search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95380"

    அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

    தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

    வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



    இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

    அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

    பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

    அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



    ஜல்லிக்கட்டு விசாரணையில் கால தாமதம் என சொல்வது தவறு என்று விசாரணை ஆணைய தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார். #Jallikattu #Rajeswaran
    கோவை:

    கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக மேற்கு மண்டல விசாரணை ஆணைய தலைவராக நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கோவை வந்தார். விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளேன். 3 நாட்கள் விசாரணை நடத்தப்படும்.

    14.9.18 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 31-ந்தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்கு மண்டலத்தில் 247 மனுக்கள் வந்துள்ளது. 56 மனுக்கள் கோவையிலிருந்து வந்துள்ளது.3 நாட்களும் கோவை மாவட்டம் மட்டும் தான் விசாரிக்கப்படவுள்ளது.

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியுள்ளது எனது பணியாகும்.

    இன்று 7 வழக்கு, நாளை 7 , நாளை மறுநாள் 8 வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது. மாதம் 12 முறை வந்து வழக்குகள் விசாரிக்கப்படும்.

    கோவை 56, நீலகிரி 11, ஈரோடு 44, திருப்பூர் 40, சேலம் 50, நாமக்கல் 16, கரூர் 3, திண்டுக்கல் 27, வத்தலக்குண்டு 1 என 248 மனுக்கள் பெறப்பட்டது.

    கோவை முடித்தவுடன் அடுத்தடுத்த மாவட்டங்களில் விசாரிக்கப்படும். கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதம் என சொல்வது தவறு. உண்மையை கண்டு பிடிக்க விசாரணை ஆணையம் இருக்கிறது.

    விசாரணை ஆணையம் கண் துடைப்பு என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அதுபோல் சொல்லப்படுகிறது.

    அறிக்கை சமர்பிக்க வேண்டியது தான் எங்கள் பணி. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசிடம் தான் கேட்க வேண்டும்.


    கோவை, சேலத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. சென்னையில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் 547 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டதால். எங்களை போன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க 6,7 மாதங்கள் ஆகும். மதுரையில் டிசம்பர் மாதம் முடிவடையும்.1956 சாட்சியங்கள் விசாரிக்க வேண்டியுள்ளதால் இந்த காலம் தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #Rajeswaran
    சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கட்டுப்படுத்த ஜல்லிக்கட்டு பாணியில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பத்தனம்திட்டா எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #Sabarimalaissue #Sabarimalaordinance
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி நேற்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

    இந்நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கட்டுப்படுத்த ஜல்லிக்கட்டு பாணியில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதி எம்.பி. ஆன்ட்டோ ஆன்ட்டனி இன்று வலியுறுத்தியுள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மகளிர் அணியின் சார்பில் இன்று  எரிமேலி பகுதியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் பங்கேற்ற  பத்தனம்திட்டா தொகுதியின் பாராளுமன்ற மக்களவை உறுப்பினரான ஆன்ட்டோ ஆன்ட்டனி கூறியதாவது:-


    துலாம் மாத சிறப்பு பூஜைக்காக நாளை (17-ம் தேதி) சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் தற்போது சர்ச்சைகளின் நிழலில் சிக்கியுள்ளது எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது.

    சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் இந்த தீர்ப்பை இதர மதங்களை சேர்ந்தவர்களும் எதிர்த்து வருகின்றனர்.

    உலகம் முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு யாத்திரை வரும் கோடிக்கணக்கான பக்தர்களை வரவேற்க வேண்டிய இந்த நேரத்தில் எங்கு பார்த்தாலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராடி வருவதைதான் தற்போது பார்க்க முடிகிறது.

    ஐயப்பனின் சரணகோஷத்துக்கு பதிலாக இப்போது எங்கு பார்த்தாலும் மக்களின் போராட்டக் குரலைத்தான் கேட்க முடிகிறது.

    நைஷ்ட்டிக பிரம்மச்சாரியான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு தீர்ப்பின்படி அனைத்து வயதுடையை பெண்களும்  ஐயப்பன் கோயிலுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தும் வகையில் அவசர சட்டம் இயற்றுமாறு பிரதமர் மோடியை நான் வலியுறுத்தியுள்ளேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட தடையை பாராளுமன்றம் இயற்றிய அவசர சட்டம் முறியடித்தது. பின்னர், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டமும் உருவாக்கப்பட்டது.

    இதேபோல், சபரிமலை ஐய்யப்பன் கோயில் விவகாரத்திலும் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றினால்தான் இங்கு போராட்டங்கள் இல்லாத இயல்புநிலை ஏற்பட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimalaissue #Sabarimalaordinance
    ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும் என்று தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்கள் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற மொபைல் செயலி தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது.

    செயலியை தொடங்கி வைத்து கமல்ஹாசன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

    ‘மாணவர்களின் கைகளில் தான் எதிர்காலம் இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது போல் மாணவர்கள் மீண்டும் புரட்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் கமல் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி?

    பதில்:- தோல்விகள் தான் நம்மை வெற்றியை நோக்கி கூட்டிசெல்லும். தோல்வியை பார்த்து யாரும் தயங்கவேண்டாம். எல்லா தோல்விகளிலும் உங்களுக்கு சில படிப்பினைகள் கிடைக்கும். தோல்விப்படிகளை தொடும் போது வெற்றிப்படி கண்ணில் பட்டுவிடும். எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொண்டால் எதை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய முடியும்.

    கேள்வி :- குற்றசாட்டுகள் கூறும்போது ஆதாரம் கேட்டால் என்ன செய்வது?

    பதில்:- ஆதாரம் இல்லாத சமயங்களில் குரல் எழுப்பலாம். யாராவது பார்த்திருப்பார்களா? அவர்களுக்கு சாட்சி சொல்வார்களா? என்று பார்க்கலாம். ஆதாரம் இல்லாமல் பொய் குற்றசாட்டு சொல்பவர்களும் இருக்கிறார்கள். கண்ணகி, நீலி இருவருமே இருந்த ஊர் தான் இது. இந்த சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

    கேள்வி:- பெண்களுக்கு பாலியல் குற்றங்களை தெரிவிப்பதில் தயக்கம் இருக்கிறதா? புகார் சொன்னால் எதிராகவே திரும்புகிறதே?

    பதில்:- தாழ்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். உயர்ந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். இந்த சோகம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பொருந்தும். இந்த அவமானங்களை தாண்டி வந்துதான் நாம் நமது தரப்பு நியாயங்களை முன் வைக்கவேண்டும்.

    கே :- நீங்கள் சந்தித்த தைரியமான பெண்மணி யார்?

    ப:- என் அம்மா. அவருக்கு இணையான துணிச்சலான பெண்ணை சந்திக்க காத்திருக்கிறேன். என் அக்கா ஓரளவுக்கு தைரியமானவர்.



    கே:- பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லையே?

    ப:- நிறைவேற்றப்படாத பல வி‌ஷயங்களில் இதுவும் ஒன்று. உங்கள் பங்களிப்பு அதிகமானால் இது சரியாகும். எத்தனை சதவீதம் என்று இல்லை. எத்தனை சதவிதமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கள் கட்சிக்கு உண்டு.

    கே:- பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண் முன்னேற்றம் நடக்கும் என்பது சாத்தியமா?

    ப :- இந்திரா காந்தி உள்பட பலர் அதிகாரத்துக்கு வந்து இருக்கிறார்கள். பெண்கள் அதிகாரத்திற்கு வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. நாம் தான் மாற வேண்டும்.

    கே:- பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க காரணம்?

    ப :- ஆண்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களும் காரணம். அவர்கள் வளர்க்கும் முறையில் தான் இருக்கிறது.

    கே :- இந்திய அரசியலில் பெண்களின் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறதா?

    ப:- ஆமாம். அதை இன்னும் அதிகரிக்க தான் உங்களைதேடி வந்துள்ளேன். மாணவர்களை தேடி நான் செல்வதை சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் மாணவர்கள் தான் அரசியலின் அடித்தளம். அரசியல் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

    கே:- விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

    ப :- என் மீதான விமர்சனம் தான் என்னை மக்களிடம் கொண்டு செல்கிறது. நல்ல விமர்சனங்கள் தான் என் வளர்ச்சிக்கான அங்கீகாரம்.

    கே:- படித்த பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கிராமங்களில் வசிக்கும் படிக்காத பெண்களின் நிலை?

    ப:- பாலியல் புகார்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருந்துதான் வருகிறது. ஆனால் கிராமங்களில் பெண்கள் இன்னும் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இப்படி தவறாக நடந்து கொள்ள முடியாது. உடனே தண்டனை தான்.

    கே:- குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் எப்படி வளர்க்கப்பட வேண்டும்?

    ப:- முதலில் சமமான பாசத்துடன் வளர்க்க வேண்டும். சமமான உரிமைகள் தரவேண்டும். இரண்டுமே குழந்தைகள் தான். பண்புகளை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

    கே:- நடுத்தர வர்க்கத்தில் இருந்து ஒரு பெண் திரைத்துறைக்கு வந்து சாதிக்க முடியுமா?

    ப:- நடுத்தர வர்க்கம் என்ன ஏழ்மை நிலையிலிருந்து கூட வரலாம். வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால் பெயர்களை குறிப்பிட முடியவில்லை. இந்த தொழிலை நான் மதிக்கிறேன். இந்த தொழிலை தவறாக பயன்படுத்தியவர்கள் தான் தங்கள் பிள்ளைகளை கொண்டு வர தயங்குவார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. என் மகள்களையும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இருக்கிறேன்.

    கே:- பெண்களின் சமுதாய பங்களிப்பு எப்படி இருக்கிறது?

    ப:- ஜான்சி ராணி முதல் மம்தா பானர்ஜி வரை சொல்லலாம். சங்க காலம் முதலே பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

    கே :- பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தண்டனை கடுமையாக்கப்படவேண்டும் என்பதில் உங்கள் கருத்து என்ன?

    ப:- வந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகம் போதவில்லை என்பது உண்மை. நம் காலத்திலேயே அதை பார்த்துவிடுவோம்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இதைத் தொடர்ந்து ‘ எந்த அரசு உத்தரவு வந்தாலும் இந்த சந்திப்புகள் தொடர்ந்து நடக்கும். நாம் சந்திப்பதை யாராவது தடுத்தால் கல்லூரிக்கு வெளியில் உங்களை சந்திப்பேன்.

    தமிழகத்தை மாற்றும் பொறுப்பு மாணவர்களிடம் இருக்கிறது. இந்த கல்லூரியில் தான் முதன்முதலில் அரசியல்வாதி என்று கையெழுத்து இட்டேன். நான் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. மாற்றத்தை முன்னெடுக்க உங்களையும் என்னுடன் அழைக்கிறேன்’

    இவ்வாறு கமல் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். மேலும் காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசு பொருட்களை தட்டி சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த வேனாநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு மாரியம்மன் கோவில் முன்பு சீர்வரிசை தட்டுகள் வைத்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி வேனாநல்லூர் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் கார்த்திக், அ.தி.மு.க. மாவட்ட மகளிரணி தலைவர் ஜீவா அரங்கநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 350-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் பிராஞ்சேரியை சேர்ந்த கண்ணன் (வயது 25), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (30), திருச்சியை சேர்ந்த முருகானந்தம் (31), சதிஷ்குமார் (23), சோழங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (34), திருமானூரை சேர்ந்த பாலாஜி (28), கூழாட்டுகுப்பத்தை சேர்ந்த கலியமூர்த்தி (43) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம், சதிஷ்குமார் உள்பட 4 பேரையும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயங்கள், கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், நாற்காலிகள், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, தேனி, கம்பம், மதுரை, சேலம், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஊர்நாட்டார், கணக்கர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பார்வையாளர் மாடம் அமைப்பதற்கான பூமி பூஜையை மாணிக்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
    அலங்காநல்லூர்:

    பாலமேடு மஞ்சமலை ஆற்றில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் திடல் உள்ளது. இதன் அருகில் பார்வையாளர் மாடம் உள்ளது.

    இடப்பற்றாக்குறை காரணமாக பார்வையாளர்கள் அமர்வதற்கு சிரமம் இருந்து வந்தது. பாலமேடு கிராம மக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் புதிய பார்வையாளர் மாடம் அமைக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கும், எம்.எல்.ஏ.விற்கும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இதன் காரணமாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் புதிய பார்வையாளர் மாடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடிமுருகு, மற்றும் கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும் என்று ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார். #Jallikattuprotest
    மதுரை:

    கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறை வெடித்தது.

    அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி ராஜேஸ்வரன் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினார். இன்று 9-வது கட்ட விசாரணை தொடங்கியது.

    அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பலர் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக 9-வது கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் பெறப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநபர்கள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்ததாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும். அதன் பிறகு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattuprotest
    கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தில் நடுவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 550-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகள் முட்டியதில் சமயபுரத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 31), மலையப்பநகரை சேர்ந்த ராமு (26), திருவெறும்பூரை சேர்ந்த தமிழ்(24), கோக்குடியை சேர்ந்த ரோஸ் (53), செல்வகுமார் (33) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த செல்வகுமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், நாற்காலிகள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோக்குடி பொதுமக்கள் செய்திருந்தனர். 
    இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் அனுராக் காஷ்யப் தமிழில் ஜல்லிக்கட்டு படத்தை தயாரித்து வருகிறார். #Jallikattu
    இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார்.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட வடிவங்கள் ஆகியவையையும் சேர்த்து ஒரு படமாக மாற்றி இருக்கிறார்கள். முக்கியமாக ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத உலக தமிழர்கள் ஒன்றுபட்டு போராடியது எவ்வாறு என்பது இந்த படம் மூலம் தெரியவரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் படத்தின் இயக்குனர் சந்தோஷ். உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் கென்யா நாட்டில் உள்ள மசாய்மாரா பகுதியிலும் படம் பிடித்த முதல் தமிழ் படம் இதுதான்.



    மசாய்மாரா பகுதியில் உள்ள காளைகள் நமது பகுதி காளைகள் இனத்தை சேர்ந்தவை என்பதால் அங்கே சென்று படமாக்கி இருக்கிறார்கள். அகிம்சா புரடக்‌‌ஷன் சார்பில் அனுராக் காஷ்யப் மற்றும் நிருபமா இணை தயாரிப்பில் உருவாகி இருக்கிறது இந்த ஜல்லிக்கட்டு படம். #Jallikattu
    புதுக்கோட்டை அருகே பல்வேறு பரிசுகளை வென்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் கிராமத்தையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திலேயே அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அரசின் சட்ட விதிகளின்படி நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரமிகு, பயிற்சி பெற்ற ஏராளமான காளைகள் பங்கேற்று வருகின்றன. அதே போல் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பழனியாண்டி என்பவரின் காளை பங்கேற்று பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. குறிப்பாக விராலிமலை, ராப்பூசல், திருநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் சைக்கிள், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என பல பரிசுகளை பெற்றது.

    இந்த காளையை வாடி வாசலில் அவிழ்த்து விடும் போது பல வீரர்கள் தங்களால் இந்த காளை அடக்க முடியுமா? என்ற கேள்விதான் முன்னோக்கி நிற்கும். அந்த அளவிற்கு காளையின் திமில்கள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளர் தேவையான மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளை இறந்தது.

    உடல்நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

    இதையடுத்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் திரண்டனர். மேலும் பெண்கள் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை பார்த்தவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

    அனைவரும் மாலையுடன் வந்து இறந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காளையின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனித உயிர்களுக்கு இணையாக கருதப்பட்ட காளை இறந்தது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. #Jallikattu
    பூங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக நடந்த முன்னேற்பாடு பணிகளை நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 810 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை சுமார் 220 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்கினார்கள்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம், வெள்ளி நாணயம், சைக்கிள், சேர் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பூங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் முன்னிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்க வேண்டாம் என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். #TNAssembly #OPS
    சென்னை:

    சட்டசபையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதற்கும், அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததற்கும் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.

    அப்போது பேசிய அமைச்சர் காமராஜ், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என குறிப்பிட்டார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட வேண்டாம். எல்லோரும் என்னை இப்படி அழைத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை நான் வேடிக்கை பார்க்க சென்றாலும் ஜல்லிக்கட்டு நாயகன் வந்து விட்டார். அவர் காளையை அடக்குவார் என்று அறிவித்து விட்டால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும். எனவே என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம்” என்றார்.

    அதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. #TNAssembly #OPS
    ×