search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96179"

    வேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு இன்று அதிகாலை 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை பெங்களூரை சேர்ந்த முகமதுதன்வீர் டிரைவர் ஓட்டிச் சென்றார். வேலூர் அடுத்த மோட்டூர் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பஸ் டிரைவர் முகமதுதன்வீர், கோவையை சேர்ந்த பிரகாஷ், குமரேசன், பாஸ்கர், ராஜேஷ், சத்தியநாதன், விஷ்ணுஹாசன், ஹரிகா, அன்னபூர்ணா உள்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பண்ருட்டி அருகே வேலி பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 50). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே வேலி பிரச்சினை உள்ளது.

    இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ராமலிங்கத்தை ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதேபோல் ராமலிங்கம், அவரது மகன் சிவக்குமார், சுந்தர் ஆகியோர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர். இந்த மோதலில் வேல்முருகன், ராமலிங்கம் ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ராஜேஷ், கல்கி, வேல்முருகன் ஆகிய 3 பேர் மீதும் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர், சிவக்குமார், ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அனவயல் செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் வல்லரசு (வயது21). அதே பகுதி சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பிரவீன்(18). இருவரும் நண்பர்கள்.

    இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அனவயலில் இருந்து பேராவூரணிக்கு வந்துள்ளனர். அப்போது பெரியகுளம் என்ற பகுதியில் தனியார் பள்ளி அருகில் பாலத்தில் வந்தபோது அம்மையாண்டியை சேர்ந்த மெக்கானிக் கணபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வல்லரசு சம்பவ இடத்திலேயே பலியானார். 

    மேலும் காயமடைந்த பிரவீண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கணபதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வல்லரசு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற பஸ் மரத்தில் மோதிய விபத்து 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 60 பக்தர்களுடன் பேருந்து திருவண்ணாமலை வழியாக வந்தவாசிலிருந்து சோத்துபாக்கம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வந்தவாசி சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக செண்டிவாக்கம் என்ற இடத்தில் பஸ் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேல் மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் இரவு வேளையில் டிரைவர் பஸ்சை இயக்கி வந்ததாகவும் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
    அருப்புக்கோட்டை அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை அருகே உள்ளது செட்டிப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பேராளி கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேனில் சென்றனர்.

    துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவர்கள் நேற்று இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். வேனை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமியாபுரம் விலக்கு 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வேனின் முன்டயர் திடீரென வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய வேன், சென்டர் மீடியனில் மோதியது. அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பஸ் வேன் மீது மோதியது.

    இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. டிரைவர் மகேந்திரனின் 2 கால்களும் முறிந்தது. மேலும் வேனில் இருந்த ராஜலட்சுமி, சுப்பையா, பாப்பாத்தி, ருக்குமணி, ஜெயமணி உள்பட 30 பேர் காயமடைந்தனர். மகேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்த 2 பேரும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் அல்லாபகஷ் (வயது54). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள அறையில் மாந்தீரிகம் செய்வது, தாயத்து கட்டுவது உட்பட பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உள்ள தனி இடத்தில் உறவினரான குஜரத் அலி என்பவர் ‘அமீர் பயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் சிறிய அளவிலான பட்டாசு தொழிற்சாலையை அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.

    இதற்கு அல்லாபகஷ் உதவியாக இருந்தார். பட்டாசுகளை தனது அறையில் வைத்து விற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டையொட்டி உள்ள தனியறையில் அல்லாபகஷ் மற்றும் ஆம்பூரில் இருந்து வந்த அவரது உறவினர் கலிக்அகமது (39) ஆகியோர் இருந்தனர். அந்த அறையில் நாட்டுவெடிகள் உள்பட பல்வேறு பட்டாசுகள் ஒரு பையில் இருந்தன.

    அப்போது வழிபாட்டுக்காக அல்லாபகஷ், ஊதுபத்தியை கொளுத்தினார். இதில் இருந்து விழுந்த நெருப்பு தவறுதலாக பட்டாசு மேல் விழுந்தது. இதையடுத்து அறையில் இருந்த நாட்டுவெடிகள், பட்டாசுகள் கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் வெடித்து சிதறின.

    இதில் அல்லாபகசும், கலிக்அகமதுவும் உடல் கருகினர். மேலும் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை அஜாக்கிரதையாக கையாண்டதாக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் குஜரத் அலியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    தருமபுரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி பெரிய மல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது36), தொழிலாளி. வெல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பிரவீன்குமார் (25) ஆகிய 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பெரியமல்லிப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டினார். பின்னால் முருகன் அமர்ந்து இருந்தார். 

    அப்போது பெரிய மல்லிப்பட்டி பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வேடியப்பன் மீது பிரவீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை முருகன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது38). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் இவர் அங்கேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணிக்கம் தனது மனைவி நாகம்மை, மகன் முத்துராமன் (6), 10 மாத பெண் குழந்தை முத்து மீனா ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வலைச்சேரிபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகம்மை மற்றும் 2 குழந்தைகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் வசந்தி, ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரை அடுத்துள்ள பழையூரைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருவாரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அஜித்பாண்டி படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலூர் அருகே உள்ள சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (70). இவர் கூத்தப்பன்பட்டி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார்.

    சிகரெட் புகையை முகத்தில் ஊதிய தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராயபுரம்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் அஸ்லாம் (25). இவர் சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின்னர் அவர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள நண்பரை பார்க்க வந்தார்.

    இருவரும் ஒரு கடையின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அஸ்லாம் புகை பிடித்தார். அந்த புகை அருகே நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் முகத்தில் பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்லாமை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    முதுகு, இடுப்பில் பலத்த காயம் அடைந்த அஸ்லாமுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

    விராலிமலை அருகே இன்று காலை பஸ் கவிழ்ந்த விபத்தில் அய்யப்ப பக்தர்கள் 16 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விராலிமலை:

    ஆந்திர மாநிலம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். 

    இன்று காலை திருச்சி அருகே உள்ள விராலிமலை  பூதக்குடி நான்கு வழிச் சாலையில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. 

    இதில் பஸ்சில் இருந்த பக்தர்கள் கங்காதரன், நெறியன், சூரியகாந்தம்,  சுபத்ரா, யோக ரத்தினம் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களை விராலிமலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்குமிடத்தின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் கைதாகியுள்ளனர். #AfghanSoldiers #Talibanskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
     
    இந்நிலையில், கஸ்னி மாகாணத்தில் உள்ள தேஹ்யாக் மாவட்டத்துக்குட்பட்ட சுலிமன்ஸாய் கிராமத்தில் தலிபான்கள் ரகசியமாக கூடி ஆலோசனை கூட்டம் நடத்துவதாக ராணுவ உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். அப்போது தலிபான்களுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 14 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.  #AfghanSoldiers #Talibanskilled
    தமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதலில் வட்டார பொது செயலாளர் காயம் அடைந்தார்.

    பல்லடம்:

    காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் நோக்குடன் வீடு தோறும் காங்கிரஸ் என்ற பெயரில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எழுந்து வடக்கு மாவட்ட தலைவர் கோபி தன்னிச்சையாக செயல்படுகிறார் என கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத்திடமும் புகார் தெரிவித்தனர். அவர்கள் பல்லடம் பகுதியில் உள்ள பழைய நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் கோபி நியமித்து உள்ளார்.


    நீண்ட காலமாக கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்து உள்ளார். புதிதாக பதவி பெற்றவர்கள் பழைய நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றனர்.

    அவர்களிடம் சஞ்சய் தத் கட்சி மேலிடத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    கூட்டம் முடிந்ததும் சஞ்சய் தத் புறப்பட்டு சென்றார். அவரை வழி அனுப்பி விட்டு வந்த மாவட்ட தலைவர் கோபியிடம் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.அப்போது நிர்வாகிகள் சிலர் நாற்காலிகளை தூக்கி கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கினர். இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த மோதலில் சென்னிமலை வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் பழனிசாமி காயம் அடைந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த மோதல் குறித்து யாரும் போலீசில் புகார் செய்யவில்லை. இது குறித்து மாவட்ட தலைவர் கோபி கூறும் போது, கட்சி பொறுப்புகளுக்காக மாவட்டம் பிரிக்கப்பட்டதில் சிலருக்கு குறைபாடுகள் இருந்தால் என்னிடம் தெரிவித்து இருக்கலாம். மாநில தலைமையிடம் அதை தெரிவித்து அவர்களது தேவையை பூர்த்தி செய்திருப்பேன். காங்கிரஸ் கட்சியில் உள்ள பலர் த.மா.கா. சென்று வந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

    நன்கு செயல்படுபவர்களை தான் மேலிடத்தில் பரிந்துரை செய்ய முடியும் என்றார்.

    ×