search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #IndonesiaRain
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

    சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.



    கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 55 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.  #IndonesiaRain
    பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. 

    வெள்ள நீரில் மூழ்கியும், வீட்டின் மேற்கூரைகள் சரிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இங்குள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். திர் பகுதியில் நிலச்சரிவு மற்றும் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

    இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெல்லா மற்றும் பரூகாபாத், கதுவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளத்தில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் பலியாகினர். 

    பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படிருந்த உணவு தானியங்களும், பழத்தோட்டங்களும் நாசமடைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்தன.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #PakistanHeavyRain
    வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது. #NaturalCalamity #HomeMinistry
    புதுடெல்லி:

    வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.

    மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு நேற்று கூடி, பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது.

    * வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    * மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலை குலைந்து போன இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும்.

    * மழை, வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    * புயலால் நிலைகுலைந்து போன புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது.

    இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. #NaturalCalamity #HomeMinistry 
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினர்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #IndonesiaFloods
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
     
    இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 குழந்தைகளும் அடங்குவார்கள்.

    மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #IndonesiaFloods
    பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. #PhilippinesFloods
    மணிலா:

    பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன. இதனால் பெய்துவரும் கனமழையில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.

    கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.



    மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அனேக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அனேக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

    நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. #PhilippinesFloods
    பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #PhilippinesEarthquake
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
     
    ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில், பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.



    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

    இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பைகால் பகுதியில் 16 பேரும், கிழக்கு விசாயாஸ் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 22 பேர் பலியாகி உள்ளனர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    புயல்,வெள்ளம்,நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    புதுடெல்லி:

    நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி ஆபத்தில் சிக்கிய பல நூறு உயிர்களை பேரழிவு காலங்களில் காப்பாற்றுகின்றனர்.

    சில சம்பவங்களில் இந்த வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதவி செய்கின்றனர்.

    இந்நிலையில்,அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு விருது மற்றும்  ரொக்கப்பரிசு அளித்து ஊக்கப்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில் ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருதை ஆண்டுதோறும் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    பேரிடர் காலங்களில் தங்களால் காப்பற்றப்பட்ட நபர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு தனிநபர் அல்லது எந்த தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உரிய ஆதாரங்களுடன் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என இதுதொடர்பாக மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசாக அளிக்கப்படும். தொண்டு அமைப்புகளாக இருந்தால் 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் நற்சான்றிதழும் அளிக்கப்படும். 

    இப்படி விருது பெறும் நிறுவனங்கள் மேற்படி பரிசுத்தொகையை பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் 7-1-2019 தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

    இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பெயர்கள் 23-1-2019 அன்று அறிவிக்கப்படும் என  மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம்:

    தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதையடுத்து விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோகைப்பாடி, நன்னாடு, வழுதரெட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இன்று காலையும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், அரசூர், மயிலம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை தொடர்ந்து தூரிக்கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்தமழை சிறிது நேரம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் வாகனங்களை ஓட்டிசென்றனர். தொடர்ந்து மழை லேசாக விட்டு விட்டு தூரிக்கொண்டே இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து லேசாக மழை பெய்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்ணாடம் கடை வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நின்றது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான அம்புஜ வல்லி பேட்டை, கள்ளிப்பாடி, காவனூர், எசனூர், வெங்கடசமுத்திரம், நகரபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.

    1 மணிநேரம் பெய்த மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


    இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டர்) பின்வருமாறு:-

    சிதம்பரம்-35, கொத்தவாச்சேரி-32, அண்ணாமலைநகர்-31, சேத்தியாத்தோப்பு-30, புவனகிரி-27, ஸ்ரீமுஷ்ணம்-23.40, பரங்கிப்பேட்டை-23, காட்டு மன்னார் கோவில்-22, வடக்குத்து-19, குறிஞ்சிப்பாடி-15, கடலூர்-15.80, லால்பேட்டை-13.80, கீழ்செறுவாய்-13, வேப்பூர்-11, தொழுதூர்-7, விருத்தாசலம்-5.30, பண்ருட்டி-3.

    கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் தமிழகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #ParlimentWinterSession #Flood
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நீர்வளத்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மெக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
     
    கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 4 ஆயிரத்து 902 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 ஆயிரத்து 146 கால்நடைகளும் இறந்துள்ளன.

    கடந்த 2015ல் சுமார் ஆயிரத்து 42 பேர் வெள்ளத்தில் பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 421 பேர் இறந்துள்ளனர். அந்த ஆண்டில் 57 ஆயிரத்து 291 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இதில் தமிழகத்தில் மிக அதிகமாக 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது.



    2016ம் ஆண்டிலும் சுமார் 5 ஆயிரத்து 675 கோடு ரூபாய் மதிப்பிற்கு சேதம் ஏற்பட்டது. இந்த ஆண்டில் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்து 420 பேர் பலியாகினர்.

    இதுபோல், 2017ம் ஆண்டில் வெள்ள பாதிப்பால் 2 ஆயிரத்து 062 பேர் இறந்துள்ளனர். 22 ஆயிரத்து 706 கோடி ரூபாய் மதிப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளார். 

    2015ல் 3.3 கோடி பேரும், 2016ல் 2.6 கோடி பேரும், 2017ல் 4.7 கோடி பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். #ParlimentWinterSession #Flood
    திண்டுக்கல் நகரில் கொட்டித் தீர்த்த மழையினால் கக்கன் நகரில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. #Rain

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்தது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதியான கக்கன் நகரில் மழை நீர் தேங்கி 50 வீடுகளுக்குள் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்களே தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இருந்த போதும் மழை பெய்து கொண்டே இருந்ததால் நீரை முழுமையாக அகற்ற முடியவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). கன மழைக்கு இவரது வீட்டின் சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் ராஜேஷ் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் அருகே உள்ள வைவேஸ்புரம் முனியப்பன் நகரில் சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மண் புழுஉரம் தயாரிக்கும் குடில் முற்றிலும் சேதமடைந்தது.

    துள்ளுப்பட்டி கோம்பை பகுதியில் பலரது வீடுகளில் மேற்கூரைகள் பறந்து சென்றன. தாடிக்கொம்பு பெருமாள் கோவில் செல்லும் சாலையில் மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    தாடிக்கொம்பு - இடையகோட்டை சாலையிலும், எமக்கலாபுரம் பகுதியிலும் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 60 மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேல்பள்ளம் பகுதியில் பல மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சாலையில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. மரங்கள் முறிந்து கடைகள் மீதும் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. நெடுஞ்சாலைத் துறையினர் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். #Rain

    ×