search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95494"

    திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.
    திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள காவல்காரபாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை முதலே அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சந்தனகருப்பு, பேச்சியம்மன், இருளப்பன், மதுரைவீரன், வேட்டைக்கருப்பு, காளன், காளகண்டி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    இதனையடுத்து கோவில் பூசாரி சந்தனகருப்பு சாமியாடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மதுரைவீரன், சந்தனகருப்பு, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அடைசல் பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோவில் தை பெருந்தேர் விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

    12-ந்தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு நினைத்ததை முடிக்கும் விநாயகருக்கும், ஸ்ரீ பூதநாதருக்கும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை 7.45 முதல் 8.45 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அன்னதானமும், மாலை 6 மணிக்கு மங்கள இசையும், 7 மணிக்கு பக்திமெல்லிசை விருந்தும், இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பூங்கோவில் வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் பூஜையும், சுவாமி வாகனம் உலாவருதல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். 9-ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் திருத்தேர்களில் ஸ்ரீவிநாயகரையும்,

    சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5 மணிக்கு சமய சொற்பொழிவு, 6 மணிக்கு திருப்பணி மன்றத்தாரின் நன்றி அறிவிப்பு, இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசை விருந்து, 9 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சப்தா வர்ணம் நடைபெறும்.

    10-ம் திருவிழாவான திங்கள் கிழமை காலை 10 மணிக்கு சுவாமிக்கும் அம் பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6 மணிக்கு ஆறாட்டு வைபோக மும் இரவு 7 மணிக்கு சமூக நாடகமும், இரவு 10 மணிக்கு தெப்போற்சவமும் நடை பெறும்.

    இரவு 12 மணிக்கு ஸ்ரீ ஆங்கார வல்லி சப்தா வர்ணம் நடைபெறும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பணி மன்ற தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் பாண்டியன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர்கள் வேலப்பன், சண்முகம், கவுரவ தலைவர் அருணாசலம் பிள்ளை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    கருங்கல் அருகே உள்ள பாலூர் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா மற்றும் 702 திருவிளக்கு வழிபாடு, இந்து சமய மாநாடு நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
    கருங்கல் அருகே உள்ள பாலூர் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா மற்றும் 702 திருவிளக்கு வழிபாடு, இந்து சமய மாநாடு நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாள் மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை, உச்ச பூஜை, தீபாராதனை, அன்னதானம், சிறப்பு பூஜை, இந்து சமய மாநாடு, பரிசு வழங்கல், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 2- நாள் அபிஷேகம், அர்ச்சனை, பண்பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள், உச்ச பூஜை, தீபாராதனை, அன்னதானம், சிறப்பு பூஜை, இன்னிசை விருந்து நடக்கிறது.

    3-ம் நாள் இரவு 702 திருவிளக்கு பூஜையும், 4-ம் நாள் மாலை நாதஸ்வர கச்சேரி, அம்மன் பவனி, வில்லிசை, அலங்கார மகுட இசையும், 5-ம் நாள் கும்ப ஊர்வலம், பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராட்டு, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜையும், அர்ச்சனையும், தீபாராதனையும், மதியம் மற்றும் இரவு அன்னதானமும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சுடர்சிங், செயலாளர் பால்துரை ஆகியோர் தலைமையில் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தாயார் உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில், ஆண்டு தோறும் தாயார் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செங்கமல தாயாருக்கு உற்சவம் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை செங்கமல தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினசரி செங்கமல தாயாருக்கு காலையில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படும். பின்னர் மாலையில் சாமி வீதி உலா நடைபெறும். இதில் வருகிற 7-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தாயார் உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும். எனவே இந்த நாளில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி தேவநாத சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மார்கழி மாத பூஜையும் நடக்கிறது. பின்னர் காலை 5.30 மணியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

    புத்தாண்டு வழிபாட்டிற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவில் சுற்றிலும் மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து, பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை அருகே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது.

    இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று (வெள்ளிக்கிழமை) திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலாவும், இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் நெல்லை சந்திப்பு மேலவீரராகவபுரம் சொக்கநாதர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, திருவெம்பாவை பாராயணம், நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. 23-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், காலை 7.30 மணிக்கு நடராஜர் திருவீதி உலாவும், 10.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. 
    கோவை பூசாரிபாளையத்தில் உள்ள அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை பூசாரிப்பாளையத்தை அடுத்த பனைமரத்தூர் என்ற இடத்தில் பழமையான அடைக்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாட்டையடி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல், பிடிமண் எடுத்து வருதல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக் கொண்டு அம்மனை வழிபடும் சாட்டையடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தங்களின் உடம்பில் சாட்டையால் அடித்து அம்மனை வழிபட்டனர்.

    அதன் பின்னர் அங்குள்ள ஒரு மைதானத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அம்மன் திருவீதி உலா, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு அபிஷேக பூஜை ஆகியவற்றுடன் திருவிழா முடிவடைகிறது.

    இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    இந்த கோவில் 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மழை நன்றாக பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி பல தலைமுறையாக சாட்டையால் அடித்து அம்மனை வழிபடும் வழக்கத் தை கொண்டு உள்ளனர். அதை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்த வழிபாட்டின்போது 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்து அம்மனை வழிபடுகிறார்கள்.

    இதற்காக 8 நாட்கள் விரதம் இருந்த பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் கள். சாட்டையால் தங்களது உடம்பில் அடிக்கும்போது காயங்கள் ஏற்பட்டாலும் வலிப்பது இல்லை. அந்த காயங்க ளுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது கிடையாது. திருநீறு மட்டும் பூசுவார்கள். அடுத்த நாளே காயங்கள் மறைந்து விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராகு தலம் நாகநாதர் கோவில் உள்ளது. இந்திரன், சூரியன் வழிபட்டு பேறு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை கடைஞாயிறு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை கொடி மரத்து சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளை கேவில் தலைமை அர்ச்சகர் நாகராஜகுருக்கள், அர்ச்சகர்கள் ஸ்ரீதரன், உமாபதி, சங்கர், சரவணன், செல்லப்பா ஆகியோர் நடத்தினர். பின்னர் பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனையும், 45 அடி உயர பிரமாண்ட மாலையும் அணிவிக்கப்பட்டு

    கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 6-ந் தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாணம், 8-ந் தேதி(சனிக்கிழமை) தேரோட்டமும், 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூர்ய புஷ்கரணியில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று கோவில் குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், மேலாளர் ராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #Thiruvannamalaitemple

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத்திருவிழா அன்று பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 16 தற்காலிக பஸ் நிலையங்களில் 2,420 பஸ்கள் நிற்க வைக்கலாம். 2,650 சிறப்பு பஸ்கள், 6,600 நடைகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 59 தொடர் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தென்னக ரெயில்வே மூலம் 14 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடைசி நேரத்தில் பயணிகள் நெரிசல் தவிர்க்க விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்கு வெளியே 70 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், உள்ளே 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    அன்னதானம் 7 இடங்களில் மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் 8 குழுக்களாக உணவு தரம் குறித்து சோதனை மேற்கொள்வார்கள். ஆவின் பாலகம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பரணி தீபத்திற்கு 2,500 பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான துணிப்பை, சணல் பை போன்ற பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதன்படி, 72 வெள்ளி நாணயங்களும், 2 கிராம் எடையுள்ள 6 தங்க நாணயங்களும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thiruvannamalaitemple

    தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் கோவிலில் நடந்த சாணியடி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ளது கும்டாபுரம் மலைக்கிராமம். இங்கு பீரேஸ்வரர் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சாணியடி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த 3-வது நாள் இந்த சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கும்டாபுரம் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் மாடுகளின் சாணத்தை சேகரித்து கோவிலின் பின்னால் குவித்து வைத்தனர். நேற்று காலை கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    அதைத்தொடர்ந்து சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஊர்க்குளத்துக்கு பூசாரி தலைமையில் பக்தர்கள் சென்றனர். அங்கிருந்து ஒரு கழுதை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து கோவிலுக்கு பின்புறம் சென்ற பூசாரி, அங்கு குவிக்கப்பட்டு இருந்த சாணத்துக்கும் சிறப்பு பூஜை செய்தார்.

    அதைத்தொடர்ந்து சாணியடி திருவிழா தொடங்கியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குவித்து வைத்திருந்த சாணியை கைகளில் எடுத்து உருட்டி சிறு உருண்டைகளாக செய்து ஒருவர் மற்றவர் மீது வீசினார்கள். குவித்திருந்த சாணம் முடியும் வரை இவ்வாறு சாணியை அடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். அப்போது கூடி இருந்த பெண்கள் கைகளை தட்டி சாணி எறியும் பக்தர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்னர் பக்தர்கள் குளத்தில் நீராடிவிட்டு மீண்டும் கோவிலுக்கு வந்து பீரேஸ்வர சாமியை வழிபட்டனர்.

    இந்த விழாவில் கும்டாபுரம் மட்டுமின்றி தாளவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் ஏராளமாக பங்கேற்று சாணிஅடித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். சாணியடி விழா முடிந்ததும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சாணிகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் சேகரித்து தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்றனர்.

    விழாவையொட்டி கும்டாபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டு, மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடியது.
    கேரளா மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    கேரள மாநிலம் ஹரிப்பாடு, மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு இந்த விழா மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் விழாவாக விளங்கியது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலில் ‘உருளி கவிழ்த்தல்‘ வழிபாடு நடத்தினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மேலும், இங்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடத்தினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாழ்ந்த இந்த கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா, மகா தீப காட்சிகள், மோகினியாட்டம் போன்றவை நடைபெறும்.

    நாளை (புதன்கிழமை) நாகராஜாவிற்கும், சர்ப்பயக்‌ஷியம்மாவுக்கும் திருவாபரணம் சார்த்தி நிவேத்யம் நடத்தப்படும். விழா இறுதி நாளான நாளை மறுநாள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில், சங்கீத கச்சேரி, திருவாதிரைக்களி போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி அருகே திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை பொள்ளாள்சி அருகே உள்ளது மீனாட்சிபுரம். இங்குள்ள கேரள மாநிலம் நெடும்பாறையை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18), நிதிஷ் (20). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை அருகில் நடந்த கோவில் விழாவுக்கு சென்றனர்.

    அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதை கவனித்த மீனாட்சிபுரம் இன்ஸ்பெக்டர் வினோத் வாலிபர்களை பிடித்து கண்டித்தார். இது தவிர அவர்களை ஜீப்பில் ஏற்றி அருகில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்துக்சென்று மொட்டை அடிக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்கு பயந்த வாலிபர்கள் எதுவும் பேசாமல் இருந்தனர்.

    இன்ஸ்பெக்டர் வினோத் சென்றதும் வாலிபர்கள் பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு தேபெஸ்குமார் பெகராவிடம் புகார் அளித்தனர். இது குறித்து உடனே விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார்.

    உடனடியாக வாலிபர்களை வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த இன்ஸ்பெக்டர் வினோத் போலீஸ் பயிற்சி கேம்ப்க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அத்துமீறி நடந்தது சட்டவிரோதம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று கூறினர். #tamilnews
    தேவதானப்பட்டி கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் ஸ்ரீகவுமாரியம்மன கோவில் திருவிழா நடந்து வருகிறது. இத்திருவிழாவில் அக்ரகார தெருவை சேர்ந்த காமுத்துரை என்பவர் மைக்செட் போடும் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மைக்செட்டை அணைத்து விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாட்டை போடுமாறு அவரிடம் தகராறு செய்தனர்.

    ஆனால் 10 மணிக்கு மேல் பாட்டு போடக்கூடாது என்று போலீசார் கூறி உள்ளனர் என காமுத்துரை தெரிவித்தார். பாட்டை போடாவிட்டால் உன்னை அடித்தே கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தாக்கி உள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் காமுத்துரை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கோட்டை முருகன் (வயது33), மச்சக்கண்ணன் (40), ஆனந்த் (25), கார்த்திக் (27), முத்துப்பாண்டி (28), திலகர் (27) உள்பட மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×