search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95579"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனாவுடன் தொற்றால் பாதிக்கப்பட்ட பிற நோயாளிகளின் இறப்பு அதிகரித்து வருவதாக தகவல்.
    • கிராமப்புறங்களில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பெய்ஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவிதை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக சீனாவில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மையில் பதிவான இறப்புகளுடன் அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,237 ஆக உயர்ந்தது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்பட பிற நோயாளிகளின் இறப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இறப்புகளை, சீன சுகாதாரத்துறை, கொரோனா இறப்பு கணக்கில் சேரப்பதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால், அடுத்த மாதம் முதல் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஜனவரி மாதம் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட பயணங்களை அந்நாட்டு மக்கள் மேற்கொள்வார்கள் என்பதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களின் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள் இயக்கி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    • 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின்.
    • ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் வசித்து வந்தார்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தவர் ஜியாங் ஜெமின். 1989-ம் ஆண்டு சீனாவை உலுக்கிய தியான்மென் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜியாங் ஜெமின், உலக அரங்கில் வலிமையான நாடாக்கும் இலக்கு நோக்கி சீனாவை வழி நடத்தினார்.

    அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜியாங் ஜெமின், ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த சூழலில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் 96 வயதான ஜியாங் ஜெமின் நேற்று காலமானதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்ததால் அவர் உயிரிழந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அரசு நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது.

    ஜியாங் ஜெமின், 1989-ல் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தபோது​​சீனா பொருளாதார நவீன மயமாக்கலின் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. 2003-ல் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில், சீனா உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருந்ததும், அந்த நாடு வல்லரசு அந்தஸ்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

    • சீன எல்லை அருகே 100 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி.
    • கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கருத்து.

    பெய்ஜிங்,

    இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. 


    இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளதாவது: எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியானது 1993 மற்றும் 1996ல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.

    மேலும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்க அழ உதவவில்லை. இது குறித்த தனது கவலையை சீனா, இந்தியா தரப்பிற்கு பகிர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    லடாக் எல்லை அருகே சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவுடனான இருதரப்பு உறவு வளர்ச்சி அடைய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதி முக்கியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க சீனா தீவிரம்
    • ஷென்சோ-15 விண்கலம் மூலம் வீரர்கள் பயணம்

    பெய்ஜிங்:

    விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து ரஷியாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது. 


    இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    • சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
    • சீனாவில் 92 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    பீஜிங் :

    சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

    நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

    இப்படி உலகை உலுக்கிய கொரோனாவை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

    ஆனால் சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது.

    சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. தெற்கில் உள்ள குவாங்சோவின் உற்பத்தி மையத்தில் இருந்து வடக்கே பீஜிங் வரையிலான வணிகம் மற்றும் குடியிருப்பு சமூகங்கள் பல்வேறு வகையான முடக்கங்களில் உள்ளன.

    சில இடங்களில் சீன அரசு அனுமதிக்கிற அளவை விட அதிகளவிலான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தலைநகர் பீஜிங்கில் ஒரு கண்காட்சி அரங்கை ஆஸ்பத்திரியாக மாற்றி உள்ளனர். பீஜிங் சர்வதேச கல்விகள் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், யாரும் அங்கு நுழைய தடை போடப்பட்டுள்ளது.

    சீனாவில் 92 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் அவர்களுக்கு ஒரு டோசாவது போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா்.

    பீஜிங் :

    சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மத்திய சீனாவில் உள்ள செங்சாவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அங்கு அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், ஐபோன் தொழிற்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினா். இதில் பலர் காயம் அடைந்தனர். மேலும் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.

    • விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

    பீஜிங் :

    சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்4' ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.
    • லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சீனாவின் ஜெஜியாங் நகரை சேர்ந்தவர் லுா,39. இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு உயிருடன் நண்டுகள் வாங்கி வந்துள்ளார். அப்போது, நண்டு அவரது மகளை கடித்துள்ளது. இதனால் குழந்தை வலியால் அலறி துடித்துள்ளது.

    பின்னர் ஆத்திரம் அடைந்த லுா குழந்தையை கடித்த அந்த நண்டை பிடித்து உயிருடனேயே கடித்து தின்று விழுங்கியுள்ளார்.

    இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு லுாவிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இதற்கு காரணம் தெரியாமல் டாக்டர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், லுா உயிருடன் நண்டு சாப்பிட்டதை அவருடைய மனைவி மருத்துவர்களிடம் கூறினார்.

    இதன்பின், மருத்துவர்கள் லூவிற்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தனர். இதில் லுா மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பின் இதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லுா கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது.
    • மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    பீஜிங் :

    சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன. இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து அந்த மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
    • தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    பீஜிங்

    கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது.

    குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.

    இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் பூஸ்டர் டோசை பெற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊசியின்றி வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நேற்று முதல் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    கொரோனாவுக்கு வாய் வழியாக வழங்கப்படும் உலகின் முதல் தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என ஆரிப் ஆல்வி வாழ்த்து.
    • இது சாமர்த்தியமான பணி திறனுக்கு கிடைத்த பிரகாசமான கவுரவம்.

    இஸ்லாமாபாத்:

    சீன தலைநகர் பிஜீங்கில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டின் முடிவில் ஜி ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 3வது முறையாக அவர் சீனாவின் அதிபராகவும் தேர்வானார்.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானின் உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒட்டு மொத்த பாகிஸ்தான் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். சாமர்த்தியமான பணி திறனுக்கும், சீன மக்களுக்குச் சேவையாற்றுவதில் அசைக்க முடியாத பக்திக்கும் இது அவருக்கு கிடைத்த ஒரு பிரகாசமான கவுரவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
    • அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 2013-ம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராக இருப்பார்.

    இதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு கடந்த 16-ந்தேதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது. இதில் 3-வது முறையாக அதிபராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.

    ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் பேசியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

    மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.

    ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்வாகிறார்.

    7 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட புதிய பொலிட்பீரோ நிலைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.

    கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜின்பிங் உரையாற்றினார். அவர் கூறும்போது, "நமது பலத்தை ஒன்றாக இருந்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார்.

    சீனாவில் ஒருவர் 2 முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018-ம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

    நேற்றைய கூட்டத்தில் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவ், திடீரென்று எழுந்து அதிபர் ஜின்பிங் அருகே சென்றார். உடனே ஹு ஜிண்டாங்கை அதிகாரிகள் வலுகட்டாயமாக அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சி விளக்கம் அளித்தது. அதில் ஹு ஜிண்டாங் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனி அறைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

    Heading

    Content Area

    ×