search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    எந்த நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் திருவண்ணாமலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் சன்னதிக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.
    திருவண்ணாமலையில் எத்தனையோ விநாயகர்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இடுக்கு பிள்ளையார் தனித்துவம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும் வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த இடுக்கு பிள்ளையார் ஒரு பகுதி வழியாக உள்ளே சென்று மறுபகுதி வழியாக வெளியேற வேண்டும்.

    படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் இந்த பிள்ளையாருக்குள் நுழைந்து வெளியே வரமுடியும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையாருக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.

    இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக கூறப்படுகிறது.

    எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
    நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

    அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.

    இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
    ராமர் வனவாசம் செல்ல பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். ஜாதக ரீதியாக முக்கியமாக காரணமாக சொல்லப்படுவது எது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 8, 4, 6, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது நடந்தது என்ன என்று இந்த பாடல் சொல்லுகிறது.

    ‘ஜென்ம ராமர் வனத்திலே
    சீதையைச் சிறை வைத்ததும்,
    தீதிலா தொரு மூன்றிலே
    துரியோதனன் படை மாண்டதும்,
    இன்மை எட்டினில் வாலி
    பட்டமிழந்து போம் படியானதும்,
    ஈசனார் ஒரு பத்திலே
    தலையோட்டிலே யிரந்துண்டதும்
    தருமபுத்திரர் நாலிலே
    வனவாசம் அப்படிப் போனதும்,
    சத்திய மாமுனி ஆறிலே
    இரு காலிலே தளை
    பூண்டதும்,
    வன்மை யற்றிட ராவணம் முடி
    பனிரெண்டினில் வீழ்ந்ததும்.
    மன்னு மா குரு சாரி
    மாமனை வாழ்விலா
    துறமென்பவே!’

    இந்தப் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்வது: ராமர் வனவாசம் சென்ற பொழுது அவருக்கு ஜென்ம குரு ஆதிக்கம் இருந்திருக்கிறது. அதுதான் வனவாசம் சென்றதற்கு காரணம் என்பர். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கலாம். ஆதிபத்தியம் நன்றாக இருந்தால் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. வழிபாடே வளர்ச்சி கூட்டும். 
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நாளை(வியாழக்கிழமை) இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சியடைகிறார். இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும், தக்காருமான கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையரும், செயல் அலுவலருமான தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் ஒரு லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மார்க்கண்டேஸ்வரர் அபிராமி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி 1 லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி மார்க்கண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. விழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, சாமி தரிசனம் செய்தனர்.

    தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு, திரி, எண்ணெய் ஆகியவை கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர்.
    ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அதில் ஐந்தாவது நாளாக வரக்கூடியது வியாழக்கிழமையாகும். இந்த வியாழக்கிழமை அன்று பிறந்தவர்கள் மிகச் சிறந்த பண்புடையவர்களாக விளங்குவர். பெரும் செல்வந்தராக இருப்பர். மனதிற்கினிய சொற்களைப் பேசுபவர்களாகவும் இருப்பர்.

    சிறந்த ஆசிரியர்களாகவும், மக்களால் விரும்பப்படுகிறவர்களாகவும், செயல்படுவர். அரசர்களால் மதிக்கப்படுபவர்களாகத் திகழ்வர். இவர்களது யோசனை மற்றவர்களை வெற்றி பெறவைக்கும். எதையும் முன்கூட்டியே யூகித்து உணரும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

    சிவபெருமான் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் கிருஷ்ண பகவான் எடுத்ததைப் போல, சிவபெருமானும் கூட சில அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதை பலரும் அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. உலக உயிர்களைக் காப்பதற்காக, இறைவன் பூமியில் தோன்றுவதே அவதாரம் எனப்படுகிறது. அப்படி சிவபெருமான் எடுத்த சில அவதாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    நந்தி அவதாரம்

    நந்தி என்று அழைக்கப்படும் பெரிய காளை, சிவபெருமானின் ஒரு அவதாரமாகவே சொல்லப்படுகிறது. நந்தி வழிபாடு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் உள்ளது. சிவபெருமானே நந்தியாக உருவெடுத்ததாக சில புராணக் கதைகள் சொல்கின்றன. மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

    ரிஷப அவதாரம்

    பாற்கடல் கடையும் நிகழ்வுக்குப் பிறகு, கீழ்லோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர். இதனால் சிவபெருமான் தருமம் என்னும் ரிஷப உருவம் கொண்டு, விஷ்ணு பகவானின் மகன்களை அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

    வீரபத்திர அவதாரம்

    தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் சதி தேவி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. தன் தலையில் இருந்து சிறிய முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதில் இருந்து வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி தோன்றினர். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

    அஸ்வத்தாமன்

    பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட கொடிய விஷத்தை, சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரியத் தொடங்கியது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிவந்தது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்ரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ ஆகும்.

    கீரத் அவதாரம்

    ஒரு முறை அர்ச்சுனன் தவத்தில் இருந்த போது, கீரத் (வேட்டைக்காரன்) உருவம் எடுத்தார் சிவபெருமான். அந்த நேரத்தில் அர்ச்சுனனைக் கொல்ல, ‘மூக்கா’ என்ற அசுரனை அனுப்பி இருந்தான், துரியோதனன். அந்த அசுரன் தன்னை ஒரு காட்டுப் பன்றியாக உருமாற்றிக்கொண்டு அர்ச்சுனனைக் கொல்ல வந்தான்.

    ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனின் கவனம், காட்டுப் பன்றியின் சத்தத்தால் சிதறியது. அர்ச்சுனன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அதன் மீது அம்பு எய்தான். அப்போது மற்றொரு அம்பும் அதன் மீது தைத்தது. அது வேட்டைக்காரன் உருவத்தில் இருந்து சிவபெருமான் எய்த அம்பு ஆகும். யார் முதலில் காட்டுப் பன்றியை வீழ்த்தியது என்ற சர்ச்சை இருவருக்கும் உருவானது. அர்ச்சுனனின் வீரத்தைக் கண்ட சிவபெருமான் அவனுக்கு, பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

    யாதிநாத் அவதாரம்

    ஒரு முறை ஆஹூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவன் இருந்தான். அவனும் அவனது மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். அந்த தம்பதியை, யாதிநாத் அவதாரம் எடுத்து சந்தித்தார் சிவபெருமான். ஆஹூக் தங்கியிருந்த குடிசை இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய சிறிய அளவிலானது. எனவே கணவனும் மனைவியும் வெளியே படுத்துக் கொண்டு, தன் வீட்டிற்கு விருந்தினராக வந்த யாதிநாத்தை வீட்டிற்குள் தங்க வைத்தனர். அன்று இரவு துரதிர்ஷ்டவசமாக வன விலங்கால், ஆஹூக் கொல்லப்பட்டான். அதனால் அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன் வந்தாள். அப்போது தனது ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதன் படி அவர்கள் இருவரும் நளன், தமயந்தியாக பிறந்தனர்.

    பைரவ அவதாரம்

    ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர் அவதாரம்’ ஆகும். பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தார். துண்டித்த பிரம்மனின் தலையை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதனால் 12 வருடத்திற்கு பிட்சாடனராக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து சுற்றி திரிய வேண்டிய நிலை அவருக்கு உருவானது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

    பிப்லாட் அவதாரம்

    இந்த அவதார வழிபாடு வடநாட்டில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு பிப்லாட் என்று பெயரிட்டனர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே தாதிச்சி வீட்டை விட்டு சென்று விட்டார். சனி திசையின் காரணமாகவே தனது தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை வளரும்போது பிப்லாட் தெரிந்து கொண்டார். இதனால் சனி பகவானை சபித்தார். அந்த சாபத்தால், விண்ணில் இருந்து மண்ணில் விழுந்தார் சனி பகவான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு, சனியின் சாபத்தை போக்கினார் பிப்லாட். எனவே இவரை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 
    முருகனின் அறுபடை வீடுகளில் எந்த திருத்தலத்தில் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்

    திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

    பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்

    சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

    திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

    பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.

    இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம். 
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். குருப்பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.
    4-10-2018 குருப்பெயர்ச்சி சிவ.அ.விஜய்பெரியசாமி

    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் எந்த தோஷங்கள் ஏற்பட்டிருந்தாலும், குரு பார்வ பட்டால் அந்த தோஷங்கள் விலகும் என்றும் சொல்லப்படுகிறது.

    குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவார். ஜாதகங்களில் குரு சிறப்பாக அமைந்தால் ஒருவருக்கு குடும்ப வாழ்க்கை, உயர் பதவி, கல்வி, ஞானம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு, செல்வசெழிப்பு முதலியன சிறப்பாக அமையும். திருமணப் பேறு, புத்திரபாக்கியம் உண்டாகும்.

    ஜாதகத்தில் குரு பார்வை சரி இல்லாதவர்களுக்கு பெரியோர் சாபம், மறதி, விஷப் பூச்சிகளால் பாதிப்பு, காது மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள், பணத்தட்டுப்பாடு, பேச்சு சம்பந்தமான பிரச்சினைகள், கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடு உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி துன்பத்தில் தவிப்பவர்கள் குருபகவானை வழிபட்டால் அந்த பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பழமையான சிவாலயங்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்கள் வழிபாடு, குருப்பெயர்ச்சி சமயத்தில் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது.

    குரு பகவான் பரிகாரத் த‌லங்களாக திருச்செந்தூர், திருஆலங்குடி, பட்டமங்கலம், முறப்பநாடு, மதுரை குருவித்துறை, சென்னை திருவலிதாயம், தேவூர், தென்குடி திட்டை, சுசீந்திரம், உத்தமர்கோவில், தக்கோலம், கோவிந்தவாடி என பல திருத்தலங்கள் கூறப்பட்டாலும், குருப் பெயர்ச்சி காலங்களில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது.

    ரமண மகரிஷியை அவரது அடியவர் ஒருவர், திருக்கயிலாய யாத்திரை செய்ய அழைத்தார். உடனே மகரிஷி சிரித்துக்கொண்டே ஒன்றும் தெரியாதவர் போல, ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?' என்றார்.

    ‘திருக்கயிலாய மலை, சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான், பூதகணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் பதிலுரைத்தார் அந்த அன்பர்.

    அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலை என்பதே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' எனக் கூறினார்.

    உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

    ஆம்.. இங்கு மலையே சிவபெருமான் தான்.

    ‘செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
    எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
    இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
    பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே’ என்ற திருநாவுக்கரசரின் திருமுறைப்பதிகமே திருவண்ணாமலையின் வரலாற்றை விளக்கிடும்.

    ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர். சுவாரசியமாக ஆரம்பித்த வாதம், அனல் தெறிக்க இறுதியில் திருக்கயிலை நாதனான சிவபெருமானிடம் வந்து நின்றனர். கையில் அனல் ஏந்தி, நெற்றிக்கண்ணில் அனலோடு தகதகக்கும் பரம்பொருள் சிவபெருமான், ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்' என்று கூறினார்.

    அத்தோடு இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்ற அருட்பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார். உடனே ஈசனின் அடியைத் தேடி பன்றி உருக்கொண்டு விஷ்ணுவும், அன்னப் பறவை உருக்கொண்டு சிவபெருமானின் முடியைத் தேடி பிரம்மனும் புறப்பட்டனர். பூமியைத் தோண்டி பாதாளம் ஏழுக்கும் கீழே சென்றும் ஈசனின் அடியைக் கண்டறிய முடியாமல் விஷ்ணு தோல்வியோடு திரும்பி வந்தார்.

    அன்னமாய் மாறி ஆகாயத்தில் பறந்து பல ஆண்டுகள் கடந்தும், ஈசனின் முடியை காண இயலாமல் பிரம்மனும் அயர்ந்து போனார். அப்போது ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ பல ஆயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட பிரம்மன், தாழம்பூவிடம் ‘நான் சிவபெருமானின் முடியை தரிசித்து விட்டதாக பொய் சொல்’ என்றார்.

    தாழம்பூவும் அப்படியே பொய் சாட்சி சொன்னது. அப்போது ஜோதிப் பிழம்பில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்குச் சாபமும், மகாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார்.

    பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானை தொழுதுநிற்க, ஜோதிப்பிழம்பு அக்னி மலையாய் நின்றது. அக்னிமலையான ஈசனும் உள்ளம் குளிர்ந்தார். அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! எங்கள் பொருட்டு இங்கு அக்னி மலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணாமலையில் வளரும் மரங்களால் தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

    உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே, இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாச்சலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். உடனே தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணாமலையார் திருக்கோவில்.

    ‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்றால் ‘நெருங்க முடியாதது’ என்று பொருள்படும். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத திருமலை என்பதால் இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

    திருஅண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வைக்கு மரகத மலையாகவும், பாமரர்களுக்கு கல் மலையாகவும் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.

    இந்தத் தலத்தில் இறைவனின் உடலில் இடப்பாகம் பெறுவதற்காக பார்வதிதேவி தவம் செய்தார், அப்படி தவம் செய்ததோடு மட்டுமின்றி, கார்த்திகை பவுர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில் பிரதோஷ காலத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வந்ததால், அன்னையின் ஆசை நிறைவேறியது. சிவபெருமான் அம்மனுக்கு தன்னுடைய உடலில் சரிபாதியை வழங்கி அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலையை பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்யலாம். அதிலும் குறிப்பாக கிரகண காலங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் கிரிவலம் வந்து வழிபடுவது மிகச்சிறப்பாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வரும் குருப்பெயர்ச்சி நன்னாளில் திருவண்ணாமலையை வலம்வந்து வழிபடுவது தோஷங்களை விலக்கி, அனைவருக்கும் நற்பலன்களை வழங்கும்.

    விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது. 
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். இவருக்கு உகந்தவற்றை அறிந்து கொள்ளலாம்.
    தேவர்களின் குரு ‘பிரகஸ்பதி’ எனும் வியாழ பகவான் ஆவார். நவக்கிரகங்களில் பூரண சுப கிரகமாக போற்றப்படுபவர் இவர். ‘குருவருள் இருந்தால் திருவருள் உண்டாகும்' என்பதும், ‘குரு பார்க்க கோடி நன்மை' என்பதும் குரு பகவானை சிறப்பித்து கூறும் பழமொழிகள். பொதுவாக குரு இருக்கும் இடத்தைவிட அதன் பார்வை பதியும் இடங்களே சிறப்பான பலன்களைப் பெறுவதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது

    உலோகம்- தங்கம்

    நவரத்தினம் - புஷ்பராகம்

    வஸ்திரம் - மஞ்சள் நிற வஸ்திரம்

    வாகனம் - யானை

    சமித்து - அரசு

    சுவை - இனிப்பு

    அதிதேவதை - பிரம்மா, தட்சிணாமூர்த்தி

    குணம் - சாத்வீகம்

    ஆட்சி வீடு - தனுசு, மீனம்

    உச்ச வீடு - கடகம்

    நீச வீடு - மகரம்

    நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    குரு திசை - 16 வருடங்கள்

    ஒரு ராசியில் தங்கும் காலம் - ஒரு வருடம்

    எண்கணிதப்படி எண்- 3

    தானியம் - கொண்டக்கடலை

    புஷ்பம் - முல்லை, மஞ்சள் நிறப்பூ

    காரகத்துவம் - புத்திரப்பேறு 
    புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமை, நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகியவற்றையொட்டி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனம், டைம் ஸ்லாட் தரிசனத்தில் டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். #tirupati
    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11 முறை ஒரேநாளில் லட்சம் பக்தர்களுக்குமேல் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 29-ந்தேதி அன்று ஒரேநாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 278 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    புரட்டாசி மாதம் நடப்பதால் சனிக்கிழமையையொட்டி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்ற பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலவச தரிசனத்தில் சாதாரண பக்தர்கள் வழிபட அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. அன்று 300 ரூபாய் டிக்கெட்டில் 5 ஆயிரம் பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டைம் ஸ்லாட் முறையில் சென்ற இலவச தரிசன பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் ஆகியோர் தனித்தனி வரிசைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதே நடைமுறையை கூட்டம் அதிகமாக இருக்கும்போதும் நடைமுறை படுத்தப்பட உள்ளது.

    பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி மற்றும் கோடைக்கால விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுப்ப முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புரட்டாசி மாதத்தில் இன்னும் 2 சனிக்கிழமை இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. எனவே வருகிற 6, 7, 13, 14, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அத்துடன் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கம்போல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று ஏழுமலையானை வழிபடலாம்.

    300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வரும் வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு குடிநீர், மோர், அன்னதானம் ஆகியவை வழங்கப்படும். கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் 120 உதவி அதிகாரிகள் நியமித்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.#tirupati
    பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.
    மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.

    அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.

    அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளிளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

    மதுரை மீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.

    ×