search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    கிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள்.
    தமிழர் திருநாளான பொங்கல் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும். அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் பொங்கல்விழா களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை மர உரலில் வைத்து, இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு மாறி மாறி உலக்கையால் இடித்து, முறத்தால் புடைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள்.

    பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஜே ஜே என்று குதிபோட ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். நேரடியாகச் சென்று காளவாய்களில் வாங்கி வந்திருந்த சுண்ணாம்புக் கற்களை பெரியபானைகளில் வைத்து, அதில் நீரூற்றிக் கலந்து சுவர்களுக்கு வெள்ளையடிப்பார்கள் ஆண்கள். வெளித்திண்ணைகளில் காவி நிறத்துப் பட்டைகளை அழகாகத்தீட்டுவார்கள்.

    அன்றைய பொங்கல் விழாவில் வாழ்த்து அட்டை அனுப்புவது பிரதானமாக இடம் பெற்றிருந்தது. இளைஞர்கள் தனக்குப் பிடித்த நடிகர், நடிகையரின் படம் அச்சடித்த அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பத் திட்டமிடுவார்கள். காதலர்களோ, இதயத்தில் அம்புபாயும் படம் வாங்கலாமா அல்லது பூக்களில் வண்ணத்துப் பூச்சிகள் தேன்பருகும் காட்சி பொருத்தமாயிருக்குமா என்று சிந்தித்துச் சிந்தித்து அட்டைகள் வாங்க கடைக்குச் செல்வதே ஒரு தித்திக்கும் அனுபவம். அதை, யாருக்கும் தெரியாமல், எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு காதலியின் கைகளில் சேர்க்கும் அந்த நேரம் வரை திக்திக் நிமிடங்கள்.

    பெரியவர்கள் சாமி படங்கள் உள்ள அட்டைகள் வாங்கி, அதில் தங்கள் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டி, சொந்தங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கள். வாழ்த்தை வாசிக்கும் உறவுகளும், அடுத்த பொங்கல்வரை, அதை பொக்கிஷமாகக் கருதி, பீரோக்களில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இந்த நவீனயுகத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. எல்லோர் கைகளிலும் ஒரு செல். அதில் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாகவோ அல்லது மெசேஜ் வாயிலாகவோ, உணர்ச்சியே இல்லாத மரத்துப்போன ‘ஹேப்பி பொங்கல்’ என்ற ஒற்றைச்சொல்.

    கிராமங்களில் வீட்டுப் பொங்கல் விறுவிறுப்பாக நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். கணவன் வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லையோ, செங்கல் கற்களையோ அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    மனைவி வாரச்சந்தையில் வாங்கிவந்திருந்த மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி, அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு, பானையின் கழுத்துப் பகுதியில், மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பாள். எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் குழந்தைகள் போட்டிபோட்டுக் கொண்டு தூக்கிவருவார்கள். மனைவி பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவாள்.

    அடுப்பில் நெருப்பு எரிய எரிய அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கும். பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு. அந்தக் குதூகல நிமிடமும் வரும். பால் பொங்கும். மனைவி குலவைச்சத்தமிட்டு பின் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவாள். கணவன் வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை முழக்குவான். குழந்தைகள்“பொங்கலோ பொங்கல்” என்று கூறுவர்.

    மனைவி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவாள். பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். குழந்தைகள் வழியாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து அனுப்புவார்கள். நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு, பேரன் ஊட்டி விடுவான்.

    ‘இது ஒண்ணு போதுமுடா பேராண்டி, நேரே சொர்க்கந்தாண்டா’ என்று பேரனை மெச்சுவார் தாத்தா. தாத்தா பக்கத்தில், கால்நீட்டி வெற்றிலை பாக்கு இடித்துக்கொண்டிருக்கும் பாட்டிக்கு பேத்தி ஓடிப்போய் பொக்கைவாயில் பொங்கலைத் திணிப்பாள். ‘அடி என்னப் பெத்தாரு, நீ தீர்க்காயுசா வாழணுமுடி ஏஞ்செல்லம்’ என்று பேத்தியை பாட்டி உச்சி முகர்ந்து சொடக்குப் போடுவாள். இதெல்லாம் நடந்தது அந்தக்காலம். இப்போது அது மலையேறி விட்டது. கணவன் கடைகளில் வாங்கிவரும் ஆலைப் பச்சரிசியை, வெண்கலப் பானையில் இட்டு, கடனுக்கு கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து இறக்குகிறாள் மனைவி.

    நல்ல நேரம்பார்ப்பது என்கிற சடங்கு போய், கூட்டாக அமர்ந்து பொங்கல் உண்ணும் முறையும் ஒழிந்து, ஆளாளுக்கு எப்போதைக்கு வசதிப்படுகிறதோ அப்போது எழுந்து, அதுவும் டி.வி.யில் மூழ்கியபடியே பொங்கலை உண்டு பொழுதைக் கழிக்கும் வெற்று நாளாக உருமாறிவிட்டது இன்றைய பொங்கல். அதிலும் முதியவர்கள் பாடுதான் பெரும் கொடுமை. விழிப் பானையில் கண்ணீர்ப் பொங்கல் பொங்க அவர்கள் அனாதை விடுதிகளில்.

    அந்த கால பொங்கல் விழா நிகழ்வுகளை அசைபோடுகிறபோது மனசுக்குள் மழை அடிக்கிறதே. இதயம் இனிப்பாய் இனிக்கிறதே. அதை யாரும் மறுக்க முடியுமா?.

    கவிஞர்.எல்.பிரைட்
    எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள நகர சூரக்குடி தேசிகநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் வித்தியாசமானவர்.
    பார்வதிதேவியின் தந்தை தட்சன், தன் பெருமையை பறைசாற்ற ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு எல்லா தேவர்களையும் அழைத்தான். ஆனால் மருமகன் சிவபெருமானையும், மகள் பார்வதியையும் அழைக்கவில்லை. கோபமடைந்த பார்வதி, தந்தையைத் தட்டிக் கேட்டாள். யாகத்தை தடுத்து நிறுத்த யாககுண்டத்தில் குதித்தாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய அம்சமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனின் யாக சாலையை அழித்தார். அதோடு சிவபெருமானே பைரவராக வடிவம் கொண்டு தட்சனையும் கொன்றார்.

    மேற்கண்ட புராண வரலாற்றின் அடிப்படையில் தான், எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள நகர சூரக்குடி தேசிகநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் வித்தியாசமானவர். பொதுவாக பைரவரின் கையில் திரிசூலம் இருக்கும். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர், கதாயுதத்தை வைத்திருக்கிறார்.

    இத்தல இறைவனின் திருநாமம் தேசிகநாதர். அம்பாளுக்கு ஆவுடைநாயகி என்று பெயர். ‘தேசிகர்’ என்ற சொல்லுக்கு தந்தை, குரு, வணிகர் என பல பொருள் உண்டு. தந்தைக்கெல்லாம் தந்தை, குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்ற பொருளிலும், பாவம் என்ற பணத்தை வாங்கிக்கொண்டு, புண்ணியத்தை வழங்கும் வணிகர் என்ற பொருளிலும் இத்தல இறைவனின் திருநாமத்தைப் பொருள் கொள்ளலாம். ‘ஆ' என்றால் ‘பசு'. பசுக்களாகிய உலக உயிர்களை காப்பவள் என்பதால், இத்தல அன்னைக்கு ஆவுடைநாயகி என்று பெயர்.

    இந்த ஆலயத்தின் மூலவர் தேசிகநாதர் என்றாலும், பைரவரே பிரதான தெய்வமாக உள்ளார். பக்தர்கள் பைரவரை வழிபட்ட பின்னரே அம்பாளையும், சிவனையும் வழிபடுகின்றனர். சிவனுக்கு காண்பிக்கும் தீபாராதனை, பக்தர்களிடம் காட்டுவதில்லை. பைரவர் சன்னிதியில் காட்டும் தீபாராதனை தட்டை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி உண்டு. பைரவருக்கு முக்கியத்துவம் தரவே இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

    காரைக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் தை மாத திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

    அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா விழா வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் நான்கு சித்திரை வீதிகளை காலை, இரவில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அப்போது நிலை தெப்பம் தான் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே இந்தாண்டு பக்தர்கள், தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் திருவிழா நடைபெறுவதை காணமுடியும்.

    இதையொட்டி 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி கதிரறுப்புத் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா நாளான 21-ந் தேதியன்று மீனாட்சி, சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்வர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். பின்னர் தெப்பத்தில் காலையில் 2 முறை குளத்தை வலம் வந்து, அங்குள்ள மைய மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள்.

    மீண்டும் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

    தெப்பத்திருவிழா நடைபெறும் தினமான 21-ந் தேதி அன்று அதிகாலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்று திருக்கோவில் வந்து சேரும் வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    மேலும் பக்தர்கள் நலன் கருதி அன்று கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டம் திறந்து வைக்கப்படும். உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.
    இந்தக் கேள்விக்கு ரொம்ப சுவாரஸ்யமான பதில் தருகிறார் திருமூலர்.

    ஒரே மண்ணிலிருந்து பல பாண்டங்கள் செய்தாற் போன்று கடவுள் எனும் ஒரே மூலம் பல மனிதப் பிறவிகளாய்ப் பிறக்கின்றன. பாண்டங்கள் உடைந்தால் மீண்டும் மண்ணாகிப் பூமியில் இரண்டறக் கலப்பது போல மனிதர்களின் உடல்களும் கலக்கின்றன. (Law of Conservation of Mass) உயிர்கள் இறைவனுடன் கலக்கின்றன.(Law of Conservation of Energy) எங்கிருந்து வந்தனவோ அங்கேயே திரும்பப் போகும் பாண்டங்கள் போலவேதான் நாமும்.

    பாண்டங்களில் மண் இருக்கிறது ஆயினும் மண்ணைக் காண முடியாது, பாண்டமாய்த்தான் தெரியும். மனிதர்களில் கடவுள் இருக்கிறான், ஆனால் கடவுளாய்த் தெரிவதில்லை.

    கண்ணானது யாவற்றையும் பார்க்கிறது என்றாலும் அது என்றுமே தன்னைப் பார்த்ததில்லை. பார்க்கவும் இயலாது. எல்லோருக்குள்ளும் கடவுள் இருக்கிறான் எனினும் யாருமே தத்தமக்குள் இருக்கும் கடவுளைக் காண இயலாது. கண் இருப்பதை உணர முடிந்தது போல் உணர வேண்டுமானால் செய்யலாம்.
    இப்படிக் கடவுள் இருந்தவாறு தன்னை மறைப்பது அவனது நான்கு தொழில்களில் ஒன்றாகும். (படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல்)


    இவ்வளவு செய்திகளையும் தன்னில் அடக்கிய அந்த அருமையான திருமந்திரப் பாடல் இதோ:

    மண்ஒன்று தான்பல நற்கலம் ஆயிடும்
    உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
    கண்ஒன்று தான்பல காணும் தனைக்காணா
    அண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின் றானே

    பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். இந்த நித்திரையை "அறிதுயில்' என்பர். கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர்.
    பெருமாள் சயனத்தில் கண்மூடி நித்திரையில் இருக்கிறார். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர், திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபன், திருவட்டாரில் (கன்னியாகுமரி) ஆதிகேசவர் ஆகியோரின் அரிய தரிசனத்தைப் பெறலாம். இந்த நித்திரையை "அறிதுயில்' என்பர். கண்ணை மூடியிருந்தாலும் எல்லாம் அறிபவர் அவர்.

    மனிதர்கள் உறங்கும்போது, கனவு காண்கிறார்கள். கனவில் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் வருகிறார்கள். அவர்களுடன் கனவு காண்பவர் உரையாடுவார், விளையாடுவார்...இன்னும் அன்றாட வாழ்வில் என்னென்ன செயல்கள் உண்டோ, அத்தனையும் செய்கிறார். விழித்துவிட்டால் அத்தனையும் கற்பனை போல கலைந்து விடுகிறது.

    விஷ்ணுவும், கற்பனா சிருஷ்டியாகவே உலகையும், உயிர்களையும் படைக்கிறார். இதனால் தான் கண்மூடியிருப்பது போல நடிக்கிறார். இதற்கு "யோக நித்திரை' என்றும் யெபர். மனிதனின் சாதாரணமான தூக்கம் போல் அல்லாமல், இதை ஒரு தவநிலை என்றும் சொல்லலாம். "அரிதுயில்' என்று சொன்னாலும் தவறல்ல. விஷ்ணுவை "ஹரி' என்கிறோம். இதை தமிழில் "அரி' என்பர். அரியின் தூக்கம் அரிதுயில் ஆகிறது.
    நாம் வீட்டில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்வதும், அதைப் பின்பற்றுவதும் சிறந்த பலனைத் தரக்கூடியதாகும். நாம் வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    1) வீட்டில் அஷ்டலட்சுமிகள் குடியேறும் வேளையான இரவில் துணிகளை துவைக்கக்கூடாது. குப்பையை வெளியே கொட்டக்கூடாது. மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தை இரவில் பேசக்கூடாது.

    2) இறைவனுக்கு படைக்கும் பொருளாக விளங்கும் அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக்கூடாது.

    3) சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.

    4) தனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமான தன்னுடைய ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த எட்டும் பிறருக்கு தெரியக்கூடாது.

    5) ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

    6) தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலை பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

    7) மனிதனின் ஆதாரமாக விளங்கும் ஜலத்தை இடது கையினால் அருந்தக்கூடாது.

    8. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் போடக்கூடாது. வெளியே எரிந்து விட வேண்டும்.

    9) திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது.

    10) சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.

    11) ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.

    12) கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
    அம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அந்த ஒன்பது உணர்வுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் நிறைந்தவளாகத் திகழ்கிறாள். சிவநிந்தை புரியும் தீயவர்களைக் கண்டால் மனம் வெறுக்கிறாள். அசுரர்களை வதம் செய்யும் போது, வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கொள்கிறாள். சுடலையாண்டியாக சிவன் இடுகாட்டில் நள்ளிரவில் நடனமிடுவதைக் கண்டால், மென்மையால் பயம் கொள்கிறாள். தர்மத்தை மறந்து அதர்ம வழியில் நடக்கும் அசுரர்களிடம் இருந்து உயிர்களைக் காக்க ஆவேசத்துடன் கோபம் கொண்டு எழுகிறாள்.

    பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்டு அஞ்சாமல் அதையும் ஏற்ற சிவனின் செயல் கண்டு ஆச்சரியம் கொள்கிறாள். சிவனின் உடலில் சரிபாதி அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தபோது, "சிருங்காரம்' என்னும் காதல் சுவையோடு இறைவனோடு மகிழ்ந்தாள். கனிக்காக போட்டியிட்டபோது, அம்மையப்பரே உலகம் என வலம் வந்த கணபதியைக் கண்டு ஹாஸ்யத்துடன் (புன்னகை) சிரித்தாள். இரக்கம் கொண்டு உயிர்களைக் காக்க ஓடி வரும் போதெல்லாம் கருணை முகிலாக அருள்மழை பொழிகிறாள்.

    இந்த உணர்வுகள் அனைத்தும் மனிதர்களிடமும் உள்ளதை அவள் பிரதிபலிக்கிறாள். குணங்களே இல்லாத அந்த குணவதி, தன் பக்தர்களுக்காக இறங்கியும், இரங்கியும் வந்து இந்த நவகுணங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

    எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில் காட்சி தரும் விநாயகர் ஆலயங்களை அறிந்து கொள்ளலாம்.
    * மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடி கிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் விருச்சிகப் பிள்ளையார் அருள்புரிகிறார். தேளுக்கு இருப்பது போல் வரி வரியாக கோடுகள் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து ஈசனையும், பிள்ளையாரையும் வணங்கினால் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகே உள்ளது, பழிக்கு அஞ்சிய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகரை வழிபட்டால், அவர்கள் பழிக்கு அஞ்சும்படி செய்வார் என்பதால் இந்தப் பெயர். ஏதாவது தவறு செய்து விட்டவர்கள், தவறுக்கு வருந்துவதுடன் இங்கு வந்து இந்த பிள்ளையாரை வழிபட்டால் மேற்கொண்டு வீண் பழிகள் நேரிடாமல் காப்பார். மேலும் எந்த குற்றங்கள் செய்யாமலும், செய்த தவறால் ஏற்பட்ட குற்ற உணர்வை தவிர்த்தும் மன ஆறுதல் தருவார் என்று சொல்லப் படுகிறது.

    * தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கூத்தூரில் சாஸ்தா விநாயகர் என்ற திருப்பெயருடன் விநாயகர் அருள்புரிகிறார். ஆதியில் இங்கு விநாயகர் கோவில் மட்டும் தான் இருந்ததாம். ஒரு முறை வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை கொள்முதல் செய்து கொண்டு, கூடவே பூரண-புஷ்கலை சமேத அய்யனார் சிலையையும் எடுத்து வந்தனர். அவர்கள் இந்த ஊரில் தங்கி மறுநாள் கிளம்பும் போது, அய்யனார் சிலையை மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டனர். அய்யனார், தான் தங்குவதற்கு இடம் அளிக்கும்படி விநாய கரிடம் வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் சாஸ்தா விநாயகர் என்று பெயர் பெற்றார்.
    பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டியது மிக அவசியம். எவ்வளவு நேரம் பூஜை செய்கிறோம் என்பதை விட எங்கு பூஜை செய்கிறோம் என்பதும் அவசியம்.
    நம் முன்னோர்கள் காலத்தில் மலை, கடல் ஆகிய பகுதிகளில் கோவில்கள் ஏன் அமைந்தன என்று ஆராய்ச்சி செய்தபோது அப்பகுதிகள் சிறப்பான வீர்யம் மிக்க ஆற்றல் மிகுந்தவை என்பது புலப்பட்டது. அதனாலேயே முன்னோர்கள் அப்பகுதிகளில் தங்கி ஆன்மிக மையங்களை அமைத்துள்ளனர்.

    பூஜை அறை என்பது கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்கும் இடம் என்பதால் நல்ல இடத்தில் இருப்பதால் மட்டுமே இது சாத்தியம். கோயில்களில் யாக கூடம் கும்பாபிஷேக சமயத்தில் ஈசான்யத்தில் மட்டுமே அமைப்பார்கள். ஏனெனில் பூமியின் மொத்த சாய்மானமும் வடகிழக்காக தான் சாய்ந்துள்ளது. எனவே வெளியிலிருந்து, அண்டவெளியிலிருந்து வரும் சக்தி பிரவாகம் சாய்மானமாக உள்ள ஈசான்யம் என்றும் வடகிழக்கிலிருந்து தான் பூமியின் அல்லது அறையின் ஒரு பகுதியின் உள்ளே நுழைய முடியும். எனவேதான் ஈசான்யம் இறைவனின் உறைவிடம் ஆகும்.

    எனவே வடகிழக்கு மட்டுமே இறையருள் மிளிரும் பகுதி என்பதை உணர வேண்டும். எனினும் ஈசான்யத்தை வடக்கு கிழக்கில் முழுமையாக அடைபடாமல் இருக்குமாறும் அமைப்பதே சிறந்தது. பூஜை அறையின் மேற்கூரை, மற்ற அறைகளை விட சற்று தாழ்வாக இருப்பது சிறந்தது.

    வட கிழக்கின் வடக்கு பகுதி செல்வ குவியலின் ஆதாரம். இதே இடத்தில் கிழக்கு பகுதி அறிவு களஞ்சியமாகும். பூஜை அறை மீது சூரியக் கிரணங்கள் தாராளமாக படுமானால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். இப்படி அமைந்த பகுதியில் மேற்கு/தெற்கு சுவரை ஒட்டி கடவுள் படங்களை/சிலைகளை அமைக்க வேண்டும்.

    பூஜை அறைக்கு அருகில் குளியலறை அமைக்க கூடாது. பூஜை அறையில் குல தெய்வத்தை பிரதானமாக மையமாக அமைக்கலாம். தற்போது படங்கள் விற்பனையில் கடவுள்கள் இடம் மாற்றி வைத்துள்ளனர். எனவே கிழக்கு நோக்கியவாறு உள்ள கடவுளின் இருப்பிடம் கீழ்க்கண்டவாறு அமைக்கவேண்டும்.

    அதாவது, தென் மேற்கில் விநாயகர், அதையடுத்து கல்விக்கடவுள் சரஸ்வதி அல்லது ஹயக்ரீவர், அதையடுத்து குல தெய்வம், அதையடுத்து லக்ஷ்மி, ஒட்டியவாறு பாலாஜி, கடைசியாக முருகன் இடம் பெற வேண்டும். இப்படித்தான் கோயில்களில் கடவுள் சந்நதிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

    ஒரு அறையில் ஒரே கடவுள் பல உருவங்களில் இடம் பெறுவதுண்டு. இது சரியல்ல. ஆனாலும் பலர் வீடுகளில் விநாயகர் மையத்திலும் அதற்கு வலபுறம் லக்ஷ்மியும் இடம் பெற்றிருக்கும். இது தவறு. ஒரு கடவுளை மறைத்து மற்றொரு கடவுளை வைப்பதால் அதன் அருள் தடைபட்டு, ஆக்ரோஷமே மிஞ்சும். ஒன்றை ஒன்று மறைக்காத வண்ணமே அமைக்க வேண்டும்.

    தினசரி நாம் உணவு உண்ணுவது போலவே கடவுளுக்கும் உணவு படைப்பது அவசியம். சமைத்த உணவு இயலாத நிலையில், பால், கடலை, தேங்காய், அவல், வெல்லம், அரிசி போன்றவற்றைப் படைக்கலாம். ஆனால், மறுவேளைக்கு அல்லது மறு நாளைக்கு இவற்றை எடுத்து நம் உணவுடன் சேர்ப்பது நைவேத்தியமாகவும் அமையும்.

    தீபம் ஏற்றும் போது ஒற்றையாக ஏற்றாமல் (துயர நேரத்தில் மட்டுமே ஏக தீபம் சரி), இரண்டு அல்லது அதற்கு மேலாக ஏற்றுவது நல்லது. இரட்டை தீபங்கள் சூரிய சந்திரனை குறிப்பதால் அவை நம் வாழ்வில் வெளிச்சத்தை உண்டாக்கி வாழ்வை பிரகாசிக்க செய்யும்.

    திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.
    திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வக்கிர காளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வார்கள். அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும் பூஜையில் காளியம்மன் சாந்தருபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப் பதை காணலாம்.

    நினைத்த காரியம் கைகூட வேண்டுபவர்கள், உடல் நலமற்றோர் மற்றும் மன நிம்மதி இழந்தவர்கள் எல்லோரும் பவுர்ணமி தினத்தன்று வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி இரவில் தரிசனம் செய்து வருவார்களானால் எண்ணிய காரியம் எளிதாக கைகூடும் என்பது ஐதீகம்.
    ராகு-கேது தோஷமா?

    ராகு தோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் திருவக்கரை ஆலயத்திற்கு வந்து உளுந்து, பயித்தம் பருப்பு போன்றவற்றைத் தானமாக வழங்கினால் அவர்களைப் பிடித்து இருந்த தோஷம் நீங்கி வாழ்வில் சுபிட்சம் அடைவார்கள்.
    கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார்.
    கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார். தேவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த சூரபதுமர்களை அழிப்பதற்காக சிவபெருமானை அனைவரும் வேண்டினர்.

    இதையடுத்து சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்கள் 6 பேரால் வளர்க்கப்பட்டனர்.

    இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். அன்னை பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றி ஞானப் பால் ஊட்டினார். பின்னர் அவருக்கு சக்தி வேலை வழங்கி சூரபதுமர்களை அழிக்க அனுப்பி வைத்தார்.
    குடவரை ஸ்ரீநரசிம்மர் திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மர் கோவில் ஊருக்கு நடுநாயகமாக விளங்கும் குன்றின் மேல்புரத்தில் அமைந்திருக்கும் குடவரையில் அமைந்துள்ளது. ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி, இடது திருவடி மடித்து வீற்றிருக்கிறார். அருகில் பூஜிக முனிவர்களான சனக சனந்தர்களும், கவரி வீசும் சூர்ய சந்திரர்களும், அடுத்து வலது புறம் ஈஸ்வரரும், இடது புறம் நான்முகனும் (பிரம்மா) பகவான் இரணியனை வதைத்த உக்ரம் தணிவதற்கு வழிபடுகிறார்கள்.

    ஸ்ரீமகாலட்சுமியின் தவத்தினால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் மூவரும் ஒரே ஆலயத்தில் பூஜிக்கப்படுவதால் திருமூர்த்தித் தலம் எனும் புகழுடையது. இவ்வூரில் தனிப்பட்ட சிவ ஆலயம் என்று ஏதொன்றும் கிடையாது.
    பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியின் அபயமளிக்கும் வலது கையில் இரணிய சம்ஹாரம் செய்த ரத்தக்கறையும், நகங்களின் கூர்மையும் காணலாம் என்பர்.

    கர்ப்பக்கிரகம் (கருவறை, அர்த்தமண்டபம் இவை குடவரையில் அமைந்துள்ளது) இத்திருத்தலம் ஆதியில் தேவதச்சனால் உருவாக்கப்பட்டது என்றும் பிற்காலத்தில் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட பல்லவ அரசர்களால் அழகுறப் புதுப்பிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநரசிம்மரின் பெருமை கூறவொண்ணாதது.

    இந்த கோவிலின் கருவறை குடவரையில் பக்கங்களில் ஸ்ரீவைகுண்ட நாதர், ஹிரண்யசம்ஹார நரசிம்மர் (உக்ரநரசிம்மர்), மறுபுறம் வாமனமூர்த்தி, உலகளந்தப் பெருமாள், வராஹமூர்த்தி முதலிய மூர்த்திகள் வெகு அழகாக சிற்பவடிவில் காட்சி கொடுக்கின்றனர். குடவரை வெகு அழகாகவும், நல்ல வேலைப்பாடுகளும், ஆறுகம்பங்களும், மேலே கொடுங்கை முதலியனவைகளுடன் அமையப் பெற்றிருக்கிறது. இக்குடவரையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளுக்கு முக்காலங்களிலும் பூஜை நடந்து வருகிறது.

    இக்கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
    ×