search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.
    பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைமேல் உள்ள முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலின் முன்பு உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பகல் 12.45 மணியளவில் சேவல் கொடியேற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள், படிக்கட்டுகள் வழியாக கைலாசநாதர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் இழுக்க பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேரை அரிச்சந்திர மகாராஜா தனது வேண்டுதல் நிறைவேறியதையொட்டி கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த தேரில் ஏராளமான சிற்பங்கள இருந்த போதிலும் ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்தது போன்று அரிய சிற்பம் இருப்பது தான் விசேஷமாக உள்ளது. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடையாளமாக அந்த சிற்பம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் தராசு பிடித்திருப்பதால் திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைக்கிறார்கள். இத்தகைய பல நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட பெரிய தேரானது, ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி பெருவிழாவின் 14-வது நாளில் கிரிவலப் பாதையை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வலம் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழாவின் தேரோட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் பாரம்பரிய வழக்கப்படி தேர் இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெருங்குடி, பரம்புபட்டி, வலையங்குளம், பெரிய ஆலங்குளம், ஒத்த ஆலங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், தனக்கன்குளம், மேலக்குயில்குடி, கீழக்குயில்குடி, வடிவேல்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கோவில் முதல் ஸ்தானிகர் சாமிநாதன் மற்றும் நாட்டாண்மை கணக்குப்பிள்ளை வைராவி மற்றும் காவல் மிராசுகள் சென்று அங்குள்ள கிராம நாட்டாண்மைகளிடம் திருவிழா அழைப்பிதழ் மற்றும் பணம், வெற்றிலை, பாக்கு வைத்து தேர் இழுக்க வாருங்கள் என்று பாரம்பரிய வழக்கப்படி அழைப்புவிடுத்தனர்.

    இதனையடுத்து கிராம நாட்டாண்மைகள் மூலம் அந்தந்த கிராமங்களில் தேர் இழுக்க வாருங்கள் என்று மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர் இழுக்க வருகை தரும் கிராம மக்களுக்கு தேர் நிலைக்கு வந்ததும் அந்தந்த கிராம நாட்டாண்மை சார்பில் தயிர்சாதம் வழங்கப்படும். மேலும் தேரோட்டம் முடிந்ததும் அன்று மாலை கிராம நாட்டாண்மைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மாலை மரியாதை மற்றும் பரிவட்டம் வழங்கப்படும். இத்தகைய நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவையை அடுத்த பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜைகளும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவமும், வெள்ளை யானை சேவை நடந்தது.

    இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பட்டீசுவரர்- பச்சைநாயகி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடு நடந்தது. மாலை 4 மணியளவில் பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகளார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பின்னர் பச்சை நாயகி, அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    தேரோட்டத்தையொட்டி பேரூர் சின்ன கோவில் வீதியில் முத்துசிற்பி நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சிற்பி ஜெகன், பேரூர் முத்துதாமரை சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பேரூர் தேவேந்திர குல வேளாளர் சமூக மட அறக்கட்டளை சார்பில் பேரூர் பட்டீசுவரர் பெரிய தேருக்கு அணிவிக்கும் புதிய அலங்கார துணி மற்றும் குடைகள் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
    நாமக்கல் நரசிம்மசாமி, அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாமக்கல் நகரின் மையப் பகுதியில், குடவறைக் கோவில்களான நரசிம்ம சாமி, நாமகிரி தாயார் கோவிலும், அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளன. நரசிம்மர் கோவிலின் முன்புறம் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.

    ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்ச நேயர் சாமி தேர்த்திருவீதி உலாவரும் வைபவம் நடைபெறும். இந்த ஆண்டின் திருத்தேர் பெருவிழாவானது, இன்று காலை 8.45 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    14-ந் தேதி முதல் காலை 10 மணிக்கு திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, இரவில், 15 ந் தேதி சிம்ம வாகனம் வீதி உலா, 16-ந் தேதி இரவில் அனுமந்த வாகனம் வீதி உலா, 17-ந் தேதி கருட வாகனம், 18-ந் தேதி சே‌ஷ வாகனம், 19-ந் தேதி யானை வாகனம் வீதியுலா ஆகியன நடைபெற உள்ளன.

    20-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல், திருமாங்கல்ய தாரணம், திருக்கல்யாணத்தில் பக்தர் கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பிக்கும் வகையில், மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங் காரம் உள்ளிட்டவை நடை பெறுகிறது.

    21-ந் தேதி இரவில், குதிரை வாகனம், திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.

    22-ந் தேதியன்று, காலை 8.45 மணிக்கு மேல், 9.15 மணிக்குள் நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாலை 4.30 மணிக்கு மேல் 4.45 மணிக்குள், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் விழாவும் நடைபெறுகிறது. 23-ந் தேதி காலை 10 மணிக்கு மேல், தீர்த்தவாரி மற்றும் சத்தாவரணம், கஜலட்சுமி வாகன வீதியுலா, 24-ந் தேதி வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு, 25-ந் தேதி விடையாற்றி உற்சவம், 26-ந் தேதி புஷ்ப பல்லக்கு, 27-ந் தேதி, நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 28-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் மங்கள இசையுடன் திருத்தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோ ரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் கருடன் படம் பொறித்த கொடி புறப்பாடு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 5.15 மணிக்கு தனுர் லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை அடைந்து திருமஞ்சனம் கண்டருளினார்.

    விழாவின் 2-ம் நாளான இன்று(வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

    அதைத்தொடர்ந்து 16-ந்் தேதி தங்க கருட வாகனத்திலும், 17-ந் தேதி நம்பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உற்சவர் பெருமாள் உலா வருகிறார்.

    பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வருகிற 18-ந் தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையை கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.

    19-ந் தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 20-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம்(பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார்.

    21-ந் தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-ஸ்ரீரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் (22-ந் தேதி) அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 22-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 23-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்விழா வருகிற 23-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகில் அங்காளம்மன் கோவில் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த 6-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 9-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதையடுத்து 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(புதன்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    7-ம் நாள் விழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழை குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரில் எழுந்தருள்வதற்காக அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது எடுத்த படம்.

    தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், வெங்கடேசன், தாசில்தார் செந்தில்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரகாஷ் உள்பட லட்சக்கணக் கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சுகா தாரத்துறையினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் கிடந்த குப்பை களை உடனுக் குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக் கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீ சார் தீவிரமாக கண்காணித் தனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், விழுப் புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகன சுந்தரம், கண் காணிப்பாளர் வேலு, ஆய் வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர். முன்னதாக தேரோட்டத் தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யில் யானை வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    அவதார தின விழாவின் முன் தினமான மார்ச் 3-ந் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் பதியிலிருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பவனி நடைபெறுகிறது.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், உடன்குடி, செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    அதே தினம் காலை 9 மணிக்கு அய்யா வைகுண்டசாமி சிறையில் இருந்த திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி மற்றொரு வாகன பவனி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, மார்த்தாண்டம், வெட்டூர்ணிமடம் வழியாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    அன்று இரவு 9 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. அய்யாவழி கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தன்று அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பு நோக்கி அவதாரதின ஊர்வலம் புறப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியை சென்றடைகிறது. பின்னர் அய்யாவுக்கு பணிவிடை நடக்கிறது. அன்று இரவு சாமிதோப்பில் வாகன பவனி அன்னதர்மம், அய்யா வழி மாநாடு ஆகியவை நடைபெறுகிறது.

    வைகுண்டசாமியின் அவதார தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    கோவை கோனியம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது கோனியம்மன் கோவில். இக் கோவில் மாசி திருத் தேர்திருவிழா கடந்த 19-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங் கியது. அன்று விநாயகர் திருவீதி உலா நடை பெற்றது.

    இன்று (செவ்வாய் கிழமை) இரவு 7.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு அக்னிச்சாட்டு நடக்கிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம் பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் அருளுரை வழங்குகிறார்கள். இரவு 8 மணிக்கு அம்மன் திரு வீதி உலா நடைபெறுகிறது.

    வருகிற 1-ந் தேதி திருவிளக்கு வழிபாடும், 5-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி (புதன் கிழமை)தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், காலை 5 மணிக்கு அம்மன் திருத் தேருக்கு எழுந்த ருளல், பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் பவனி நடைபெறுகிறது.

    தேரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அமைச் சர்கள் எஸ்.பி. வேலுமணி, சேவூர் ராமச் சந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்.

    இதில் ஆதீனங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 8-ந் தேதி தெப்ப திருவிழா, 9-ந் தேதி தீர்த்தவாரி கொடியிறக்கம், 11-ந் தேதி வசந்த விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ், தக்கார், உதவி ஆணையர் விமலா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    தெட்சணத்து துவாரகாபதியில் அவதார தினவிழாவை முன்னிட்டு அலங்கார தேர் பவனியுடன் அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது
    கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரையில் தெட்சணத்து துவாரகாபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் 187-வது அவதார தினவிழா நடக்கிறது.

    இதையொட்டி வருகிற 3-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு பணிவிடையும் உச்சிப் படிப்பும் 1 மணிக்கு அன்ன தர்மமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருநடை திறப் பும் இரவு 7 மணிக்கு அகிலத்திரட்டு ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-ம் நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு திருநடை திறப்பு, உகப்படிப்பு, தாலாட்டு போன்றவை நடக்கிறது. பின்னர் அன்பு கொடி மக்கள் கடலில் புனித நீராடி அய்யாவின் தாரக மந்திரத்தை சொல்லி பதியை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு பணி விடையும் உச்சிப்படிப் பும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 1 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி வாரிக்கரையோரமாக வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 2 மணிக்கு அன்ன தர்மம் நடக்கிறது.

    அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவை யொட்டி புங்கரை பதியில் இருந்து ஜாண்சன் தலைமை யில் வருகிற 3-ந்தேதி மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்ட சாமியின் 187-வது அவதார தினவிழா அலங்கார தேர் பவனியுடன் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்களின் ஊர்வலம் தொடங்குகிறது. அன்று இரவு அந்த ஊர்வலம் கொட் டாரத்தை வந்து அடைகிறது.

    மறுநாள் (4-ந்தேதி) காலை 6 மணிக்கு அந்த ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு பெருமாள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்க புரம், பழத்தோட்டம், விவே கானந்தபுரம், கன்னியா குமரி, கோவளம் வழியாக துவாரகாபதியை சென்று அடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தெட்சணத்து துவாரகா பதி ஸ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் தர்மயுக மக்கள் இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3½ ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கத் தேரின் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3½ ஆண்டுகளாக முடங்கி கிடந்த தங்கத் தேரின் வெள்ளோட்டம் நடந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த தஙகத் தேரை இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இந்த தேர் பழுதானதால் 3½ ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் போனது.

    கிளிகோபுரம் அருகே இரும்பு தகரங்களால் அமைக்கப்பட்ட கொட்ட கையில் முடக்கப்பட்டது. தங்கத் தேரை சீரமைக்க, கோவில் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. அந்த பணி நிறைவு பெற்று நேற்று வெள்ளோட்டம் நடந்தது.

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேர் உட்பிரகாரத்தில் வலம் வந்தது.

    வெள்ளோட்டத்தின் போது தங்கத் தேர் முன்பகுதியில் உள்ள குதிரையின் இடது கால் உடைந்தது. 3½ ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்ட நாளிலேயே குதிரையின் கால் முறிந்தது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    சேதமடைந்ததை உடனடியாக சரி செய்ய நடவடடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடக்கிறது.
    கடவுள்களின் மகாராஜா எனக் கூறப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 96 அடி உயரமுடைய ஆழித் தேரோட்டம் நடைபெறும்.

    இத்திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய கொடியேற்றம் நடைபெற்றது.

    வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஆரூரா தியாகேசா என மனம் உருகி வணங்கிய நிலையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சைவமத சான்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர் தேரோட்டத்தைமுன்னிட்டு முன்னதாக சுப்பிரமணியர், விநாயகர் தேரோட்டமும் இறுதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் ஆகிய 5 தேர்கள் கோயில் வீதிகளில் இழுத்துச் செல்லப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செய்திருந்தார். வருகிற ஏப்ரல் 1-ந்தேதி பிரசித்தி பெற்ற ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது.
    ×