசமயம் இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருந்து முருகப்பெருமானின் மந்திரங்களைப் பாராயணம் செய்து, மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு, பசியில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும், மேலும் உங்கள் வாழ்க்கையிலிருந்த கஷ்டங்கள் தீரும்.

    • முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் பிரசித்தி பெற்றவை.
    • த ஆறு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஆறுவிதமான பலன்களைப் பெறலாம்.

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் பிரசித்தி பெற்றவை. இந்த ஆறு தலங்களிலும் வழிபாடு செய்தால், ஆறுவிதமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள்.

    தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த திருப்பரங்குன்றம் ஆலயத்தில் வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும்.

    கடற்கரையோரமாக அமைந்த திருச்செந்தூரில் கடலில் நீராடி சுப்பிரமணியரை வழிபட்டால் நோய், பகை நீங்கும்.

    முருகப்பெருமான் ஆண்டியாக நின்ற பழனி மலைக்கு சென்று வழிபாடு செய்தால், தெளிந்த ஞானத்தைப் பெறலாம்.

    சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை முருகப்பெருமான் கூறிய இடம் சுவாமிமலை. இங்குள்ள முருகனை வழிபட்டால், மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

    சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தன்னுடைய கோபம் தணிவதற்காக முருகப்பெருமான் வந்து அமர்ந்த இடம், திருத்தணி. இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு கோபம் நீங்கி, வாழ்வு சிறக்கும்.

    முருகப்பெருமான் தன்னுடைய திருவிளையாடலை, அவ்வையிடம் காட்டிய இடம் பழமுதிர்சோலை. இங்கு வழிபட்டால் பொன், பொருள் சேரும்.

    • ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம்.
    • இன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத் தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளா கவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

    ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். பங்குனி உத்திரத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் "ஓம் சரவண பவ" என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    பங்குனி உத்திர தினத்தன்று ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோவிலுக்கு செல்லலாம். முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர் களுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குனி உத்திரம் தினத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரு வரன் கை கூடி வரும் என்பது முன்னோர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டு.

    பங்குனி உத்திரம் தினத்தன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேசம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி நேர்ந்தால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சி னைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும்.

    பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரிபூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிவிப்பதே நம் வீட்டில் மங்கள விழாக்கள் நடக்க வேண்டியதை நாம் சிந்திப்பதற்காக அமைந்தவைகள் ஆகும். இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும்.

    இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை பங்குனி உத்திரம் தினத்தன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயணர் லட்சுமிதேவியை அடைந்ததைப் போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

    கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். இந்த விரதத்தால் உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையுடன், குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.

    • அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார்.
    • நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    சங்க காலத்தில் கோவில்கள் இலக்கியங்களை தோற்றுவிக்கும் பாடு களங்களாக விளங்கின. கோவிலின் சிறப்பு, வரலாறு போன்றவற்றை விளக்க தல புராணம் இருந்தது. காலப்போக்கில் கோவில்களை மையப்படுத்தி பல சிற்றிலக்கியங்களும் தோன்றியது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் பெரும்பாலும் பக்தியை பறைசாற்றுபவையாக உள்ளது. எனவே தான் பக்தி இலக்கிய காலத்தில் சிற்றிலக்கியங்கள் வளர்ந்தோங்கின.

    இறைவனை பாடுபொருளாக கொண்ட பிள்ளைத்தமிழ், உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, கோவை, பரணி போன்ற சிற்றிலக்கியங்கள் பக்தி சார்ந்தவைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில் எட்டு பாடல்களில் வரும் அட்டமங்கலம், ஒன்பது பாடல்களால் வரும் நவமணிமாலை, பத்துப்பாடல்களால் வரும் பதிகம், இருபது பாடல்களால் வரும் இருபா, முப்பது பாடல்களால் வரும் மும்மணிமாலை, மும்மணி கோவை, நாற்பது பாடல்களால் வரும் நான்மணி மாலை, அறுபது பாடல்களால் வரும் மணிமலை, நூறு பாடல்களால் வரும் இணை மணிமாலை போன்றவை பக்தியை பற்றி பாடப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனியில் குடிகொண்ட முருகப்பெருமானை பற்றி பதிகம், மாலை, ஒருபா, அந்தாதி, விருத்தம் முதலிய பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்று உள்ளன. இலக்கியத்தில் 3-ம் படைவீடாக குறிப்பிடும் திருஆவினன்குடியின் சிறப்பு பத்துப்பாட்டின் முதல் பாட்டான திருமுருகாற்றுபடை விளக்குகிறது. அருணகிரிநாதர் பழனி முருகனை பற்றி 99 திருப்புகழ் பாடல்களை பாடி உள்ளார். இதேபோல் வையாபுரிப்பள்ளு, பழனி பிள்ளைத்தமிழ், பழனியாண்டவர் சமயமாலை போன்றவை பழனியை பற்றி பாடப்பட்டுள்ள சிற்றிலக்கியங்கள் ஆகும்.

    இலக்கிய மரபு மட்டுமல்லாமல் வாய்மொழி மரபும் பழனி முருகன் கோவிலை மையமாக கொண்டு வளர்ந்துள்ளன. இதை கோவில் திருவிழாக்களின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வெளிப்படுத்தும் காவடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, கோலாட்டம், வழிநடை சிந்து பாடல்கள் போன்றவற்றில் காணலாம். நாமும் இறைவனின் திருவடியை காண அவன்பால் பாடல்களை பாடி பக்தியை வெளிப்படுத்துவோம்.

    • தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
    • காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

    தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.

    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.

    • தெய்வ திருமணங்கள் பல, பங்குனி உத்திர நாளில்தான் நிகழ்ந்தன.
    • காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * தெய்வ திருமணங்கள் பல, புனிதமான இந்த பங்குனி உத்திர திருநாளில்தான் நிகழ்ந்தன.

    * மீனாட்சி-சுந்தரேசுவரர், முருகன்-தெய்வானை, ஆண்டாள்-ரெங்கமன்னார், ராமர்-சீதா தேவி திருமணங்கள் பங்குனி உத்திர திருநாளில் நடந்தன.

    * முருகனின் துணைவியான குறமகள் வள்ளி, ஐயப்பன், வில்வித்தையில் சிறந்தவரும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் ஆகியோர் பங்குனி உத்திர நாளன்று பிறந்தனர்.

    * சிவபெருமான், தனது நெற்றிக்கண் கொண்ட நெருப்பினால் சாம்பலாக்கிய பின், ரதியின் வேண்டுகோளை ஏற்று மன்மதனை எழுப்பியதும் பங்குனி உத்திர நாளில்தான்.

    * இந்திராணியை பிரிந்து, பின்னர் கடும் விரதம் மேற்கொண்ட தேவலோக அதிபதி இந்திரன் மீண்டும் மனைவியை அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    * மகாலட்சுமி உத்திர விரதத்தை அனுசரித்து விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றது பங்குனி உத்திர திருநாளில் தான்.

    * 27 கன்னியர்களை தனது மனைவிகளாக சந்திரன் ஏற்றுக் கொண்டது பங்குனி உத்திர நாளில் தான்.

    * காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்தது பங்குனி உத்திரத்தன்று தான்.

    • தாரகாசூரன், சிறுவன் என முருகனை கேலி செய்தான்.
    • கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

    பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

    அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாகப் பெரிதாகவளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினார்.

    இந்த மலை ரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையைப் பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

    அதைக் கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயமறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், அஸ்திரங்களும் மோதின. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலைதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்கும் வேளையில், வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத்தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார்.

    துள்ளி வந்த வேல், கிரவுஞ்ச மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகா சுரனைக் கொன்றது. தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, திருமுகனை வேண்டினால், பிறவிப்பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத்தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.

    • குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர்
    • முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்க வேண்டும். காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து "கந்த சஷ்டி கவசத்தையோ' வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்...

    பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

    குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர் என்பது ஐதீகம்...

    • இன்று முருகப் பெருமானை தரிசிப்போம்.
    • செவ்வரளி மாலை சார்த்துவோம்.

    ஞானகுருவெனத் திகழும் முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர நாளில் வணங்குவோம். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் ஞானக்குமரன்.

    திதியைக் கொண்டு இறைவழிபாடு செய்யலாம். அதேபோல், கிழமைகளைக் கொண்டும் இறைவனை வணங்கலாம். அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அதேபோல், நட்சத்திர நாளைக் கொண்டும் அந்தந்த தெய்வங்களை வழிபடலாம்.

    திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம். மாதந்தோறும் வருகிற திருவாதிரையில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வது உகந்தது. அதேபோல், சுவாதி நட்சத்திர நாளில் விரதம் இருந்து ஸ்ரீநரசிம்மரையும் உத்திர நட்சத்திர நாளில் ஸ்ரீஐயப்ப சுவாமியையும் தரிசித்து வேண்டிக்கொள்ளலாம். திருவோணம் நட்சத்திரம், பெருமாளுக்கு உரிய நாள். மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்த நன்னாளில், விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவார்கள்.

    கார்த்திகை நட்சத்திரம் என்பது முருக வழிபாட்டுக்கு உரிய நாள். முருகு என்றால் அழகு என்று அர்த்தம். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் எனும் திருநாமம் அமைந்தது இவருக்கு. மேலும் வைகாசி விசாகமும் பங்குனியின் உத்திரமும் தை மாதத்து பூச நட்சத்திரமும் முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த நாட்கள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    ஒவ்வொரு மாதமும் வருகிற கார்த்திகை நட்சத்திரம், கந்தனுக்கு உரிய நாள். கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, வேண்டிக்கொண்டால், இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம்.

    கந்தன் என்றும் கந்தகுரு என்றும் சொல்கிறோம். ஞானவேல் என்றும் ஞானகுரு என்றும் ஞானக்குமரன் என்றும் கொண்டாடுகிறோம்.

    சுவாமிமலையிலும் திருச்செந்தூரிலும் ஞானகுருவாகவே திகழ்கிறார் முருகப்பெருமான். கந்தன் குடிக்கொண்டிருக்கும் ஆலயத்தில், கார்த்திகை நட்சத்திர நாளில் (இன்று) விரதம் இருந்து மாலையில் சென்று முருகப் பெருமானை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்துவோம். சிக்கல்களையும் கவலைகளையும் நீக்கி நல்லனவெல்லாம் தந்தருளுவான் ஞானக்குமரன்!

    • முருகப்பெருமானின் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர்.
    • இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது 'ஓம்' என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம்.

    இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம்.

    அவற்றை ஆலயத்திற்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு, பூரண கும்ப மரியாதை கொடுக்கும்போதும், வேள்வி செய்யப்படும்போதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து, விபூதியை பிரசாதமாக வழங்குவார்கள்.

    இந்த பன்னீர் இலையில், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு நரம்புகள் பாய்வதைக் காணலாம். முருகப்பெருமான் தன் திருக்கரங்களாலேயே விபூதியை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில்தான் பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    • பக்தர்கள் பழனிக்கு வந்து தானியங்களை சூறைவிட்டும், காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.
    • கறவை மாடுகள், சேவல் முதலியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    பழனி ஆண்டவனை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களின் கடன் தொல்லை தீர, மன அமைதி பெற, விளைச்சல் பெருகி லாபம் கிடைக்க வேண்டும் என பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து காணிக்கைகளை செலுத்துகின்றனர். அதன்படி துன்பம் நிறைவேறினால் கறவை மாடுகள், சேவல் முதலியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல் விளைச்சல் நன்கு பெருக வேண்டும் என்று வேண்டும் பக்தர்கள், அந்த வேண்டுதல் நிறைவேறிய பின்பு பழனிக்கு வந்து தானியங்களை சூறைவிட்டும், காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.

    பொதுவாக தானியங்களை சூறைவிடுதல் என்பது நாட்டுப்புற கோவில்களில் பின்பற்றப்படும் வழக்கமாகும். ஆனால் இந்த வழக்கம் பழனியிலும் காண முடிகிறது. பழனியாண்டவனை செழிப்பு தெய்வமாக கருதும் கொங்கு மண்டல விவசாயிகள் தானியங்களை சூறை விடுகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வரும் பக்தர்களில் சிலர் முந்திரிக்கொட்டையை சூறைவிட்டு வேண்டி செல்கின்றனர். இந்த சூறைவிடும் பழக்கம் தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு இடையே நிகழும் சமூக ஒருமைப்பாட்டு உணர்வை காட்டுகின்றது.

    பழனி மலைக்கோவிலில் நேர்த்திக்கடனாக சில பக்தர்கள் சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை துலாபார காணிக்கையாக வழங்குவதை பார்க்க முடிகின்றது. அதேபோல் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக தங்கம், வெள்ளி பொருட்கள், தாலி முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பக்தர்கள் பழனியாண்டவர் மீது வைத்துள்ள பக்திக்கு தங்கள் சொத்துகளையும் காணிக்கையாக அளித்துள்ளனர். பழனியை ஆண்ட மன்னர்கள் பழனியாண்டவனுக்குப் பூஜை செய்வதற்காக நிலங்கள் வழங்கியது பற்றிக் கல்வெட்டுக்கள் எடுத்து காட்டுகின்றன.

    பழனிக்கு வரும் பக்தர்களால் நேர்த்திக்கடனாக அதிகம் செலுத்தப்படுவது பணம் ஆகும். பொதுவாகவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், தான் மட்டுமின்றி சுற்றத்தார், நண்பர்கள் என அனைவரும் உடல்நலம், செல்வவளம் பெற்று வாழ வேண்டும் என்று வேண்டி காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல் காசு கோவில் மற்றும் அதன் சார்ந்த நலப்பணிகளுக்கு செலவிடப்படும். சிலர் காசு மட்டுமின்றி தங்க நாணயங்கள், வேல்கள், காசோலைகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றைச் செலுத்தி வழிபடுகின்றனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்கள் பவுண்ட், டாலர், யூரோ என கரன்சி நோட்டுகளை செலுத்துகின்றனர். எனவே நாமும் பழனியாண்டவரின் அருளை பெற காணிக்கை செலுத்தி எல்லா வளமும் பெறுவோம்.

    ஆறுமுகங்களின் அழகிய நெறிகள்

    முருகனின் ஆறுமுகங்கள் மக்களுக்கு வாழ்க்கை நெறிகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அதன்படி முதல் முகம் சுந்தர அழகையும், 2-வது முகம் தன்னை வாழ்த்தும் அன்பர்களுக்கு வரம் அளிப்பதாகவும், 3-வது முகம் வேத நெறிகளையும், யோக வழிபாடுகளையும் குறிக்கிறது. 4-வது முகம் வீடுபேறு முக்தியை வழங்கிட அன்பர்களை நோக்கி மலர்ந்துள்ளது. 5-வது முகம் பகைவர்களை அழித்து மக்களுக்கு நன்மை வழங்குகிறது. 6-வது முகம் அன்பு பார்வை வீசி நெறி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது.

    • முருகப்பெருமான் ‘சரவணன்’ என்று அழைக்கப்படுகிறார்.
    • பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன.

    'சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை' என்பது பழமொழி. ஞானப்பழத்துக்காக கோபித்து கொண்டு முருகன் நின்ற இடம் பழனிமலை. பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஞானத்தின் கடவுளான தண்டாயுதபாணியை நோக்கி பக்தர்கள் அருள் வேண்டி வருகின்றனர். 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தை மனமுருகி சொல்பவர்களுக்கு செல்வம், கல்வி, முக்தி, எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயம் போக்கல் என்னும் பேறுகள் கிடைக்கின்றது.

    பொய்கையில் உள்ள நாணல் புற்களுக்கு மத்தியில் தாமரை மலர்களில் தோன்றியதால் முருகப்பெருமான் 'சரவணன்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் முருகன் திருத்தலங்களில் அமைந்திருக்கும் பொய்கைகள் அனைத்தும் 'சரவண பொய்கை' என்றே அழைக்கப்படுகிறது. பழனி மலையை சுற்றி முருகனுக்கு உகந்த கடம்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றில் பூக்கும் மலர்கள், பட்டை, பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இவை, வலியை குறைப்பதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கக்கூடியது.

    உலக மக்களை காக்கும் பொருட்டு பதினென் சித்தர்களில் ஒருவரான போகர் நவபாஷாணத்தால் முருகப்பெருமானின் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையில் அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் தீராத பிணிகளும் வந்த இடம் தெரியாமல் தீர்ந்துவிடும். முக்கியமாக திருநீறு, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு முருகப்பெருமானின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கொடிய நோய்களையும் தீர்க்க கூடியது.

    ஆவினன்குடி பழங்காலத்தில் 'சித்தன் வாழ்வு' என்று அழைக்கப்பட்டு இருக்கின்றது. 'சித்தன் வாழ்வு இல்லந்தோறும் முன்றெரியுத்து' என்று அவ்வையார் பாடியுள்ளார். பழனி குன்றின் மேல் மனித மாதவன் என்று ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் அழைக்கின்றனர். சித்தர்கள் தம்மை தெய்வநிலைக்கு மாற்றிக்கொள்ள விரும்பும்போது சித்தனாதனான முருகப்பெருமானே அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார் என்று புராணங்கள் மூலம் அறிய முடிகிறது. அவரின் அருளை நாமும் பெற்று சித்தநிலை அடைய முற்படுவோம்.

    ×