search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவ பெருமாள் தினமும் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், கஜ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பாடு கண்டு தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து 8.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் தேரோடும் வீதியில் ஒரு சுற்று சுற்றி வந்து காலை 9.16 மணிக்கு நிலையை அடைந்தது.

    தேரில் எழுந்தருளியுள்ள பெருமாள் ஸ்ரீதேவியுடன், பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உள்ளார்.

    தேர் வீதியை சுற்றி சென்றபோது, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் தேரினை பின்தொடர்ந்து அங்கபிரதட்சணம் செய்தனர். தேரில் பெருமாள் திருவீதி உலா வரும்போது அவரை தரிசனம் செய்து அங்கபிரதட்சணம் செய்வதன் மூலம், நம் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பெற்று வாழலாம் என்பது ஆகமகூற்று ஆகும். இதனையடுத்து மூலவர் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் துடையூர், கிளியநல்லூர், சிறுகாம்பூர், ஆமூர், கோட்டூர், சேந்தமாங்குடி, சென்னக்கரை, குணசீலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரங்கநாதன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. மாலை 5.30 மணிக்கு பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாராதனை நடைபெற்றது. 
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் தேசிகருக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகருக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தையொட்டி 12 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 750-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில் தேசிகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் தேவநாதசுவாமிக்கும், தேசிகருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

    இதனை தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து தேசிகர், அலங்கரித்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேருக்கு கொண்டு வரப்பட்டார். தேரில் அமரவைக்கப்பட்ட தேசிகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் டிராக்டர்களில் தேரின் வடம் கட்டி, இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் தேசிகரை பக்தர்கள் வழிபட்டனர்.

    பிரம்மோற்சவத்தின் 10-ம் நாள் விழாவான இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேசிகர், ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் காட்சி அளிக்கிறார். பின்னர் மதியம் 2 மணிக்கு தேவநாதசுவாமி, ராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் சன்னதிகளுக்கு சென்று தேசிகர் வழிபடுகிறார். பின்னர் இரவில் கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 14-ந் தேதி முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது.

    ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்- வள்ளி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    முன்னதாக சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர் மேலக்கோவில் சென்றனர்.

    10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.

    முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரோட்டமும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரோட்டமும், தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரோட்டமும் நடைபெறும். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் தேர்களை வடம் பிடித்து தேர்களை இழுத்து சென்று வழிபடுவார்கள். இரவில் சுவாமி-அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமிஅம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    9ம் திருநாளான இன்று (7-ந் தேதி) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.

    10ம் திருநாளான நாளை (8-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவில் சுவாமிஅம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின்னர் சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காலை 9.15 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி, சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து மேலக் கோவில் வந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபம் வந்து சேர்ந்தார்.

    8-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்.

    பின்னர் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின்னர் மேலக் கோவில் சேர்கிறார்கள்.

    9-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாளுடன் பல்லக்கில் வீதி உலா வருகிறார். இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதிகளிலும் வலம் வந்து மேலக் கோவில் சேர்கிறார்கள்.

    10-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது. பதினொன்றாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வைகுண்ட சாமி எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது. தலைப்பாகை அணிந்து காவியுடை தரித்த அய்யா வழி பக்தர்கள் ‘அய்யா சிவசிவா அரகரா‘ என்ற பக்தி கோ‌ஷத்திற்கிடையே தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 3 மணிக்கு வடக்கு ரதவீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. மாலை 6 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது.

    இரவு 7 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் தொடர்ந்து, கொடியிறக்கமும் நடைபெறுகிறது. 
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உபகோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
    திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு பூஞ்சப்பரத்திலும், இரவு 7மணிக்கு அம்மன் பூத, சிம்ம, காளை, வேதாள, அன்னம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாட்டுக்கு பின்பு கோவில் சேர்தல் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான இன்று காலை சிம்ம லக்கனத்தில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 4மணிக்கு அம்மனுக்கு சுப்பிரமணியசுவாமி கோவில் நாழிக்கிணறு மண்டகப்படியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அம்மன் சண்முக விலாசத்தில் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர் சேவை ஒளிவழிபாடு ஆகி,எட்டு வீதிகளிலும் பவனி வந்து சவுக்கையில் சேர்க்கை ஒளிவழிபாடு பின்பு கோவில் சேர்தல் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    நெல்லை குறுக்குத்துறை ஆவணி தேர் திருவிழாவை முன்னிட்டு டவுனில் சுப்பிரமணிய சுவாமிக்கு வைர கிரீடம் அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று காலை 6 மணிக்கு ஆறுமுக பெருமானின் உருகு சட்ட சேவை நடைபெற்றது. நேற்று இரவு சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி டவுனுக்கு சென்றார். டவுன் திருப்பணி முக்கில் சுவாமிக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று டவுனில் சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் காட்சி அளிக்கிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 26-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27-ந்தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    புதுவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வீராம் பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    அது போல் இந்த ஆண்டு ஆடிப்பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உபயதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் இரவு சாமி வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சம்பிரதாயப்படி ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்- அமைச்சர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைப்பது வழக்கம்.

    ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கால மானதையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளதையொட்டி தேரோட்டத்தை அமைச் சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அனந்த ராமன் எம்.எல். ஏ., அரியாங் குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மாட வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்- மோர் வழங்கப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவமும், வருகிற 24-ந் தேதி முத்துப்பல்லக்கு விழா வும் நடைபெறுகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


    ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ‘ஆடிப்பூரம்‘ மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    8-ம் திருநாளான நேற்று ஆண்டாள் சூடிக் கொள்வதற்கான மங்கலப் பொருட்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வந்தடைந்தன.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ரேவதி நட்சத்திரத்தின் போதும், மதுரை கள்ளழகருக்கு சித்ரா பவுர்ணமியின் போதும் ஆண்டாள் சூடிக் கொடுத்த மங்கலப் பொருட்கள் அனுப்பப்பட்டு அவை சாமிகளுக்கு சாத்தப்படும். மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் உற்சவருக்கு சாத்தப்பட்டு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன.

    9-ந் திருநாளான இன்று காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வருகிற 16-ந் தேதி ஆண்டாள்-ரங்கமன்னார் திவ்ய தம்பதிக்கு புஷ்ப யாகத்துடன் விழா நிறைவடைகிறது.

    ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழாவையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆடிப்பூர விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×