search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96364"

    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Congress
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யாததால், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தலைமையில் மும்பை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தராமையாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. எங்கள் கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் எதற்காக அவர்கள் மும்பை செல்கிறார்கள்?. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.

    அதிருப்தியில் உள்ள பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ. கூறுகையில், “நான் எங்கும் போகவில்லை. செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் கட்சி தலைவர்கள் பிரச்சினையை தீா்ப்பார்கள்” என்றார். #Siddaramaiah #Congress
    சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் தெரிவித்துள்ளார். #Eshwarappa #Siddaramaiah
    பெங்களூரு :

    பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சிக்கு சித்தராமையா வருவதாக சொல்லப்படுகிறது. சித்தராமையா மட்டுமின்றி, சோனியா காந்தி வந்தாலும் நாங்கள் பா.ஜனதாவில் சோ்த்துக் கொள்வோம். சித்தராமையா அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக்கொள்கிறார். முன்பு, தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று அவர் சொன்னார். அந்த முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

    முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று சொன்னார். சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் முதல்-மந்திரி ஆவேன் என்று கூறுகிறார்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

    ஆர்.அசோக் எம்.எல்.ஏ. கூறுகையில், “சித்தராமையா பா.ஜனதாவுக்கு வருகிறாரா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கடும் எதிரிகளாக இருந்த சித்தராமையாவும், தேவேகவுடாவும் ஒன்று சேர வில்லையா?” என்றார். #Eshwarappa #Siddaramaiah
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Congress #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நான் கூறினேன். அதே போல் ஜமகண்டி தொகுதியில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் சொன்னேன். ஏறக்குறைய அதே போல் எங்கள் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

    மக்களின் மனநிலையை நான் சரியாக கணித்துள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் மனநிலை பா.ஜனதாவுக்கு எதிராக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.



    காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) புனிதமற்ற கூட்டணியை அமைத்துக்கொண்டதாக பா.ஜனதா தொடர்ந்து கூறியது. காங்கிரஸ் எம்.எல்.சி.யின் மகனை பா.ஜனதாவுக்கு அழைத்து சென்றது புனிதமானதா?. பா.ஜனதாவுக்கு கொள்கை கிடையாது. ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சியினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #Congress #Siddaramaiah
    ஆபரேஷன் தாமரை தோல்வியால் கர்நாடக பா.ஜனதா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தனது டுவிட்டரில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 104 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதனால் ஆபரேஷன் தாமரை மூலமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டது. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாமல் பா.ஜனதா தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிந்த பின்பு கர்நாடகத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படுவது உறுதி என்றும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே மோதல் உருவாகி ஆட்சி கலைந்து விடும் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-



    “பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கலைந்து விடும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பல முறை ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா போட்ட திட்டங்கள் தோல்வியில் முடிந்தது. இதனால் கர்நாடக பா.ஜனதா கோமா நிலைக்கு சென்றுவிட்டது. எனவே மீண்டும் ஆபரேஷன் தாமரையை கையில் எடுக்க பா.ஜனதா நினைக்க வேண்டாம்.

    ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைப்பதை விட்டுவிட்டு சிறந்த எதிர்க்கட்சியாக பா.ஜனதா செயல்படுவது நல்லது. ஜனநாயகத்தில் இதுவே சிறந்ததாகும்.“ இவ்வாறு பா.ஜனதா மற்றும் எடியூரப்பாவை தாக்கி சித்தராமையா கருத்து பதிவிட்டுள்ளார். #Siddaramaiah
    சி.பி.ஐ. புலன் விசாரணை அமைப்பில் தற்போது நடந்து வரும் விவகாரம், பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியின் இன்னொரு வெளிப்பாடு தான் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah
    பெங்களூரு :

    சி.பி.ஐ. அமைப்பில் எழுந்துள்ள மோதல் விவகாரத்தில், அதன் இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனரை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    சி.பி.ஐ. புலன் விசாரணை அமைப்பில் தற்போது நடந்து வரும் விவகாரம், பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியின் இன்னொரு வெளிப்பாடு தான். ஜனநாயகத்தின் தூண்களை பா.ஜனதா அழித்துவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Siddaramaiah
    இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.

    இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.



    அவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.

    சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.

    தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    கர்நாடக மாநில முதல்வராக வேண்டும் என்ற பேராசை இல்லை, ஆனால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #congress
    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 2-வது இடமே பிடித்தது. பா.ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்த போதிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நீண்ட இழுபறிக்குப்பின் குமாரசாமி ஆட்சியமைத்தார்.

    இந்நிலையில் தனக்கு மீண்டும் முதல்வராகும் பேராசை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘நான் முதல்வராக போகிறேன் என்ற எடியூரப்பா கூறுவது போல் நான் எங்கேயாவது அப்படி கூறினேனா?. அது போன்ற கேள்விகள் எழும்ப வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தால், அப்போது பார்க்கலாம்.

    முதலமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு ஐந்து வருடங்கள் கிடைத்தது. நாங்கள் திறமையான அரசை நடத்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை’’ என்றார். #Siddaramaiah #congress 
    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Sabarimala
    பெங்களூரு :

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட பிறகும், இதுவரை பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த விஷயத்தில் இதற்கு முன்பு சித்தராமையா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். #Siddaramaiah #Sabarimala
    பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் ராஜினாமாவால் கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #siddaramaiah
    பெங்களூரு :

    பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பள்ளி கல்வித்துறை மந்திரி என்.மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பெங்களூருவில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது:-

    என்.மகேஷ் ராஜினாமாவால் கூட்டணி அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவரது ராஜினாமாவுக்கும், காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் வேறு கட்சி. எங்களது வேறு கட்சி. அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் அவரிடமே சென்று கேளுங்கள்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #siddaramaiah
    மந்திரி பதவியை கேட்கும் நோக்கத்தில் சித்தராமையாவை பார்க்க வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சந்திக்க சித்தராமையா மறுத்துவிட்டார். #siddaramaiah #Congress
    பெங்களூரு :

    கர்நாடக மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் சேர்ந்தவை ஆகும். மந்திரிசபையில் தனக்கான காலி இடங்களை நிரப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.



    புதிய மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் சித்தராமையாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அவர் கை காட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில் மந்திரி பதவியை கேட்கும் நோக்கத்தில் சித்தராமையாவை பார்க்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் காவேரி இல்லத்திற்கு வந்தனர்.

    ஆனால் அவர், தனக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், யாரையும் சந்திக்க இயலாது என்று கூறி, திருப்பி அனுப்பிவிட்டார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சிலரும் சித்தராமையா வீட்டின் அருகில் வந்தனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #siddaramaiah #Congress
    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah,#Congress
    பெங்களூரு :

    பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சித்தராமையா நேற்று சுற்றுப்பயணம் செய்தார். பாதாமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:-

    ‘மன் கி பாத்’ என்ற பெயரில் வானொலியில் பேசுபவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டாம். அவர்களது வெறும் பேச்சு தான். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. பேச்சில் மயங்கிவிட வேண்டாம். நாங்கள் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.

    நான் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாகி 4 மாதங்கள் ஆகின்றன. நான் கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறேன். அதனால் என்னால் இங்கு அடிக்கடி வர முடியவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்.

    நான் இந்த தொகுதிக்கு வரும்போது, என்னை வந்து நேரில் சந்தித்து மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பேன். நான் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah,#Congress 
    சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. யஷவந்த்ராயகவுடா பட்டீல் பரபரப்பான கருத்தை கூறி இருக்கிறார். #Siddaramaiah #Congress
    பெங்களூரு :

    விஜயாபுரா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷவந்த்ராயகவுடா பட்டீல் விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் இந்த கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அலமட்டி அணை நிரம்பியது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி அந்த அணைக்கு பாகின பூஜை செய்யவில்லை. இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களை முதல்-மந்திரி அலட்சியப்படுத்துவதால், வட கர்நாடகத்தில் தனி மாநில குரல் எழுகிறது. கர்நாடகம் எப்போதும் அகண்ட கர்நாடகமாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    கூட்டணி ஆட்சியில் முதல்-மந்திரி குமாரசாமி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை பெற்று நிர்வாகத்தை நடத்த வேண்டும். கர்நாடகத்தின் இன்றைய நிலைக்கு தொங்கு சட்டசபையே காரணம் ஆகும். முன்பு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்தன. இப்போது அந்த வேகம் குறைந்துவிட்டது. இந்த அம்சங்களை எல்லாம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுத்துக் கூறுவேன்.

    சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரசார் விரும்புகிறார்கள். நான் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ளேன். வாரிய தலைவர் பதவி வழங்கினாலும் பரவாயில்லை. ஆபரேஷன் தாமரையில் நான் விழ மாட்டேன். நான் சாகும் வரை காங்கிரசிலேயே நீடிப்பேன். வேறு கட்சிகளுக்கு செல்லும் திட்டம் இல்லை.

    இவ்வாறு யஷ்வந்த்ராய கவுடா பட்டீல் கூறினார். #Siddaramaiah #Congress
    ×