search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நரகாசூரன் யார் என்பது பற்றியும், தீபாவளிக்கும், நரகாசூரனுக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்தும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பூமாதேவிக்கு சுசீலன் என்னும் ஒரு மகன். கெட்ட சகவாசத்தால் கெட்டவனாகி உலகத்தைத் துன்புறுத்தினான். தவம் செய்து பிரம்மாவிடம் மரணமற்ற தன்மையைக் கேட்டு பிரம்மா அதைத்தர மறுத்ததால், வாயுவாலும் பிருத்திவீயாலும் தனக்கு மரணம் கூடாது என்னும் வரனைப் பெற்றான்.

    நரகத்துக்கு காரணமான ஏராளமான அதர்மச் செயல்களை அவன் செய்து வந்ததால் நரகாசூரன் என்றே அவன் அழைக்கப்பட்டான். ஒரு சிலர் அவன் தாய் மாதேவியை துர்விருத்தையுடைவள் எனப்பேச அதைக் கேட்டு கோபமடைந்த நரகாசூரன், உலகில் ஒரு பெண் கூட சுத்தமாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்து தனது பலத்தால் தேவர், மனிதர், கந்தர்வர் என அனைத்துப் பெண்களையும் அபகரித்து பிராக்ஜோதிசபுரம் என்னும் தனது நகரத்தில் ஜெயிலில் அடைத்து வைத்தான். அதனால் அந்தப் பெண்கள் அனைவரும் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார்கள்.

    மேலும் நரகாசூரன் வைகுண்டம் சென்று லட்சுமியை அபகரிக்க முயற்சிக்க மகாலட்சுமி அக்னியிலும், கங்காதீர்த்தத்திற்குள்ளும் பிரவேசித்து விட்டாள். பிறகு பகவான் கிருஷ்ண அவதாரம் செய்து ஆச்வயுஜ மாத கிருஷ்ணபட்ச சதுர்தசி அன்று இரவில் மறுநாள் விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்ததில் நகரகாசூரனைக் கொன்றார். அந்த நாள்தான் நரக சதுர்தசி நாள். அனைத்துப் பெண்களுக்கும் விடுதலை கிடைத்தது.

    ஆகவே தான் அன்று தீபத்தில் மகாலட்சுமியை ஆவாரகனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்னி சம்பந்தப்பட்ட சூடேற்றப்பட்ட வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    தீபாவளி அன்று வைகுண்டத்திலிருக்கும் மகாலட்சுமி தானாகவே பூலோகத்திற்கு (பூமிக்கு) வந்து தீபஜுவாலை (தீபச்சுடர்), திபதைலம் (நல்லெண்ணெய்), தீர்த்தங்கள் ஆகியவற்றில் சந்தோஷத்தோடு வசிக்கிறாள்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். பின்னர் யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும், சண்முகவிலாச மண்டபத்தை சேர்கிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.

    6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும், சண்முகவிலாச மண்டபம் சேர்கிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    7-ம் திருநாளான 14-ந்தேதி (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 8-ம் திருநாளான 15-ந்தேதி (வியாழக்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டின பிரவேசம் நடைபெறும்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்கும் வகையில், 9 இடங்களில் இரும்பு தகடாலான தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கூடாரங்களிலும் 500 பக்தர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் கிரிப்பிரகாரத்தை சுற்றிலும் இரும்பு தகடாலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
    தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன.
    தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் மாறுப்பட்டதாக கொண்டாடப்படுகிறது. பிராந்திய, இன, மொழி வேறுபாடுகள் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பகுதிக்கும் என பிரத்யேகமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன. அதுபோல் இந்து மதத்தினர் தவிர பிற மதத்தினரும் தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர். சீக்கிய மதம், சமணமதம், புத்தமதம் போன்றவாறு பிற மதங்களில் தீபாவளி என்பது வேறு சில காரணங்களுக்காகவும், மாறுபட்ட கொண்டாட்ட நிகழ்வுகளுடன் கலந்து உள்ளது. அவர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை பற்றி அறிந்திடுவோம்.

    சமண மதத்தின் தீபாவளி

    சமண மதத்தினரின் முக்கியமான பண்டிகை தீபாவளி. மகாவீரர் நிர்வாணம் அடைந்தது அல்லது மகாவீரர் மோட்சம் அடைந்ததை குறிக்கும் வகையில் சமண தீபாவளி கொண்டாடப்படுகிறது. பீகாரின் பாவபுரியல் மகாவீரர் மோட்சத்தை அடைய முற்பட்டார். மகாவீரர் அமாவாசையன்று பரி நிர்வாணம் அடைய முற்பட்டார். அந்த அமாவாசை இருளில் மகாவீரரின் அறிவு ஒளி பிரகாசம் அடைந்தது. “தீபாளிகா” என்றவாறு கொண்டாடப்பட்ட அதன் அர்த்தம் உடலை விட்டு ஒளி வெளியேறுதல் என்பதாம். தீபாளிகா என்பதே தீபாவளி என மாறிவிட்டது. ஜெயின் சமூகத்தினர் ஜெயின் புத்தாண்டு எனப்படும் பிரதிபதா என்பதும் தீபாவளியன்று வணிக நிறுவனங்களில் புதிய கணக்குகளை தொடங்குகின்றனர்.

    தீபாவளியன்று ஜெயின் சமூகத்தினர் கொண்டாட்டம் என்பது சற்று மாறுபட்டவாறு உள்ளன. ஆம் ஜெயின் சமூகத்தினர் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கமாட்டார்கள் அகிம்சை, அமைதி என்பதை வலியுறுத்தும் சமணத்தில் சத்தம் மிகுந்த பட்டாசு வெடிப்பு நிகழாது. அனைத்து ஜெயின் கோயில்களிலும் மகாவீரரை வணங்கி வழிபட்டபிறகு “நிர்வாண் லட்டு” என்பது வழங்கப்படும். மேலும் ஜெயின் ஆலயம், அலுவலகங்கள், கடைகளில் மின் விளக்குகள் எரிய விடப்படும். சுவதம்பர் ஜெயின் பிரிவினர் இரண்டு நாட்கள் விரதமிருந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்வர்.

    சீக்கியர்களின் தீபாவளி

    சீக்கியர்களின் தீபாவளி கொண்டாட்டம் என்பது சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான, குரு ஹர்கோயிந்த் மற்றும் இதர 52 நபர்களையும் விடுதலை செய்ததை கொண்டாடும் வகையில் அமைகிறது. “பந்த் சோர் தீபாவளி” என்ற பெயருடன் கொண்டாடப்படும். இந்த தீபாவளியின்போது அமிர்தசரஸ்-ல் உள்ள தங்க கோயில் மற்றும் அனைத்து குருத்வாராக்களிலும் வண்ண விளக்குகள் ஒளிர விடப்படும். குருத்வாராக்களில் தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன் இனிப்பு மற்றும் உணவு பரிமாற்றம், உறவினர்களுக்கு பரிசளிப்பது போன்றவாறு தீபாவளி கொண்டாடப்படுகிறது. பொது இடங்கள் மற்றும் குருத்வாராக்களில் கண்கவர் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.

    புத்த மதத்தினரின் தீபாவளி

    புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். அதாவது மாவீரர் அசோகர் புத்த மதத்திற்கு மாறிய நாளே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இவர்களின் தீபாவளிக்கு “அசோக் விஜயதசமி” என்று பெயர். தீபாவளியன்று மந்திரங்கள் மற்றும் வேதம் ஓதுதல் போன்றவை அசோகரை நினைவுபடுத்தும் வகையில் ஓதப்படுகிறது. நேவார் புத்தமதத்தினர் லட்சுமி தேவியை வணங்கும் வகையில் தீபாவளி கொண்டாடுகின்றனர்.

    புராணங்களில் தீபாவளி

    அறுவடை திருநாள் என்றவாறே புராணகாலங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது பத்மபுராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இரண்டுமே சூரியனை நினைவுப்படுத்தும் வகையில் விளக்குகளை ஒளிர செய்து வணங்குவது என்பதே. 7-ம் நூற்றாண்டில் நாகநந்தா என்ற நாடகத்தில் தீப பிராபதி உத்சவா என்றபடி தீபாவளி பற்றி குறிப்பு உள்ளது. இதனை ஹர்ஷ மகாராஜா குறிப்பிட்டுள்ளார். 9-ம் நூற்றாண்டில் தீபமாலிகா என்றபடி தீபாவளி கொண்டாடபட்டதாக காவிய மிம்சா-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த பெர்ஷிய நாட்டு அல்புருனி எழுதிய குறிப்பில் கார்த்திகை மாத பெளர்ணமி தினத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது என குறிப்பிடுகிறார். முகலாயர்களின் காலகட்டத்திலும் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. அக்பர் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதாக குறிப்புகள் உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் செம்பு பட்டயங்கள் போன்றவைகளிலும் தீபாவளி திருநாள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    தீபாவளி கொண்டாட்டத்தில் அமைதியான தியானம், பிரார்த்தனை போன்றவைகளுடன், பட்டாசு போன்ற அதிர் வெடி கொண்டாட்ட நிகழ்வுகளும் கலந்தே நடைபெற்று வருகின்றன.

    அயோத்தி தீபாவளி


    ராவண சம்ஹாரம் முடிந்து, ராமன் தன் மனைவி சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார். அப்போது நேரம் அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ராமரை தரிசிக்க அயோத்தி நகரவாசிகள், அந்த இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தார்கள். சீதை, ராமர் முதலானவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது, கவுசல்யாதேவி, ‘சீதா! விளக்கேற்ற வந்த திருமகளே! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று. அந்தகாரம் விலகி, அருள் வெளிச்சம் பரவட்டும்’ என்றார். தீபங்களை ஏற்றி வரிசையாக வைத்து வழிபாடு செய்தாள் சீதை, அதுவே தீபாவளியானது.

    மகாபலி தீபாவளி

    பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. மகாபலி முடிசூடிக் கொண்ட நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிறது. அன்று ஏற்றப்படும் தீபம், ‘எமதீபம்’ என்று அழைக்கப்படும். வாமன அவதாரம் எடுத்து நாராயணர், மகாபலி சக்கரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு ஞான திருவடி சூட்டிய நாளே தீபாவளியாகும்.

    மகாலட்சுமியும், தீபாவளியும்

    பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமி தன் மனம் கவர்ந்த மகாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டினாள். திருமார்பன் (ஸ்ரீவத்ஸன்) என்ற பெயர் பெருமாளுக்கு ஏற்படும் வண்ணம் எம்பெருமாள் இதயத்தில் இடம் பிடித்தாள். மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள், எம்பெருமானை மணந்த நாள் ‘தீபாவளி’ திருநாள்.

    பார்வதிதேவி விரதபலன்

    கவுதம முனிவர் கூறியபடி பார்வதி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தார். தீபாவளி நாளில் உமாதேவிக்கு காட்சி கொடுத்த பரமேஸ்வரன் பார்வதி தேவிக்கு சரிபாதி உடம்பைக் கொடுத்தார் என்பது புராண வரலாறு.

    மராட்டிய தீபாவளி

    மராட்டிய மன்னனான வீரச்செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி. அதன் நினைவாக பொதுமக்கள் தங்களின் வீட்டு வாயில்களில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை கட்டுகிறார்கள். இந்த கோட்டை கட்டும் நிகழ்ச்சியில் சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொள்வர். தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை கட்டப்படுவதை இன்றும் காணலாம்.

    அசோக தீபாவளி

    சாம்ராட் அசோகர் தன்னுடைய திக் விஜய யாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளே தீபாவளி.

    ஜைனர் தீபாவளி

    ஜைனர்களின் குருவான மகாவீரர் முக்தி அடைந்த நாளே தீபாவளி. அந்த ஞான ஒளி மறைந்த தினத்தில் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடுகின்றனர்.

    ஜப்பானில் தீபாவளி

    முன்னோர்கள் அனைவரும் தம்தம் சந்ததியினருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி பார்க்கப்படுகிறது. முன்னோர்களுக்காக விளக்குகளை ஏற்றி வைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிபாடாக இது கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானில் இதுபோன்று தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. ‘டோரோனாகாஷி’ என்பது தான் ஜப்பானிய தீபாவளிக்கு பெயர்.
    தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.
    பாற்கடலில் இருந்து எழுந்த துளசி உன்னதப் பொருட்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த ஒப்புயர்வற்ற துளசியைப் பார்த்த மாத்திரத்திலேயே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். துளசியின் மென்மையான ஸ்பரிசம் நம்மைத் தூய்மையாக்கும். துளசியைப் போற்றித் துதிப்பதால்-நமது நோய்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கி விடும்.

    துளசி தீர்த்தத்தைத் தெளித்து கொண்டால் - மரணபயம் நீங்கும். துளசியை வீட்டில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் துளசியைப் பக்தியுடன் வணங்கிப் பூஜித்தால் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட துளசி - கண்ணனை மணந்த தெய்வப்பெண்.

    தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.

    தெற்கு கர்நாடகாவில் எல்லா வீடுகளிலும் துளசித் திருமணம் நடைபெறும். வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் நடுவில் திருமணப்பந்தல் மாதிரி பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமைப்பார்கள். மாலை வேளையில் சாளக்கிராம வடிவத்தில் உள்ள கிருஷ்ணரை - பீடத்துடன் தூக்கி வந்து துளசி மாடத்தின் அருகே வைப்பார்கள்.

    சாளக்கிராமத்தை வைத்தவுடன் முதலில் கிருஷ்ணருக்குத் தனியாகப் பூஜை நடைபெறும். பின் சாளக் கிராமத்திற்கும், துளசிக்கும் பூஜை செய்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறும். கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருகப் பாடியும், நடனமாடியும், மகிழ்ந்து கொண்டாடி - திருமண நாளை இனிதாக முடிப்பார்கள்.

    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்து உலக மக்களை காத்த நாள் தீபாவளி என்று நமக்குத் தெரியும். இது தவிர பிறபல சிறப்புகள் உள்ளன அவை:

    1. ஆதிசங்கரர் ஞானபீடத்தை நிறுவிய நாள்.
    2. மாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய நாள்.
    3. புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற நாள்.
    4. சமண மத மகாவீரர் நிர்வாணம் அடைந்ததும் வீடு பேறும் அடைந்த தினம்.

    5. குருகோவிந்த்சிங் சீக்கியமத அமைப்பான 'கல்சா'வை அமைத்த தினம்.
    6. சாவித்திரி யமனிடம் வாதிட்டு சத்தியவான் உயிரை மீட்டநாள்.
    7. நசிகேதன் யமனுலகுக்குச் சென்று வரம் பெற்று திரும்பிய நாள்.
    8. கோவர்த்தன பூஜை செய்யும் நாள்.

    9. மாவலிபூஜை செய்யும் நாள்.
    10. வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாள்.
    11. ராமர் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு அயோத்தி திரும்பிய நாள். (ராமாயண காலத்திற்கு பிறகுதான் தீபாவளி வந்தது. ஆனால் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள். ஐப்பசி மாதம் திரியோதசி, சதுர்த்தி, அமாவாசை, சுக்கிலபட்ச பிரதமை நாள்)
    12. தீபாவளி தினத்தை அரசு விடுமுறை என அறிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடும்படி செய்தது மொகலாயச் சக்கரவர்த்தி அக்பர் என அவர் எழுதிய 'அயினி அக்பர்' என்ற நூல் கூறுகிறது.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
    இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.

    அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருந்து வருகிறது.

    நற்பலன் தரும் ஓம் வரைதல்

    தீபாவளிக்கு முதல் நாள் தந்தராஸ் பூஜை மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக இந்த விஷயத்தை செய்து விடுவர். அதாவது வீட்டின் வாசல் நுழைவு பகுதியில் அழகிய ஓம் எனும் எழுத்தை எழுதுவது பச்சரிசி மாவு மற்றும் மஞ்சள் கலந்து ஓம் எனும் பிரணவ எழுத்தை எழுதிட வேண்டும். இதன் மூலம் வீட்டிற்கு செல்வ வளம் விரைவாக வந்து விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை எழுத அதிகம் செலவாகாது. இதனை பலரும் வீட்டின் முன் தந்தராஸ் நாளில் வரைந்து இருப்பர்.

    சங்கு ஒலிக்கச் செய்தல்:

    தீபாவளி நாளில் வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களை கொண்டு வருமாம். அந்த வகையில் வீட்டில் சங்கு வைத்திருப்பதே சிறந்த பலனை தரும். அந்த சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வேண்டுமாம். பண்டிகையின் போது இந்து குடும்பங்களில் பலர் சங்கு ஊதி இறைவனை வணங்குவர். அதுபோல் தீபாவளி அன்று சங்கு ஒலிப்பதன் மூலம் வீட்டிற்கு நல் வளத்தையும் செல்வத்தையும் அழைத்து வர முடியுமாம். அப்படி வீட்டில் சங்கு இல்லாதவர்கள் தீபாவளி நாளில் புதியதாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம். அப்படியில்லையெனில் சங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.

    இறையருள் தரும் கரும்பு வழிபாடு:


    விநாயகர் மற்றும் லட்சுமி பூஜை செய்யும் நபர்கள் அதனுடன் வேருடன் கூடிய கரும்பை வைத்தும் வழிபாடு செய்வர். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நலன் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகுமாம். கரும்பு விவசாயிகளின் நல்வருவாய் மற்றும் இனிப்பான சுவை மிகுந்தது என்பதால் இதனை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.

    தாமரை மலர்களால் அர்ச்சனை:

    மகாலட்சுமியின் விருப்பமான மலர் தாமரை. எனவே தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வதற்கு தாமரை மலர்களால் லட்சுமியை அலங்கரிப்பதுடன், தாமரை மலரால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். தாமரை மலர் மாலை அணிவித்து லட்சுமி மந்திரம் ஜெபித்து மகாலட்சுமியை வணங்க அவள் நமக்கு லட்சுமி கடாட்சத்தை வழங்கி விடுவாள்.

    அதுபோல் தீபாவளி நேரத்தில் வீட்டில் லட்சுமி கணபதி மந்திரங்களை வைத்து பூஜை செய்திட ஐஸ்வர்யம் பெருகும். தீபாவளி சமயத்தில் ஒவ்வொரு பிராந்திய மக்களும் தங்களுக்கென சில வழிபாட்டு முறைகள், சமய சடங்குகளை செய்து வருகின்றனர். இவற்றில் நமக்கு எது விருப்பமானதோ அதனை செயல்படுத்துவது தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவோம்.
    ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது.
    ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. சப்தரிஷிகளும் இங்கு தவம் செய்து நரசிம்மர் காட்சியைப் பெற்றுள்ளனர். பூவரசன்குப்பம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற சிறப்புப் பெற்றது.
    இங்கு சுவாமிகளுக்கு திருமண் சாத்தப்படுவதில்லை. கஸ்தூரி திலகம் மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல ராமானுஜர் காலத்துக்கு முந்தைய சங்கு, சக்கரம் முறையே இங்கு நடைமுறையில் உள்ளது.

    சுவாதி நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமம் செய்து வழிபடுவது அதிக பலன்களைத் தரும். தன்வந்திரி ஹோமமும், சுதர்சன ஹோமமும் இத்தலத்தில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. ஹிரண்யகசிபு வதம் முடிந்ததும் நரசிம்மர், முதன் முதலாக பூவரசன் குப்பத்தில்தான் தாயாருடன் காட்சிக் கொடுத்தார். எனவே இத்தலம் “தென் அகோபிலம்” என்று புகழப்படுகிறது.

    அகோபிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மரும், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மரும் அளவு, உயரம், அகலம், அழகு, வடிவமைப்பு உள்பட அனைத்து அம்சங்களிலும் ஒரேமாதிரி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தில் நரசிம்மரிடம் நாம் நம்மை ஒப்படைத்து விட்டால் ரூணம் (கடன்) ரோகம் (நோய்) சத்ரு (எதிரி) ஆகிய மூன்று தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    சுவாதி நட்சத்திரத்தினத்தன்று இத் தலத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமஞ்சனம், 9 மணிக்கு ஹோமப் பூஜைகள் 12 மணிக்கு பூர்ணாஹ§தியும், மதியம் 1 மணிக்கு கலசதீர்த்தமும் நடைபெறும்.

    2004-ம் ஆண்டு இத்தலத்தில் திருப்பணி செய்யும்போது ஆண்டாள் சன்னதி அருகே தோண்டியதில் அபூர்வமான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. அந்த பெரு மாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 12 நவராத்திரி நாட்களில் இத்தலத்தில் நடக்கும் ஹோம பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 டன் பழ வகைகள், சுமார் ஆயிரம் லிட்டர் நெய், தேன் அந்த யாகத்தில் பயன்படுத்தப்படும்.

    தேர்தலில் போட்டியிடுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. முப்பதாறு சுவாதி நாட்களில் இங்கு வழிபட்டால் நினைத்தது நடக்கும். சனி, புதன்கிழமைகளில் இத்தலத்தில் வழிபடுவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகிறார்கள்.
    மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது.
    ஐப்பசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான 'சதுர்த்தசி'க்கு சிறப்பு உண்டு. இதை 'நரக சதுர்த்தசி' என்பர். அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று எண்ணெயில் அலை மகளும் நீரில் கங்கையும் உறைந்திருப்பர். இந்த நாளில் எண்ணெய் தேய்த்து நீராடினால் ஏழ்மை அகலும். தூய்மை சேரும் என்கிறது தர்ம சாஸ்திரம். சாதாரண நாளில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ஏற்காத தர்ம சாஸ்திரம் இந்த சதுர்த்தசியில் மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை கட்டாயப்படுத்துகிறது.

    நீடாடிய பிறகு எமதர்மராஜனை வழிபட வேண்டும். எமனது பதினான்கு பெயர்களையும் பதினான்கு முறை குறிப்பிட்டு கைகளால் நீரை அள்ளி அளித்தாலே போதுமானது.  

    'சதுர்த்தசி' என்றால் பதினான்கு. சந்திரன் ஒவ்வொரு கலையாகத் தேய்த்து தேய்ந்து அன்று 14-வது கலையோடு மிஞ்சி இருப்பான். முன்னோர் ஆராதனைக்கு சந்திரனின் கலையை வைத்து சிரார்த்த நாளை நிர்ணயம் செய்வோம். சந்திரனும் எமனும் முன்னோர்களை வழிபடும்போது இவர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம்.

    சந்திரனின் பதினான்காவது கலையே நீராடும் வேளை. பதினான்கு வடிவில் தென்படுபவன் எமன். ஐப்பசி மாத சதுர்த்தசியில் (14-வது திதி) அதிகாலையில் எண்ணையில் அலைமகளும், நீரில் கலைமகளும் அவர்களுடன் எமதர்மராஜனும் பிரச்சன்னமாவர். இந்த மூன்று பேரும் ஒன்று சேரும் சிறப்பு வேளை அது. வாழ்க்கை செழிக்க பொருளாதாரம் தேவை, இதற்கு அலைமகளின் அருள் வேண்டும். வாழ்க்கையை சுவைக்க துய்மையான மனம் தேவை.

    இதற்கு கங்கையின் அருள் வேண்டும். நரக வேதனையில் இருந்து விடுபட, ஏழைகளுக்கு தீபத்தை கொடையாக அளித்து அவர்களையும் எம வழிபாட்டில் சேர்க்க வேண்டும். புத்தாடை அணிந்து எமனுக்கு தீபம் ஏற்ற வேண்டும். ஒளிமயமான வாழ்க்கையைப் பெற அது உதவும். தீபத்தை ஏற்றினால் அறியாமை அகன்று விடும். நரக வேதனையில் இருந்து விடுபட தீபங்களை வரிசையாக ஏற்ற வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.

    மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது. நரகாசுரன் துயரத்தில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்த நாள் அது. அன்று துன்பம் விலகியதில் மக்களிடம் மகிழ்ச்சி பொங்கியது. சாஸ்திரமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    மஹாளய பட்சத்தில் உலாவ வந்த நமது முன்னோர்களின் வழியனுப்பு விழாவாகவும் செயல்படுகிறது தீபாவளி. அன்று அவர்களுக்கு வழிகாட்ட தீவட்டி ஏந்த வேண்டும். ஆலயங்களிலும், குடியிருப்புகளிலும் தீபங்கள் மிளிர வேண்டும் என்று பிரம்ம புராணம் கூறும். எனவே சாஸ்திரத்தோடு இணைந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். 
    தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் லட்சுமி மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்து அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள்.

    அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலட்சுமி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவாக இருந்த ஜோதிலட்சுமியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிபோனார்கள் அசுரர்கள்.

    திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றிவைக்கும் வழக்கம் ஏற்பட்டது. தீபாவளியன்று வீடு முழுக்க தீபம் ஏற்றி வழிபட்டால் தீப வடிவில் தீப லட்சுமி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்க செய்வாள் என்பது ஐதீகம்.
    தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.
    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் விவரம் வருமாறு:-

    நாளை (3-ந் தேதி) ஐப்பசி பூரத்தையொட்டி காலை 10 மணியளவில் மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் நடந்து தீபாராதனை நடை பெறும்.

    உச்சிகாலத்தில் ஆலவட் டத்துடன் உற்சவர்-அம்மன் இருப்பிடம் வந்து சேரும்.

    தீபாவளியன்று (6-ந் தேதி) காலை, மாலை இரு வேளைகளிலும் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசமும், சொக்கநாத பெருமானுக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும்.

    வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை கோலாட்ட உற்சவம் நடைபெறுகிறது. 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை மாலை 6 மணியளவில் மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். பின்னர் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி, கொலுச்சாவடி வந்து சேருகிறார்.

    12-ந் தேதி மாலை 6 மணியளவில் வெள்ளி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளில் திருவீதி உலா நடைபெறும்.

    13-ந்தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தி களுடன் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதிகளில் புறப்பாடு நடைபெறும்.

    வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கந்தசஷ்டி விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை 7 மணியளவில் கூடல் குமாரருக்கு வெள்ளி கவசம் (பாவாடை) சாத்துப்படியும் விசே‌ஷ அபிசேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

    எனவே திருவிழா நடைபெறும் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உபயதாரர்கள் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகிய சேவைகள் நடைபெறாது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அதிகாரி நடராஜன் தெரிவித்துள்ளார்.
    தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம். இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில், ‘கங்கா பூஜை’ நடைபெறும்.

    முருகனுக்குப் பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு சந்நிதி திரும்புவர். கடல் தீர்த்தத்தில் ஆவிர் பவித்திருக்கும் கங்காதேவிக்கு முருகப்பெருமானே இவ்வாறு பிரசாதம் கொடுத்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். தீபாவளி அன்று காலையில் முருகனுக்கும், கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தனக்காப்பு இடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை அழித்த நாளில் உடலும்-உள்ளமும் குளிர வேண்டும் என்பதாலும், தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி விரதம் துவங்குவதாலும் இவ்வாறு சந்தனக்காப்பு இடுகிறார்களாம்.

    இந்த நாளில், முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான புத்தாடைகளை வெள்ளிப் பல்லாக்கில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணிவிக்கிறார்கள். பக்தர்கள் தாராளமாக புத்தாடைகள் எடுத்து கொடுக்கலாம்.

    தீபாவளியன்று ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கெள்ளலாம்.
    கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சந்நிதித் தெருவில் பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். ஸ்ரீசாரங்கபாணி பெருமாளிடம் அதீத பக்தி கொண்டவர் இவர். தினமும் ஆராவமுதனை சேவிப்பதுடன், சதாசர்வ காலமும் அவரையே சிந்தையில வைத்து ஆராதித்து வந்தார்.

    வயதாகி, உடல் தளர்ந்த நிலையிலும் ஸ்ரீசாரங்கபாணியை தரிசிப்பதை அந்த பிரம்மச்சாரி விடாமல் தொடர்ந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ‘சுவாமி, தாங்கள் இப்படித் தனியாக இருக்கிறீர்களே... கடைசி காலத்தில் உங்களுக்கு அந்திமக் கிரியைகளை யார் செய்வார்கள்? என்று கேட்டனர். அப்போதும் ‘என் ஆராவமுதன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். அவன் தான் எனக்கு குழந்தை’ என்றார் அவர்.

    ஒரு தீபாவளி தினத்தில் இறைவனடி சேர்ந்தார் அந்த பிரம்மச்சாரி. ‘தீபாவளி புண்ணிய நாளில், துக்கம் அனுஷ்டிக்க முடியுமா? என்ற எண்ணத்தில் அக்கம் பக்கத்தவர்கள் அவர் வீட்டுக்குச் செல்லவோ, எதுவும் செய்யவோ முற்படவில்லை. சற்று நேரத்தில் அழகான இளைஞன் ஒருவன். பிரம்மச்சாரியின் வீட்டுக்கு வந்தான்.

    அவரது உடலைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுதவன், ஆக வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தான். இதைக்கண்டு அக்கம் பக்கத்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் சாப்பிடுவதற்காக அவனை அழைக்கச் சென்ற போது அந்த இளைஞன் மாயமாக மறைந்தான்!

    மறுநாள் ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு அருள் வந்தது. ‘சந்நிதித் தெருவில் இருந்த பிரச்சச்சாரிக்கு அந்திம கிரியைகளைச் செய்தது சாட்சாத் ஸ்ரீஆராவமுதனே! என்றார் அவர்.

    அன்று முதல்.. தீபாவளித் திருநாளில், ஸ்ரீசாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் பாலிப்பது வழக்கமாக உள்ளது.

    ×