search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேரோட்டம்"

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. அரோகரா பக்தி கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று தைப்பூசம் ஆகும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    நேற்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி இருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பின்னர் தேர் சக்கரங்களுக்கு தீபாராதனையும், தேங்காய் உடைத்தலும் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் குடும்பத்தினர், பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... ஞானதண்டாயுதபாணிக்கு அரோகரா“ என்று விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    திருத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப் பல்லக்கில் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    9-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வீதி உலாவும், இரவு 9 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் ரதவீதி உலாவும், 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி காலை 8.45 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகார தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட நீதிபதி கருப்பையா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் தேர் வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அறநிலையத்துறை மராமத்து என்ஜினீயர் ராஜ்குமார், நாகராஜா கோவில் மேலாளர் ரமேஷ், அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நாஞ்சில் சந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் மதியம் 2 மணிக்கு கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    நாகராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் உவரியில் சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை விநாயகர் ஊர்வலம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருவிழாவான நேற்று காலை நடந்தது. கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மீது மூன்று முறை கருடன் வட்டமிட்டது. அதனை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து கோஷமிட்டனர். தேரில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பவனி வந்தனர்.

    விழாவில் ராஜகோபுர திருப்பணி கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், துணை தலைவர் கனகலிங்கம், பொருளாளர் செண்பகவேல் நாடார், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், வி.வி.மினரல் ஜெகதீசன், தொழிலதிபர் வடமலை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் நாளான கடந்த 15-ந் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தார். 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் நம்பெருமாள்.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, விளக்கு மற்றும் சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர். தேர் திரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிறைவு நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.

    வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகாரத் தலங்களில் இந்த தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் தைத் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் காலையில் கொடியேற்றம், மாலையில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தேரை வடம்தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தேர் நாலு ரத வீதிகளையும் சுற்றி வரும். காலை 9.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடைபெறும்.

    10-ம் நாள் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நகைச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம் பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    திருவிழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    இன்று காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

    21-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நிறைவு நாளான 22-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். 
    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக கோ பூஜை, அம்மனுக்கு 1008 சங்காபிசேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட 4 முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    கோவில் இணை கமிஷனர் வான்மதி, முன்னாள் அறங்காவலர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தை கார்த்திகை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தெப்பத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் காலை தங்க சப்பரத்திலும், இரவில் வெவ்வேறு வாகனங்களிலும் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்தநிலையில் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தை கார்த்திகை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவை தயார்படுத்தும் பணி நடந்தது. பின்னர் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக தெப்பக்குளத்திற்கு வந்தார். அப்போது தெப்ப முட்டு தள்ளுதல் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து சாமி புறப்பட்டு பதினாறு கால் மண்டபம் அருகே தயாராக இருந்த தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்பு தேரோட்டம் நடைபெற்றது. நிலையில் இருந்த தேரை, பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர்.

    கீழ ரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் ஆனது, தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்து வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வியாழக் கிழமை) காலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி அளவில் மீண்டும் மின்னொளியில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    முருகனின் 3ம் படைவீடான பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பழனி:

    பழனியில் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 20-ந் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலாவும் நடைபெறுகிறது.

    வருகிற 21-ந் தேதி தைப்பூசம். அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல். பகல் 12.40 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளளும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகிற 24-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    தைப்பூச திருவிழாவையொட்டி இம்மாதம் 19 -ந்தேதி முதல் 23- ந்தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என்றும், தைப்பூச திருவிழா 5 ம் திருநாளான 19 ந்தேதி திருக்கோவில் சார்பில் தங்கரதபுறப்பாடு நடைபெறும் என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரை 11 நாட்கள் விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 20-ந் தேதி நடக்கிறது.

    தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு முகூர்த்தகாலை கோவில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். தைத்தேரோட்ட விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் இரண்டாம் நாளான மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 14-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். 15-ந் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    5-ம் திருவிழாவான 19-ம் தேதி அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. அம்மன் தேரை ஏராளமான பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர்.  
    சிதம்பரம் நடராஜர்கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழிமாதம் ஆருத்ரா தரிசம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக் கான மார்கழிமாத ஆருத்ர தரிசனவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி களின் வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் சாமிகள் எழுந்தருளினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம்வந்தது. இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நடராஜர் கோவிலின் முக்கிய வாயிலான கீழகோபுரவாசலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தேர் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தேர் வலம்வரும் 4 வீதிகளிலும் அந்த பகுதி பெண்கள் வண்ண கோலமிட்டிருந்தனர். மேலும் விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆருத்ர தரிசனம் நாளை நடைபெறுகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்க இட வசதியும் ஏற்படுபத்தப்பட்டிருந்தது. தேர் திருவிழாவை தொடர்ந்து சிதம்பரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    ×