search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஞ்சம்"

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வறியோர் நிவாரண தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் (வயது 52). இதே பிரிவில் வருவாய் ஆய்வாளராக சின்னக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி கேசம்மாள் (42). கடந்த ஜனவரி மாதம் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கேசம்மாளின் சகோதரர் ஜோசப் செல்வராஜ் (52) தாசில்தார் சரவணனிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

    இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனில் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தாசில்தாரும், ரமேசும் கூறியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஜோசப் செல்வராஜ் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை ஜோசப் செல்வராஜ் தாசில்தாரிடம் வழங்கினார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், ஆய்வாளர்கள் ரூபாகீதா ராணி, கீதா ஆகியோர் சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



    கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளது. இதில் வடக்கு மண்டல அலுவலகம் பால சுந்தரம் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பில் கலெக்டராக மாலா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சியில் வேலை முடித்து கொடுக்க ஒருவரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பில் போலீசில் புகார் செய்தார்.

    அந்த நபரிடம் இன்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதனை அவர் பில் கலெக்டர் மாலாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனக சபாபதி, ஆறுமுகம் மற்றும் போலீசார் மாலாவை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்து அலுவலகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அலுவலகத்தை விட்டு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை.

    பணி நிரந்தரம் செய்வதற்கு களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஆசிரியையின் சகோதரர் ஜான் வின்சென்ட்டிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார். அங்கு இருந்த இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    கோவையில் ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கி கைதான வேளாண்மை துறை இணை இயக்குனர் வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்கு சொந்தமாக சூலூரில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்ய அசோக்குமார் திட்டமிட்டார்.

    இதற்காக தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை துறை இணை இயக்குனர் சுகுமாரை சந்தித்து, விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற தடையில்லா சான்று வழங்குமாறு கேட்டார். அதற்கு சுகுமார் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். அந்த அளவுக்கு பணம் தர முடியாது என அசோக்குமார் கூறவே, ரூ.2 லட்சமாவது தாருங்கள் என சுகுமார் கேட்டார்.

    இதுகுறித்து அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. ராஜேஷ் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் அசோக் குமார் நேற்று இரவு 8 மணி அளவில் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு சென்று ரூ.1½ லட்சத்தை கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்று கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று சுகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்குவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட உதவியாளர் முருகன் என்பவரும் கைதானார். அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


    இதையடுத்து அலுவலகத்தில் சுகுமார் பயன்படுத்திய கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்த விவரங்களை சேகரித்தனர். பின்னர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகுமாரின் வீட்டிலும், பொள்ளாச்சியில் உள்ள முருகனின் வீட்டிலும் இன்று அதிகாலை சோதனை நடத்தினர்.

    இதில் சுகுமார் வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேர் வீடுகளில் இருந்தும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுகுமாரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகும்.

    கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டிலும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் அதுகுறித்த விவரங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பி உள்ளனர்.

    சுகுமார் கடந்த 6 மாதங்களாக இங்கு பணியாற்றி வருகிறார். உதவியாளர் முருகன் கடந்த 1 வருடமாக இதே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவர்கள் பல பேரிடமும் லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சுகுமார், முருகன் ஆகியோரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். #Tamilnews
    வீட்டுமனையை பதிவு செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன்(வயது 55) என்பவர் சார்பதிவாளராக உள்ளார்.

    காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். காஞ்சீபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

    அதற்கு அவர், ரூ.1,000 லஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நித்யா, இதுபற்றி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை லஞ்சமாக சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

    பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்து இருந்தனர்.

    நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் லஞ்சமாக ரூ.1,000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன்(30) என்பவரிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். 
    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி எச்சரித்துள்ளார். #PinarayiVijayan #officialstakingbribes
    திருவனந்தபுரம்:

    அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

    கோழிக்கோடு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அரசு அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதைப்போன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரத்துக்கே அவப்பெயரை எற்படுத்தி விடுகிறது.

    அவர்களின் தேவைக்கேற்ப, நியாயமான, கைநிறைய சம்பளம் தரப்படுகிறது, எனவே, அதற்கேற்ப கண்ணியமாக வாழ அவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். #PinarayiVijayan #officialstakingbribes
    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதாக பணியாளர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் வக்கீல் ஜாபர்அலி. தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை பொதுச்செயலாளரான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கும் நோயாளிகளை வற்புறுத்தி பணம் வாங்குவதாக எங்கள் அமைப்புக்கு புகார்கள் வந்தன. ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த பரிசோதனை போன்றவற்றுக்கு பணம் கொடுத்தால் தான் உடனடியாக வேலை நடக்கிறது என்றும் புகார் கூறப்பட்டது. எங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் புற்றுநோய்க்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை கண்கூடாக பார்த்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்ய அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்புக்குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழுக்கள் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மருத்துவ சேவையை பெற முடியும் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவது, தாமதப்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×