search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    தருமபுரி அருகே பால் வேனுக்கு வழிவிட முயன்ற டெம்போ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்ததில் பெண் பலியானார்.
    தேன்கனிக்கோட்டை:

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கரகூர் கிராமத்தை சேர்ந்த 45 பெண்கள் நேற்று தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் சாமந்தி பூக்கள் பறிக்க டெம்போவில் சென்றனர்.

    ஒசட்டியை அடுத்த கேரட்டி கிராமத்தில் பூ பறிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். டெம்போவை ராயக்கோட்டை அருகே தொரத்தம்பட்டியை சேர்ந்த சரத்குமார் என்பவர் ஓட்டி வந்தார். பஞ்சப்பள்ளி சாலை தடிகல் கிராமம் அருகே வந்தபோது, எதிரே பால்வேன் ஒன்று வந்தது. அந்த பால் வேனுக்கு வழிவிட முயன்றபோது டெம்போ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்துவிட்டது.

    இந்த இடிபாடுகளில் சிக்கி டெம்போவில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் அந்த பெண்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கரகூரை சேர்ந்த போடியப்பா மனைவி முத்தம்மா (வயது 60) என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மா (40), சாந்தம்மா (50), மங்கம்மா (52), கவிதா (21), ஐயம்மா (55) உள்ளிட்ட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 13 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். டிரைவர் சரத்குமார் தப்பியோடி விட்டார். 

    இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சரத்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டையில் நடந்து வந்த மாணவி மீது அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் அர்ச்சனா (வயது 25). கோபாலின் தம்பி சந்திரப்பா மகள்கள் மாணக்கியா (19), நிவேதிதா (19), இன்னொரு உறவினர் சீனிவாசன் மகள் யாஷிகா (20). 

    இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தோட்டத்தில் பூ பறித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர். தளி- தேன்கனிக்கோட்டை சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் 4 பேரும் படுகாயம் அடைந்து ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இன்று காலை சிகிச்சை பலனின்றி யாஷிகா இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான யாஷிகா ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்தார்.
    திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற கூலி தொழிலாளர்கள் லாரியில் இருந்து குதித்த போது 7 பேர் படுகாயம் அடைந்தனர். #semmaramSmuggling

    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த 60 கூலி தொழிலாளர்கள் திருப்பதி வன பகுதியில் செம்மரம் வெட்ட லாரியில் வந்து கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி வடமாலைபேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு லாரி செக்போஸ்ட் அருகே திடீரென நின்றது. லாரியில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

    லாரியில் இருந்து குதித்ததில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி (வயது 41), ரவி (28), கோவிந்தசாமி (28), சக்கரவர்த்தி (28), கார்த்திக் (28), திருப்பதி (28), வேதநாயகம் (41) என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருப்பதியில் கூலி வேலை செய்ய ஒரு லாரியில் 60 பேர் வந்ததாகவும், செம்மரம் வெட்ட வரவில்லை என கூறி உள்ளனர்.  #semmaramSmuggling

    மன்னார்குடி அருகே இன்று அதிகாலை வீட்டு சுவர் இடிந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#Death

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதிமங்கலம் அரிவளூர் காலனி தெருவை சேர்ந்தவர் எலரா (வயது52). இவர் தனது மகன் மகேஷ்(25) மற்றும் பேரன் மணிகண்டன்(4) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பு பக்கம் உள்ள சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த 3 பேர் மீதும் திடீரென விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கி எலரா உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.

    சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது எலரா பலியாகி கிடப்பதையும், படுகாயம் அடைந்து மணிகண்டன் மற்றும் மகேஷ் ஆகியோர் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே மணிகண்டன், மகேஷ் ஆகியோரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Death

    வேப்பூரில் இன்று காலை பஸ் கவிழ்ந்து பீகாரை சேர்ந்த 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    வேப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலர் தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு பஸ்சில் ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். அந்த பஸ்சை பீகாரை சேர்ந்த முகமதுஅரிப் (வயது 50) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே இருந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி  38 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 32 பேரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 6 பேரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. விபத்தில் சிக்கி சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த  பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. 

    விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு பகுதியில் வரும் போது ஒரு வளைவில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. 

    இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த மகாராஜகடை அருகே உள்ள ஆட்டுமந்தை பகுதியை சேர்ந்த சின்னதம்பி(49), சாந்தி(38), மங்கம்மாள்(44), மகாலட்சுமி (55) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னதம்பி இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பெண்டாட்டிக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்தூர்:

    வெள்ளகோவில் கே.சி. பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). விசைத்தறி தொழிலாளி. வடிவேலுக்கு குயிலி, சாவித்திரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். நேற்று காலை வடிவேல் கோவை-திருப்பூர் ரோட்டில் சேனாதிபாளையம் அருகே ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கல்லூரி மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வடிவேல் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேல் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள் ஜோலார்பேட்டையை சேர்ந்த சுதாகரன் (37)என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். சுதாகரன் அவரது நண்பர் தாமோதரன் என்பவருடன் பச்சக்குப்பத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுதாகரன், தாமோதரன் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் முத்துபாண்டி (வயது 20) இவரது நண்பர்கள் ஆனந்த் (21), கோபால்(20).

    இவர்கள் 3 பேரும் கடந்த 17-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கொன்னைப்பட்டிக்கு  சென்றனர்.  பொன்னமராவதி - புதுக் கோட்டை சாலையில் பொன்னமராவதி கொப்பனாபட்டி  அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் அருகே உள்ளே வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். ஆனந்த், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    கருமத்தம்பட்டி அருகே இன்று காலை நடந்த விபத்தில் டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 46). டெய்லர்.

    இவர் இன்று காலை தனது மொபட்டில் செல்லம்பாளையம் நோக்கி சென்றார். மொபட் கனியூர் டோல்கேட் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அந்த கார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யப்பன் (47) என்பவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த 11-ந் தேதி காலை கோவிந்தசாமி மற்றும் அவரது தம்பி குப்புசாமி (50) மற்றும் சிலர் மீன் பிடிப்பதற்காக மோர்தானா அணை பகுதியில் ஓரமாக சென்றனர். அப்போது, காட்டிற்குள் இருந்து வந்த ஒற்றை யானை பிளியறியபடி அவர்களை விரட்டியது. இதில் யானை தாக்கியதில் கோவிந்தசாமி படுகாயமடைந்தார்.

    அவருக்கு மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடன்வந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம் அருகே வாகனம் மோதி மூதாட்டி இறந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள தனியார் நூற்பாலை அருகே சம்பவத்தன்று இரவு 70-வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மூதாட்டியை அந்த வழியாக வந்த ராஜபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குழந்தைவேல் (35) என்பவர் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு மூதாட்டியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×