search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 28 வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
    ஈரோடு:

    காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    இன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும், பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்த்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் காவிரி கரையோரம் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 28 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அந்த வீடுகளில் இருந்தவர்கள் தங்கள் பொருட்களை பரிசல் மூலம் வெளியே கொண்டு வந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

    மேலும் ஆற்றின் கரையில் இருந்த கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 500-க் கும் மேற்பட்டோர் 2 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு, உடை, பிற வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறை, ஊராட்சி துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர். பள்ளி பாளையத்தில் இருந்து கொக்கரையான் பேட்டை செல்லும் பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.

    ஈரோடு காவிரி ஆற்று பாலத்தில் அதிகளவில் வெள்ளம் ஓடுவதால் ஆற்று பாலத்தை கடக்கும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

    வெள்ள நீரை பார்ப்பதற்காக இன்றும் மக்கள் அதிக அளவு கூடி இருந்தனர். கருங்கல்பாளையம் காவிரி பழைய ஆற்று பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்வதால் 3-வது நாளாக இன்றும் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் புதிய பாலத்தின் வழியாக போக்குவரத்து நடைபெறுகிறது. பொது மக்களில் சிலர் வெள்ளத்தை காணும் ஆர்வத்தில் புதிய பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் காவிரி பழைய ஆற்றுப்பாலத்தை தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது.

    வெண்டிபாளையம் பகுதியிலும் காவிரி வெள்ளத்தை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். ஆனால் பாலத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. #tamilnews
    தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த 2 நாட்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று இரவு திருப்பூர் மங்கலம் ரோடு- காலேஜ் ரோடு இடையே உள்ள அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பாலத்தை கடக்காமல் இருக்க இருபுறங்களிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மங்கலம் ரோடு- காலேஜ் ரோடு ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. தற்போது தரைப்பாலம் அடைக்கப்பட்டதால் 10 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லவேண்டும். ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    குற்றாலம் அருவிகளில் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Courtallam
    தென்காசி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்திலே குற்றாலத்தில் சீசன் ஆரம்பம் ஆகும். இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சீசன் களை கட்டியது. இடையிடையே பலத்த மழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே அருவிகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. தொடர்ந்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சீசன் முழுஅளவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

    இதனால் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    குற்றாலம் புலியருவியில் நேற்று முன்தினம் குளிக்க சென்ற வாலிபர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் புலியருவியில் விழுந்து வரும் ஓடை பகுதியில் வரும் தண்ணீரில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயினருவியில் இருந்து வரும் தண்ணீர் சிற்றாற்றில் சேருவதாலும், காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் சிற்றாறில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சிற்றாற்று கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் சிற்றாற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.

    சிற்றாற்று பாசன குளங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Courtallam
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 86 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    குடகு மாவட்டத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 7 மணிக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. அதன் பிறகு நீர்வரத்து 2 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இன்று காலை தொடர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் தொங்கு பாலத்தை தொட்டபடி காவிரி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஒகேனக்கல், ஊட்டமலை, நாகர்கோவில், நாடார் கொட்டாய் மற்றும் நீர்அளவீடு செய்யப்படும் பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் நீர்வரத்தை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆறு 45 கிலோ மீட்டர் தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடுவதால் இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வெள்ளப்பெருக்கால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஒகேனக்கல், நாகர்கோவில் பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 31 வீடுகள் ஆற்று புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவற்றில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 9 வீடுகளை தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் வசித்த 46 பேர் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு கருதி பரிசல்கள் இயக்கவும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லுக்கு மேலே ஆலம்பாடி பகுதியில் அஞ்செட்டிக்கு செல்லும் சாலையில் பிலிகுண்டுலு முன்பாக சாலையில் தண்ணீர் நிரம்பி செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வழியாக ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் அந்த வழியாக யாரும் செல்லமுடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery
    கனமழை எதிரொலியாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #MullaperiyarDam
    கம்பம்:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக- கேரள மாநில எல்லையில் குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது.

    குமுளி அருகே உள்ள இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 2 ஆயிரத்து 200 கன அடியில் இருந்து, 2 ஆயிரத்து 336 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் இரைச்சல் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    மூல வைகை ஆற்றில் தண்ணீர் வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 65 அடியை நெருங்கியது. வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 62 ஆயிரத்து 749 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தில் 250 வீடுகளையும், பவானிசாகரில் 250 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

    கோபியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பைக்கு தனியார் பள்ளி வேன் மாணவ- மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்றது. அங்குள்ள ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பள்ளி வேன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பாதியளவு பகுதி தண்ணீரில் மூழ்கியது. வேனில் இருந்த டிரைவர், பெண் உதவியாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

    திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 685 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்தி அணையில் இருந்து வினாடிக்கு 619 கன தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பலத்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும், சேர்வலாறு அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 814 கனஅடியும், கடனா நதி அணையில் இருந்து வினாடிக்கு 1,132 கன அடியும், கருப்பாநதி அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடியும் திறந்து விடப்பட்டது.

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிக அளவு கொட்டுவதால் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் முண்டந்துறை இரும்பு பாலம், சேரன்மாதேவி, ஏரல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இருக்கும் கல் மண்டபங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

    சிந்துபூந்துறையில் கீழத்தெருவில் உள்ள விநாயகர் சிலை முன்பு உள்ள படித்துறையை தொட்டபடி வெள்ளம் செல்கிறது. கொக்கிரகுளத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த தளவாட பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டது.

    குமரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. நித்திரைவிளை, மங்காடு, பள்ளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளம் வடியவில்லை. அந்த பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். தெரிசணம்கோப்பை- அருமநல்லூர் சாலை, குற்றியாணி பகுதி ஆகிய இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  #MullaperiyarDam

    காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின் பேரில் தலையணைக்கு செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லும் வாயில் மூடப்பட்டு, வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல 2-வது நாளாக இன்று தடைவிதித்தனர்.

    மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    களக்காடு தாமரை குளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப் பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #CoutrallamFalls
    தென்காசி:

    குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி அதன் முன்புறம் உள்ள பாலம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    ஐந்தருவியிலும் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டியது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை நீடித்தது.

    புலியருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அங்கும் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. சிற்றருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நேற்று மாலை பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதையடுத்து குற்றாலம்-தென்காசி சாலையில் பெண்கள் கல்லூரி அருகில் பழமையான மருதமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் இன்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று தென்காசி, குற்றாலம் பகுதியில் சற்று மழை குறைந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் 3-வது நாளாக ஆக்ரோ‌ஷமாக கொட்டுகிறது. இதையடுத்து 3-வது நாளாக இன்று மணிமுத்தாறு அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  #CoutrallamFalls

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    மேட்டுப்பாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்த மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 500 கன அடியும், பகல் 12 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடியும், மாலை 6 மணிக்கு 22 ஆயிரம் கன அடியும் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 97அடியில் ஒரே சீராக இருக்க அணைக்கு வரத்து எந்த அளவோ அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி திடீரென நீர் வரத்து அதிகரித்து. பில்லூர் அணைக்கு 44 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்தது. இதனை சேமித்து வைக்க முடியாததால் வரும் தண்ணீர் 44 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டுபாளையம் சமயபுரம் தடுப்பணை மற்றும் சிறுமுகை கிச்சகத்தூர் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்டப் பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. பாலத்தின் இணைப்பு சாலைகளும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றது. இதனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பரிசல் மூலம் காந்தையாற்றை கடந்து காந்தவயலுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கரையோரப்பகுதியில் உள்ள வாழை தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புக்குள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது. பவானி ஆற்றில் வெள்ளம் இரைச்சலுடன் பாய்ந்து ஓடிகொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் பவானி சாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலத்தை பார்வையிடுவதற்காக லிங்காபுரம் வந்தார். தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலைகளை பார்வையிட்டார்.

    கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சப்-கலெக்டர் கார்மேகம், பயிற்சி கலெக்டர் சிநேகா மேட்டுபாளையம் தாசில்தார் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வசந்தாமணி பவானி சாகர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகள் இருந்தனர்.

    பெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதால் கொச்சி விமான நிலையம் 18-ம் தேதி வரை மூடப்பட்டது. #PeriyarRiverFlood
    கொச்சி:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மழை நீரும் தேங்கி கடல் போல் தேங்கியுள்ளது.

    விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. வரும் சனிக்கிழமை (18-ம் தேதி) பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KochiAirport #PeriyarRiverFlood
    மலைப்பகுதியில் பெய்துவரும் கன மழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #courtallam
    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் இறுதி வரை சீசன் இருக்கும். இந்த ஆண்டு மே மேத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து வழக்கத்தை விட சீசன் ரம்மியமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மலைப்பகுதியில் அவ்வப்போது கன மழை பெய்வதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்று குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில் நள்ளிரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    குற்றாலத்தில் இன்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அருவிகளில் வெள்ளம் காரணமாக அவர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். புலியருவி, சிற்ற‌ருவி ஆகிய 2 அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்ப‌ட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளுக்கு படையெடுத்தனர். வெள்ளம் சற்று குறைந்தாலும் குளிக்க அனுமதி கிடைக்கும் என சுற்றுலா பயணிகள் அருவிக்கரையில் காத்து நின்றனர்.

    தொடர்ந்து குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக குற்றாலம் சுற்றுப்பகுதியில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன.  #courtallam


    இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அடைமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
    சிம்லா:

    வடமாநிலங்களில் தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியான இமாச்சல பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் முகிற்பேழ் மழை எனப்படும் இடைவிடாத அடைமழையும் பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துக்களில் 16 பேர் பலியாகி உள்ளனர்.



    இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. திங்கட்கிழமை வெளியிடப்பட்ட வானிலை மைய அறிக்கையின்படி, சஜன்பூர் திரா பகுதியில் ஒரே நாளில் 307 மிமீ மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1901ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் 277 மிமீ மழை பெய்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.

    இதுதவிர இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மட்டும் 73.8 மிமீ மழை பெய்துள்ளது. இது 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 2011ல் ஆகஸ்ட் 13-ம் தேதி 75 மிமீ மழை பெய்திருந்தது.

    லகால், ஸ்பிட்டி மாவட்டங்கள் தவிர மற்ற 11 மாவட்டங்களிலும் இயல்பு நிலையை விட அதிக அளவில் மழை பெய்துள்ளதாக வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். #HimachalPradeshRain #HeavyRaininHimachal
    மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அம்பை:

    தென் மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று 9-வது நாளாக நீடித்தது. வெளியூர்களில் இருந்து மணிமுத்தாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், “மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. மணிமுத்தாறு அருவியில் அவ்வப்போது வெள்ளம் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் குளிப்பது ஆபத்து என்பதால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர். 
    ×