search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96073"

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழாவில் நாளை திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுதான்.

    இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச் சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மறு தினம் (21-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. அன்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேர் 4 ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் நிலையை அடையும்.

    தைப்பூச திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் பழனி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இது தவிர திண்டுக்கல் - பழனி சாலை, மதுரை சாலை, தாராபுரம் சாலை என திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

    பக்தர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் ஏற்படுத்தி தரப்பட் டுள்ளது. இது தவிர வழி நெடுகிலும் பக்தர்களுக்காக அன்னதான முகாம்களும், மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாத யாத்திரை பக்தர் களுக்கு உதவுவதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து பழனி வழியாக கோவை செல்லும் பஸ்கள் பாத யாத்திரை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தால் செம்பட்டி சந்திப் பில் இருந்து பழனி பைபாஸ், ரெட்டி யார்சத்திரம், மூலச்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளி மந்தயம் சந்திப்பு, புதிய தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் செம்பட்டி சந்திப்பில் இருந்து கன்னிவாடி, மூலச் சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு வழியாக பழனி செல்ல வேண்டும்.

    மதுரையில் இருந்து பழனி செல்லும் பஸ்கள் திண்டுக்கல் - பழனி பைபாஸ் ரோடு சென்று ரெட்டியார்சத்திரம், ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தயம் சந்திப்பு, தொப்பம்பட்டி, புது தாராபுரம் ரோடு வழியாக பழனி செல்ல வேண்டும்.

    தேனி, மதுரையில் இருந்து கோவை செல்லும் லாரிகள் செம்பட்டி சந்திப்பில் இருந்து வத்தலக்குண்டு பைபாஸ், பழனி பைபாஸ், தாடிக்கொம்பு, அகரம் ரோடு, இடையகோட்டை, கள்ளி மந்தயம், தாராபுரம் வழியாக கோவை செல்ல வேண்டும்.

    கேரளா, திருப்பூர், கோவையில் இருந்து மதுரை செல்லும் லாரிகள் கோவையில் இருந்து மதுரை செல்லும் கார்கள், பஸ்களில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திருவந்திபுரம் தேவநாதசாமிகோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமிகோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டாள் உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. நேற்று ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி மங்கள வாத்தியத்துடன் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமியும், ஆண்டாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதன்பிறகு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையையொட்டி தேவநாதசாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை(புதன்கிழமை) கோவிலில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி தேவநாதசாமிக்கு காலையில் சிறப்பு பூஜை நடைபெறும். மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

    அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். இதையடுத்து சாமி வீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருவந்திபுரத்தில் உள்ள புகழ்பெற்ற தேவநாத சாமிகோவிலில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற தேவநாத சாமி கோவில். இங்கு ஆண்டாள் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 2-வது நாளான நேற்று காலையில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று(திங்கட்கிழமை) ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்து, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்கள். பின்னர் சாமி வீதிஉலா புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாளை (செவ்வாய்க் கிழமை) தை முதல் நாளான பொங்கல் பண்டிகையன்று தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெறும். பின்னர் நாளை மறுநாள்(மாட்டுப் பொங்கல் அன்று) மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில் மாலையில் வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சாமி எழுந்தருளி பரிவேட்டை செல்வார்.

    அப்போது கெடிலம் ஆற்றில் இறங்கி அலங்காரம் செய்யப்பட்டு உள்ள மாடுகளை சுற்றி வந்து பரிவேட்டை ஆடுவார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் அன்னூரில் மன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து சூரிய வாகனம், சந்திர வாகனம், பூத வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் சுவாமி திருவீதி உலா வந்தார். நேற்று அன்னூர் தாசபளஞ்சிக சங்க தலைவர் முருகேசன் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    பெருமாள் கோவிலில் இருந்து மணமகள் அழைப்புக்காக பெண்கள் சீர்வரிசையோடு ஊர்வலமாக மன்னீஸ்வரர் கோவிலை அடைந்தனர். கோவிலில் கும்ப கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு யாக வேள்வி தொடங்கி நடந்தது. பின்னர் தீர்த்த கலசம் சுவாமிக்கு தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவன் கோவில், பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் உரலில் மஞ்சள் இடிக்கப்பட்டு மஞ்சளை எடுத்து மாங்கல்ய கயிற்றில் பூசி எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    திருக்கல்யாணம் கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது. தொடர்ந்து சுவாமி- அம்மனுக்கு மாலை மாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னூர் தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை யானை வாகன வீதிஉலா நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு சுவாமி மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கூனம்பட்டி ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராம அடிகளார், அவினாசி காமாட்சிதாச ஏகாம்பரநாத சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், காரமடை அருணை அருள்முருக அடிகளார், ராமலிங்க சுவாமிகள், சட்டப்பேரவை தலைவர் தனபால் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு தெப்ப உற்சவம், 23-ந் தேதி ஆருத்ரா தரிசனம், நடராஜர் அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து 24-ந் தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் 6 பிரதான கலசங்கள் மற்றும் 10 உப கலசங்களுடன் 16 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

    வருடாபிஷேக விழாவையொட்டி நேற்று இரவு 6 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அமைக் கப்பட்டிருந்த திருமண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் திருமண மேடையில் வைதீக முறைப்படி யாகம் வளர்த்து பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டு, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், சித்தனாதன் சன்ஸ் செந்தில், கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில்குமார், திருப்பூர் லாட்ஜ் மகேஷ் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின் பெரியாவுடையார், பெரியநாயகிஅம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பிரியநாயகி அம்மன் அன்னப்பிச்சை வாகனத்திலும், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் பெரியதங்கமயில் வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், வீரபாகு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    பண்ருட்டி திருவதிகையில் புகழ் பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி திருவதிகையில் புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    விழாவில் வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் முருகன், வள்ளி தெய்வானையுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், செயல்அலுவலர் நாகராஜன், விழா உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌ஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. 7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள், தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 3.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் எழுந்தருளி, சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி மற்றும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    அறுபடைவீடுகளுள் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், யாகம் நடைபெற்றது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

    அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் தனுசு லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்ப, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    சண்முகர், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த போது எடுத்த படம்.

    கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனையும், சோடச உபசாரனையும் நடைபெற்றது. கோவில் ஓதுவார்கள், குருக்கள்கள் பாடல்கள் பாட மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், செந்தில், கந்தவிலாஸ் நவீன், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சப்பரத்திலும் மணக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி வடை, பாயாசத்துடன் 5 ஆயிரம் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. விருந்து சாப்பிட்ட அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

    நேற்று முன்தினம் பேட்டை ரோட்டில் உள்ள கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலில் தவம் இருந்த காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்தார். மாலையில் சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று அதிகாலை அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருளினார். பின்னர் சுவாமி சன்னதியில் இருந்து நெல்லையப்பரை நெல்லை கோவிந்தர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.


    ஐப்பசி திருக்கல்யாண விழாவில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நெல்லை கோவிந்தர், அம்பாளை நெல்லையப் பருக்கு தாரை வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானமும், மொய் எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வீதி உலா சென்றனர்.

    பின்னர் அம்பாள் ஊஞ்சல் விழா நடந்தது. இந்த ஊஞ்சல் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. 7-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.
    காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயகபெருமாள்- தாயாருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர். பின்னர் அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு யாகசாலையில் வீரலட்சுமி யாகம், சந்தான கோபால யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதா ஸ்துதி பாராயணம், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இதனையடுத்து யாகசாலை திடலில் கவிஞர் ஆர்.வி.ஸ்வாமி தொகுத்த 2017 மஹா புஷ்கர விழா உபன்யாச தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பராசர லட்சுமி நரசிம்ம பட்டர் வெளியிட அதை கோமடம் சடகோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாருக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு நரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு காவிரி தாயாருக்கு பவுர்ணமி ஆரத்தி நடைபெறுகிறது. இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 
    நெல்லிக்குப்பத்தில் உள்ள பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனும், பெருமாளும் ஒரே கோவிலில் எழுந்தருளி இருப்பது தனி சிறப்பாகும். இந்த கோவில் கும்பாபிஷேக 9-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த 25-ந்தேதி மாலையில் பிரசன்ன வெங்கடாசலபதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுதர்சன யாகம் மற்றும் 108 கலசாபிஷேகம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூலோக நாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 2-ம் காலயாகசாலை பூஜையும், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் ஒரே இடத்தில் வைத்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதையொட்டி சாமிகளுக்கு அபிஷேகம் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விஜயலட்சுமியும், பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 
    சேலம் சீலநாயக்கன்பட்டி சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு சக்தி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவில் மகளிர் மன்றம் சார்பில் நேற்று மாலை கோவில் அருகில் அலங்கார மேடையில் சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் 2 மணிக்கு மீனாட்சி அம்மன் தாய்வீட்டு சீதனமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி பெருமாளிடம் சீர் பெற்று சீர் வரிசை, முளைப்பாரிகையுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக மணப்பந்தலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜையுடன் சுந்தரேஸ்வரர் மணப்பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதையடுத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திருமண கோலத்தில் அருள்பாலித்த சாமிகளை பொதுமக்கள் பலர் தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும், பெருமாள் கோவில் மேடு உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 
    ×