search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி"

    பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.
    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பங்குனி மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 68 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தப்படும் ரோப் கார் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை நிறுத்தப்படுகிறது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை மூலமாக மலைக்கோவில் செல்கின்றனர்.

    இதில் விரைவாக செல்வதில் ரோப்கார் முதலிடம் பிடிப்பதால் மலைக்கோவிலுக்கு செல்ல குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரின் முதல் விருப்பமாக அது உள்ளது. இந்த ரோப்கார் சேவை காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுகிறது. இதற்காக மலைக்கோவிலில் காற்றின் வேகத்தை கணக்கிடும் நவீன கருவி உள்ளது.

    காற்று அதிகம் வீசும் நேரங்களில் ரோப்கார் சேவை நிறுத்தப்படும். மேலும் மாதத்திற்கு ஒரு நாள் மற்றும் ஆண்டுக்கு ஒரு மாதம் என பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதை முன்னிட்டு அன்று ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

    ஆனால் மின்இழுவை ரெயில் சேவை வழக்கம்போல் செயல்படும். எனவே மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மின்இழுவை ரெயில், யானைப்பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக புகழ்பெற்ற புண்ணியத்தலமாகவும், 3-ம் படைவீடாகவும் திகழும் பழனி. நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் முருகனை புகழ்ந்து பாடி அவன் அருளை பெற்ற திருத்தலமாகும்.
    உலக புகழ்பெற்ற புண்ணியத்தலமாகவும், 3-ம் படைவீடாகவும் திகழும் பழனி. நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் முருகனை புகழ்ந்து பாடி அவன் அருளை பெற்ற திருத்தலமாகும்.

    மூன்றாம் படைவீடான பழனியில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. ஆன்மிக அன்பர்கள் பழனியை திருவிழா நகரம் என்றும் அழைக்கின்றனர்.

    பன்னிரு கைகளை கொண்டு, அறுமுகங்களோடு சூரனை வென்ற மாவீரன். அசுரர்களை அழித்தபின் இந்திரன் தனது மகள் தெய்வானையை பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர திருநாளில் முருகனுக்கு மணமுடித்து கொடுத்தார். அத்திருமண நாளே மண்ணுலகில் பங்குனி உத்திர திருநாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் தங்கமயில், வெள்ளிக்காமதேனு, வெள்ளியானை, ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களிலும் உலா வருகிறார்.

    பங்குனி உத்திர பெருவிழாவில் பழனியாண்டவர் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும். இதை காண கண் கோடி வேண்டும் என்பர். “பாசி படர்ந்த மலை, பங்குனித்தேர் ஓடும் மலை” என்று பாடும் பெருமை உடையதாய் பழனி மலை விளங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டு முருகனை வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாவ வினைகள் ஒழிந்து நல்வினை பிறக்கும், இல்லம் செல்வமயமாய் செழிக்கும். குழந்தைபேறு சிறக்கும். கல்யாணம் கைக்கூடி வரும்.

    முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தயிர்க்காவடி, பால்காவடி கொண்டு வந்து பங்குனி உத்திர திருநாளில் வழிபட்டால் நம்வீட்டில் தொழில் சிறந்து, செல்வம் பெருகும். வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்க தீர்த்தக் காவடி எடுத்து பழனி ஆண்டவனின் அருளை பெறுங்கள், ஆனந்தம் அடையுங்கள். 
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க நடந்தது.
    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்டவை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவராய நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம் செய்து 6 கலசங்கள் வைத்து கலசபூஜை, மாங்கல்யபூஜை, ஸ்கந்த யாகம், சுப்ரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கான சடங்குகள் நடைபெற்றன.



    பின்னர் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7.10 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’ ‘ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா’ என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனைக்கு பின் ஓதுவார்கள் தேவாரம் பாடினர். பின்னர் கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்ததை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண விழா நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சுந்தரமூர்த்திசிவம், சந்திரமவுலி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் உமா, சவுமிய நாராயண கவராய நாயக்கமார் கட்டளை உறவின்முறை தக்கார் பாலகிருஷ்ணன், தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வெங்கிடுசாமி, நிர்வாகிகள் பரமானந்தம், பரசுராமன் மற்றும் 11 ஊர் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
    பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

    அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.

    எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

    தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்திரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

    திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். 
    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்தும், அலகு குத்தி, முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தினமும் பல்வேறு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. மேலும் தினமும் தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவது வழக்கம்.

    நேற்று வார விடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர். இதனால் அதற்கான நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    குறிப்பாக மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய கவுன்ட்டரையும் தாண்டி மேற்கு கிரிவீதி வரை பக்தர்கள் வரிசையில் நிற்பதை காண முடிந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு செல்லும் பாதைகள், கிரிவீதிகள் என அனைத்து இடங்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் வெயிலால் அவதிப்படுவதை தடுக்க நிழற்பந்தல் போடப்பட்டிருந்தது. 
    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழாவையொட்டி 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. அதையொட்டி முருகனுக்கு அதிகாலை 5.30 மணிக்கு விளாபூஜையில் சந்நியாசி அலங் காரம், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரம், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம் மற்றும் கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. 110 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் வெள்ளை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    பழனி அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது49). இவர் பழனி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு பின்புறம் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு பயன்படும் டப்பாக்கள் குடோன் வைத்துள்ளார்.

    நேற்று அடிவாரம் பகுதியில் தனது உறவினர் இறந்து விட்டதால் அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மெயின்கேட்டை கடந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் கொள்ளை நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 20-ந்தேதி இரவு 6.30 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் நடைபெறுகிறது. 24-ந்தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மலைக்கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால், தீர்த்த காவடியுடன் பக்தர்கள் அமர பந்தல் அமைக்கப்பட உள்ளது. கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களும் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அலுவலக மேலாளர் உமா மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் அன்ன அபிஷேகம் நடந்தது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 7 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு, பழனி நகரின் 33 வார்டுகளை சேர்ந்த பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து பால்குடத்துடன் நேற்று காலை வந்தனர்.

    பின்னர் அங்கு பால்குடத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு மாலை 4 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, அன்ன அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.

    விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்திக், பாண்டிய வேளாளர் சங்க பிரமுகர் பெருமாள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்குவேளாளர் பிரமுகர் மாரிமுத்து, வக்கீல் கல்யாணசுந்தரம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி முருகன் கோவிலில் விடுமுறை தினத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    திருவிழாக்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர். அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று பழனி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பக்தர்களின் வருகையால் மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் கட்டண, கட்டளை தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் மதியவேளையில் வெயில் வாட்டி வதைத்ததால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். எனினும் சில பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது. 
    ×