search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    தலைவாசல் பட்டுதுறை ரோடு அம்மன் நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 31-ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர்.
    தலைவாசல் பட்டுதுறை ரோடு அம்மன் நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 31-ம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அய்யனார், சடையப்ப சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம், 108 பால்குட ஊர்வலம், அக்னிகரகம், பூங்கரக ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது.

    விழாவில் நேற்று வாண வேடிக்கை, மேளதாளம், பம்பை மேளத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர். அப்போது இளைஞர்கள் ஆடிப்பாடி வந்தனர். தேரோட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டறை தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை பூச்சொரிதல் விழாவும், இரவு 7 மணிக்கு மேல் அம்மன் புஷ்பரதத்தில் எழுந்தருளி மலைக்கோட்டையை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கடந்த 14-ந்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், 15-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலை 8 மணிக்கு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அப்போது பக்தர்கள் வழி நெடுக தேங்காய் உடைத்தும், மாவு வைத்தும் வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினர். தேரோட்டத்தின் போது, வெயிலை சமாளிக்க பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் கலர் பொடிகளை பூசி பக்தர்கள் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தேர் மலைக்கோட்டையை சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது.

    வருகிற 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஆற்றுக்கு வேல் புறப்படுதல், அன்று இரவு 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து சப்பாணி கருப்பண்ணசாமியும், மதுரைவீரன் சுவாமியும் குதிரை வாகனத்தில் வீதிஉலா வருதல் நடைபெறும். பின்னர் அன்று இரவு 9 மணிக்கு அபிஷேகமும், சுத்த பூஜையும் நடை பெறும்.

    இதைதொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு பெரிய பூஜையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.
    ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி நூதன முறையில் வழிபட்டனர்.
    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில், நந்தினி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், கட்டீல் அருகே உள்ள அட்டூர் மற்றும் கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை வீசி எறிந்து நூதன முறையில் வழிபட்டு வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் அந்த கிராமங்களில் இருந்து வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் கலந்துகொள்வார்கள். இதில் யாருக்காவது தீக்காயம் ஏற்பட்டால், கோவில் பிரசாதத்தை பூசினால் அது சரியாகி விடும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை துர்கா பரமேஸ்வரி அம்மனின் தேரோட்டம் நடந்தது. முன்னதாக, துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு அட்டூர், கொடத்தூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

    இந்த நூதன வேண்டுதலில் தீப்பந்தங்களை வீசி எறியும் போது யாருக்கும் எந்த தீக்காயமும் ஏற்படாது. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதற்காக பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து, தீப்பந்தங்களை தூக்கி வீசும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

    இதையடுத்து துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேர், அந்த கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து மாலை கோவிலை அடைந்தது. அதன்பின்னர் நேற்று இரவு கோவிலில் வாணவேடிக்கை நடந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விருத்தாசலம் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள கொக்காம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

    இதையொட்டி மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கொக்காம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர். 
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர், திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் ஆகிய தேர்களுக்கு அடுத்து மிகப்பெரிய தேர் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒரு கோவிலான இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெருமாள் சீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 7.10 மணிக்கு கும்பகோணம் க.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், கோவில் செயல் அலுவலர் ஆசைதம்பி மற்றும் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வணங்கினர். தேரோட்டத்தையொட்டி சாரங்கபாணி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து இரவு 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அது போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கோவிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலை, மாலை ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

    திருவிழாவையொட்டி தேவாங்கர் சமூகம் சார்பில் நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு மேள, தாளம் முழங்க கொடி கம்பத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    இதை தொடர்ந்து தேரை அலங்கரிப்பதற்காக முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் ஆர்.சந்திரமதி, அனுஷம் தியேட்டர் உரிமையாளர் யு.எஸ். சஞ்சீவ்சுந்தரம், தேவாங்கர் சமூக நல மன்ற தலைவர் சவுண்டப்பன், செயலாளர் மாணிக்கம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆர்.விவேகானந்தன், மணிகண்டன், கைலாசம், சம்பத்குமார், ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    விழுப்புரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் சூரிய பிரபை, அதிகாரநந்தி சேவை, நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம் ஆகியவற்றில் சாமி வீதிஉலா நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரஹன்நாயகியும், கைலாசநாதரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.

    இந்த தேர், விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. அதன் பிறகு நடந்த தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆய்வாளர் செல்வராஜ், அர்ச்சகர் வைத்தியநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், பிரதோஷ பேரவையினர் செய்திருந்தனர்.
    இடிகரையில் உள்ள பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் இடிகரை கிராமத்தில் பள்ளி கொண்ட அரங்கநாதர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து பெருமாள் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் போன்ற வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் திருக் கல்யாணம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சின்ன தேரில் ஆண்டாள் எழுந்தருளினார். பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளினார். ஆண்டாள் தேர் முன்னால் செல்ல அதை தொடர்ந்து பெருமாள் தேர் சென்றது. தேர் திருவீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே இலவசமாக நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது.

    அதையொட்டி காலை 11 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 1 மணியளவில் மகா தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் தேர் கடாட்சம் எனும் தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து 5 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு சென்றடைதல் நடந்தது. பின்னர் 6 மணியளவில் கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சுவாமியின் பரிவட்டத்தைக்கொண்டு கொடியசைக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது. அதன்பிறகு தீபாராதனை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தங்கத்தேரோட்டம் முடிந்ததும் காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்கள் வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, பகல் 11 மணியில் இருந்து 12 மணிவரை உற்சவர்களுக்கு ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள் நடந்தது.

    வசந்தோற்சவத்தையொட்டி பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் நடக்கும் கருடசேவை (தங்கக்கருட வாகன வீதிஉலா) மற்றும் திருப்பாவாடை சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
    திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேே-்ராட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தேரில் சுவாமி எழுந்தருளினார். மதியம் 3.33 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூவராயன்பாளையம், வால்மாழ்பாளையம், ஈச்சம்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில், திருச்சி புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.டி.சி.சேரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கவுண்டம்பட்டி ஆர்.செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.அன்புசெல்வம், ஈச்சம்பட்டி அ.தி.மு.க. பிரமுகர் பி.தியாகராஜன், ஸ்ரீநம்பியப்பா திருமண மண்டப உரிமையாளர் டி.செல்வம், ஸ்ரீதிருமலை இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் பி.சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பாக அன்னதானம் மற்றும் நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருப்பைஞ்சீலி ஊராட்சி செயலாளர் பி.சிவலிங்கம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மேற்பார்வையில் கோவில் செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள், பணியாளர்கள், செய்து இருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தேர்கால் பார்த்தலும், நடராஜர் புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு முத்து பல்லக்கும், 21-ந் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சபிரகாரம் விழாவும் நடைபெறுகிறது. 22-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வடசேரியில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று 9-வது திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தேரோட்டம் நடந்தது. நேற்று அதிகாலையில் கிருஷ்ணசாமிக்கு பல வகையான காய், கனி கொண்டு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த தேரானது 4 ரத வீதிகளையும் சுற்றி மதியம் 12 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

    தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு மோர், ரஸ்னா ஆகியவை வழங்கப்பட்டன.

    தேரோட்டம் முடிந்த பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவில் சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. விழாவின் இறுதி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், முத்துக்குடை யானை பவனி, 5 மணிக்கு ஆராட்டு பூஜை, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.
    ×