search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
    லட்சுமி தேவியை வழிபடுவது செல்வத்தை மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றியையும், அமைதியையும் வழங்கும். லட்சுமி உங்கள் வீட்டில் குடியேற வேண்டுமானால், நீங்கள் சில விரத வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    ‘ஓம் மகாதேவ்யைச வித்மஹே
    விஷ்ணு பத்நீ ச தீமஹி
    தன்னோ லட்சுமி பிரச்சோதயாத்’

    இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வந்தால், லட்சுமி தேவியின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

    பூஜையறையில் லட்சுமிதேவியின் உருவப்படத்தையோ அல்லது சிலையையோ வைத்து, அதற்கு தினமும் தேங்காய் வைத்து வழிபட வேண்டும். இப்படி தன்னை வழிபடும் வீட்டிற்கு லட்சுமி தேவி உடனடியாக வருவாள்.

    உப்பை நீரில் கலந்து அந்த தண்ணீரை கொண்டு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்யுங்கள். சுத்தம் உள்ள இடத்திற்குத் தான் திருமகள் வருவாள். எனவே இவ்வாறு உங்கள் இல்லத்தை சுத்தம் செய்வது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும். மேலும் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளையும் விரட்டும்.

    திருமகளுக்கு பிடித்த மலர் தாமரைதான். வீட்டில் உள்ள லட்சுமியின் சிலைக்கு, தாமரை விதைகளில் மாலை கோர்த்து வழிபடுவது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பது போன்றதாகும். சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒரு வகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான். எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

    திருமகளுடன் விநாயகரையும் வழிபடுவது, வீட்டில் செல்வம் கொழிக்கச் செய்யும். எனவே லட்சுமியுடன் விநாயகரின் சிலையையும் சேர்த்து வைத்து வழி படுங்கள். அந்த சிலைகள் வெள்ளியில் இருந்தால் கூடுதல் சிறப்பு.

    துளசி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. லட்சுமி வசிக்கும் இடமாகவும் துளசி செடி கருதப்படுகிறது. எனவே துளசி செடி முன்பு, நெய் விளக்கேற்றி லட்சுமி மந்திரத்தை சொல்வது உங்கள் வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றித் தரும்.

    சங்கு, திருமகளின் கணவரான திருமாலுக்கு பிடித்த ஒன்றாகும். எனவே வீட்டில் தெற்குப்புறம் நோக்கி சங்கில் நீர் நிறைந்திருக்கும்படி வைப்பது லட்சுமி தேவியை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வரும்.

    தாமரை லட்சுமிக்கு மிகவும் பிடித்த மலராகும். எனவே தினமும் லட்சுமி சிலைக்கு முன் இரண்டு நெய் விளக்கேற்றி தாமரை பூக்களை வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இது அனைத்து வளங்களையும் உங்களுக்கு பெற்று தரும்.

    புல்லாங் குழலில் ஒரு பட்டுநூலை கட்டி, அதனை உங்கள் பூஜையறையில் லட்சுமி சிலைக்கு அருகில் வைத்து வழிபடுங்கள். புல்லாங்குழல் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவ்வாறு வழிபடுவது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலவ செய்யும். அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும். 
    மலையனூரில் உள்ள புற்றை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும். மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பழிமொழியாக பேசப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள்.
    காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) - செங்கல்பட்டு சாலையில் உள்ளது வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை

    இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும் (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.

    திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள்.

    மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.

    தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.

    ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்

    ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி


    கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார்.

    சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர்,கெங்கனார், கரூரார் போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். இந்த அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது.



    சமஸ்கிருத்தில் பாலா என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது. பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவமாக பட்டு பாவாடை சட்டையுடன் ரத்தினகரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் முக்தியுடன் பக்தர்களை ‘வா’ என்று தாயுள்ளத்துடன் அழைத்து அருள்பாலிக்கிறார். பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்பாளுக்கும், மேலும் பள்ளியில் படிக்கும் 3 ஏழை குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை சட்டை மற்றும் அவரவர் வசதிற்கேற்ப கொலுசு கொடுத்தும் தங்களின் நேர்த்திகடன் நிறைவேற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு பிரசாதமாக தேனைக் கொடுக்கின்றனர். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்.

    * ஆடி : மகா வாராகி ( ஆஷாட) நவராத்திரி உற்சவம் (ஆடி அமாவாசை திதி முதல் தசமி திதி) வரை
    * புரட்டாசி : ஸ்ரீ சாரதா நவராத்திரி உற்சவம் (புரட்டாசி அமாவாசை திதி முதல் தசமி திதி வரை) விஜயதசமி அன்று காலை ஏககால இலட்சாரச்சனை
    * தை : ஸ்ரீ இராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் (தை அமாவாசை முதல் தசமி திதி வரை)
    * பங்குனி : ஸ்ரீ லலிதா மஹா (வசந்த) நவராத்திரி மகோற்சவம்.

    ஸ்ரீ வித்யா நவாரண மகாயாகம், திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூரசம்ஹாரம், அற்புத திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி.

    * மஹா சிவராத்திரி மகோற்சவம் ( Massi_4 Kala SiavaLinga Pooja)

    பிரதி மாதம் பௌர்ணமியில், மாலை மகா அபிஷேக சர்வ அலங்காரம், பாலா உற்சவர் ஊஞ்சல் சேவை, நவஆவரண பூஜை, மூலிகை அம்பாளுக்கு 27 ஆர்த்தி திபாராதனை.

    காலை 8 மணி முதல் 1 மணி வரை
    மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.

    அமைவிடம்:


    திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.

    ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
    திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,
    செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா
    காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.
    தொடர்புக்கு: 9789921151 , 9445359228.
    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி ஆலயத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி மகிமைகள் பல கொண்டது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி ஆலயத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி மகிமைகள் பல கொண்டது. அந்த மகிமையை உணர வேண்டுமானால் அந்த ஊஞ்சல் உற்சவத்தை நேரில் சென்று தரிசனம் செய்தால்தான் உணர முடியும்.

    மலையனூர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 11 மணி முதல் 12.30 மணி வரை அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள்.

    அந்த சமயத்தில் அங்காளம்மனை நாம் வழிபட்டால், ஏற்கனவே மனம் குளிர்ந்துள்ள அம்மன் நாம் கேட்கும் வரத்தையெல்லாம் வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகம். அதிலும் ஆடி அமாவாசை நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலன்களைத் தரக் கூடியதாகும்.

    சரி... இந்த ஊஞ்சல் உற்சவத்தை ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

    பிரம்மனின் தலையை வெட்டியதால் சிவன் கையில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
    மலையனூரில் புற்றில் வீற்றிருந்த அங்காளம்மன், விஸ்வருபம் எடுத்து, தனது காலால் பிரம்ம கபாலத்தை மிதித்து பூமிக்குள் அமுக்கி, சிறுவனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். அதன் பிறகே சிவபெருமானுக்கு பாவவிமோசனம் கிடைத்தது.

    ஆனால் விசுவரூபம் எடுத்த அங்காளம்மனின் சீற்றமும், ஆக்ரோஷமும் குறையவில்லை. அது மட்டுமின்றி தன்னை நாடி தேடி வரும் ஒவ்வொரு பக்தனையும் பிடித்துள்ள தீய சக்திகளையும் அங்காளம்மன் வீறு கொண்டு அழிக்கிறாள் என்பதை பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள். இப்படி தினம், தினம் தீய சக்திகளை விரட்ட ஆங்காரம் கொள்ளும் அம்மனை அமைதிப்படுத்தி, சாந்தம் செய்யவே, அமாவாசை நள்ளிரவு அவளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுகிறார்கள். இதைத்தான் ஊஞ்சல் உற்சவம் என்று அழைக்கிறார்கள்.

    தூக்கத்துக்கு அழும் குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்டியதும், அடுத்த வினாடியே அமைதி கொண்டு குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அது போலதான் அங்காளம்மனை தொட்டிலில் வைத்து தாலாட்ட, தாலாட்ட அவள் மனம் அமைதி பெற்று குளிர்ந்து போகும். இந்த தாலாட்டு நடக்கும் போது, அங்காளம்மனை புகழ்ந்து பாடுவார்கள். இது அம்மனை மேலும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்.

    இத்தகைய சமயத்தில் நாம் அங்காளம்மனை வழிபட வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த அருளைப் பெறவே அமாவாசை தோறும் மேல்மலையனூர் தலம் நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தப்படி உள்ளனர். திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு இணையாக இத்தலத்துக்கும் மக்கள் லட்சக்கணக்கில் வரத்தொடங்கி உள்ளனர். அம்மனின் அருளை அறிந்து, அவள் பொற்பாதம் பணிந்து வரம் பெற ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

    இப்படி அலை, அலையாக வரும் பக்தர்கள் எல்லாரும் அங்காளம்மன் ஊஞ்சலில் தாலாட்டுவதை எளிதில் காண்பதற்கு வசதியாக, கோவில் முன்பு உயரத்தில் ஊஞ்சல் மண்டப மேடை அமைத்துள்ளனர். அந்த மேடையில்தான் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தை கண்டு பலன் அடைந்த ஒரு பக்தர், அந்த ஊஞ்சல் மண்டப படிக்கட்டுக்களில் தங்கமுலாம் பூசி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு தாலாட்டப்படும் அம்மனை பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு உடனே திரும்பி விடலாம்.

    அங்காளம்மன் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த அமைதியை கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
    தமிழ்நாட்டில் எத்தனையோ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள் இருந்தால் எல்லா ஆலயங்களுக்கு தலைமை பீடமாக திகழ்வது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஆகும்.
    தமிழ்நாட்டில் எத்தனையோ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக திகழ்வது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஆகும்.

    தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயிணியை சிவபெருமான் தூக்கி சுழன்று ஆடினார். அப்போது பார்வதி தேவியின் உடல்கள் உலகம் முழுக்க சிதறி விழுந்தது. அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள்தான் சக்தி தலங்களாக புகழ் பெற்று திகழ்கின்றன.

    தாட்சாயிணியின் வலது கை விழுந்த இடம் மேல்மலையனூர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இந்த தலத்துக்கு சக்தி அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள புற்றில் அன்னை நீண்ட ஆண்டுகளாக உறைந்து இருந்தாள். எனவே இத்தலத்தில் உள்ள புற்று மண் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மாமருந்தாக திகழ்கிறது.
    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற கோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு.
    அங்காளம்மனை வழிபடும் பெண்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற கோரி ஆலயத்தில் வேப்பஞ்சேலை அணிந்து வழிபாடு செய்வதுண்டு. பொதுவாக வேப்பஞ்சேலை வழிபாடு மேல்மலையனூர் கோவிலில் ஆதிகாலத்தில் இருந்து தொடங்கப்பட்ட பழக்கமல்ல. சென்னை அருகே உள்ள பெரியபாளையம் கோவிலில்தான் இந்த வழிபாடு அதிகஅளவில் நடக்கிறது.

    சமீப காலமாக மேல் மலையனூர் கோவிலுக்கு வரும் பெண்களும் இந்த வழிபாட்டை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். இந்த வழிபாடு செய்தால் அம்மன் மனம் இறங்கி வேண்டுவரம் தருவாள் என்பது நம்பிக்கை.
    பண்ணாரியில் புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் தாமரை மீது சாந்த சொரூபினியாக இருக்கிறாள். அன்னையின் திருவுருவம் சுயம்புவாகும்.
    பண்ணாரியில் புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாரியம்மன் தாமரை மீது சாந்த சொரூபினியாக இருக்கிறாள். அன்னையின் திருவுருவம் சுயம்புவாகும். முக்கிய உற்சவ நாளில் அன்னை சரஸ்வதி அலங்காரத்துடன் காட்சி தருகிறாள். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இரவு தீமிதி விழா நடைபெறும். பூசாரி முதலில் செல்ல, தொடர்ந்து பக்தர்கள் செல்ல அவர்களை அடுத்து கால்நடைகளும் தீமிதிக்க இறங்குமாம். குண்டத்தில் புதியதாக விளைந்த தானியங்கள், சுரைத்தேங்காய், புகையிலை முதலியன சமர்ப்பிக்கப்படும். மலைவாழ் மக்களான படுகர் இனத்தவரின் குலதெய்வம் பண்ணாரி மாரியம்மன். எனவே அவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் முதலியவற்றை கோவிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

    திருமணமாகாதவர்கள் மாரியம்மன் அருளால் திருமணம் கூட, மகிழ்ச்சியடைவார்கள். அந்த மங்கள இசையில் அம்மனும் மகிழ்ச்சி அடைவாள்.
    வீணை இல்லாத சரஸ்வதியின் தோற்றம் அபூர்வம் எனலாம். கூத்தனூரில் குடியிருக்கும் சரஸ்வதி தன் கரங்களில் வீணையை ஏந்தியிருக்கிறாள்.
    ‘கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்பதை எடுத்துக்கூறவே கலைமகளை இன்னும் வீணை வாசிக்கும் திருக்கோலத்திலேயே வழிபடுகிறோம். வீணை கலையின் அடையாளம். கலைகளின் நாயகியான கலைமகள் கரங்களில் வீணை இருப்பது மிகவும் பொருத்தம் தான். சரஸ்வதி ஏந்தி இருக்கும் அந்த வீணை ‘கச்சபி’ என்று அழைக்கப்படுகிறது. இசைப்பிரியரான சிவபெருமான் பிரம்ம தேவரின் வேண்டுதலுக்காக இந்த வீணையை பரிசாக அளித்தார். அந்த வீணையை கலைமகளுக்கு பிரம்ம தேவர் அளித்தார்.

    ஓங்காரத்தின் வடிவான இந்த வீணை பிரம்ம தேவரின் படைப்புக்கான ஆதார ஸ்ருதியை அளிக்க கூடியது. கல்விக்கு அதிதெய்வமாகவும், கலைகளின் தேவியாகவும் உள்ள இந்த தேவி வீணை வாசிப்பில் மகழ்ந்து அருள் புரியக்கூடியவள். ஆனால் வீணை இல்லாத சரஸ்வதியின் தோற்றம் அபூர்வம் எனலாம்.

    கூத்தனூரில் குடியிருக்கும் சரஸ்வதி தன் கரங்களில் வீணையை ஏந்தியிருக்கிறாள். திருக்கண்டியூர், வேதாரண்யம், கங்கை கொண்ட சோழ புரம், திருக்கோடிக்கா போன்ற தலங்களில் வீணை இல்லாத சரஸ்வதியை ‘ஞான சரஸ்வதியாக’ தரிசிக்கலாம். படைப்பின் ஆதார ஸ்ருதியாக விளங்கும் சரஸ்வதியின் வீணை வணங்க வேண்டிய ஒன்று.

    நவராத்திரிப் பண்டிகையின்போது அன்னை வாணியின் திருப்பாதங்களை அந்த ஒன்பது நாள் திருவிழாவின்போது தம் கைகளால் தொட்டு வணங்கிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். வெள்ளைத் தாமரை மலரின் மேல் சரஸ்வதி தேவி எழுந்தருளி இருப்பதோடு தனது மேல் வலது கரத்தில் ஜபமாலையையும் கீழ்புறமாய் உள்ள வலக்கையில் சின்முத்திரையும், மேல்புற இடது கையில் கெண்டியையும், கீழ்புற இடது கையில் சுவடியையும் தாங்கியவளாய் திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றாள்.
    இந்த மகாளய புண்ணிய காலத்தில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.
    புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரையிலான காலத்தை ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள். இது பித்ருக்களை (முன்னோர்கள்) வழிபடுவதற்கு உகந்த காலமாகும். இந்த ஆண்டு மகாளயம் இன்று (25-9-2018) செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை உள்ளது. இந்த நாட்களில் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும், சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்றைய தினம் செய்கின்ற தர்ப்பணத்தில் நாம் விடும் எள் மற்றும் தண்ணீரை, சுவேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுவதாக நம்பிக்கை.

    மனிதர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் ஐந்து என்று சொல்லப்படுகிறது. அவை பிதுர்யக்ஞம் (தர்ப் பணம் மூலமாக முன்னோர்களுக்கு உணவளிப்பது), தேவயக்ஞம் (யாகங்கள், ஹோமங்கள் மூலமாக தேவர்களுக்கு உணவளிப்பது), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது.

    வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும், நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில், பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று.

    பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மகாளய புண்ணிய காலம். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.

    நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றவர்கள். அவர்களுக்கும், நம் முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிரயாச்சித்தமாகவும் மகாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது. இந்த மகாளயபட்ச பதினைந்து நாட்களிலும், பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதாக ஐதீகம். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்கிறார்கள்.

    அதன் மூலம் அவர்கள் திருப்தி யடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மகாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளய பட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறியதாகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக்கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோட்சனம் செய்யலாம். அதாவது பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் முன்னோர்களின் திதியன்று அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் வழங்கலாம். 
    காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.
    மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவம் என்று போற்றப்படுகிறாள். அந்த தலத்தில் ஈசனை எண்ணி தவமிருந்த காமாட்சி தேவியின் தவக்கோலம் அனலாக வெளிப்பட்டு அந்தப் பகுதியையே வாட்டி வந்தது.

    அந்த நேரத்தில் தான் ஆதிசங்கரர் அங்கு வந்தார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான மகாமேரு என்ற 43 திரிகோணங்கள் கொண்ட, ஸ்ரீசக்கரத்தை அங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்தார். சக்தி வாய்ந்த இந்த மகாமேரு அபூர்வ மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது.

    பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர் என்கிறார்கள். சில காலம் முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக் கொள்வார்களாம். தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு மகாமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமாகும்.

    இந்த அர்த்த மேருவில்தான் அன்னை காமாட்சி வாசம் செய்கின்றாள். காமாட்சியம்மனின் திருஉருவம் அர்த்த மேருவான ஸ்ரீசக்கரத்திற்குப் பின்புறமாய் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றது. அன்னை காமாட்சியம்மனின் மகிமைகளை அள விட்டுக் கூற இயலாது.

    இத்தலத்தில் 6 வார எலுமிச்சம் பழ வழிபாடு சிறப்பு பெற்றது. பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு ஆறு வாரங்கள் முடிப்பதற்குள்ளாகவே அவர்களின் வேண்டுதல் நிறைவேறி விடும். இந்த வழிபாடு மூலம் திருமணம் ஆகாத ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தகைய பிரார்த்தனைகளின் பலனாக நற்குணம் பொருந்திய கணவனை மணம் புரிந்து நலமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் நோய் நொடிகளும் அன்னையின் அருளால் அகன்று குணம் ஆகிவிடும்.
    திருச்சானூர் திருக்கோவிலில் மலர்களை ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய, வரத முத்திரைகளுடைய கீழிரு கரங்களுடனும், அழகு வடிவுடனும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி தாயார் அருள்புரிகிறாள்.
    ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூரில் பத்மாவதி தாயார் திருக்கோவில் அமைந்துள்ளது. தாயாரை தரிசிக்காவிட்டால் வேங்கடவனை தரிசித்தும் திருப்பதி யாத்திரை நிறைவு பெறாது என்று சொல்வார்கள்.

    திருச்சானூரில் பத்மாவதி தாயார் அழகு மிகு அருள்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மலர்களை ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய, வரத முத்திரைகளுடைய கீழிரு கரங்களுடனும், அழகு வடிவுடனும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி தாயார் அருள்புரிகிறாள்.

    கிழக்கே துவஜஸ்தம்பமும், உட்சுவரில் கருடாழ்வார், நம்மாழ்வார், எம்பெருமானார் சன்னதிகளும், ரங்கமண்டபமும் உள்ளது. நுழைவு வாயிலின் நேர் எதிரில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. சுகமுனிவர் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் எடுத்த கோவில் இது என்கிறது புராணம்.

    இங்கு வழிபட விருப்பங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். குறிப்பாக பெண்கள் திருமணத்துக்காக வேண்டிக் கொண்டு தங்கம் காணிக்கை செய்வது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது.
    சங்கரன்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள்.
    அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கன், பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும் சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின் சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.

    அன்னை என்ன செய்வாள்? இருவரும் ஒருவர்தான் என்பதை நிரூபிக்க அந்த சிவனிடமே வரம் கேட்டாள். சிவபெருமானும் மனமுவந்து, பொதிகை மலைப் பகுதியில் புன்னை விருட்சம் உள்ள சங்கரன்கோவிலில் பலர் தவம் இயற்றுவர். அங்கு நீயும் தவம் செய்தால், நீர் விரும்பிய திருவுருவில் காட்சி தருவேன்” என்றார்.

    பார்வதியும் புன்னைவனத்துக்கு சென்றாள். சங்கரன் கோவிலில் சிவனை நோக்கி உமாதேவியார் தவமியற்றினார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப் பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவியார் உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார்.

    ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம் கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம் துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார்.

    ‘இத்திருக்கோலத்தை மறைத்து உம்முடைய திருஉருவைக் கொள்ள வேண்டும்‘ என அம்பாள் பிரார்த்தித்தாள். ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன் எழுந்தருளி, அங்கேயே தேவியருடன் தங்கினார்.

    சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர லிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்.

    ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு. மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். இக்கோவிலில் உள்ள புற்றுமண் வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் பலன் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
    ×