search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    அரக்கோணம் அருகே சமையல் செய்து கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்த மாணவிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தக்கோலம்:

    அரக்கோணம் அடுத்த நெமிலி துறையூர் மோட்டூரை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் தனலட்சுமி (வயது19). வாலாஜாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்றவைத்து உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் தனலட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சிலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தனலட்சுமியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தனலட்சுமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    செம்பனார்கோவிலில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூர் கோவிலில் நேற்று திருச்சியை சேர்ந்த மதிவாணன்-ரஞ்சனி ஆகியோரின் 60-ம் கல்யாணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் 19 பேர் ஒரு வேனில் வந்தனர். வேனை திருச்சியை சேர்ந்த டிரைவர் செபஸ்டின்ராஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    பின்னர் திருமணம் முடிந்து அனைவரும் திருச்சிக்கு வேனில் திரும்பினர். அப்போது செம்பனார் கோவில் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த கரூரை சேர்ந்த கதிர்வேல், இவரது மனைவி கோமதி, திருச்சி காட்டூரை சேர்ந்த பழனிசாமி, இவரது மனைவி சரோஜா, அதே ஊரை சேர்ந்த பழனிவேல், இவரது மனைவி நாகேஸ்வரி, திண்டுக்கல்லை சேர்ந்த உமாதேவி(60), இவரது கணவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுரேஷ், டிரைவர் செபஸ்டின்ராஜி உள்பட 20 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து வந்த பொறையார் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உமாதேவியை(60) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மேட்டுப்பாளையத்தில் பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் அருகே தர்மாபுரி புதுநகரை சேர்ந்தவர் மீனாட்சி. (வயது 50). இவருக்கும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அருகே மதனகோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். மீனாட்சி தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராதாகிருஷ்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அந்த பெண் மூலம் அருணகிரி என்ற மகன் உள்ளார்.

    விவாகரத்து பெற்றாலும் ராதாகிருஷ்ணன் அடிக்கடி மீனாட்சியிடம் பணம் கேட்டு மிரட்டி வாங்கி செல்வார். அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் லாரியை பழுது பார்ப்பதற்காக மீனாட்சியிடம் ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால், மீனாட்சி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் தனது 2-வது மனைவி மகன் அருணகிரியுடன் சேர்ந்து மீனாட்சியை தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த மீனாட்சி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அருணகிரி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

    தாராபுரம் அருகே ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது கார் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே உள்ள கள்ளிவலசை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ஜனவர்த்தினி (வயது 10). ஆனந்தகுமார் என்பவரது மனைவி ரேவதி (22), இவர்களது மகள் சாய் ஸ்ரீ (2), நடராஜ் என்பவரது மனைவி தங்கம்மாள் (50). ஆகியோர் இன்று மதியம் உடுமலை-தாராபுரம் ரோட்டை கடக்க முயன்றனர். 

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜனவர்த்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    படுகாயம் அடைந்த ரேவதி,சாய்ஸ்ரீ, தங்கம்மாள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடன்குடி அருகே கார் மீது மினிபஸ் பயங்கரமாக மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டிணம் கருங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மகராஜா (வயது 28). இவர் சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏஜென்சி எடுத்து விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பொங்கலை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக தனது காரில் உடன்குடிக்கு சென்றார். அவருடன் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம் (27), சுந்தர் (27), முத்துராமலிங்கம் (27) ஆகியோரும் சென்றனர். காரை மகராஜா ஓட்டி சென்றார். இவர்கள் பொருட்களை வாங்கி விட்டு குலசை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு சென்ற ஒரு மினிபஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மகராஜா, கூடலிங்கம், சுந்தர். முத்துராமலிங்கம் மற்றும் மினிபஸ் டிரைவரான மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தாய்விளையை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். 

    இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை:

    மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அமர்நாத் கோஸ் (வயது 39). இவரது மனைவி பரோலில் கோஸ் (25). இவர்களது மகன் மோதிஸ் (3).

    இவர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வது என முடிவு செய்தனர். இதற்காக அங்குகிருந்து புறப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அங்கு தனது நண்பரான கொலாய் கோலி (36) என்பவரது வீட்டில் தங்கினர்.

    பின்னர் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

    ரெயில் இன்று காலை மேட்டுப்பாளையம் வந்ததும் ஒரு வாடகை காரில் ஊட்டிக்கு சென்றனர். காரை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபீக் (22) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    கார் மரப்பாலம் அருகே 13-வது கொண்டடை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    இதில் காரில் சுற்றுலா வந்த அமர்நாத் கோஸ், அவரது மனைவி பரோலில் கோஸ், மகன் மோதிஸ், சென்னையை சேர்ந்த கொலாய் கோலி, இவரது மனைவி தீபிகா (27), டிரைவர் சபீக் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு குன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வெலிங்கடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் ரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    உளுந்தூர்பேட்டை:

    கோவையில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை புறப்பட்டது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் நாகராஜ் ஓட்டிவந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த பஸ் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர்காந்தி நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை மறைமலைநகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 31), கோவையை சேர்ந்த வெங்கடேஷ், வைஷ்ணவி (22), திருப்பூரை சேர்ந்த ஐஸ்வர்யா (26), ஈரோட்டை சேர்ந்த பிரதீப்குமார், சென்னையை சேர்ந்த சுபாஷினி (25) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுபாஷினி, வெங்கடேஷ், பிரதீப்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மத்திய பிரதேச துணை சபாநாயகரின் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 3 போலீசார் மற்றும் டிரைவர் பலியாகினர். #MPAccident #MPDySpeaker
    பாலகாட்:

    மத்திய பிரதேச சட்டமன்ற துணை சபாநாயகரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஹீனா கான்வரே, நேற்று இரவு தனது தொகுதியான லாஞ்சியில் இருந்து காரில் வந்துகொண்டிருந்தார். அவரது பாதுகாவலர்கள் தனி காரில் பின்னால் வந்துகொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சேல்டேகா கிராமம் அருகே வந்தபோது, எதிரே ஒரு லாரி அதிவேகமாக வந்தது.

    அப்போது லாரி மீது மோதாமல் இருப்பதற்காக துணை சபாநாயகரின் கார் டிரைவர், ஸ்டியரிங்கை சாலையோரம் திருப்பினார். இதனால் அந்த கார் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள வயலுக்குள் இறங்கியது. ஆனால், பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது லாரி பயங்கரமாக மோதியது. 

    இந்த விபத்தில் காரில் இருந்த 3 போலீஸ்காரர்கள் மற்றும் டிரைவர் என 4 பேர் உயிரிழந்தனர். ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MPAccident #MPDySpeaker
    திருக்கோவிலூரில் பால் அபிஷேகம் செய்தபோது கட்-அவுட் சரிந்து விழுந்ததில் அஜித் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #Ajithfans
    திருக்கோவிலூர்:

    நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனையொட்டி தியேட்டர் முன்பு அஜித் ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் கட்டி இருந்தனர். இன்று திரைப்படம் ரிலீஸ் ஆனதையொட்டி ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டர் முன்பு குவிந்தனர்.

    காலை சுமார் 7.30 மணியளவில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் கட் அவுட் மீது ஏறி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கட் அவுட் கீழே சரிந்து விழுந்தது. இதில் அஜித் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன், அருள், பிரதாப், பிரபாகரன் ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    உடன் தியேட்டர் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்றதும் படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  #Ajithfans



    பொள்ளாச்சி அருகே குடோனில் ஆயில் கேன் வெடித்து சிதறியதில் 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பபிள்ளை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (53). இவர் பொள்ளாச்சி அடுத்த சிஞ்சுவாடியில் மஞ்சள் கிழங்கு எண்ணை குடோன் நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை பிளாஸ்டிக் பேரலில் இருந்த எண்ணையை இரும்பு பேரலுக்கு மாற்றும் பணி நடந்தது. இதில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் அக்னேஷ் (23), மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பல்ராம் (45), சஞ்சய்(42) ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆயில் கேன்கள் வெடித்து சிதறின. இதில் அன்னேஷ், பல்ராம், சஞ்சய் ஆகிய 3 பேர் மீது எண்ணை தெறித்து அவர்கள் மீது தீ பற்றியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் குடோனில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர். குடோனில் பற்றிய தீ 30 அடி உயரத்துக்கு எழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானது.

    படுகாயமடைந்த 3 பேரையும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடோன் உரிமையாளர் மணிகண்டன் காயம் இன்றி தப்பினார்.

    இது குறித்து தகவல் கிடைத்தும் பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    விபத்து குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    குடோனின் அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் பழைய தென்னை ஓலைகளுக்கு தீ வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    பாகிஸ்தான் பெஷாவர் நகரில் காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். #Pakistan #BombBlast
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 12 கடைகள் சேதம் அடைந்தன.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என்பதும் அது முன்கூட்டியே வெடித்ததும் தெரியவந்தது.

    மார்கெட் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். #Pakistan #BombBlast 
    பாகூரில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

    பாகூர்:

    விழுப்புரம் அருகே வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பாகூரை சேர்ந்த வெங்கடேச பெருமாள் (41) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே வெங்கடேச பெருமாளுக்கும், சாந்திக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். சாந்தி சோரியாங்குப்பத்தில் உள்ள தனது அக்கா சாத்தகி வீட்டில் தங்கி போலீஸ் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே வெங்கடேசப்பெருமாள் மனைவியிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வெங்கடேசப்பெருமாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த சாந்தி நேற்று தனது அக்காள் சாத்தகி மற்றும் அக்காள் கணவர் சிவானந்தம் ஆகியோருடன் பாகூரில் உள்ள வெங்கடேசபெருமாள் வீட்டுக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி 2-வது திருமணம் செய்யலாம் என்று அவர்கள் வெங்கடேச பெருமாளிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மாறிமாறிக் தாக்கி கொண்டனர். வெங்கடேச பெருமாளுக்கு ஆதரவாக அவரது தங்கை புவனேஸ்வரி மற்றும் உறவினர்கள் குமாரவேலு, ராம்கி, இந்திரா ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.

    இந்த மோதலில் வெங்கடேசபெருமாள் தரப்பினர் ஆத்திரம் அடைந்து சாந்தி, அவரது அக்காள் சாத்தகி மற்றும் அவரது கணவர் சிவானந்தம் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதுபோல சாந்தி தரப்பினர் தாக்கியதில் வெங்கடேசப்பெருமாள், குமாரவேலு, புவனேஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் பாகூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் விசாரணை நடத்தி இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்தனர். மேலும் வெங்கடேசபெருமாள் தரப்பை சேர்ந்த குமாரவேலு, ராம்கி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இதற்கிடையே மோதலில் பெண் போலீஸ் சாந்திக்கு கத்திக்குத்தில் காயம் அடைந்ததால் கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இந்த சம்பவம் காரணமான இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×