search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் அமல யோகம் ஏற்படுகிறது.
    ஜோதிட சாஸ்திரம் வளர்பிறை சந்திரன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய நன்மை தரும் சுபக்கிரகங்களுடன் தொடர்புடைய அமல யோகம் பற்றி குறிப்பிட்டுள்ளது. ஒருவரது சுய ஜாதகத்தில் சந்திரன் நின்ற வீட்டிற்கு (அதாவது ராசி) பத்தாவது இடத்தில் குரு அல்லது சுக்ரன் அமர்ந்திருக்கும் நிலையில் அமல யோகம் ஏற்படுகிறது.

    அதேபோல லக்னத்துக்குப் பத்தாம் இடத்தில் அந்த சுபக் கிரகங்கள் இருந்தாலும் அமல யோகம் உருவாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் அழகிய முகத்தோற்றமும், நல்ல உடல் அமைப்பும் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றல் மற்றும் இரக்க குணம் கொண்டவர் களாக இருப்பதுடன், பெற்ற தாயின் மீது அதிக பாசம் உள்ளவர் களாகவும் இருப்பார்கள்.

    கலைகளின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ஒரு சில கலைகளை சுயமாகவே கற்று அதில் தேர்ச்சியும் அடைவார்கள். ஜோதிடம் மற்றும் அமானுஷ்யம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பெரும் லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றும் திறன் இவர்களுக்கு இருக்கும்.

    வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். மக்களிடம் மதிப்பு பெற்றவர்கள் என்பதால் அரசியலில் பெரும் பதவிகளை அடையும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. ஆன்மிக பணிகளில் விரும்பி ஈடுபடுவதுடன், பல கோவில்களை புனர் நிர்மாணம் செய்து, அவற்றிற்கு கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் இவர்களுக்கு கிடைக்கும்.
    கிருஷ்ணரால் சீராட்டப்பெற்ற பலராமரை, பலத்தின் கடவுளாகவும், யதுகுலம் எனப்படும் யாதவ குலத்தை காப்பவராகவும் எண்ணி வழிபடுகின்றனர்.
    கிருஷ்ணரால் சீராட்டப்பெற்ற பலராமரை, பலத்தின் கடவுளாகவும், யதுகுலம் எனப்படும் யாதவ குலத்தை காப்பவராகவும் எண்ணி வழிபடுகின்றனர். பலராமரின் சரிதம் மதுராவைச் சுற்றி நிகழ்ந்ததால் மதுராவில் தொடங்கிய வழிபாடு, படிப்படியாக இந்தியா முழுவதும் பரவியது.

    புகழ்பெற்ற பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் கண்ணன், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய உடன்பிறப்புகளே மூல மூர்த்திகளாக இருந்து அருள்பாலிக்கிறார்கள். வட இந்தியாவில் பல இடங்களில் உள்ள கிருஷ்ணர் ஆலயங்களில் பலராமருக்கான சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. மதுராவிலும் ஒடிசாவில் கேன்டாபாரா என்னும் இடத்தில் பலராமருக்கு தனிக்கோவில் ஒன்று இருக்கிறது.

    தமிழ்நாட்டில் நாச்சியார்கோவில் சீனுவாசபெருமாள் கோவிலில் சங்கர்ஷனர் என்ற பெயருடன், கருவறையில் இருந்தபடி பலராமர் அருள்பாலிக்கிறார்.
    சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்ட ராமர் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    கிஷ்கிந்தையை ஆட்சி செய்து வந்த வானர அரசன் வாலியின் சகோதரன் சுக்ரீவன். ஒருமுறை வாலி, அசுரன் துன்துபி என்பவனோடு சண்டையிட்டான். ஒரு குகைக்குள் சென்ற அந்த அசுரனை பின் தொடர்ந்து சென்றான் வாலி. அப்போது வெளியே தம்பி சுக்ரீவனை காவலுக்கு வைத்தான். நீண்ட நாள் ஆகியும் வாலி வெளியில் வரவில்லை.

    அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.

    பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை தேரோட்டம், 18-ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.

    கிராம தேவதை வழிபாடு என்பது, இன்றைய காலகட்டத்திலும் மக்களின் நம்பிக்கை சார்ந்த நெறிமுறையாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக தமிழக மண்ணில் அந்த வழிபாட்டு முறைகள் ஆழமாக பதிந்துள்ளதை, நகர்ப்புற சாலைகளில் உள்ள கோவில்கள் மூலமாக நாம் உணர முடியும். அவை, வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக மட்டும் இல்லாமல், பலரது வாழ்வில் அவற்றின் வழிபாடுகள் ஒரு அங்கமாகவும் மாறி இருக்கின்றன.

    கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம். அதாவது, தென்னகத்தில் சிருங்கேரி பீடத்தை ஸ்தாபனம் செய்த அவர், சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கான வழிபாட்டு நியமங்களையும் அமைத்துக்கொடுத்தார்.

    வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். அனுமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறாள். ஆனாலும் அவளுடன் சண்டையிட்டு வென்ற பின்னரே, அனுமனால் இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இந்தக் கதை நமது இந்திய கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தேவதை பற்றிய அடிப்படை தகவலை அளிக்கிறது.

    அதாவது, ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடிக்கு, எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வழிபாடுகள் மற்றும் பலி பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இன்றைய நிலையிலும் ஊருக்கு மத்தியில் உள்ள கோவில் திருவிழா சமயத்தில், அப்பகுதியில் உள்ள கிராம தேவதைக்கு என்று தனிப்பட்ட பலி பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றின் உத்தரவு கேட்டு பின்னர் ஊரில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    கிராம தேவதைகளில் வீரபத்திரர் முக்கியமான இடத்தில் உள்ளார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில், அவருக்கு ஆகம முறையில் பூஜைகள் செய்யப்பட்டன. கிராம தேவதையான முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம்.

    தமிழகத்தில் பரவலாக இருக்கும் கிராம தேவதை வழிபாட்டில் மாரியம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அன்னை பாம்புப் புற்றில் இருந்து வெளியானவள். மழையைப் பொழிய வைப்பவள், நோய்களை தீர்ப்பவள் என்ற ரீதியில் தொடக்க காலங்களில் மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அன்னை பார்வதியின் அவதாரமாக ஏற்கப்பட்டு, ஆகம முறையிலான பூஜைகள் செய்யப்பட்டன. சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டை ஸ்ரீஆதி மொட்டையம்மன் கோவில், முன்னர் கிராம ஆலயமாக இருந்தது. அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில் ஆகிய அனைத்தும், முன்காலத்தில் கிராம தேவதைகளாக இருந்து, பிரதான ஆலயங்களாக வளர்ச்சி அடைந்தவை.

    இன்று பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழும் பலவும், கிராம ஆலயங்களாக இருந்து, காலப்போக்கில் பூஜைகள் விரிவாக செய்யப்பட்டு பிரதான ஆலயங்களாக மாறி இருக்கின்றன.

    பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரம் என்பதும், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரம் என்பதும் கவனிக்கத்தக்கது.

    இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு, அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன. அந்த சக்திகளின் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான், மக்கள் நிம்மதியாக அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்கள்.
    ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் `மங்களன்’ என்ற செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதால் `ருச்சக யோகம்’ ஏற்படுகிறது.
    ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் `மங்களன்’ என்ற செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைவதால் `ருச்சக யோகம்’ ஏற்படுகிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பிரதான காரகத்துவமான பூமி யோகம் இயற்கையாகவே அமைந்திருக்கும். பூமி அல்லது நிலம் மூலம் பல்வேறு லாபங்கள் ஏற்படும். இவர்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பார்கள். ஆன்மிகம் மற்றும் தெய்வ நம்பிக்கையில் அசையாத உறுதி கொண்டவர்கள். இவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும்.

    செவ்வாய் கிரகம், வீரம் மற்றும் ரத்தம் ஆகியவற்றுக்கும் காரகன் என்ற நிலையில் மன தைரியத்திற்கும், அண்ணன்-தம்பிகள், சகோதர-சகோதரிகள் பாசம் ஆகியவற்றுக்கு இந்த அமைப்பு அவசியம். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள். ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

    யாரைப்பற்றியும் அஞ்சாமல் கேள்வி கேட்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். உடன் பிறந்த சகோதரர் மற்றும் பங்காளிகள் ஆகியோரது ஆதரவு பக்கபலமாக இருக்கும். மருத்துவத் துறையில் நற்பெயர் எடுப்பதற்கு ருச்சக யோகம் பெரிதும் துணையாக இருக்கும்.
    சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று தெரிந்தும் அவனை திருமணம் செய்து கொண்ட சாவித்ரி எமதர்மனிடம் இருந்து சத்யவான் உயிரை எப்படி மீட்டெடுத்தாள் என்பதை பார்க்கலாம்.
    விதிப்பயன் காரணமாக சத்யவான் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, பெற்றோருடன் காட்டில் வசித்து வந்தான். அவனை வனத்தில் சந்தித்த இளவரசியான சாவித்ரி, காதல் வயப்பட்டாள். அவனையே திருமணம் செய்து கொள்ள எண்ணினாள். நாரதர், “சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன். அவனை திருமணம் செய்து கொண்டு என்ன பயன்” என்றார். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சாவித்ரி, தனது தந்தையை தொடர்ந்து வற்புறுத்தி சத்யவானையே திருமணம் செய்து கொண்டாள். திருமணத்திற்கு பிறகு சாவித்ரி சத்யவானுடன் காட்டிலேயே வசித்து வந்தாள்.

    ஒரு நாள் சத்யவானின் ஆயுள் காலம் முடிவடையும் நேரம் வந்தது. எமதர்மன் அங்கு வந்து, சத்யவானின் உயிரைப் பறித்துச் சென்றான். இதையடுத்து சத்யவான் உயிரற்ற உடலாக தரையில் விழுந்தான். சாவித்ரி தொடர்ச்சியாக அம்மனை நினைத்து விரதம் இருப்பவள் என்பதால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தென்பட்டார். தன்னுடைய கணவனின் உயிரை பறித்துச் செல்லும் எமதர்மனை, சாவித்ரி பின்தொடர்ந்தாள். எமன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவள் சத்யவான் இன்றி திரும்பிச் செல்வதாக இல்லை.

    “சத்யவானின் உயிரைத் தவிர வேறு எந்த வரமாவது கேள்” என்று எமதர்மன் கூறியதும், சாவித்ரி சமயோசிதமாக செயல்பட்டு ஒரு வரத்தைக் கேட்டாள். அதாவது “என் கணவரின் மூலம் நான் 100 பிள்ளைகள் பெற வேண்டும்” என்று கேட்டாள். எமனும் யோசிக்காது, “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார். பின்னர்தான் கொடுத்த வரத்தின் பின் விளைவை எமதர்மன் சிந்தித்தார்.

    இருப்பினும் சாவித்ரியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த எமதர்மன், சத்யவானின் உயிரை அவளுக்கு திரும்பிக் கொடுத்தார். எம தர்மனின் ஆசியுடன் சத்யவான்-சாவித்ரி தம்பதியினர் 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
    உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு.

    உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு. பல சிறப்புகள் நிறைந்த சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்தால் நமக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

    சித்திரை முதல் நாளில் நாம் குளித்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்துகொண்டு வீடு வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும். அந்த அரிசி மானிவை சிறு எறும்புகள் உண்பது நமக்கு நன்மையை தரும். அதன் பிறகு வீட்டு வாசல்படியில் மஞ்சள் குங்குமம் இடவேண்டும். மஞ்சள் குங்குமமானது கிருமி நாசினியாக மட்டும் இல்லாமல் நமது வீட்டினுள் துர் சக்திகளை நுழைய விடாமல் தடுக்கிறது.

    அதன் பிறகு வீட்டில் விளக்கேற்றி தமிழ் கடவுள் முருகனை போற்றி பூஜை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை படிக்கலாம். இந்த ஆண்டு முழுக்க எல்லா விதமான நற்பலன்களையும் தந்தருள முருகப்பெருமானிடம் மனமுருகி வேண்டலாம். முடிந்தால் முருகன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்யலாம்.

    செய்ய வேண்டிய பரிகாரம்: சித்திரம் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே ஆகையால் விசிறி, மோர், கூழ் போன்றவற்றை ஏழை எளியோருக்கு இன்று தானம் செய்வது நமக்கு நல்ல பலன்களை தரும். வெய்யிலின் தாக்கத்தில் இருக்கும் ஏழைகளுக்கு எப்படி நாம் கொடும்கோடும் பொருளும் உணவும் குளிர்ச்சியை தருகிறதோ அது போல நமது வாழ்வும் ஆண்டு முழுவதும் எந்த வித சங்கடங்களும் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை.
    முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.
    ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது பழமொழி. ஆரோக்கியத்தைச் சீராக்குவது சுக்கு. அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது சுப்ரமணியர் வழிபாடு. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

    சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்

    கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்

    சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவன்

    சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்

    காங்கேயன் - கங்கையில் வளர்ந்தவன்

    மயில்வாகனன் - மயிலை வாகனமாகக் கொண்டவன்

    சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்

    சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்

    வேலவன் - வேலைக் கையில் கொண்டவன்
    அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அன்னை ராஜ மாதங்கியை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    கலைகளில் தேர்ச்சி பெறவும், பதவி உயர்வு பெறவும், குரல் வளம் பெறவும் மாதங்கி தேவியை வணங்கலாம். நவ ஆவரண பூஜையும், குங்கும அபிஷேகமும் இவளுக்கு பிடித்தமானது. மதுரை மீனாட்சி, ராஜ மாதங்கியின் அம்சம் என்பதால், அவளை வணங்குவதே ராஜ சியாமளாவை வணங்குவது போல் ஆகும்.

    சியாமளா நவரத்தின மாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி சகஸ்ர நாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹிருதயம், ராஜ மாதங்கி மந்திரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், சியாமளா சகஸ்ர நாமம் போன்ற பல துதிகள் அன்னையின் புகழை போற்றுகின்றன.

    அனைவரும் கலைகளில் தேர்ச்சி பெறவும், செல்வ வளம் பெறவும் அவதரித்தவள் அன்னை ராஜ மாதங்கி. அவளை வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து வணங்கினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    புராணங்கள் மற்றும் இதிகாச காலங்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் தெய்வீக அம்சம் பொருந்திய பொருள் ருத்ராட்சம். இது சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
    ஒருமுறை திரிபுரா என்ற அசுரனால், தேவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளானார்கள். மிகவும் மனம் வருந்திய தேவர்கள், அசுரனிடம் இருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானை வேண்டினர். அதனைக் கேட்டு மனம் இரங்கிய சிவபெருமான், அசுரனை எவ்வாறு அழிப்பது என்ற யோசனையில் தவத்தில் அமர்ந்தார்.

    நீண்டகாலம் தவத்தில் இருந்த ஈசன், கண் திறந்து பார்த்தார். அப்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிப்பட்டு பூமியில் விழுந்தது. அவரது கண்ணீர் துளிகள் விழுந்த இடத்தில் இருந்து முளைத்தவைதான் ருத்ராட்ச மரங்கள்.
    பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
    கொடைக்கானல் நகர் டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
    ×