search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    அமெரிக்க கல்வித்துறையில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. #MassiveCollege #Cheating #HollywoodStar
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் டெக்சாஸ், தெற்கு கரோலினா, யாலே, ஸ்டான்போர்டு, ஜார்ஜ் டவுன் ஆகிய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான லஞ்ச ஊழல் புகார்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்த பல்கலைக்கழங்களில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஹாலிவுட் நடிகைகள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் கோடிக்கணக்கிலான ரூபாயை லஞ்சமாக கொடுத்தது மத்திய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலி சான்றிதழ்கள், பொய்யான மதிப்பெண்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுதல் போன்ற வழிகளில் மோசடிகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

    இது தொடர்பாக ஹாலிவுட் நடிகைகள் லோரி லவுக்ளின், பெலிசிட்டி ஹாப்மேன் ஆகிய 2 நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு கருத்தை தெரிவித்தனர். #DeathPenalty #Corruption #MaduraiHighCourt
    மதுரை:

    மதுரை சூர்யா நகரை சேர்ந்த பரணிபாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மின்வாரியத்தில் 325 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வை கடந்த டிசம்பர் மாதம் நான் எழுதினேன். அந்த துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களிடம் கேள்வித்தாள் விவரங்களை தேர்வுக்கு முன்பே தெரிவித்துவிட்டனர்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் 3-ந் தேதி உத்தரவிட்டார். விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பதற்கு விளக்கம் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே 1,575 பேரை தேர்ந்தெடுத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

    கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வராமலேயே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது சட்டவிரோதம். எனவே மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கான நடவடிக்கைகளுக்கும், பணி நியமன உத்தரவு அளிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடந்த உதவி பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், “மனுதாரர் பங்கேற்ற தேர்வில் செல்போன் உள்பட எந்த மின்னணு சாதனமும் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அப்படியானால், அந்த தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி?” என்று கேள்வி எழுப்பினர்.

    மேலும், “அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது. கண்காணிப்பு கேமரா, செல்போன் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிகழ்வுகள் அடிக்கடி வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனாலும் அது தொடர்கிறது.

    லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அவர்கள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #Bribe #maduraicourt
    சென்னை:

    லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.

    கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    இவ்வாறு  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. #Bribe #maduraicourt
    லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    சிவகங்கை:

    ராமேசுவரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தாசில்தாராக பணியாற்றியவர் சவுந்தரராஜன். அவரிடம் வெளிச்சம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மீன்வளர்ப்பு தொழில் தொடர்பாக அனுமதி கோரி ஒரு விண்ணப்பம் அளித்தார். இந்த நிலையில் அதற்கான அனுமதியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கும்படி தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோர் கேட்டார்களாம். அதற்கு கருப்பையா தயங்கியதால், பின்பு இருவரும் ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் ஏற்பாட்டில் கடந்த 18.9.2004 அன்று ரூ.3 ஆயிரத்தை, தாசில்தார், தலையாரியிடம் கருப்பையா கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீதான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் சவுந்தரராஜன், தலையாரி நாகரத்தினம் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவித்து பணியில் அமர்த்த வலியுறுத்தி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    எலச்சிபாளையம்:

    திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவருக்கு, அவரது 7 மாத சம்பள நிலுவையை பெற்றுத்தருவதாக கூறி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான தங்கள் தலைமை ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் நேற்று காலை திடீரென திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 10 நிமிடமே இந்த சாலை மறியல் நடைபெற்றது.

    இதனிடையே மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) என்பவரையும், செங்கோட்டையன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்களின் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி டாஸ்மாக் கடையில் சாக்காங்குடியை சேர்ந்த மோகன்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராகவும், வளையமாதேவியைச்சேர்ந்த வீரமணி(41) என்பவர் உள்பட 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்க்கிறார்கள்.

    இதில் விற்பனையாளர் வீரமணி பற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு மோகன் புகார் கடிதம் எழுதி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வீரமணியை இடமாற்றம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு வீரமணியிடம் மேற்பார்வையாளர் மோகன் கேட்டுள்ளார்.

    இது பற்றி வீரமணி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மோகனை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வீரமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று வளையமாதேவி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த மோகன் வீரமணியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மெல்வின், இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதன்பிறகு அவரை கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார். இதையடுத்து மோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருமணமண்டபத்துக்கு சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த திலோக் சந்துரு என்ற வக்கீல் அவரது திருமண மண்டபத்திற்கு சுகாதார தரச்சான்று வழங்கக்கோரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் (தொழில்நுட்ப பிரிவு) சுந்தர்ராஜ் ஆய்வு செய்துள்ளார். பின்னர் சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று திலோக்சந்துருவிடம் அவர் கேட்டுள்ளார்.

    அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.6 ஆயிரமாக குறைக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத அவர் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், திலோக்சந்துருவிடம் ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய 6 ஆயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். அவர்களது அறிவுரையின் பேரில், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியில் இருந்த நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜிடம் ரூ.6 ஆயிரத்தை திலோக் சந்துரு கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சுந்தர்ராஜை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சி அதிகாரியின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சம் பணம் சிக்கியது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

    நேற்று இரவும் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் மாடசாமி (வயது 48) திடீரென தனது காரில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்தார்.

    அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரது காரை சோதனை செய்தனர். காரில் 3 லட்சத்து 52 ஆயிரமும், மாடசாமி சுந்தர ராஜின் சட்டைப்பையில் ரூ.18 ஆயிரமும் இருந்தது. காரில் இருந்த பை ஒன்றை சோதனை செய்தபோது அதில், ரூ.39 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மாடசாமி சுந்தரராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முறையான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களையும் காட்டவில்லை.

    நள்ளிரவு 1.30 மணி வரை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் விசாரணைக்கு பிறகு அடுத்த விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று கூறி மாடசாமி சுந்தரராஜை அனுப்பி வைத்தனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய மாடசாமி சுந்தரராஜின் சொந்த ஊர் நெல்லை வண்ணார்ப்பேட்டை ஆகும். தினமும் ஊரில் இருந்து தான் பணிக்கு வந்து சென்றுள்ளார்.

    மாடசாமி சுந்தரராஜிடம் இருந்து ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது. அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்ட போதுசெயல் அலுவலர் மேஜை டிராயரில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா, மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன்கள் லோகநாதன், பாலகிருஷ்ணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார்.

    இதனால் லோகநாதன், பாலகிருஷ்ணன் இருவரும் ராமலிங்கம் பெயரில் உள்ள சொத்துக்களின் பட்டாவை பெயர் மாற்றம் செய்துதர கோரி மோசூர் கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் கேட்டுள்ளனர்.

    அப்போது திவாகர் பட்டா பெயர் மாற்றம் செய்துதர வேண்டுமானால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் தருவதாக லோகநாதன் கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன் இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

    லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரை தொடர்பு கொண்டு பணம் கொடுக்க எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை அலுவலகத்தில் வந்து கொடுத்து விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திவாகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    செங்குன்றம்:

    புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சிறை துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    புழல் மத்திய சிறையில் சிறை விதிகளுக்கு புறம்பாகவும், எதிராகவும் பணம் படைத்த குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் குறிப்பிட்ட சில ரவுடிகளுக்கும், ஆதரவாக சிறை நிர்வாகம் செயல்பட்டதன் விளைவாக சிறை அபாய கட்டத்தை நெருங்கி விட்டது.

    பணம் படைத்த மற்றும் பல கோடி மோசடி வழக்குகளில் (குட்கா வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கும்) செல்போன், கஞ்சா, சிகரெட் மற்றும் பலவிதமான சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சிறை துறை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள்.

    குற்றவாளிகளை சந்திக்க வரும் நண்பர்கள், உறவினர்கள் சிறப்பு நேர்காணல் என்ற பெயரில் தனியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அது போன்று வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது.

    ஒரு குற்றவாளிக்கு சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்கு கைதிகள், தீவிரவாதிகளுக்கும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதி சட்ட விரோத செயல்களுக்கு கூடாரமாக இருந்து வருகிறது. எந்த ஒரு சிறைக் காவலரும் அங்கு செல்ல இயலாது. தீவிரவாதிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் சிறையின் உள்ளே இருந்தபடியே வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான செல்போன்களையும் சிம்கார்டுகளையும் கடத்தி சென்றும் சிறைக்கு வெளியில் இருந்து வீசியும் உதவிகள் செய்யப்படுகின்றன.

    தீவிரவாதிகள் எங்களில் பலரை கொலை செய்து விடுவதாகவும் மீறி அவர்களை எதிர்த்து செயல்பட்டால் பணியிட மாற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இது போன்ற நேர்மையாக இருந்த பல சிறைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறி மிரட்டுகிறார்கள்.

    இதுபற்றி சிறை துறை அதிகாரியிடம் கூறியபோது இவையெல்லாம் அரசு சம்பந்தப்பட்டது. நீங்கள் இதை கண்டு கொள்ள வேண்டாம் என்று புறக்கணித்து விட்டார். மேலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டவை எல்லாம் நாம் எதுவும் செய்ய இயலாது. காவல் துறைதான் செய்ய வேண்டும். அதனால் உங்கள் பணிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் எனக் கூறி விட்டார்.

    புழல் சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவது பற்றி நேரடியாக எங்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டால் நாங்கள் எங்களிடம் உள்ள பல ஆதாரங்களை தர தயாராக உள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PuzhalJail
    என்ன வேலை செய்தாலும் லஞ்சம் மட்டும் வாங்க கூடாது என தன் தாய் சத்தியம் வாங்கியதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார். #PMModi
    புது டெல்லி:

    பிரதம மந்திரி நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற முகநூல் பக்கத்தில் ஐந்து வார தொடராக வெளியாகி வருகிறது. முந்தைய பதிவுகளில் மோடி தனது இளமைக்கால அனுபவங்களையும், நண்பர்கள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். தற்போதைய பதிவில் தனது தாய் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில்,

    ‘நிறைய பேர் என்னிடம் நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படி பார்த்தார் என்று கேட்டுள்ளனர். நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது.

    என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராக தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

    நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். என் தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்.



    ஆனால் என் தாய் என்னைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்துவிட்டு கட்டி அணைத்துக்கொண்டார். நான் எப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையே தான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.

    நான் முதல்வர் ஆன பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னை கூறச்சொன்னார். அவர் என்னிடம், ‘நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார்.

    அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தை பெற்றுக் கொண்டார்.

    நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது.

    தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்.’’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMModi
    ரூ.500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி.

    இவர் கடந்த 2008-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்ககோரி மதுரபாக்கத்தில் உள்ள துணைமின்நிலையத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் திருஞான சம்மந்திடம் விண்ணப்ப மனு கொடுத்திருந்தார்.

    அப்போது அவர் ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறினார். லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத வீராசாமி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைபடி வீராசாமி லஞ்ச பணம் ரூ.500 மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்திடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் திருஞானசம்மந்தத்தை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    நீதிபதி பிரியா வழக்கை விசாரித்தார். லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி திருஞானசம்மந்தத்துக்கு 5 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
    ×