search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • தைப்பூச திருவிழா ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது.
    • விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் நலனுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது.

    • விவசாயிகள் சாலையோரம் வாழைக்குலை தோரணம் கட்டி அலங்கரித்து உள்ளனர்.
    • பக்தர்கள் பல விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    தக்கலை அருகில் உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்து செல்வது வழக்கம்.

    இதுபோல் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே நாட்டில் மும்மாரி பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் நிலையம் சார்பில் வேளிமலை முருகனுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள். இந்த பாரம்பரிய மரபு தொன்றுதொட்டு இன்று வரை அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு காவடி ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி, புஷ்பகாவடி, பால், பன்னீர், சந்தனம் போன்ற விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    பக்தர்கள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் காவடி எடுத்து கால்நடையாகவும், வாகனங்களில் தொங்கியவாறும் ஊர்வலமாக வேளிமலை முருகன்கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து முருகபெருமானுக்கு பக்தர்கள் காவடியில் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவையொட்டி பக்தர்களை வரவேற்கும் விதமாக தென்கரைதோப்பு ஊர் விவசாயிகள் பொதுமக்கள் சார்பில் புலியூர்குறிச்சியில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக வாழை குலை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தக்கலை போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • திருப்புகழ் பாடலைப் பாடி முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.
    • முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் ஏராளமான தகோவில்கள் உள்ளன.

    தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    முருகப்பெருமானே வழங்கும் பிரசாதம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது 'ஓம்' என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம். இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம். அவற்றை ஆலயத்திற்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு, பூரண கும்ப மரியாதை கொடுக்கும்போதும், வேள்வி செய்யப்படும்போதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து, விபூதியை பிரசாதமாக வழங்குவார்கள். இந்த பன்னீர் இலையில், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு நரம்புகள் பாய்வதைக் காணலாம். முருகப்பெருமான் தன் திருக்கரங்களாலேயே விபூதியை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில்தான் பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மயில் மீது அமர்ந்தமுருகன்

    திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். 'வக்ரன்' என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு 'வக்கரை' என்று பெயா் வந்தது. இங்கே வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறு முகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி - தெய்வானை இருக்கிறார்கள். அருண கிரிநாதரின் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அந்த திருப்புகழ் பாடலைப் பாடி இத்தல முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.

    சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, சிறுவாபுரி என்ற ஊர். இங்கு அருள்புரியும் முருகப்பெருமானும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ள இறைவன் 'வள்ளி மணவாளப் பெருமான்' என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் முகப்பெருமான் 'கல்யாண முருக'ராக அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், விரைவிலேயே அந்தத் தடை விலகி திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் கனவும் நனவாகும் என்கிறார்கள்.

    அதிகார முருகன்

    சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம் என்ற ஊர். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான், அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறும்படி, தன்னுடைய இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையில் இந்த முருகன் காட்சியளிக்கிறார். இதனால் இவரை 'அதிகார முருகன்' என்றும் அழைப்பார்கள். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத காரணத்தால், பிரம்மனை சிறையில் அடைத்ததோடு, அவர் செய்து வந்த படைப்புத் தொழிலையும், முருகப்பெருமானே செய்து வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும் இவரை `அதிகார முருகன்' என்று சொல்கிறார்கள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அதிகாரம் நிறைந்த பதவிகளை இவர் வழங்குவதாக ஐதீகம்.

    • முருகன் மாம்பழத்தை கையில் ஏந்தியபடி அருள்கிறார்.
    • பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.

    * விராலிமலை மூலவரான சண்முகர், மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்கிறார்கள்.

    * கனககிரி என்ற திருத்தலத்தில் கிளியை கையில் ஏந்தியபடி முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அதே போல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாம்பழத்தை கையில் ஏந்தியபடி அருள்கிறார்.

    * திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார்.

    • செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
    • ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி.

    ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.

    செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள், வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

    செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும்.

    வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

    செவ்வாய்க் கிழமை தோறும் காலையில் குளித்து முடித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்கு திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    • முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    3 பிளாக்குகளை கொண்ட இந்த முகாமில் ஒரு பிரிவில் இந்த கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக சமைத்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கு முடிந்த பின்னர் அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ஒரு பிரிவில் இவர்கள் 4 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.175 பணம் வழங்கப்படுகிறது. வெளியில் இருந்தும் அவர்கள் உணவை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்த பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என 4 பேரும் வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

    அதேபோல் மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று ஒருவருக்கொருவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும், தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

    இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் வெளியே வந்த கலெக்டர் மா.பிரதீப் குமார் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் எதுவும் இருக்காது. எனவே வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம்.

    அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம்.

    இந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களா அல்லது இங்கேயே இருக்கப்போகிறார்களா என்பதை முதலில் உறுதி செய்ய உள்ளோம்.

    இதில் முருகன் தவிர மற்ற 3 பேரும் (சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்) இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 4 பேரும் இன்று உண்ணாவிரதம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளதுபோல் இந்த 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதி ஒருவர் முகாமில் இருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது வரை அவர் பிடிபடவில்லை.

    அதேவேளையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நளினி, கலெக்டரிடம் தனது மகன் லண்டனில் வசிப்பதாகவும், அங்கு தனது கணவரையும் அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கலெக்டர் பிரதீப் குமார், இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கூறினார்.

    • மத்திய சிறைகளில் இருந்து நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    • மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் 4 பேரும் விடுவிக்கப்படுவார்கள்.

    திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர்.

    சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.
    • அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.

    ஐப்பசி மாத கிருத்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பிறகு பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    மேலும் முருகனின் மந்திரங்கள், கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. விரதம் இருக்க முடியாதவர்கள் பழம் மற்றும் பால் ஆகியவற்றை உண்ணலாம்.

    ஐப்பசி மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஐப்பசி மாத கிருத்திகை தினத்தில் பகல் மற்றும் இரவு உறங்காமல், முருகனை வழிபாடு செய்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இவ்விரத முறையினை தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையின் பெரும்பேற்றினையும், இறுதியில் முக்தியையும் பெறுவார்கள்.

    பலன்கள்: ஐப்பசி மாதம் கிருத்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். மேலும் முருகனின் அருளால் நோய்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும். அதுமட்டுமல்லாமல் நன்மக்கட்பேறு, செழிப்பான பொருளாதார நிலை, நீண்ட ஆயுள் ஏற்படும்.

    • கந்த சஷ்டி கவசத்தை படிப்பது நல்லது.
    • முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

    செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து செல்வங்களையும் பெற முடியும்.

    கார்த்திகை, விசாகம் இந்த இரண்டு நட்சத்திரங்களும், செவ்வாய் கிழமையில் சேர்ந்து வந்தால் அது இன்னும் சிறப்பு. ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபடுவது இன்னும் விசேஷமானது.

    முருகனை தினசரி நம் வீட்டில் வழிபட வேண்டும் என்றால் அந்த முருகப்பெருமானின் படம் வள்ளி-தெய்வானையுடன் நம் வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த சுவாமி படத்திற்கு முன்னால் "ஓம் சரவணபவ" என்ற எழுத்தினை அரிசி மாவால் எழுதி கோலமிட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால் தினசரி 6 விளக்குகள் ஏற்றுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, நைவேத்தியமாக பழங்கள் கற்கண்டு, உலர்திராட்சை இவைகளில் ஏதாவது ஒன்று படைத்து, முருகனை பூக்களால் அலங்கரித்து தீப தூப கற்பூர ஆரத்தியில் முருகனை பூஜை செய்யலாம்.

    முருகப் பெருமானுக்கு உகந்த மலர்களான முல்லை, சாமந்தி, ரோஜா முதலிய பூக்களை சமர்ப்பிப்பது இன்னும் சிறப்பு. சரவணபவ என்ற ஆறு எழுத்துக்களை உடையவன் முருகன். சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்வீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்ற பொருளில், மங்களம், ஒலி கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

    இந்த பூஜையில் "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை மூன்று முறை முதலில் உச்சரிக்க வேண்டும். அதன்பின்பு, அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய், பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகி, கருணை கூர் முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே, ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு, உதித்தனன் உலகமுய்ய. ஏறுமயில் லேறி விளையாடுமுக மொன்றே ஈசனுடன் ஞானமொழி பேசும்முக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும் ஆதியருணாசல மமர்ந்த பெருமாளே.

    இந்த இரண்டு முருகப்பெருமானின் பாடல்களையும் பாட வேண்டும். உங்களால் முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை வாரம் ஒருமுறை செவ்வாய்க்கிழமையில் படிப்பது நல்லது. படிக்க முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் ஒலிக்கச் செய்து காதால் கேட்பதும் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் திருமணம் தடை உள்ளவர்களும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலும், மாதம் தோறும் வரும் சஷ்டியிலும் முருகனை நினைத்து விரதம் இருந்தால் இந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். அழகன் முருகனை நினைத்து நாம் மனதார வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நமக்கு பலனை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.
    • வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி நடந்தது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடி கம்பம் அருகில் உள்ள பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் மாலையில் வெற்றிவேலனுக்கு அலங்காரமும் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதலும் நடந்தது.

    பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரை செல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பின்னர் சமய உரை நிகழ்ச்சி நடந்தது. கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். தாணுமூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் 'கந்தன் கருணை' என்ற தலைப்பில் பேசினர்.

    விழாவில் நேற்று முன்தினம் மாலையில் வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜையும், இரவு மெல்லிசை கச்சேரியும் நடந்தது.

    3-வது நாளான நேற்று தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருள மேளதாளங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது பழத்தோட்டம் பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு தேசிய கொடிகம்பம் அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தலத்தை வந்தடைந்தது.

    அங்கு நாஞ்சில் நாடு புத்தனார் ஆற்றில் முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கை, ஆன்மிக சொற்பொழி, சமய கருத்தரங்கம் போன்றவை நடந்தது.

    கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் 'வள்ளி தெய்வானை திருமணம்' என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் 'கந்தபுராணம் ஆராட்டு' என்ற தலைப்பிலும் பேசினர். பின்னர் இரவு சமபந்தி விருந்து நடந்தது.

    நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தொழில் அதிபர்கள் மகேஷ், மணிகண்டன், மணிவண்ணன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வகுமார், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் கிருஷ்ண விலாஸ் பொன்னுசாமி, பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகர் வேல்முருகன், நாடான்குளம் ராமன்புதூர் குமாரசுவாமி மற்றும் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாள் அதே இடத்தில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நாளை மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது.
    • மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. இதை முன்னிட்டு மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை சார்பில் 37-வது ஆண்டு இலக்கிய விழா நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

    விழாவிற்கு ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். செயற்குழு உறுப்பினர் சுதாகர் வரவேற்று பேசுகிறார். ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, தொழில் அதிபர் ராஜா, ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் ராஜு, லிங்கேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கிஷோர், ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தொடர்ந்து மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு ஆன்மிக அருளுரை, 6.30 மணிக்கு மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு வேடமிட்ட வினோத விசாரணை மன்றம் நடக்கிறது. இதில் நீலம் மதுமையன் நடுவராய் இருக்கிறார்.

    4-ந் தேதி காலை 10 மணிக்கு மயிலாடி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரி மாணவிகள் நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் வாசுகி மனோகர் நடுவரா இருக்கிறார்.

    5-ந் தேதி இரவு 7 மணிக்கு ஞானசம்பந்தம் நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடக்கிறது. நிகழ்ச்சியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும் இவர் 6-ந் தேதி இரவு நடைபெறும் டி.வி. பிரபலங்கள் பங்கேற்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் உச்சிகால பூஜையில் சுவாமிக்கு கல்பபூஜை நடைபெற்றது. இதேபோல் தங்க சப்பரம், வெள்ளி சப்பரத்தில் சின்னக்குமாரர் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவு அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. அப்போது பராசக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்தார்.

    இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் தனுர் லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்பினர். கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். முன்னதாக கந்தசஷ்டி விழாவின் சிறப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி கோவில் அன்னதான கூடத்தில் நேற்று திருமண விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள் ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள், பழனி நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    ×