search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு எதிரே அமைக்கப்பட்டு உள்ள யாகசாலையில் நேற்று காலை 6 மணிக்கு தசமகா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 7 மணிக்கு தாமிரபரணி புஷ்கர விழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் வரதராஜ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மகாகாளி யாகம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயுத்துறையில் புதிதாக கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ள படித்துறையில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. 9 மணிக்கு புதிய படித்துறையில் ஓம்கார நந்தா சுவாமிகள், புனித நீர் ஊற்றி பிரதிஷ்டை பூஜையை நடத்துகிறார்.

    அன்னை ராமலட்சுமி தேவி, படித்துறையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். காலை 10 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோசாலையில் நடக்கும் யாகசாலை பூஜையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மகாஆராத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார். தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
    தசரா திருவிழாவைமுன்னிட்டு பாளையங்கோட்டையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    நெல்லை மாநகரில் தசரா விழாவுக்கு தனிப்புகழ் பெற்ற பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள பேராச்சி அம்மன், தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமாகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் நேற்றுமுன்தினம் தசரா விழா துர்கா பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் இரவில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. பேராச்சி அம்மன் சப்பரம் தவிர மற்ற 11 அம்மன் கோவில் சப்பரங்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை தெருக்களில் பவனி வந்தது.

    நேற்று காலை 6 மணிக்கு 11 அம்மன் கோவில் சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நின்றன. அப்போது ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து மேல தெரு வழியாக, வடக்குத்தெருவுக்கு சென்று ராஜகோபாலசுவாமி கோவில் முன்பு 6.30 மணிக்கு அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நின்றன. பின்னர் அங்கிருந்து அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் புறப்பட்டு காலை 7 மணிக்கு ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து சப்பரங்களும் கோவிலுக்கு சென்றன. அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன்கள் கொலு இருந்து சிறப்பு பூஜை நடைபெறும்.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடக்கிறது.

    வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தால் திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும்.
    திருமணத் தடை நீங்க :

    வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை செய்து அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்வதனால் நமக்குள்ள திருமணத்தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அதுவும் வலம்புரி விநாயகராக இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.

    தொழில் லாபம் கிட்டுவதற்கு :

    அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியைப் நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    ஐந்து வகை எண்ணெய் வழிபாடு :

    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்து வகை எண்ணெய்களால் பஞ்ச தீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் மனதிற்கு ஏற்ற இல்லற வாழ்வு அமையும், செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும்.

    உதவிகள் பெறுவதற்கு :

    மேற்கு நோக்கியுள்ள அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம் மகிழ்ந்து உதவி புரிவார்கள், பணக்கஷ்டங்கள் நீங்கி செழிப்பான வாழ்க்கை வாழ வகை செய்வார் கணபதி.

    பதவி மாற்றம், இடமாற்றம் அடைய :

    மூல நட்சத்திரத்தன்று சுந்தர விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்து அந்த பால்கோவாவை தானமாக அளித்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை எளிதாகும். நீங்கள் விரும்பியபடியே மாற்றங்கள் நிகழும்.

    இழந்த வேலையை, பதவியை திரும்பப் பெற :

    திருவாதிரை நட்சத்திரத்தன்று நர்த்தன விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவைக் கொண்ட காப்பிட்டு வந்தால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் மீண்டும் இழந்த பதவியையும் மன நிம்மதியையும் பெறுவார்கள்.

    நவக்கிரக தோஷம் போக்கும் விநாயகர் :

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன. ஒன்பது விருட்சங்களுடன் கூடிய விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது. நாளை முதல் வருகிற 13-ந்தேதி வரை மாலை 5.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் வந்தடைகிறார். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 7.30 மணிக்கு முடிவடையும். இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 14-ந்தேதி மாலை 4.15 மணிக்கு தாயார் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜன சேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    வருகிற 18-ந்தேதி சரஸ்வதி பூஜையன்று மாலை 4.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்தடைகிறார். மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி, பொது ஜனசேவையுடன் நடைபெறும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பு‌ஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு பு‌ஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு பு‌ஷ்கர விழா நடத்தப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மகா பு‌ஷ்கர விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி பு‌ஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நெல்லை வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் பு‌ஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    பாபநாசத்தில் தாமிரபரணி பு‌ஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மேலும் அவர் திருப்புடைமருதூர், நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் நடைபெறும் பு‌ஷ்கர விழாக்களிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை நேற்று தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. 10.15 மணிக்கு கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஆயிரத்தம்மன் என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 11.30 மணிக்கு காப்பு கட்டுதலும், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில் சப்பர பவனி நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆயிரத்தம்மன், பாளையங்கோட்டை முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நிற்கும். அப்போது சிறப்பு தீபாராதனையும், பந்தலில் கொடி நட்டுதலும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து அம்மன்களும் கோவிலுக்கு சென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலு இருந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. ஆயிரத்தம்மன், பேராச்சி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சப்பர பவனியும் நடக்கிறது.

    20-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கும். மதியம் 12 மணிக்கு அந்த சப்பரங்கள் பாளையங்கோட்டை கோபால்சாமி கோவில் திடலை வந்தடையும். இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட்டை வந்தடையும். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
    மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

    தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களால் வந்தது என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள். நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம். தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.

    எந்த நட்சத்திரத்தில் என்ன பலன்?

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    நோயில் இறந்தவர்களுக்கு பிரதமையில் தர்ப்பணம்

    சிலர் நீண்ட நாட்கள் ஏதாவது தீராத கொடிய வியாதிகளில் சிக்கி மரணம் அடைந்து இருப்பார்கள். சிலர் கடைசி வரை புத்திர பாக்கியம் கிடைக்காமல் ஒரு வித ஏக்கத்துடன் வாழ்க்கையை முடித்து இருப்பார்கள். சிலர் விபத்துகளில் உயிரிழந்திருக்கலாம். சிலருக்கு சர்க்கரை வியாதிகளால் கை விரல், கால் விரல்கள் துண்டிக்கப்பட்டு இறந்து இருக்கலாம். இத்தகைய பித்ருக்களுக்கு பிரதமை திதியன்று வழிபாடுகள் செய்வது நல்லது.

    விவாகரத்தில் இறந்தவர்களுக்கு துவிதியில் தர்ப்பணம்

    விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம் சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு தூவிதியை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.
    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள்.
    அகன்ட பாரத தேசத்தில் சுழன்று வரும் அறுபது வருடங்களிலும் உத்தமமான மாதமாக புரட்டாசி மாதம் திகழுகின்றது. சூரிய பகவான் தன் சொந்த வீடான சிம்மத்திலிருந்து புறப்படுகின்ற மாதம் கன்யா மாதம் என்றும் பாத்ரபத மாதம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்த பாத்ரவத மாதத்தில் தான் நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நமக்கு பல விதமான பலன்களை தரத்தயாராக இந்த பூவுலகிற்கு வந்து நலம் தரப்போகும் எள்ளு கலந்த நீரை நெஞ்சார பருகி நமக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடன் கன்றுக்கிரங்கும் பசு போல் நம்மை வாழவைக்க இவ்வகையகம் வரும் மஹாளய பசமும் இம்மாதத்தில் தான் வருகிறது.

    ஒருவன் தான் ஜனிக்கும் போதே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் என்கிற மூன்று கடன்களுடன் பிறக்கிறான். பரந்தாமன் உறையும் தெய்வீக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் வீட்டில் தெய்வீக முறைகள் யாகங்கள், ஹோமங்கள் செய்வதாலும் தன்னுடைய தேவ கடன் அடைக்கிறான்.

    மஹான்கள் பாதங்களில் நமஸ்காரங்கள் செய்து அவர்களது நல்ல உபதேசங்களை கேட்டு வாழ்க்கையை நடத்துவதாலும் நம் கோத்ர பூர்வர்களான ரிஷிகளின் சரித்திரத்தை கேட்டும் வணங்கி வழிபடுவதாலும் ரிஷியினுடைய கடனையும் அடைக்கிறான். மூன்றாவதானதும் முக்கியமானது பல சாபங்களை தவிர்க்க வல்லதாகவும் இருக்கிற பித்ரு கடனை ஒருவன் மாதா மாதம் அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்பணங்களாலும் வருடாவருடம் செய்யும் திதி அன்ன சிராத்தத்தையும் சிரத்தையாக செய்து மேற்படி கடனை அடைக்கிறான்.

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள். இந்த இரண்டு அமாவாசை தினங்களிலும் பித்ருக்களை மிகக் கட்டாயமாக பூஜித்து தர்ப்பண தானங்கள் செய்ய வேண்டும்.

    இது தவிர மாதா மாத அமாவாசையிலும் செய்ய வேண்டியது. இதில் ஏதாவது சில சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாமல் போனதையும் குடும்பத்திலுள்ள சகலமான காலஞ்சென்றவர்களின் நினைவாகவும், கட்டாயம் மகாளய அமாவாசையன்று தர்ப்பண தானங்களை செய்ய வேண்டும். பவுர்ணமி ஆரம்பித்து மஹாளய பஷமான 15 தினங்களிலும் செய்வது மிக சிறப்பு. முடியாதவர்கள் கட்டாயம் மஹாளய அமாவாசை தினம் செய்ய வேண்டும்.

    இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு கடனை தீர்க்க பல புண்ணிய நதிகள், புண்ய புஷ்கரிணிகள் (குளங்கள்) இருக்கின்றன. இவைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே கும்பம் வைத்து நீர்நிரப்பி அதில் கங்கையை பூஜித்து அந்த தண்ணீரால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்துடன் திதி சிராத்தம் அன்ன ரூபமாக செய்வது சிறப்பு அல்லது அதற் குண்டான பொருட்களை வாங்கி ஆமரூபமாக செய்வதும் நல்லது. இதை சாதாரணமாக அரிசி கொடுப்பது என்பர். இதுவே ஆமரூபமான சிராத்தமாகும்.

    இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த பித்ருக்களுக்கு புண்ணிய நதி களோ புண்ணிய தீர்த்தங்களோ தென்புறத்தில் இருந்தால் மிக மிக மேன்மையானது. அப்படி சில புண்ணிய தலங்களில் கோவிலுக்கு தென்புறத்தில் புண்ணிய தீர்த்தங்கள் அமைய பெற்றிருக்கும். இந்த தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலனை தரவல்லது.

    இவ்வளவு பெருமைகளை உடைய புண்ணியதீர்த்தம் பாரத தேசத்தில் தென் பாகத்தில் திராவிட தேசத்தில் ஆன்மீகத்தின் அடித்தளமான தமிழ் நாட்டில் தலைநகராம் சென்னை பட்டினத்திற்கு அருகில் (சுமார் 45 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இந்த புண்ணிய பூமிக்கு புண்ணியாவர்த்த சேத்ரம் என்ற பெயர். இந்த புண்ணிய, புஷ்கரணிக்கு கிருந்தாப நாசினி என்றும் பெயர்.

    தற்போது இந்த திவ்ய தேச தலம் திருமழிசை ஆழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்று மங்களாசாசன திவ்யதேசமாக திரு எவ்வுள் என்றும் மருவி திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. புண்யாவர்த்தம் இந்த தலத்தில் தெரிந்தோ தெரியாமலோ புண்யம் செய்தால் அது பல மடங்கு ஆவர்த்தமாகிறது.

    ஒரு புண்ணியம் பண்ணினாலே பல பாபங்கள் நசித்து விடும் என்பது சாஸ்திரம். அப்படியிருக்க இந்த தலத்தில் யார் ஒருவரும் பாபம் பண்ண நினைக்க முடியாது. இத்தகு பெருமை வாய்ந்த புண்யாவர்த்த சேத்தரமான திருவள்ளூருக்கு புரட்டாசி மாதத்தில் வந்து ஸ்ரீவீரராகவனை வணங்கி ரிஷிகடனையும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பித்ரு தர்பணங்கள் செய்து பித்ரு கடன்களையும் நிறைவேற்றி நீங்காத செல்வங்கள் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ வைத்திய வீரராகவனின் திருவடிகளில் வணங்கி வழிபடுவோம்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.
    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்து விட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று சொல்ல மறந்து விடக்கூடாது. பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப் பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமை களையும் செய்தனர். அதை செஞ் சோற்று கடனாக நினைத்தனர்.

    இப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் இருந்த புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் கோவிலுக்கு சென்று மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.

    மகாளய அமாவாசையையொட்டி நேற்று இரவே வீரராகவர் கோவிலில் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    இன்று காலையும் திரளானோர் வந்ததால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. திருவள்ளூர் டவுண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவில் குளத்திலும் இன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் வழிபட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

    சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழி கூறினார்.

    கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’’ என்பது பழமொழி. இனம்புரியாத நோய்கள், உடற் குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம்.

    அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
    ×