search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் தை மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடும், இரவு 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி வடமதுரை, பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதிகளில் ஆடி வந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பக்தர்கள் குழு பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளில் நேற்று பழனிக்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பாதயாத்திரை வருவது போல் நாங்கள் பல தலைமுறைகளாக மாட்டு வண்டிகளில் பழனிக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறோம். அதன்படி பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி நேற்று பழனி சண்முகநதிக்கு வந்தோம். அங்கு புனித நீராடிவிட்டு பழனிக்கு வந்து சேர்ந்தோம். பழனியில் சாமி தரிசனம் முடித்த பிறகு மீண்டும் மாட்டுவண்டியில் செல்வோம் என்றனர்.

    • இந்த ஆலயத்தில் 5-ந்தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

    அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாகடம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்த பின்னர், தோரணமலை பகுதியில் அகத்தியர் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சிக் கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.

    இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி (பழனி), கொல்லிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும். இந்த பாடசாலையில் 6 ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

    அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர்.

    அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    அகத்தியர், தேரையர், சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

    -புலவனூரான்

    • பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது.
    • தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.

    பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

    தைப்பூச திருவிழா இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாலில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    பிப்ரவரி 5ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடை படாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்ப்பட்டது. அதன்படி 48 நாட்கள் மண்டல பூஜை 11 கலசங்கள் வைத்து நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விப்படி அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
    • பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் தரிசனம் இல்லை என்பதால் பக்தர்கள் வருகை குறைந்தது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்ததாலும், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதாலும் தற்போது பழனிக்கு மீண்டும் பக்தர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

    அவ்வாறு வந்த பக்தர்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கிரிவீதி, வெளிப்பிரகாரத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வருகை தருவார்கள். அதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    மறுநாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    வருகிற 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம்.
    • புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.

    பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம். பழனி "இயற்கை எழில்" ததும்பும் புண்ணிய பூமி. பழனி ஆண்டவனின் அருளைப்பெற நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் பழனி "திருத்தலப் பயணம்" பாவங் களைப் போக்கி நல்வினையைக் காட்டுகின்றது. ஆன்மிக பூமியான பழனி திருத்தலத்தில் புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.

    சண்முகநதியில் புனித நீராடி பழனி ஆண்டவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் வீடுபேறு கிட்டும்.

    • சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம்.
    • இறைவனுக்கே ‘எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.

    உலகில் அரியதாக மனித பிறவி எடுத்த நமக்கு உண்ணவும், உரையாடவும் பழகி கொடுத்தவள் தாய். நல்வழிப்படுத்தி வழிகாட்டுபவர் தந்தை. அறிவு காட்டுபவர் ஆசான். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து இறுதியில் இறை அருளை பெற வழிகாட்டுபவர்கள் சித்தர்களே. ஆண்டவனின் கிளை சக்திகளாக திகழும் சித்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் சென்ற மக்களை கரையுள்ள நதியாய் நல்வழிப்படுத்தி நற்பயனை அடைய செய்வார்கள்.

    மலையில் உற்பத்தியாகும் நீர் கடலுடன் சங்கமம் ஆவதற்கு ஒழுங்குபடுத்துவது நதி. அதுபோல அறநெறிகளை வகுத்து காட்டிய நம் சித்தர்கள் வழி சென்றால் இறைவனுடன் ஐக்கியம் ஆகலாம். சீ(ஜீ)வன் சிவனாவது தான் சித்து. தம்மை தாமே அறிந்து தலைவனை அறிபவனே சித்தர். அவர்கள் சாகா கலை என்ற மருந்தை சரப்பயிற்சி மூலம் அடைந்து பேரின்பத்தில் திளைப்பவர்கள். எண்ணியதை எண்ணியாங்கு எய்தி வரும் பொருள் அறிந்து செயற்கரிய செய்பவர்கள். சித்தத்தை அடக்கி மூவாசைகளை துறந்து சுத்தமாக்கி திடநம்பிக்கையோடு இறைவன் பால் மனதை வைத்தவர்கள் சித்தர் பெருமக்கள். எனவேதான் இறைவனுக்கே 'எல்லாம் வல்ல சித்தர்' என்ற பெயரும் உண்டு.

    சித்தர்கள் சாதி, சமய வேறுபாடுகளை கடந்தவர்கள், மூட நம்பிக்கைக்கு இடம் அளிக்காதவர்கள். சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளை போற்றாதவர்கள். தத்துவஞானிகள். மெய்யுணர்வு பெற்றவர்கள். பொதுவாக சித்தர்கள் நம் தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்துள்ளார்கள் என்பது உண்மை. இதில் குறிப்பாக பழனி மலைப்பகுதி, பொதிகை, கொல்லிமலை, திருவண்ணாமலை ஆகியவை சிறப்பிடம் பெற்றவையாக உள்ளது. சித்தர்கள் தங்கள் குருவாக முருகப்பெருமானை ஏற்று வணங்கியவர்கள். அதிலும் பழனியாண்டவன் சித்தனாக, ஞானகுருவாக, குருமூர்த்தியாக எழுந்தருளி உள்ளான். எனவே தான் முருகப்பெருமானை சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்றும், சித்தநாதன் என்றும் ஆன்மிக பெரியோர்கள் போற்றி வணங்குகின்றனர்.

    • முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான்.
    • முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.

    "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி" என்ற சிறப்பு பெற்றது தமிழினம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைகளை வளர்த்தவர்கள், பண்பாட்டை கொடுத்தவர்கள். காதல், வீரம் இரண்டையும் கண்களாக போற்றி மண்ணின் பெருமையை காத்தவர்கள். இந்த சிறப்பு பெற்ற தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக இருப்பவன் அறுபடை அழகன், முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான். இந்து சமயத்தின் உருவ கடவுள்களுள் ஒருவனாக திகழ்ந்தாலும், அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே. இதனால் முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.

    நம் நாட்டில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை பிற சமயத்தினர் ஆட்சி செய்திருக்கின்றனர். பிற மதத்தினர் நம் தமிழக வளங்களை கொள்ளை அடித்திருக்கின்றனர். அரசர்களின் ஆட்சி, அந்நியர் ஆட்சி என அரசுகள் பலவாறு மாறி இருக்கின்றன. ஆனால் தெய்வ வழிபாடு எவ்வித மாற்றமும் பெறவில்லை. இன்றைக்கு எத்தனை விஞ்ஞான முன்னேற்றமும், வளர்ச்சிகளும் வந்த பிறகும் கூட ஆன்மிகம் தனது வேரை ஆழமாக பரப்பி இருக்கிறது.

    புராணங்கள் முருகப்பெருமானை சிவனின் மகனாக உரைக்கின்றன. அதன்படி சிவனிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவண பொய்கையில் 6 பகுதிகளாக விழ, அப்பொறிகளானது குழந்தை வடிவம் ஏற்கிறது. 6 கார்த்திகை பெண்களால் ஆறு குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றன. பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளே முருகப்பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது.

    அதேபோல் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், முருகப்பெருமானது ஜென்ம நட்சத்திர தினம். இந்த தினத்தை பக்தர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். முருகப்பெருமான் குடிகொண்ட கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில் அந்த அறுபடை வீடுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முதல்வனாக காட்சி தந்து அருள்பாலிக்கிறான்.

    • முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.
    • செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

    பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

    முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

    கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.

    வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.

    இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும்.

    அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.

    செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

    செவ்வாய்க்கிழமை முருகனுக்கு சிறப்பானது என்றால் அதை விட சிறப்பானது மார்கழி மாத செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு. இன்று முருகனுக்கு விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்திற்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் துன்பங்கள் பறந்தோடும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    • ஈரோட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.
    • இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது.

    இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.

    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர்

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வௌிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதில் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வரும் பக்தர்களே அதிகம். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வழக்கமாக திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்னரே பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவர். அதன்படி தற்போது பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கி உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் சாலை, பழைய தாராபுரம் சாலை வழியாக காவடி எடுத்து பக்தர்கள் வருகின்றனர். இதில் குழுவாக பாதயாத்திரை வருபவர்கள் வேன், லாரி போன்றவற்றில் சமையலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி வருகின்றனர். வரும் வழியில் சாலையோரம் தங்கி சமைத்து சாப்பிடுவதுடன், மரத்தடியில் ஓய்வு எடுக்கின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு, திருப்பூர் பகுதியில் இருந்து தாராபுரம், அலங்கியம், மானூர் வழியாக பழனி வரக்கூடிய பக்தர்கள் சாலையோரம் உள்ள மரத்தடியில் தங்கி உள்ளனர். பாதயாத்திரை குறித்து பக்தர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு முன்பு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. எனவே முன்னதாக வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு வந்தோம். தாராபுரம்- பழனி இடையிலான பாதயாத்திரை பாதை புதர் மண்டியும், சேதமடைந்தும் உள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • திருத்தேரோட்டம் பிப்ரவரி 4-ந்தேதி நடக்கிறது.

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கோவிலுக்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அடிப்படை வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தின்போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துக்குமாரசாமி தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் பிப்ரவரி 3-ந்தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேதமாக முத்துகுமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச திருத்தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.

    வழக்கமாக தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் டிசம்பர் மாத இறுதியில் இருந்தே வரத்தொடங்கி விடுவார்கள். மேலும் பொங்கல் பண்டிகை, தைப்பூச திருவிழாவின்போதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×