search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆத்துக்கடை தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது40). இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இரு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் நிதி உதவி கிடைக்கும் திட்டத்துக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உமாசங்கர் விண்ணப்பித்துள்ளார்.

    கால தாமதம் ஆனதால், அரசு விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி (51) என்பவரை அணுகி அரசின் நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளார். அதற்கு ராஜேஸ்வரி விண்ணப்பத்தினை விருதுநகரில் உள்ள மாவட்ட அதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டார்.

    அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத உமாசங்கர், விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் முறையிட்டார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த ராஜேஸ்வரியிடம், உமாசங்கர் லஞ்சப் பணம் ரூ.300 கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கை நீதிபதி சம்பத்குமார் விசாரித்து, ராஜேஸ்வரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 
    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உத்தமசோழகன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது நிலத்தை உழுவதற்காக வேளாண் எந்திரத்தை மானியவிலையில் வாங்க முடிவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் காட்டுமன்னார்கோவில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விண்ணப்பம் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ராஜதுரை காட்டுமன்னார்கோவிலில் உள்ள வேளாண்துறை அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த உதவி அலுவலர் பாரதிதாசனை (40) சந்தித்தார். அப்போது அவர் ரூ.39 ஆயிரம் கொடுத்தால்தான் உடனே வேளாண் எந்திரம் வழங்கப்படும் என்றார்.

    இதையடுத்து ராஜதுரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.24 ஆயிரத்தை பாரதிதாசனிடம் கொடுத்தார். அப்போது பணத்தை பெற்றுக்கொண்ட பாரதிதாசன் மீதி ரூ.15 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு ராஜதுரை வந்துவிட்டார்.

    இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை ராஜதுரை பாரதிதாசனிடம் நேற்று வழங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பாரதிதாசனை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்பு அவரை கடலூர் லஞ்சஒழிப்புதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்பு அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பாரதிதாசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    கடந்த மாதம் லால்பேட்டையில் துணை மின்நிலைய பணியாளர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். தற்போது விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய வேளாண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் பகுதியில் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரத்தில் பணியிட மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 54). இவர் விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள வி.ஏ.ஓ. நகரில் தனியாக வசித்து வந்தார்.

    திண்டிவனம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (40). இவர் சாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவர் தனது சொந்த கிராமமான தழுதாளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தன்னை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் மேலாளர் சிவசாமியிடம் கூறினார்.

    அதற்கு, சிவசாமி ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதை கேட்ட ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் விழுப்புரம் லஞ்சம்-ஊழல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதனி டம் புகார் செய்தார்.

    இதையடுத்து ராமமூர்த்தியிடம் ரசாயனம் கலந்த ரூ.10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கி கொண்டு விழுப்புரம் வி.ஏ.ஓ. நகரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் சிவசாமி வீட்டுக்கு ராமமூர்த்தி சென்றார்.

    அங்கிருந்த சிவசாமியிடம் அந்த 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவசாமியை கையும்-களவு மாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு டாஸ்மாக் மேலாளராக இருந்த ஒருவரும் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். அவருக்குப்பதில் மேலாளராக வந்த சிவசாமியும் லஞ்சம் வாங்கி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லஞ்சம் கொடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கத்தக்க புதிய ஊழல் தடுப்பு சட்டம், ஜனாதிபதி ஒப்புதலை தொடர்ந்து அமலுக்கு வந்தது. #Bribe #AntiGraftLaw
    புதுடெல்லி:

    ஊழல் தடுப்பு சட்டம், 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில், ஊழல் குற்றங்களும், அவற்றுக்கான தண்டனை விவரங்களும் வரையறுக்கப்பட்டு உள்ளன.

    ஆனால், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் ஷரத்து இல்லை. அதுமட்டுமின்றி, இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்திலும் இதற்கான விதிமுறை இல்லை.

    ஆகவே, முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதற்கும் தண்டனை விதிக்கத்தக்க வகையில், ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.



    அதன்பின்னர், ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    இதையடுத்து, இது கடந்த 26-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்த மசோதாவின்படி, பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

    இருப்பினும், லஞ்சம் கொடுக்குமாறு நிர்ப்பந்தத்தில் சிக்குபவர்களை பாதுகாக்கும் அம்சம், இந்த சட்டத்தில் உள்ளது. அப்படி நிர்ப்பந்தத்துக்கு உள்ளானவர்கள், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளிடம் 7 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால், எந்த சிக்கலும் வராது.

    வணிக நிறுவனங்களும், இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, வணிக நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள், பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.

    லஞ்சம் பெறுபவர்களுக் கான குறைந்தபட்ச ஜெயில் தண்டனை, 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்ச தண்டனை, 7 ஆண்டுகளாக இருக்கும். சிறைத்தண்டனை இல்லாதபட்சத்தில் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

    அதே சமயத்தில், பொது ஊழியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கி பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த சட்டத்தில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஏதேனும் சிபாரிசு சம்பந்தப்பட்ட குற்றங்களை செய்திருந்தாலோ அல்லது தங்களது பணி சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுத்து இருந்தாலோ அத்தகைய பொது ஊழியர்கள் மீது, அவர்களுடைய மேல்அதிகாரிகளின் முன்அனுமதி இல்லாமல், எந்த போலீஸ் அதிகாரியும் விசாரணை நடத்தக்கூடாது என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும், தனக்காகவோ அல்லது வேறு நபர்களுக்காகவோ லஞ்சம் பெறும்போதோ அல்லது பெற முயற்சிக்கும்போதோ பொது ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டால், அவர்கள் மீது விசாரணை நடத்த முன்அனுமதி பெறத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஊழல் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  #Bribe #AntiGraftLaw #tamilnews 
    இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.

    குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர் பற்றிய போலீஸ் விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறப்படுவதுண்டு.

    இதையடுத்து பாஸ்போர்ட் சேவையை எளிமைப்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட்டை உடனுக்குடன் விரைவில் பெறுவதற்காக ஆன்-லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை திருத்தம் செய்து ஒவ்வொரு பாஸ்போர்ட் சேவைக்கும் தனி தனி கவுண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பாஸ்போர்ட் புதுப்பிப்பு சேவை விரைவாக நடந்து வருகிறது.

    என்றாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் லஞ்சம் கொடுத்தே பாஸ்போர்ட்டை பெற முடிகிறது என்று சொல்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

    அதில் 46 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்த பிறகே பாஸ்போர்ட் பெற முடிந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்த 46 சதவீதம் பேரில் 37 சதவீதம் பேர் பாஸ்போர்ட் சோதனையின் போது லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

    5 சதவீதம் பேர் ஏஜெண்டு மூலம் பாஸ்போர்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 4 சதவீதம் பேர் பாஸ்போர்ட் எடுத்து வரும் தபால்காரருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். என்றாலும் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்காமலே பாஸ்போர்ட்டை பெற்றதாக கூறியுள்ளனர்.

    பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களில் 53 சதவீதம் பேர் தங்களுக்கு இந்த வி‌ஷயத்தில் நல்ல அனுபவமே ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.
    காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் வீராணம் ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தனது பெட்டி கடைக்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்திருந்தார். ஆனால் மின் இணைப்பு வழங்கவில்லை.

    அவர் கொடுத்த மனுவின் மீது தற்போதைய நிலை என்ன? என்று விசாரிப்பதற்காக இளஞ்செழியன் மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த வணிக உதவியாளரான தமிழினியன் (வயது 45) என்பவர், கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன், பணம் தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத இளஞ்செழியன், இது குறித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் இளஞ்செழியனிடம் கொடுத்து, அதனை தமிழினியனிடம் கொடுப்பது குறித்து ஆலோசனை கூறினர்.

    அதன்படி லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற இளஞ்செழியன், அங்கிருந்த வணிக உதவியாளர் தமிழினியனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு வாடிக்கையாளர் போல் வந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெர்லின்ராஜாசிங் மற்றும் போலீசார் கையும், களவுமாக தமிழினியனை பிடித்து கைது செய்தனர்.
    விபத்தில் பலியானவருக்கு இழப்பீடு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கன்னியாகுமரியை சேர்ந்த சிலர் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர். அவர்கள் காகளம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில் விஜயகுமார் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அம்பலப்புழா போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர் வழக்குப்பதிவு செய்தார். விபத்தில் குணமடைந்த நண்பர்களில் ஒருவரான பபீஸ் என்பவர் விபத்து வழக்கு குறித்து அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் விபத்தில் இறந்த விஜயகுமார் மற்றும் காயம் அடைந்த 4 பேருக்கும் அதிக பட்சம் காப்பீட்டு தொகை பெறும் வகையில் வழக்கை மாற்றி எழுதுகிறேன் என்றும் அதற்கு தலா ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும். வாங்கி கொடுக்கும் நீங்கள் உங்கள் கணக்கிற்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும் என்று கூறினார்.

    இதைகேட்ட பபீஸ் அதிர்ச்சியடைந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பபீஸ் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ரேக்ஸ் கோபிஸ் அரவியை சந்தித்து புகார் தெரிவித்தார். புகாரையடுத்து நேற்று ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பபீசிடம் கொடுக்கப்பட்டது.

    பணத்தை பெற்றுக்கொண்ட பபீஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் கபீரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கி அவர் பாக்கெட்டில் வைத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்ஸ்பெக்டரை கையும், களவுமாக பிடித்தனர். இன்ஸ்பெக்டரை கைது செய்த அதிகாரிகள் அவரை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு கையெழுத்திட பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய உதவி மேளாண்மை அதிகாரிககு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே உள்ள சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் கடந்த 2009- ம் ஆண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர படிவத்தை கொல்லங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்வதற்காக உதவி வேளாண்மை அதிகாரி பணியாற்றிய ஜேம்ஸ் என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு ரூ.200 லஞ்சமாக தந்தால் தான் கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு கையெழுத்திட பரிந்துரைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி வேளாண்மை அதிகாரி ஜேம்ஸ் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக அவரை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பிற்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட, ஜேம்ஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
    மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஓமண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஸ், விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றிற்கு மின் இணைப்பு பெற தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது அவரிடம், அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் நடராஜன், தனக்கு ரூ.3 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்க முடியும் என கூறியுள்ளார். இது குறித்து சதீஸ் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாராஜன் தலைமையிலான போலீசார் இளநிலை பொறியாளர் நடராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி பாலசுப்பிரமணியம் தீர்ப்பு வழங்கினார். அதில் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இளநிலை பொறியாளர் நடராஜனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 
    பெரியகுளத்தில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி மகேஸ்வரி பெயரில் 1.5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பட்டா மாறுதல் பெற விண்ணப்பித்தார்.

    இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி நிலஅளவையர் செல்வம் விசாரணை நடத்தி வந்தார். பட்டா மாறுதலுக்கு ரூ.15ஆயிரம் லஞ்சம் வேண்டும் என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    மேலும் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கண்டிப்புடன் செல்வம் கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த கோவிந்தராஜ் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தரும்படி கூறினர்.

    அதன்படி கோவிந்தராஜ் செல்வத்திடம் பணம் கொடுத்தபோது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலஅளவையர் செல்வத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்து லஞ்சஒழிப்பு காவல்துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க கமிட்டி உருவாக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #GovernmentHospitalBribe

    மதுரை:

    மதுரையில் புதிய அரசு மருத்துவமனை அருகே சூப்பர்மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் பணியில் தாமதம் ஏற்பட்டதைத்தொடர்ந்து ஜூலை மாதம் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    முதலில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்படும்.

    சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் குடல், இரைப்பை, மூளை நரம்பியல், சிறுநீரகவியல், ஒட்டுறுப்பு சிகிச்சை, உடற் கூறுகள் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் ஆகிய சிகிச்சை பிரிவுகள் செயல்படும்.

    மதுரை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் முதன் முறையாக 3-ம் பாலின அறுவை சிகிச்சைத்துறை ஏற்படுத்தப்படும்.

    எய்ம்ஸ் மருத்துவ மனையை தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இனி மத்திய அரசின் கையில் தான் உள்ளது.

    மதுரை அரசு மருத்துவ மனையில் உயரக்குறைபாடு உடைய குழந்தைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய நாளமில்லா சுரப்பி வளர்ச்சி எனப்படும் சிகிச்சையின் மூலம் 11 பேர் பலன் பெற்றுள்ளனர்.

    கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இறந்தவர்களின் உடல்களை அடுக்கி வைக்க பணம் கேட்டதாக புகார்கள் வந்துள்ளன.

    அரசு ஆஸ்பத்திரிகளில் பிணவறை, குழந்தை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் பணம் கேட்பது வழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தடுக்க அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு அதன் அறிக்கை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 90 சதவீத டாக்டர்கள் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். 10 சதவீத டாக்டர்கள் மீது குறைபாடு உள்ளது. எங்களிடமும் கருப்பு ஆடுகள் உண்டு.

    சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேரளாவின் ‘நிபா’ வைரசைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ மனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த சுகாதாரப்பணியாளர் வைரமணி நேற்று தற்கொலை செய்துள்ளார். அதுபற்றி புகார் வந்தால் விசாரணை நடத்தி அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 95 சதவீதம் பேர் நிரந்தர பணியாளர்களே உள்ளனர். காவலாளி, துப்புரவு பணியாளர் ஆகிய பிரிவுகளில் தான் ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர்.

    ஐகோர்ட்டு வளாகத்தில் ஆம்புலன்சு வர தாமதமானதால் ஒருவர் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 936 ஆம்புலன்சுகள் உள்ளன. நகர்ப்புற பகுதிகளுக்கு 10 நிமிடத்திலும், கிராமப் புற பகுதிகளுக்கு 11 1/2 நிமிடத்திலும் ஆம்புலன்சுகள் சென்று வருகின்றன.

    சில நேரங்களில் போக்கு வரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஆம்புலன்சு வருகையில் தாமதம் ஏற்பட்டு விடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GovernmentHospitalBribe

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு லஞ்சம் கேட்ட துப்புரவு ஊழியரை சஸ்பெண்டு செய்து டீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் கேட்கும்போது அருகில் போலீஸ்காரர் ஒருவர் நிற்கும் காட்சியும் அதில் பதிவாகி உள்ளது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போது 2 ஆயிரம், 3 ஆயிரம் பணம் கேட்பதாக ஏற்கனவே புகார் வந்து இருந்தது.

    இந்த நிலையில் பிணத்தை ஒப்படைக்க போலீசார் முன்னிலையில் ஊழியர் லஞ்சம் கேட்ட விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தினார். அப்போது லஞ்சம் கேட்டது அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்து வரும் பரமசிவம்(42) என்பது தெரிய வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்து டீன் அசோகன் உத்தரவிட்டார். பரமசிவம் லஞ்சம் கேட்டபோது அங்கு இருந்த போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
    ×