search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அசுரர்களை வென்ற பின் பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

    சிறப்பு வாய்ந்த இந்ததிருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு திரு ஆவினன்குடி கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா, புனிதமண் எடுத்தல், கிராமசாந்தி பூஜை போன்றவை நடைபெற்றது.தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடி பட பூஜை நடந்தது. இதையடுத்து காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடி படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கொடி கம்பத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அப்போது கோவிலில் எழுந்தருளிய வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோஹரா கோ‌ஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 20-ந் தேதி திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.20 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா வந்து அருளாசி வழங்குவார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
    பழனியில் முருகப்பெருமான் கோவாணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சி அளிக்கிறார். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்தது. அது தொடர்பான தலவரலாற்றை பார்க்கலாம்.
    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அறுபடைவீடு கண்டவன் ஆறுமுகன். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் படைவீடுதான். திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுமுகன் தலங்களும் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. பழனி அறுபடை வீடுகளில் பழமையானது. இங்கு முருகப்பெருமான் கோவாணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சி அளிக்கிறார். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்தது. அது தொடர்பான தலவரலாறு:-

    கலகத்திற்கு பெயர் போன நாரதர் யாருக்கும் கிடைக்காத அரிய மாம் பழத்தை சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவரை பார்த்து சிவபெருமான், “என்ன நாரதா, கலகமூட்ட உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்றார். பிறகு பார்வதியிடம் பழத்தை கொடுத்து சாப்பிட சொன்னார். அவர் தனக்கு மாம்பழம் வேண்டாம் என்று மறுத்தார். அந்த சமயத்தில் விநாயகரும், முருகப்பெருமானும் அங்கு வந்தனர். “பழம் எனக்குத் தான் வேண்டும்” என்று கேட்டனர்.

    “அம்மா நான் தான் மூத்த பிள்ளை எனக்கே பழம் தர வேண்டும்” என்றார் விநாயகர்.

    “இல்லையம்மா, நான் தான் செல்லப் பிள்ளை. எனக்கே பழத்தை தாருங்கள்” என்றார் முருகப்பெருமான்.

    உடனே பார்வதி “சரி, சரி... சண்டை போடாதீர்கள். பழத்தை ஆளுக்குப் பாதி யாக பிரித்து பங்கு வைத்துத் தருகிறேன்” என்றார்.

    இதை சிவபெருமான் ஏற்கவில்லை. “இந்த பழம் சக்தி வாய்ந்தது. அதை வெட்டக்கூடாது. அப்படியே முழுமையாக சாப்பிட வேண்டும். என்ன நாரதா அப் படித்தானே” என்றார்.

    அதற்கு நாரதர் “ஆமாம் சாமி” என்றார்.

    “பழத்தை இருவரும் கேட்கிறார்களே... என்ன செய்வது?” என்றாள் பார்வதி.

    “அப்படிக் கேள், சொல்கிறேன்” என்ற சிவபெருமான் “விநாயகா, குமரா... உங்களில் இந்த உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ... அவர்களுக்கு தான் இந்த ஞானப்பழம்” என்றார்.

    மறுவினாடியே “உலகத்தை தானே... இதோ ஒரு நொடியில் சுற்றி வருகிறேன்” என்று முருகப்பெருமான் புறப்பட்டார். தனது வாகனமான மயில் மீது ஏறி விர் ரென பறந்தார்.

    ஆனால் பதற்றமின்றி நின்ற விநாயகர் சற்று யோசித்தார். பிறகு நார தரைப்பார்த்து, “உலகம் என்றால் என்ன? அப்பன், அம்மை என்றால் என்ன?”என்று கேள்வி கேட்டார்.

    இதைத்தான் எதிர்பார்த்திருந்து காத்திருந்த நாரதர் மகிழ்ச்சி அடைந்தார். “உலகம் என்றால் அம்மை, அப்பன். அம்மை-அப்பன் என்றால் உலகம் என்று அர்த்தம்” என்றார்.

    நன்றாக சொன்னீர். அப்படியானால் என் தாய், தந்தையை சுற்றி வந்தால் இந்த உலகை சுற்றியதாக தானே அர்த்தம்? என்று விநாயகர் கேட்டார்.

    அதற்கு நாரதர், “ஆமாம். அதில் என்ன சந்தேகம்” என்றார்.

    இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர் சிவபெருமானையும், பார்வதி யையும் சுற்றி வந்தார். “உலகை சுற்றி வந்துவிட்டேன். பழத்தை எனக்கேத் தாருங்கள்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அவருக்கு பழத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.

    அந்த சமயத்தில் உலகை சுற்றி முடித்து விட்டு முருகப்பெருமான் மயிலில் இருந்து வந்து இறங்கினார். விநாயகர் கையில் பழம் இருப்பதைப் பார்த்ததும் முருகர் அதிர்ச்சி அடைந்தார்.

    அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பார்வதிதேவியைப் பார்த்து தாயே என்ன இது? என்று சத்தமாக கேட்டார். பயந்துபோன பார்வதி, “எனக்கு ஒன்றும் புரியவில்லையப்பா... தாய், தந்தையை சுற்றிவந்தால், உலகைச் சுற்றியதாக அர்த்தமா என்று கணபதி கேட்டான். நாரதரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவனும் எங்களைச் சுற்றி வந்து பழத்தை பெற்றுக்கொண்டான்” என்றார்.

    இதை கேட்டதும் முருகனின் கோபம் அதிகமாயிற்று. “ஓகோ, பெரியவர்களாக சேர்ந்து நடத்திய நாடகமா? நன்றாக இருக்கிறது. இச்சிறு பழ விஷயத்தில் உங்கள் குணத்தைக் காட்டியதற்கு நன்றி. நான் வருகிறேன்” என்று ஆவேசத்துடன் புறப்பட்டார்.

    அதிர்ச்சி அடைந்த பார்வதிதேவி, “குமரா... நில்” என்றார்.

    அதற்கு முருகப்பெருமான், “நிற்க மாட்டேன். தலைப்பிள்ளைதான் செல்லப்பிள்ளை. இளையபிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று காட்டிய உங்களுடன் இனி ஒரு நொடியும் இருக்க மாட்டேன். வருகிறேன்” என்று சொன்னபடி நடந்தார். பதற்றமடைந்த பார்வதிதேவி, “குமரா நில், நான் சொல்வதை கேள். எங்கே போகிறாய்?” என்றார்.

    அதற்கு முருகப்பெருமான், “கேட்க மாட்டேன். எங்கோ போகிறேன். எனக்கென்று ஒரு உலகம், மக்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு வாழப்போகிறேன். முடிந்தால் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்” என்று சொன்னபடி நடக்கத் தொடங்கினார்.

    உடனே பார்வதிதேவி, சிவபெருமா னிடம், “சுவாமி என்ன இது? முருகன் கோபித்துக்கொண்டு போகிறான். அழையுங்கள்” என்றார். சிவபெருமானும் குரலை உயர்த்தி, “குமாரா... நில். தாய் சொல்லைக் கேள்” என்றார். ஆனால் முருகன் எதையும் கேட்கவில்லை. கோபம் தணியாமல் புறப்பட்டு சென்றார்.

    உடனே சிவபெருமான் வருத்தத்துடன் “பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லுனு உன் மகன் எடுத்துக்காட்டி விட்டு போகிறான்” என்றார். கோபம் குறையாத முருகப் பெருமான் உடைகளைத் துறந்து, ஒரு முழுக் கோவணத்துடன் குன்றின் மீது வந்து அமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்த இடம் தான் பழனி என கூறப்படுகிறது.

    மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனை சமாதானப் படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கு எதற்கு பழம். பழத்தின் காரணமாக பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என அருளினார். பழம் நீ என்பதுதான் மருவி பழனி என்றாகிவிட்டது. மேலும் முருகன் கோபம் கொண்டு குன்றின் மீது அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என பார்வதி கூறினாள். இன்றும் தமிழகம் எங்கும் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனை காணலாம்.
    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ் வருடத் துக்கான கந்தசஷ்டி விழா நாளை உச்சிகால பூஜையின் போது காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    வரும் 13-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் நடை திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    அதன் பின் மதியம் 2.30 மணிக்கு நடை சாத்தப்படும். வடக்கு கிரி வீதியில் தாரகா சூரன் வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்க முக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது.

    சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை மணம் முடித்து கொடுக்கும் நிகழ்வாக நவம்பர் 14-ந் தேதி மலைக் கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடை பெறுகிறது. மேலும் அன்று இரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கால்யாணம் நடை பெறுகிறது.

    கந்த சஷ்டிக்கென விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நாளை பழனி மலைக் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியதும் தங்கள் விரதத்தை தொடங்கு வார்கள்.

    ×