search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை ஆகிய இருவேளை களிலும் பெருமாள், தாயார் புறப்பாடும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறுகின்றன.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் கோவிலின் உற்சவர் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு புறப்பட்டு வந்தார்.

    நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருவெள்ளறை சென்றடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் வருகிற 31-ந் தேதி காலை நடைபெறுகிறது.
    கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

    8-ம் நாள் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் அதிகாலை 5.45 மணிக்கு தாயார் சன்னதியில் இருந்து கோரதம் என்னும் பங்குனி தேர் மண்டபத்திற்கு புறப்பட்டார். காலை 7.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

    பின்னர் காலை 8.40 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆண்டாள் யானையும், 2 வெள்ளைக்குதிரைகள் முன்னே செல்ல ‘கோவிந்தா’ கோஷம் முழங்க நான்கு சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை அடைந்தது.

    பின்னர் தேரின் முன் பக்தர்கள் சூடம் மற்றும் நெய் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். மேலும் தேரோட்டத்தை காண வெளிநாட்டு பக்தர்களும் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தனர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (சனிக்கிழமை) ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அத்துடன் பங்குனி தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 8-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். பெருமாளையும், தாயாரையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார். பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை சர்வ அலங்காரத்துடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

    பின்னர் சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி இரவு 10.30 மணிக்கு தாயார் சன்னதியை சென்றடைந்தார். இரவு 12 மணி முதல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிவரை திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தாயார் புறப்பட்டு காலை 5.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    சர்வஅலங்காரத்துடன் எழுந்தருளியிருந்த பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையை திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து இரவு முழுக்க தரிசனம் செய்தனர். சேர்த்தி சேவைக்கென தாயார் சன்னதிக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் சன்னதிக்குள் வரவும், வெளியில் செல்லவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    பங்குனிமாதம் நடைபெறும் உற்சவம் என்பதால், வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் சிரமப்படாமலிருக்க இந்த ஆண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், தாயார் சன்னதியில் 12 இடங்களில் குளிர் சாதன வசதிகளும், 30 இடங்களில் மின் விசிறிகளும் வைத்து குளுமையூட்டப்பட்டது. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டும் வழங்கப்பட்டது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில் பெருமாள், தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இன்று இரவு சப்தாவரணமும், நாளை (சனிக்கிழமை) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீரங்கம் ஆலயத்தின் சேர்த்தி வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
    பங்குனி உத்திர நாளில் இந்திய தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. இந்த நாளில் வெங்கடாசலபதியை சேவிப்பதும், புனித நீராடுவதும் சிறப்பானவை.

    அதுமட்டுமா! வைணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் ‘உடையவர்’ என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார். இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ‘சேர்த்தி வைபவம்‘ நடைபெறுவதும் இந்த நாளில்தான். ரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக்கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம்.

    இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது.

    மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் பங்குனி உத்திர நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாகக் காணப்படும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என தமிழகம் முழுக்க இந்த நாளில் பல விசேஷங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும்.

    பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல், வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள். எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. நாளைதேரோட்டம் நடக்கிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவரான நம்பெருமாள் ஸ்ரீரங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து திருச்சி விகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    இதைத்தொடர்ந்து ஆதி பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று (வியாழக் கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று நம்பெருமாள்-தாயார் சமேதராக காட்சி அளிக்கும் சேர்த்தி சேவை நடக்கிறது.

    இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. சித்திரை வீதிகள், உள்திருவீதி வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே தாயார் சன்னதியை காலை 9.30 மணிக்கு பல்லக்கு வந்து சேருகிறது. பின்னர் சமாதானம் கண்டருளி தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு சேருகிறது. மதியம் 12.30 மணி முதல் 1.15 மணிவரை முதல் ஏகாந்தம், 1.30 மணிவரை தளிகை அமுது செய்து புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு பங்குனி உத்திர மண்டபத்தை பல்லக்கு அடைகிறது.

    பின்னர் அங்கிருந்து தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு சேர்த்தி மண்டபத்தை சேருகிறார். அங்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணிவரை நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலிக் கின்றனர். நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவையையொட்டி, இன்று தாயார் மற்றும் பெருமாள் சன்னதிகளில் மூலஸ்தான சேவை கிடையாது. இரவு 10 மணிக்கு சின்னப்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சேருகிறார்.

    இரவு 11.30 மணிக்கு 2-வது ஏகாந்தம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (அதாவது நாளை) திருமஞ்சனமும், அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிவரை 3-வது ஏகாந்தமும் நடக்கிறது. காலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    பங்குனி உத்திர 10-ம் திருநாளான இன்று அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோரதத்திற்கு சென்றடைகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் ரதயாத்திரையும், தொடர்ந்து ‘கோ’ ரதம் என்னும் பங்குனி தேரோட்டமும் நடக்கிறது.

    நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆளும் பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து வருகிறார். 
    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று ஸ்ரீரங்கநாதர் திருமண உற்சவ வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்! ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதி பிரம்மோத்ஸவம் என்கிறார்கள்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அது மட்டுமா? ஸ்ரீராமா னுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத் தான்.

    பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள்.

    அதாவது, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் என்னும் தத்துவத்தை விளக்குகிறது இது.

    இந்த கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நாளில் ஸ்ரீரங்கத்தில் மட்டையடி உத்ஸவம் நடைபெறுகிறது.

    சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்சினை? ஏன் ஊடல்? அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    திருச்சியில் உள்ள உறையூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக்குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தாள். அவளை ரங்கநாதன் திருமணம் செய்தார் இதனால் உறையூரில், கமலவல்லி நாச்சியாருக்கு கோயிலே அமைந்துள்ளது. தாயாரின் திருநட்சத்திரம்-ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார். அவருடன் கமலவல்லி நாச்சியார், சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவார்.

    உறையூரில் நாச்சியாருடன் வீதியுலா வந்து விட்டு, பின்பு ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு வருவார் அரங்கன். ‘பெருமாளைக் காணோமே...’ என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?

    எங்கு சென்று விட்டு வருகிறார் என்பதை அறிந்து, கோபம் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளி யெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறித்தாள்.

    பெருமாள் தன்னைப் பார்க்க வரக் கூடாதென தடை செய்வார் பிராட்டியார் ஸ்ரீரங்கநாதர் சோழ நங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்த விவரத்தை தாயார் அறிந்த கோபம்தான் தடை செய்ததான் காரணம்.

    அதன் பிறகு நிகழ்கிற அவர்களின் உரையாடல் கள்தான், சுவாரஸ்யம்! ‘உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன, உங்களின் நகைகள் கலைந்து கிடக்கின்றன. உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று ரங்கநாதரை அணு அணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக் கணைகளாக்கி தொடுப்பாள் தாயார்.

    ‘என்ன... என்னையே, சந்தேகப்படுகிறாயா? உனக்காக, கடலில் மூழ்கி விடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்து விடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?’ என, தன் மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன் னார் ஸ்ரீஅரங்கன். இந்த பிணக்கை நம்மாழ்வார் தீர்த்து வைத்தார்.

    பெருமாள் தன் தவறை பிரதான பிராட்டியிடம் ஒப்புக் கொள்ள நாச்சியார் பெருமாளை ஏற்றுக் கொண்டார். பிறகு பெருமாளும் தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி என்னும் சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில் பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும் இவ்விழாவை காண் பவர்களுக்கும் திருமணப் பேறு உண்டாகும்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்குளிரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்த பெயர் உண்டானது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த புதன்கிழமை பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கத்திலிருந்து பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள் மேலூர் வழியாக வந்து காவிரி ஆற்றில் இறங்கி நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து பல்லக்கில் எழுந்தருளி அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் அருகிலுள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் தயிர்சாதமும், அரைக்கீரையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. நண்பகல் பூஜை முடிந்ததும், முத்துக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு மாலை வரை சேவை சாதித்தார். பின்னர் மீண்டும் பல்லக்கில் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்தார். 
    ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கருடன் படம் பொறித்த கொடி புறப்பாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்கு தனுர் லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

    விழாவின் 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

    அதைத்தொடர்ந்து 16-ந்் தேதி தங்க கருட வாகனத்திலும், 17-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உற்சவர் பெருமாள் உலா வருகிறார்.

    பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 18-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.

    19-ந் தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 20-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார்.

    21-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-ஸ்ரீரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் (22-ந் தேதி) அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 22-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 23-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழா வருகிற 23-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் மற்றும் உத்தமர்கோவில் சாமிகள் தீர்த்தவாரி கண்டருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலிருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார்.

    பின்னர் நேற்று காலை புறப்பட்டு 10 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 10 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இன்று காலை (புதன்கிழமை) அன்பில் சென்றடைகிறார்.

    மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள், அன்பில் சுந்தர்ராஜபெருமாள் சாமிகளை தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.





    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.









    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெறும். இதையொட்டி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 6-ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார்.

    7-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    9-ம் திருநாளான 16-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் மேலவாசலில் உள்ள தெப்பக்குளஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணைஆணையர் ஜெயராமன், அறங்கா வலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.

    தெப்ப திருவிழாவின் முதல் நாளான 8-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், 9-ந்தேதி மாலை ஹனுமந்தவாகனத்திலும், 10-ந் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 11-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 12-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 13-ந்தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 14-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பதிருவிழா 8-ம் நாளான 15-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 16-ந் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த தலம் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது.
    திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு அழகிய மணவாளன், ரங்கராஜர், நம்பெருமாள் போன்ற பெயர்கள் உள்ளன.

    108 வைணவத் தலங்களில் முதன்மையானது இது. 156 ஏக்கர் பரப்பரளவில் உள்ள இந்த ஆலயம் 11 ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க திருத்தலம் ஆகும். இத்தல மூலவரின் வலது கை திருமுடியை தாங்கிட, இடது கை திருப்பாதத்தை சுட்டிக்காட்ட, தெற்கு திசையான இலங்கையை நோக்கி வீற்றிருக்கிறார்.

    21 கோபுரங்கள் கொண்ட இந்த ஆலயத்தில் இருக்கும் கருட பகவான் மேற்கூரையை முட்டும் அளவுக்கு பெரிய உருவத்துடன் அருள்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 114 நாட்கள் உற்சவங்களும், விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
    ×