search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95494"

    மேலூர் அருகே உள்ள 18 சித்தர்கள் கோவில் திருவிழாவுக்கு வாழைப்பழ தார்களை பக்தர்கள் பாரம்பரிய வழக்கப்படி தலைச்சுமையாக கொண்டு சென்றனர்.
    கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து அளிப்பார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்களே சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    அதனால் தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள் கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சாமி தரிசனம் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் மீனாட்சிபுரத்தில் மலை அடிவாரத்தில் 18 சித்தர்கள் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இங்கு பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    அதாவது, கோவிலில் இருந்து மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை வழியாக பாதயாத்திரையாக மேலூருக்கு வந்து சித்தர்களுக்கு படைத்து வழிபட வாழைப்பழ தார்களை வாங்கிச்செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் மேலூருக்கு பாதயாத்திரையாக வந்து வாழைப்பழ தார்களை வாங்கி தலைச்சுமையாக கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, செட்டியார்பட்டி, கிடாரிப்பட்டி, மாங்குளம் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த வாழைப்பழங்கள் சித்தர்களுக்கு இன்று நடைபெறும் திருவிழாவில் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழ பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் திரளாக கலந்துகொள்கிறார்கள். 
    ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டும் விடிய விடிய கொண்டாடிய கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு இறைச்சியுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது.
    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கட்டிடம், கோபுரம் எதுவும் இல்லை. ஆலமரத்து அடியில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி 18 பண்டிகையையொட்டி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த வாரம் 20-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பொங்களாயி அம்மன், காளியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட 3 கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    முதலில் காளியம்மன் மற்றும் கருப்புசாமிக்கு பூஜை செய்யப்பட்டது. அதன் பிறகு பொங்களாயி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் கோவில் நிர்வாகம் சார்பில் முதலில் பெண் ஆடு பலியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வதற்காக கொண்டுவந்திருந்த 154 ஆடுகள் பலியிடப்பட்டன. அதன்பின்னர் பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சியை விடிய விடிய பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைக்கும் பணி நடந்தது. மேலும் அரிசி சாப்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.



    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோருக்கு இறைச்சியுடன் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த சம பந்தி விருந்து பபே முறையில் (பாக்கு மட்டை தட்டு) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்காக கோவிலில் இருந்து 1 கி.மீ.தூரம் வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சமபந்தி விருந்தை வாங்கி சாப்பிட்டனர். இன்று காலை 9 1/2 மணி வரை சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தில் ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

    இதனிடையே திருவிழாவின் போது வேண்டுதலை நிறைவேற்று வதற்காக பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சி மற்றும் சமபந்தி விருந்திற்கு வைக்கப்பட்ட உணவை வீடுகளுக்கு பக்தர்கள் கொண்டு செல்வதில்லை. ஆண்கள் மட்டுமே கொண்டாடும் இந்த திருவிழா மூலம் நோய் நொடி நீங்கி உடல் நலத்துடன் வாழவும், விவசாயம் செழித்து விளங்கவும், குழந்தை பாக்கியம் கிடைத்து, குடும்ப பிரச்சினை இன்றி வாழ முடிகிறது என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூறினர். ஆன்மீகம் என்றால் பெண்களின் ஈடுபாடு அதிகம் இருந்து வருகின்ற இந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த நூதன கோவில் திருவிழா தமிழக அளவில் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மக்கர்த்தாக்கள் எஸ்.சுப்பிரமணியம், டி.ஆனந்த், எம்.சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. விழாவின் 4-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. அம்பாள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைகிறார்.

    10-ம் திருநாளான 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள் விழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    திருவிழாவில் நடனமாடிய தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் அடுத்த நீடாமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பரப்பனமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சூர்யா. அதே ஊரை சேர்ந்தவர் முருகையன். கடந்த 3-ந்தேதி அப்பகுதி மாரியம்மன்கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் சூர்யா நடனமாடி உள்ளார். இதனை முருகையன் தடுத்ததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செந்தில்குமார் வீடு வழியாக முருகையன் சென்றபோது அவரை வழி மறித்த செந்தில்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை-மகனை தேடி வருகிறார்.

    பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர், பேரூர் பட்டீசுவர் கோவிலுக்கு எதிரே உள்ள நாற்று நடவு வயலில் சிவனும், பார்வதியும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினராக வேடம் தரித்து, உலக மக்கள் நன்மை பெற வேண்டி நாற்று நடவு செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன்அடிப்படையில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந்தேதி பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள அம்மன் மண்டபத்தில் தொடங்கியது.

    அப்போது பட்டீசுவரர்-பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கலச பூஜை, அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றன.

    இதனைதொடர்ந்து பேரூர் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் நெல் விதைகள் பதியம் செய்யப்பட்டது. இங்கு 8 நாட்களாக தினசரி மாலை நேரத்தில் நெல் விதைகளுக்கு நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.


    விழாவில் காளைகளை கலப்பையில் பூட்டி நிலத்தை உழுவதை படத்தில் காணலாம்.

    இதனையடுத்து நேற்று மதியம் 2 மாடுகள் கலப்பையில் பூட்டப்பட்டு பொன்னேறு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அந்த மாடுகள் நேராக நாற்று நடவு வயலுக்கு கொண்டு வரப்பட்டு ஏர் உழுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஈஸ்வரர்-அம்மாள் பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் மண்டபத்தில் இருந்த விதை நெல் நாற்றுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பேரூர்கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்றை நட்டார். இதனையடுத்து தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்த ஊர் பட்டக்காரர்கள், பெண்கள், ஆண்கள் பலர் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்றுகளை நட்டனர். நாற்று நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சுவாமி எழுந்தருளி இருந்த மண்டபத்தில் பள்ளுபடலம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. அதன் பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

    இந்த நாற்றுநடும் விழாவை முன்னிட்டு, மதியம் 3 மணிக்கு மேல் இரவு 7 மணிவரை பேரூர் கோவில் வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. 
    மணப்பாறை அருகே நடைபெற்ற சின்னமாரியம்மன் கோவில் திருவிழாவில் மாறுவேடமிட்ட இளைஞர்கள் விளக்குமாறால் அடித்துக் கொண்டனர்.
    மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டி அருகே ராயம்பட்டியில் சின்னமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பால் குடம் எடுத்தல், படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை காலையில் தொடங்கின. இதில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் கிடா வெட்டுதல் நடைபெற்றது. மாலையில் கல்குத்தி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் ஆட்டின் தலையை வெட்டினர். கோவில் அருகே தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டின் தலையை மேலே தூக்கி வீசினர். அதனை இளைஞர்கள் கையில் வைத்திருந்த ஈட்டியால் கீழே விழாமல் குத்திப் பிடித்து, மேலே வீசினர். இவ்வாறு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை வந்தடைந்ததும் கோவிலை சுற்றி வந்த பின் ஆட்டின் தலை கோவில் அருகே ஓரிடத்தில் புதைக்கப்பட்டது.

    பின்னர் நடைபெற்ற படுகளம் திருவிழாவில் இளைஞர்கள் மாறுவேடமிட்டு ஆடிப்பாடி அசத்தினர். திருவிழாவில் கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சில இளைஞர்கள் கணவன் - மனைவி போல் வேடமணிந்து வந்து, விளக்குமாறால் அடித்துக் கொண்டு நடத்திய நிகழ்ச்சி பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இதைத்தொடர்ந்து நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். 
    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

    இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 13-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைத்தனர்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர். கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் 1.30 மணி வரை கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேள-தாளங்கள் முழங்கின. பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே மருளாளி செல்ல அதனை பின்தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் சென்றது. அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு சென்றனர். பலரும் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து சென்றனர். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையானது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
    கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 3 கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மன் சன்னதி எதிரே நட்டு வைத்து பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். 20-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கடந்த 27-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமை) வரை பிரார்த்தனை நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பலர் வெளியிடங்களில் இருந்து கரூருக்கு வந்து அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், கூர்மையான வாளை முதுகில் தைத்துக்கொண்டு வருதல், பறவை காவடி எடுத்தல் என பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை பயபக்தியுடன் செலுத்தி வருகின்றனர்.


    கரூர் மாரியம்மன் கோவிலுக்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    நேற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வெள்ளமென திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதில் பறவை காவடி எடுத்து வந்தவர்களை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். அவர்கள் வாகனத்தின் மேல் கம்பியில் தொங்கியபடி அமராவதி ஆற்றில் இருந்து கோவிலுக்கு வந்தடைந்தனர். இதேபோல் நின்ற நிலையில் உடலில் அலகு குத்தி, பறவை போன்ற காவடியை ஒரு குழுவினர் எடுத்து வந்தனர். திருவிழாவையொட்டி ஜவகர்பஜார் உள்பட வீதியெங்கும் அன்னதானம் மற்றும் நீராகாரங்களை பலர் பக்தர்களுக்கு அளித்து வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல் கோவிலை சுற்றி சுத்த பூஜை நடைபெறும். பின்னர் மாலை 5.15 மணிக்கு கம்பத்தை எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்று பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் விடப்படுகிறது.

    இதையொட்டி அமராவதி ஆற்றங்கரையில் மின்விளக்குகளால் தோரணம் கட்டி தொங்கவிடப்பட்டிருப்பதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டது. மேலும் கம்பம் விடும் ஆற்றுப்பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ராட்டினம் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதால் பொதுமக்கள்அங்கு சென்று கேளிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி பொதுமக்கள் திருவிழா நடத்துகிறார்கள்.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பன்னாங்கொம்பு வெள்ளையம்மாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது45), டெய்லர். இவரது மனைவி லட்சுமி (37). இவர்களின் மூத்த மகள் தனுஜா. மற்றொரு மகள் காவியா (12).

    மூத்த மகள் தனுஜாவிற்கு கடந்த 2007-ம் ஆண்டு 4 வயதான போது, டிசம்பர் மாதம் 23-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மோட்டார் சைக்கிளில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பன்னாங்கொம்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பால்வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தனுஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனுஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    பின்னர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தனுஜாவுக்கான ஈமச்சடங்குகள் நடைபெற்றது. அப்போது வேத மந்திரங்கள் கூறிக்கொண்டிருந்த ஐயர், தனுஜா போல பேசி தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், 3 ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும் அருள் வாக்கு கூறினார்.

    இதேபோல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பழனிச்சாமியின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி தனக்கு கோவில் கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என்று அருள் வந்து கூறியுள்ளார்.

    இதையடுத்து பழனிச்சாமி, தனுஜாவிற்கு சுமார் 1½ அடி உயரத்தில் சிலை வைத்து தனுஜா அம்மன் என்ற கோவில் கட்டி வழிபாடு நடத்த தொடங்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழாவும் நடத்தப்பட்டு வந்தது. இதில் பால்குடம், பூக்குழி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தி பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து பால் குடம் புறப்பட்டு, தனுஜா அம்மன் கோவிலை வந்தடைந்ததும் தனுஜா அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். பின்னர் பொங்கல் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானமும், இரவு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அருள்வாக்கு பல்வேறு விதங்களில் தங்களுக்கு பலித்துள்ளதாக அங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி, பக்தர்கள் வழிபட்டு வருவது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இடையஞ்சாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வர்ணமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் செடல் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செடல் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் காலையில் வர்ணமுத்து மாரியம்மனுக்கும் அங்காள பரமேசுவரி அம்மனுக்கும் விசே‌ஷ அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மேலும் இரவில் தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 4 மணி அளவில் பக்தர்கள் தங்கள் உடலில் மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனை வேண்டி பயபக்தியுடன் விரதம் இருந்த 3 பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தார். மேலும் அந்த பக்தர்கள் மிளகாய் கரைசலை குடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து செடல் (பக்தர்கள் அலகு குத்தி வருதல்) எடுத்து வந்தும், அக்னிகுண்டம் இறங்கி தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சில பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பல்வேறு வாகனங்களையும் இழுத்து வந்தனர். தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இரவில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. 
    வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவில் மகாபரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் நேற்று ஒரு தரப்பினர் வண்டி வேசம் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த வாகனங்கள் மீது கல் வீசி தாக்கப்பட்டது.

    இதனால் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் திருவிழாவில் பங்கேற்ற ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. அவ்வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டதால் குள்ளபுரம், ஏ.வாடிப்பட்டி பகுதியில் இருந்து வத்தலக்குண்டு நகருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தண்ணீர் பந்தலுக்கும் தீ வைத்து எரித்தனர். இதனால் நேற்று சுவாமியின் முத்துப் பல்லக்கு ஊர்வலம் சிறிது நேரத்தில் முடிந்தது. இன்று தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானலில் முதல்வர் பாதுகாப்புக்கு பெரும்பாலான போலீசார் சென்று விட்டதால் குறைந்த அளவு போலீசாரே உள்ளனர். எனவே இன்று மீண்டும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×