search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96345"

    • 30-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம் நாளான 30-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார்.

    பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது.

    தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • சின்னக்குமாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
    • மீண்டும் சின்னக்குமாரர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பழனி முருகன் கோவில் உற்சவரான சின்னக்குமாரருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, கலாகர்ஷணம், ஜடிபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு சின்னக்குமாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து மீண்டும் சின்னக்குமாரர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    பின்னர் உச்சிக்கால பூஜைக்கு பிறகு உற்சவருக்கு உபய அபிஷேகங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.

    பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோஷன பூஜை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்று வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருப்பது வழக்கம். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள், தங்குவதற்கு கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிழக்கு கிரிவீதி பழைய நாதஸ்வர கல்லூரி, மேற்கு கிரிவீதி மின்இழுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள சின்னக்குமாரர் விடுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப் கார் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஒரு பெட்டியில் 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். எடையை பொருத்து நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பெட்டி பாறையில் உரசி சேதமானது. அதிக பாரம் ஏற்றியதால் ரோப் கார் பாறையில் உரசியது தெரிய வந்தது. இதனால் பராமரிப்பு பணிக்காக நேற்று ரோப் கார் நிறுத்தப்பட்டது.

    விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்திருந்தனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சில பக்தர்கள் படிப்பாதை வழியாக ஏறிச் சென்றனர். ரோப் காரில் ஏற்கனவே பழைய பெட்டிகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீண்டும் பொருத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும் ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கார்த்திகை உற்சவத்தையொட்டி மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகன புறப்பாடு நடந்தது. பின்னர் 7 மணிக்கு மேல் தங்கரதத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
    • கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள மண்டபங்கள் தூய்மை செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள், கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    இந்நிலையில் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கும்பாபிஷேகத்தின்போது மூலவர் சிலையை பாதுகாத்திடவும், பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஆன்மிக பெரியோர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர், சிற்ப சாஸ்திரம் கற்று அறிந்த ஸ்தபதிகள், ஆகம வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள் என 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடம் குமரகுருபர சுவாமிகள், பழனி ஸ்தல அர்ச்சர்கள் பிரதிநிதி கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுநர் செல்வசுப்பிரமணிய குருக்கள், பழனி திருமஞ்சன ஊழியர்கள் பிரதிநிதி பழனிசாமி, சென்னை தலைமை ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, ஸ்தபதி செல்வநாதன், முதுகலை சித்த மருத்துவம் மற்றும் மாநில மருந்து உரிமம் வழங்கும் ஆணைய அலுவலர் பிச்சையாகுமார், திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, சென்னை அறநிலையத்துறை தலைமையிட இணை ஆணையர், பழனி கோவில் இணை ஆணையர் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை பழனி கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தின் போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாசான சிலை குறித்து சர்ச்சையான கருத்துகள் வெளிவந்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கும்பாபிஷேக பணிகளுக்கு முன்பாக சிலைக்கு மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தேவஸ்தானம் சார்பில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி தொகையான ரூ.1 கோடியே 13 லட்சத்திற்கான காசோலையை இணை ஆணையர் நடராஜன், நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

    • முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார்.
    • பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    விழாவின் 9-நாளான நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முத்துக்குமாரசுவாமி கோதமங்கலம் சென்றார்.

    கோதமங்கலம் கோதீஸ்வரர் கோவில் திடலுக்கு வந்த முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வாழை மரத்தால் அமைக்கப்பட்ட வன்னிகாசூரனை, முத்துக்குமாரசுவாமி அம்பு வில் கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கலந்துகொண்டு வதம் செய்தார்.

    பின்னர் வதம் நிகழ்ச்சி முடிந்ததும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தார். அதையடுத்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.
    • பழனி ஆலயத்தைப் பற்றிய சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் மூன்றாவதாக வைத்து போற்றப்படுவது, 'பழனி'. இங்குதான் போகர் என்னும் மகா சித்தரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்ட முருகன் சிலை இருக்கிறது. இதனை செய்து முடிக்க போகருக்கு 9 வருடங்கள் பிடித்ததாம். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

     இத்தல முருகப்பெருமானுக்கு தினமும் ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படும். இந்த நிகழ்வானது, 5 முதல் 7 நிமிடங்களுக்குள் முடிந்து விடும். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், அதன்பிறகு அடுத்த அபிஷேகம் வரை முருகனுக்கு மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ நடைபெறாது.

     தண்டம் தாங்கி ஆண்டிக் கோலத்தில் இருக்கும் இத்தல இறைவனுக்கு 'தண்டாயுதபாணி' என்று பெயர். இவருக்கு, சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய் ஆகிய நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும், அபிஷேகத்தில் பன்னீரும் சேர்க்கப்படும். இந்த அபிஷேகப் பொருட்களில், சந்தனம், பன்னீர் தவிர மற்றவை அனைத்தும், தண்டாயுதபாணியின் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்படும். அவரை முழுமையாக அபிஷேகிப்பது சந்தனமும், பன்னீரும் மட்டும்தான்.

     நவபாஷாணத்தால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் சிலை, மிகவும் சூடாக இருக்கும். எனவே இரவு முழுவதும் அந்த விக்கிரகத்தில் இருந்து நீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடை பெறும்போது, அங்கு வரும் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

     தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் அணிவிக்கப்பட்ட ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம் ஆகும்.

     தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில், ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. இந்த மரகத லிங்கத்தை தரிசிக்க, வலதுபக்கமாக சென்று தீபம் காட்டுதல் வேண்டும். தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.

     பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னிதியிலும், இன்னொன்று போகர் சமாதியின் மேலும் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

    • கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது.
    • கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி 2018-ம் ஆண்டு நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. இதையடுத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்தது.

    இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.

    குறிப்பாக கோவில் ராஜகோபுரம், சிறிய கோபுரங்கள், வெளிப்பிரகாரத்தில் உள்ள மண்டபங்களில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக அங்கு கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. எனவே பணிகள் நிறைவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    • பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது.
    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான விழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதற்காக கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு முருகபெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிகால பூஜையில் காப்பு கட்டப்பட்டது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது. 10 நாட்களும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும். மேலும் கோவில் வளாகத்திலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

    இதனுடன் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி அன்று முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோவில் 3-ம் படைவீடாகும்.
    • வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, மகாளய அமாவாசை என்பதால், பழனியில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக கேரளா மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், பாதவிநாயகர் கோவில், சன்னதிவீதி, திருஆவினன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோவிலில் உள்ள தரிசன வழிகள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகியவற்றில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய நிலையங்களிலும் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நாளை (திங்கட்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. அதோடு பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் 9-ம் நாளான அடுத்த (அக்டோபர்) மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    ×