search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95466"

    கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    திருவள்ளுவர் சிலையை பார்க்க அழைத்து செல்லப்பட்ட பயணிகளும் அவசர, அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இதுபோல நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தை ரத்து செய்தது.

    இன்றும் அங்கு கடல் சீற்றம் நீடித்தது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுத்தன.

    கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    கட்டுமரம், வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. அலைகளின் சீற்றத்தை கண்டு அவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விசைபடகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    இதுபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் பயணிகள் முகத்தை மூடியபடி சென்றனர்.

    இன்று அதிகாலையில் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள் அதன்பின்பு கடலில் குளிக்க சென்றனர். அவர்களை பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

    கன்னியாகுமரியில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் படகு போக்குவரத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதனால் படகில் செல்ல காத்திருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே நடுக்கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கன்னியாகுமரி வரை நீடித்து கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


    குமரி மாவட்டத்திற்கு 19-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடி ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். #PMModi
    கன்னியாகுமரி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து பா.ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    அதன்படி அவர் தமிழகத்திலும் முகாமிட்டு பா.ஜனதா நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம் மதுரை வந்த மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன், பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

    அடுத்தக்கட்டமாக அவர் வருகிற 10-ந் தேதி திருப்பூருக்கு செல்கிறார். பின்னர் 19-ந் தேதி மீண்டும் தமிழகம் வரும் அவர் கன்னியாகுமரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    இந்த தகவலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கன்னியாகுமரியில் மோடி பேச உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இறைவனால் நமது நாட்டுக்கு மட்டுமல்ல என்னை பொருத்தவரை தமிழகத்திற்கும் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கொடையாகும். அவர் தமிழ்நாட்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி நலத்திட்டங்களை வழங்கி உள்ளார்.

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச உள்ள இடத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு டெல்லியில் இருப்பது போன்ற பிரமாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அதேபோல தஞ்சை, நெல்லை, போன்ற இடங்களில் பல்நோக்கு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். இந்த மருத்துவமனைகளுக்கு தலா ரூ.150 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    அடுத்த மாதம் தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வருகை தர உள்ளார். திருப்பூருக்கு பிப்ரவரி 10-ந்தேதியும், குமரி மாவட்டத்திற்கு 19-ந்தேதியும் வருகை தருகிறார்.

    குமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து உள்ளது. இந்த திட்டங்களை திறந்து வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பிரதமர் பேசுகிறார்.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டு உள்ள தங்க நாற்கரசாலை கன்னியாகுமரி சீரோ பாய்ண்டில் முடிவடைகிறது. அந்த இடத்தில் பிரதமர் கலந்து கொள்ளும் விழாவை நடத்தலாமா? அல்லது தங்க நாற்கர சாலையில் முருகன் குன்றம் அருகே உள்ள மைதானத்தில் நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 1½ லட்சம் பேர் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

    2004-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந்தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கன்னியாகுமரி-காஷ்மீர் தங்க நாற்கர சாலைக்கு அடிக்கல் நாட்டினார். அந்த பகுதியில் நரிக்குளம் பாலம் காரணமாக 4 வழிச்சாலை பணி முடியாமல் இருந்தது. தற்போது பாலப்பணி முடிந்துள்ளது. நரிக்குளம் பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார். வாஜ்பாய் தொடங்கி வைத்ததை பிரதமர் மோடி முடித்து வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.   #PMModi
    தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் ஜனவரி 27-ம் தேதி திறக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. #TTD #TTDTemple #KanyaKumari
    திருமலை:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.
     
    அதைத்தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை அதிகாரியான அனில் குமார் சிங்கால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், தேவஸ்தானம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி கோவில்கள் போன்று கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில் ஜனவரி 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் திட்டமிட்டபடி மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். #TTD  #TTDTemple #KanyaKumari
    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் குவிந்து வருகிறார்கள்.

    அவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி கடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக படகு போக்குவரத்தை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும், அதற்கு முந்திய நாளும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை கடல் சீற்றம் சற்று தணிந்ததை தொடர்ந்து 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 10 மணி அளவில் கடல் அலையில் மாற்றம் ஏற்பட்டு சீற்றமாக இருந்தது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


    கன்னியாகுமரியில் சூறாவளி காற்றால் படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

    நேற்று காலை வழக்கம்போல 8 மணிக்கு சுற்றுலாபயணிகளை ஏற்றிக்கொண்டு படகு போக்குவரத்து நடந்தது. இந்தநிலையில் காலை 10 மணி அளவில் திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்றப்பட்டது. சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு காலநிலையில் சகஜநிலை திரும்பியதை தொடர்ந்து பகல் 2.45 மணிக்கு மீண்டும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடந்தது.

    இந்தநிலையில் இன்று காலை முதலே கன்னியாகுமரியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்றும் வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழுந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    படகு துறையின் நுழைவுவாயிலும் பூட்டப்பட்டிருந்தது. படகு இயங்காதது தொடர்பான அறிவிப்பு பலகையும் தொங்கவிடப்பட்டிருந்தது. படகில் பயணம் செய்ய இன்று காலையில் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இன்று காலை சூரிய உதயத்தை காண அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthDistricts
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக் கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலையே காணப்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது:-

    இந்திய பெருங்கடல் மத்தியரேகை மற்றும் அதனை யொட்டியுள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (29-ந்தேதி) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthDistricts

    சபரிமலைக்கு சென்ற மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சபரிமலைக்கு செல்லும் இளம்பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சபரிமலை சன்னிதானம் செல்லவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா கட்சி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றார். அவருடன் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.

    பொன். ராதாகிருஷ்ணன் சென்ற காரை போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர். தடை உத்தரவு காரணமாக பொன்.ராதாகிருஷ்ணன் காரை தவிர மற்றவர்களின் காரை நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

    இதனால் போலீசாருக்கும், பொன். ராதாகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் காரில் இருந்து இறங்கி ஆதரவாளர்களுடன் பஸ்சில் பம்பை சென்றார். அங்கு தரிசனம் முடிந்து நேற்று அதிகாலையில் அவர், கோவை திரும்பினார்.

    அப்போது பம்பை பகுதியில் பொன். ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சென்ற காரை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதற்கும் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். கேரள அரசும், போலீசாரும் வேண்டுமென்றே ஐயப்ப பக்தர்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.

    சபரிமலையில் பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், கேரள அரசு மற்றும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தும் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இன்று மாவட்டம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

    போராட்ட அறிவிப்பு வெளியானதும் மாவட்டத்தின் மேற்கு பகுதி கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை, கருங்கல், தக்கலை போன்ற நகரங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது.

    இதில், 8 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டது. பஸ்கள் மீது கல்வீசப்பட்ட தகவல் அறிந்ததும், போக்குவரத்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தினர்.

    இரவு நேர ஸ்டே பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. உட்புற கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    இன்று காலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. நாகர்கோவில், மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார், செட்டிக்குளம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுபோல தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம், கருங்கல் பகுதிகளிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.

    குமரி மாவட்டத்தில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நகர பஸ்கள் ஓடத் தொடங்கும். ஆனால் இன்று டெப்போக்களில் இருந்து எந்த பஸ்களும் பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை.

    இதனால் வெளியூர்களில் இருந்து நாகர்கோவில் வந்த பயணிகள் மற்றும் ரெயிலில் வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    கேரளாவில் இருந்து நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் அரசு பஸ்கள் கேரள எல்லையான பாறசாலையுடன் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வேலைக்கு வருவோர் தவிப்பிற்கு ஆளானார்கள்.



    பஸ்கள் நிறுத்தம், கடைகள் அடைப்பு காரணமாக நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களிலும், கோட்டார், பள்ளி விளை ரெயில் நிலையங்களிலும் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்களை இயக்க வேண்டும் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக இன்று நடக்க இருந்த மனோன்மணியம் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனை துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்தார். அதே நேரம் அரசு பள்ளி, மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பஸ்கள் ஓடாததால் வீடுகளுக்கு திரும்பினர்.

    போராட்டம் காரணமாக மார்த்தாண்டம், குழித்துறை, குலசேகரம் மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஒருசில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர்.

    திருக்கார்த்திகை தினமான இன்று முழு அடைப்பு நடந்ததால் கார்த்திகை விளக்கு விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலையில் சொக்கப்பனை கொளுத்துவது, கோவிலுக்கு செல்வது பாதிக்கப்பட்டதாக பக்தர்கள் குமுறினர்.

    இன்று காலையில் தான் வடசேரி, அப்டா மார்க்கெட்டுகளில் கார்த்திகை பொருட்கள் விற்பனை களை கட்டும். பஸ்கள் ஓடாததாலும், கடைகள் மூடப்பட்டதாலும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், எஸ்.பி. ஸ்ரீநாத் ஆகியோர் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    முக்கிய சந்திப்புகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காலை 10 மணிக்கு மேல் பஸ்கள் ஓடத் தொடங்கின. அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் ஒவ்வொன்றாக பஸ் நிலையம் வந்தது. அவை போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டது. #BJPBandh #KanyakumariBandh #PonRadhakrishnan
    நவரத்திரி விழாவுக்காக கன்னியாகுமரி கோவில் சிலைகள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்தது. #Navratri
    நாகர்கோவில்:

    திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி நேற்று இரவில் பத்மநாபபுரம் வந்தடைந்தது. இதேபோல குமார கோவில் முருகன் சிலையும் பத்மநாபபுரம் வந்து சேர்ந்தது.

    இன்று காலை சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்தது.

    முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் முருகன் பூப்பல்லக்கிலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் எழுந்தருளினர். தொடர்ந்து சாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் வாணவேடிக்கைகள், செண்டை மேளம் முழங்க 3 சிலைகளும் ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டன.

    சாமி சிலைகளுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை அளித்தனர். முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

    அரண்மனை கண்காணிப்பாளர் அஜிதகுமார், தொல்பொருள் இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் உடைவாளை எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன், ஆகியோரிடம் கொடுத்தனர்.

    அவர்கள் உடை வாளை குமரி மாவட்ட தேவசம்போர்டு ஆணையர் அன்புமணியிடம் ஒப்படைத்தனர். அதனை அவர் பணியாளர் மோகனகுமாரிடம் கொடுத்தார்.

    மோகனகுமார் உடைவாளை சாமி சிலைகள் ஊர்வலத்தின் முன்பு ஏந்தியபடி புறப்பட்டுச் சென்றார். சாமி சிலைகள் ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பெண்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனர்.

    தக்கலையில் புறப்பட்ட ஊர்வலம் கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக செல்லும் சாமி சிலைகள் இன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்றன. நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு செல்கின்றன.

    பத்மநாபபுரம் அரண்மனையில் இன்று நடந்த விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கேரள மாநிலம் பாறசாலை எம்.எல்.ஏ. ஹரீந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. சுரேந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார். #Rain #MeteorologicalDepartment
    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. இயல்பான அளவுக்கு சற்று குறைவாகவே பெய்துள்ளது. அதாவது 30 செ.மீ.க்கு பதில் 26 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.

    தேனி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இயல்பாக பெய்யவேண்டிய மழை 14 செ.மீ., ஆனால் 41 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 13 செ.மீ., ஆனால் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. 20 மாவட்டங்களில் குறைவாக மழை பெய்துள்ளது. 9 மாவட்டங்களில் இயல்பான அளவுக்கு பெய்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். ஆனால் நெல்லை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்” என்றார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    கோபிசெட்டிபாளையம் 8 செ.மீ., சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) 6 செ.மீ., உளுந்தூர்பேட்டை, தாளவாடி தலா 5 செ.மீ., அரண்மனை புதூர், ஆயிக்குடி, தாராபுரம், பொள்ளாச்சி, போடிநாயக்கனூர், காங்கேயம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் குறைந்த அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.  #Rain #MeteorologicalDepartment
    உலக தமிழ் அறிஞர்கள் பங்குபெறும் தமிழ் வளர்ச்சி குறித்த ஆய்வு மாநாடு நாளை துவங்க இருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைப்பார் எனவும் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #Pandiarajan #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    லெமூரியா கண்டத்தில் இருந்து தமிழ் வளர்ச்சி குறித்த, உலகத் தமிழறிஞர்கள் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் துவங்க இருக்கிறது.

    இரு நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும், கேரள ஆளுநர் சதாசிவம் கலந்துகொள்ள இருப்பதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

    குமரி - லெமூரியா உலக தமிழ் ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெறும் இந்த ஆய்வு மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த உலகத் தமிழறிஞர்கள் பங்குபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். #Pandiarajan #TNCM #EdappadiPalaniswami
    முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்கள்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த மே மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மட்டும் மீனவர்கள் கரைப்பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர். குளச்சல், மண்டைக்காடு, முட்டம் பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. மேலும் கடலிலும் சூறைக்காற்று வீசியது. இதனால் பெரும்பாலான கட்டுமர, வள்ளம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    அவர்களின் படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சில கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் மட்டும் அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இருந்தனர். அவர்களும் கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக அவசரமாக கரை திரும்பினார்கள்.

    இந்த மீனவர்களின் வலையில் குறைந்தளவே மீன்கள் சிக்கியிருந்தது.

    இந்தநிலையில் முட்டம் பகுதியில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமாகி விட்டனர். மேலமுட்டம் பொன்னந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசி (39), நடுமுட்டத்தைச் சேர்ந்த சேவியர் (50), மேலமுட்டத்தைச் சேர்ந்த ஜேசு அடிமை (20), மேலமுட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்த ஸ்டெபின் (24) ஆகிய 4 மீனவர்களும் நேற்று மாலை 3 மணி அளவில் முட்டத்தில் இருந்து வள்ளம் மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் இன்று காலை 8 மணிக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் காலை நீண்ட நேரமாகியும் இந்த 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீனவர்கள் 4 பேர் மாயமான தகவலை அவர்கள் குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோர காவல் படையினர் படகு மூலம் மாயமான மீனவர்களை தேடி வருகிறார்கள்.
    ×