search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாடை கட்டி, ஒப்பாரி வைத்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டுக்கல் :

    நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு மேல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது.

    அந்த போஸ்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி அச்சிடப்பட்டு, அதன் கீழே பிறப்பு 8-11-2016, இறப்பு 19-05-2023, மத்திய பா.ஜ.க. அரசால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு 19-05-2023 அன்று மாலையில் அகால மரணமடைந்தது.

    இறுதி ஊர்வலம் 20-05-2023 அன்று மாலை 4 மணிக்கு சாலை ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே நேற்று மாலை திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் தங்களது கைகளில் கட்டு, கட்டாக 2 ஆயிரம் மாதிரி ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னர் பாடை கட்டி, அதில் நோட்டுகளை போட்டனர். இதைத்தொடர்ந்து பாடையை சுற்றி ஒப்பாரி வைத்தனர். அப்போது சங்கு ஊதி, மணி அடிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

    அதன்பிறகு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சக்காளை, கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முகமது மீரான், கவுன்சிலர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல்.
    • லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எம்பி பாட்டீல் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    கர்நாடகா அமைச்சரவையில் புதிய மந்திரிகளாக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச். முனியப்பா, முன்னாள் மந்திரிகள் எம்.பி. பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

    பரமேஸ்வர்: இவர் துமகூர் மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியை சேர்ந்தவர். தலித் சமுதாயத்தவர். 7 ஆண்டு வரை கர்நாடகா மாநில தலைவராக செயல்பட்டார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர் தான் மாநில தலைவராக இருந்தார். ஆனால் அந்த தேர்தலில் பரமேஸ்வர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2018-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்த முறையும் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் ஆதரவாளராக இருக்கிறார்.

    கேஎச் முனியப்பா: இவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் 7 முறை எம்பியாக இருந்துள்ளார். மத்திய மந்திரியாக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2019 தேர்தலில் கோலார் பாராளுமன்ற தொகுதியில் தோற்ற நிலையில் இந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

    ராமலிங்க ரெட்டி: இவர் பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் தொகுதியை சேர்ந்தவர். இந்த தொகுதியில் 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்து துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். இவர் கடந்த 2013-2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்து துறை மந்திரியாகவும், பெங்களூர் பொறுப்பு மந்திரியாகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

    கேஜே ஜார்ஜ்: இவர் பெங்களூரு சர்வக்ஞ நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 ல் வெற்றி பெற்ற நிலையில் 4-வது முறையாக இப்போது ஜெயித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இதற்கு முன்பும் சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூரு நகர வளர்ச்சி துறை, உள்துறை மந்திரியாக செயல்பட்டு இருந்தார். இவர் கிறிஸ்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜமீர் அகமது கான்: பெங்களூரு சாம்ராஜ் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஜே.டி.எஸ். கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரசில் இணைந்து 2018-ல் வென்றவர். இந்த முறையும் வெற்றிபெற்று மந்திரி ஆகி உள்ளார்.

    எம்.பி. பாட்டீல்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் எம்பி பாட்டீல். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இவர் விஜயாப்புரா மாவட்டம் பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். இவர் இந்த தொகுதியில் 4-வது முறையாக தொடர்ந்து ஜெயித்துள்ளார். இவர் துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சதீஷ் ஜார்கிகோளி: இவர் பெலகாவி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தலைவராக உள்ளார். இவர் மற்றும் இவரது 3 சகோதரர்கள் அரசியலில் உள்ளனர். இவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் முந்தைய சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை மந்திரியாக இருந்தார்.

    பிரியங்க் கார்கே: இவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம் சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றார். சித்தராபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக இருந்தார். இன்று பதவி ஏற்ற மந்திரி சபையில் இவர் மிகவும் குறைந்த வயது மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர்.
    • சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    பதவியேற்பு விழாவில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கர்நாடக மக்கள் மிகவும் துயரத்தில் இருந்தனர். அது இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டு அன்பு வெற்றி பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் 5 உத்தரவாதங்களை கொடுத்திருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். சொல்வதைச் செய்கிறோம். நாங்கள் அறிவித்த 5 உத்தரவாதங்கள் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தப்போகிறது. சாதி மத பேதமின்றி அனைவரையும் ஒன்று போல நடத்தியதுதான் வெற்றிக்கு காரணம்.

    ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கிரக லட்சுமி திட்டத்தின்கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும். இந்த உத்தரவாதம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்கள் குறித்த அறிவிப்பு, இன்று நடைபெறும் கர்நாடக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது.
    • சசிகாந்த் செந்திலை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி கொடுத்தார். இவர் ஏற்படுத்திய '40 சதவீத கமிஷன் கவர்மெண்ட்' என்ற கோஷம் பாரதிய ஜனதாவுக்கு மரண அடியாகவே மாறிப்போனது. இதுதவிர ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு கேள்வியை இவர் கேட்க வைத்தார்.

    அவை அனைத்துக்கும் பாரதிய ஜனதா தலைவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. பிரசாரத்தை அனைத்து வகையிலும் சமாளித்ததோடு காங்கிரசுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்க செய்ததில் 100 சதவீதம் வெற்றி பெற்றார். இதனால் இவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    அதற்காக சசிகாந்த் செந்திலும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கேற்ப செயல்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியும்' என்று கூறி இருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள்.

    • கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
    • புதிய மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது.

    முதலில் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து மந்திரிகளாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்கரெட்டி, ஜமீர் அகமது ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றார்கள்.

    அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித்தராமையா கர்நாடகாவின் 24-வது முதல்-மந்திரி ஆவார்.

    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,

     தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பதவி ஏற்பு விழா மேடையில் 30 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் மேடை முன் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத்திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. 

    மந்திரி சபை பதவி ஏற்றதை தொடர்ந்து இன்று புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, உளவுத்துறை, பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட ஒதுக்கப்படாத அனைத்து துறைகளையும் முதல்-மந்திரி சித்தராமையா வைத்துக் கொள்வார். டிசிஎம் டி.கே. சிவக்குமார், நீர்வளத்துறையுடன் மற்றொரு முக்கிய துறையையும் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார்.

    பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார்.
    • கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார்.

    கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக ஆட்சி செய்த சித்தராமையாவின் 2-வது இன்னிங்ஸ் இதுவாகும். இதுவரை 2 முறைக்கு மேல் கர்நாடக முதல்-மந்திரியாக பலர் பொறுப்பேற்று உள்ளனர்.

    நீண்ட காலம் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா மற்றும் ஹெக்டே ஆகியோரின் சாதனைகளை சித்தராமையா முறியடிக்க உள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தால் இந்த முறை கர்நாடகாவில் அதிக காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகளில் 3-வது இடத்திற்கு சித்தராமையா முன்னேறுவார். இந்த பட்டியலில் தற்போது சித்தராமையா 5-வது இடத்தில் உள்ளார்.

    நீண்ட காலம் கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் பட்டியலில் தேவராஜ அர்சு முதலிடத்தில் உள்ளார். மாநிலத்தின் 9-வது முதல்வராக இருந்த தேவராஜ அர்சு, 2 முறை தனித்தனியாக 2,790 நாட்கள் மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார்.

    இவருக்கு அடுத்தபடியாக 2,729 நாட்கள் மாநில முதல்வராக பணியாற்றியவர் நிஜலிங்கப்பா. 1,967 நாட்கள் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே, கர்நாடகாவில் அதிக காலம் ஆட்சி செய்தவர்களில் 3-வது இடத்தையும், 1,901 நாட்கள் முதல்வராக இருந்த எடியூரப்பா 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கடந்த முறை சித்தராமையா 1,828 நாட்கள் பதவியில் இருந்தார். எனவே அவர் இந்த பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சித்தராமையாவுக்குப் பிறகு, எஸ்.எம்.கிருஷ்ணா இந்தப் பட்டியலில் இடம்பெற்று 1,691 நாட்கள் முதல்வராக பதவி வகித்துள்ளார். கே.சி.ரெட்டி (1618 நாட்கள்), கெங்கல் ஹனுமந்தையா (1,603 நாட்கள்), பி.டி.ஜட்டி (1,393 நாட்கள்), வீரேந்திர பாட்டீல் (1,337 நாட்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    கடிடல் மஞ்சப்பா 73 நாட்கள் மட்டுமே கர்நாடக முதல்வராக ஆட்சி செய்தார். பாதிக்கும் மேற்பட்ட முதல்-மந்திரிகள் 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆட்சி செய்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 9 லிங்காயத்துகள், 7 ஒக்கலிகர்கள் 3 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 2 பிராமணர்கள் மற்றும் 2 வேறு சமூகத்தினர் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளனர். 

    • எல்லோரையும் விட கட்சி பெரியது.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

    இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

    • எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். இதையொட்டி புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்பு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    புதிய மந்திரிகள் தேர்வு குறித்து ஆலோசிக்க நான், சித்தராமையா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் டெல்லி செல்கிறோம். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து முதல்கட்ட மந்திரிசபை அமைப்பது குறித்து முடிவு எடுக்க உள்ளோம். முதலில் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்போம். புதிய மந்திரிகள் யார் என்பதை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்களை விமர்சிக்க உங்களுக்கு (ஊடகங்கள்) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாட்டோம். யூகங்களுக்கு இடம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

    எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவரும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள். எங்களின் முதல் மந்திரிசபை கூட்டத்தில் 5 உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    எங்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். விழாவில் பங்கேற்க வருகிறவர்கள் விழாவுக்கு சற்று முன்னதாகவே வந்துவிட வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்காமல் இருக்கலாம். அதே போல் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    உத்தரவார திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதாவது விதிக்கப்படுமா?, என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் முடிவு எடுத்ததும் அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஆனால் நாங்கள் சொன்னபடி நடந்து கொள்வோம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    அவர் டெல்லி புறப்படும் முன்பு கன்டீரவா அரங்கத்திற்கு நேரில் வந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.
    • பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    பேச்சுவார்த்தை முடிவில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர்.

    இந்நிலையில், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியுடன் சேர்த்து 8 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, புதிதாக பதவியேற்க உள்ள 8 மந்திரிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரும் இன்று பதவியேற்க உள்ளர். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ்ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்.

    ராமலிங்க ரெட்டி, ஜாமீர் அகமத்கான் ஆகியோரும் கர்நாடகா அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    • ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
    • 2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்.

    புதுடெல்லி

    ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

    இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று வர்ணித்துள்ளார்.

    • குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன்.
    • நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன்.

    ராமநகர் :

    ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் சென்னப்பட்டணாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் குமாரசாமி, நிகில் குமாரசாமி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நிகில் குமாரசாமி பேசியதாவது:-

    என் தந்தை உங்களை நம்பி போட்டியிட்டார். அவரை நீங்கள் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். குமாரசாமி மீது நீங்கள் கொண்டுள்ள அன்பை பார்த்து வியந்தேன். ராமநகர் மாவட்டத்திலேயே இங்கு தான் அதிக விசுவாசிகள் உள்ளனர். நான் தேர்தலில் தோற்றாலும், உங்களுடன் எப்போதும் இருப்பேன். எங்களுக்கு தோல்வி புதிதல்ல. குமாரசாமி கடந்த 2004-ம் ஆண்டு முதல் ராமநகர் தொகுதியில் வெற்றி பெற்று வளர்ச்சி பணிகளை செய்து வந்தார்.

    ஆனால் இந்த முறை மக்கள் வேறு முடிவை எடுத்துவிட்டனர். இதனால் நான் தோல்வி அடைந்துள்ளேன். மண்டியா நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படி தான் நான் தோற்கடிக்கப்பட்டேன். ராமநகர் தொகுதியில் ரூ.3 ஆயிரம் பரிசுக்கூப்பன்களை மக்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்து என்னை தோற்கடித்தார். வருங்காலத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள்.
    • பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் பனங்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சில தினங்களுக்கு முன்பு மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, பனங்கள் இறக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதிப்பது தான். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல தமிழகத்திலும் கள் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்லிவைத்து இருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

    இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். இந்த பனங்கள் அருந்தும் பழக்கம், நம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். இப்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் அந்த பனங்கள்ளை ஒரு ஏழை தொழிலாளி குடிப்பதால், அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆரோக்கியமாக இருப்பார். கள்ளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு பனை தொழிலாளி பனங்கள் இறக்கி விற்பனை செய்யும்போது, அந்த பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். அதனால், நம் தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

    ஆக, பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி உண்டாகும். டாஸ்மாக் மதுவைக் குடித்து, உடல் பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளுக்குச் செல்லும் குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து விடும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டில் இருந்தால், கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. பனம்பால் என்கிற இந்த பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசாங்கமும் முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். நமது முதல்வர் அவர்கள், பனங்கள் இறக்க அனுமதி தந்து, அந்த பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×