search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. 

    இந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    பிக்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோ திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும்.



    வாட்ஸ்அப்பில் எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது.

    இதேபோன்று பி.ஐ.பி. மோட் இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

    எனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps
    பிரபல மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் தற்சமயம் டிக்டாக் சேவைக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #musically #TikTok


    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். 

    சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள், தரரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர்.

    பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியது.



    மியூசிக்கல்.லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. 

    அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன. 

    புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். #musically #TikTok
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியின் ஸ்டேட்டஸ்-இல் விளம்பரங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    அதன்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் செயலியை கூர்ந்து கவனிப்பவராக இருந்தால், சில நிறுவனங்கள் உங்களை அணுக வாட்ஸ்அப் மூலம் அனுமதி கேட்டிருக்கலாம், மேலும் இதே வழிமுறையை ஃபேஸ்புக் பின்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    புதுவகையான விளம்பரங்கள் மூலம் பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அழைப்பு விடுக்காமல், நேரடியாக நிறுவனங்களை வாட்ஸ்அப் மூலம் தங்களது சந்தேகங்கள் அல்லது புகார்களை தெரிவிக்க முடியும். ஒவ்வொரு நாட்டிலும் நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் கட்டணம் வசூலிக்கும்.

    சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உபெர் என ஏற்கனவே கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை சோதனை செய்ய துவங்கியிருக்கின்றன. எனினும் புதிய ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் 2019 முதல் தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேட்டஸ் பகுதியில் பயனர் எழுத்து, புகைப்படங்கள் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை வைக்கலாம், இவை 24 மணி நேரத்திற்கு பின் தானாக அழிந்து போகும்.

    உலகில் இதுவரை சுமார் 45 கோடி பேர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் ஏற்கனவே விளம்பரங்கள் வருகின்றன. #WhatsAppBusiness #Apps
    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை ஃபேஸ்புக் துவங்கியது. அதன்படி போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கவுன்ட்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. #Facebook


    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    "போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார். 

    "இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

    17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    வாட்ஸ்அப் செயலியில் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலியை தினமும் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், தினசரி 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயனர்கள் தினமும் 200 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால்களை மேற்கொள்கின்றனர் என வாட்ஸ்அப் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது.

    வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தில் ஒரே சமயம் அதிகபட்சம் நான்கு பேருடன் உரையாட முடியும். வாட்ஸ்அப் மெசேஜ்களை போன்றே க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சமும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

    உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps
    கூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. புதிய மாற்றங்கள் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GooglePlay


    கூகுள் பிளே ஸ்டோர் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைகள் சார்ந்த செயலியில் வன்முறை மற்றும் ஆபாசம் சார்ந்த தீம்கள் அனுமதிக்கப்படாது. இதேபோன்று செயலிகளில் உள்ள ஆபாசம் மற்றும் வன்முறை விவரங்களை உடனடியாக நீக்கபக்படும்.

    இத்துடன் வன்முறையை தூண்டுவது, மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு விளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை அனுமதிக்க முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. க்ரிப்டோகரென்சி மைனர்களுக்கு இனி கூகுள் பிளே ஸ்டோரில் இடம் கிடையாது என்பது புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    மைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது.

    மேலும் அதிகளவு விளம்பரங்களை வழங்குவது மற்றும் பயனர்களை அடிக்கடி திசைதிருப்பும் வகையிலான செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் முடக்கவிருக்கிறது. #GooglePlay #Apps
    கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் தவறுதலாக மேற்கொள்ளும் பிழைகளை தானாக சரி செய்ய புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. #googledocs #Apps



    கூகுள் டாக்ஸ் செயலியில் பயனர் அவர்களுக்கே தெரியாமல் மேற்கொள்ளும் இலக்கண பிழைகளை தானாக சரி செய்யும் புதிய அம்சத்தை கூகுள் சோதனை செய்து வருகிறது. கிராமர் சஜெஷன்ஸ் (grammar suggestions) என்ற பெயரில் உருவாகும் இந்த அம்சம் ஏற்கனவே டாக்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்பெல்-செக்கிங் (spell-checking) அம்சத்துடன் இணைக்கப்படும்.

    இவ்வாறு செய்ததும், பயனர் மேற்கொள்ளும் இலக்கிய பிழைகள் தானாக கண்டறியப்பட்டு, அதனை சரி செய்ய கூகுள் தரப்பில் அறிவுறுத்தப்படும். இலக்கியப்பிழைகள் இருப்பின் குறிப்பிட்ட பகுதி நீல நிறத்தில் பிரதிபலிக்கப்படும் என்றும் இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.

    எனினும் இந்த அம்சம் தற்சமயம் கூகுளின் Early Adopter Programme திட்டத்தில் பங்கேற்று இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருப்பதாக ஆன்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்சம் முழுமையாக தயாரானதும், பயனர் சொற்றொடரை முழுமையாக டைப் செய்து முடிக்கும் வரை காத்திருந்து அதன் பின் பரிந்துரைகளை வழங்கும். 



    பயனர் எழுதும் போதே பரிந்துரைகளை வழங்கும் அம்சத்தை பயனர் விருப்பப்படி சரி செய்யவோ அல்லது அப்படியே தொடரவும் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    ஸ்பெல் செக்கர் மற்றும் நேச்சுரல் லேங்குவேஜ் சர்ச் அம்சத்திற்கு பயன்படுத்தப்படும் கூகுளின் மெஷின் லெர்னிங் அல்காரிதம் சார்ந்து கூகுள் கிராமர் செக்கர் (grammar checker) அம்சமும் இயங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர் பயன்படுத்தும் போதே இந்த மென்பொருள் தானாக மேம்படுத்திக் கொள்ளும்.

    மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் மென்பொருளும் இதே போன்ற கிராமர் செக் அம்சத்தை தனது சேவைகளில் வழங்குகிறது. #googledocs #Apps
    ட்விட்டரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 1,43,000 செயலிகள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #TwitterPurge



    ட்விட்டர் தளத்தில் போலி செயலிகள் இடம்பெறாமல் இருக்க பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக பயனர்களுக்கு கெட்ட செயலிகளை குறிப்பிடும் வசதியும் வழங்கப்படுகிறது.

    கெட்ட செயலிகள் தளத்தை பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும். ட்விட்டரின் வழக்கமான API-க்களை இயக்க முதன்முறையாக அனுமதி கோரும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பதிவு செய்யும் டெவலப்பர்கள் தங்களது முழு விவரங்களுடன் ட்விட்டர் API-க்களை எவ்வாறு பயன்படுத்த இருக்கின்றனர் என்ற விவரங்களையும், இவ்வாறு பயன்படுத்துவது பயனுரின் அனுபவத்தை எந்த வகையில் சிறப்பானதாக மாற்றும் என்பதை விரிவாக வழங்க வேண்டும்.


    கோப்பு படம்

    புதிய வழிமுறைகளின் கீழ் ட்விட்டர் API-க்களை பயன்படுத்த டெவலப்பர்கள் சில புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்றாலும், தொடர்ந்து டெவலப்பர்களுக்கு உயர்-ரக, விதிமுறைகளுக்குள் சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ட்விட்டர் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் டெவலப்பர்களும் தங்களது API-க்களை இயக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான நேரத்தை ட்விட்டர் சரியாக குறிப்பிடவில்லை, என்றாலும் டெவலப்பர்கள் புதிய வழிமுறைகளை துவங்கும் முன் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமீப காலங்களில் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் 1,43,000 செயலிகளும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TwitterPurge
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் பெருமளவு பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp

    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் துவங்கியது.

    அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் சஸ்பீஷியஸ் லின்க் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு யாரேனும் போலி வலைதள முகவரிகளை பகிர்ந்தால் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். இதனால் பயனர்கள் குறிப்பிட்ட முகவரியை (லின்க்-ஐ) க்ளிக் செய்யாமலேயே அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து இதனை க்ளிக் செய்யும் பட்சத்தில் ஓபன் லின்க் மற்றும் கோ பேக் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    சஸ்பீஷியஸ் (suspicious) வார்த்தை டையலாக் பாக்ஸ் வடிவில் அடையாளப்படுத்தப்படுகிறது. புதிய சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் அம்சம் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் இனி வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.



    "இந்த இன்டிகேட்டர் ஏதேனும் லின்க் விசித்திரமான குறியீடுகளை கொண்டிருக்கும் பட்சத்தில் வெளிப்படும். ஸ்பேமர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, பயனர்களை க்ளிக் செய்ய தூண்டி உண்மையான வலைதளம் போன்ற தோற்றத்தை உருவாக்கி மால்வேர் நிறைந்த வலைதளத்துக்கு எடுத்து செல்லாம்." என வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இந்த லின்க்கள் தானாக சரிபார்க்கப்பட்டு, இந்த தகவல் யவராலும் பார்க்க முடியாதபடி முழுமையாக என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. புதிய அம்சம் ஃபிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் ஸ்பேம் உள்ளிட்டவற்றை தடுக்கும் என்றாலும் போலி செய்திகளை குறைக்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகரித்து விட்டது.

    பெரும்பாலான வலைதளங்களில் எவ்வித விசித்திரமான குறியீடுகளும் தனது இணைய முகவிரகளில் (லின்க்) கொண்டிருக்கவில்லை, எனினும் இவை போலி செய்திகளை உண்மையானதாகவே வெளியிட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ்களின் எண்ணிக்கையை 5-ஆக குறைத்தும் க்விக் ஃபார்வேர்டு பட்டன் நீக்க வாட்ஸ்அப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    இந்தியாவில் ஐபோன் பயன்படுத்துவோரை அச்சுறுத்தும் புதிய விதிமுறையை டிராய் விதித்து இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறையிடையே நிலவி வரும் போட்டி மேலும் சூடுபிடித்து இருக்கிறது. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவகாரத்தில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் மற்றும் இந்தியாவில் டெலிகாம் சேவையை ஒழுங்குபடுத்தும் டிராய் இடையே பிரச்சனை நிலவி வருகிறது.

    இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் ஒருபடி கீழ் இறங்கி, டிராய் உருவாக்கியிருக்கும் செயலியை தனது ஐபோன் மாடல்களில் அனுமதிக்காத பட்சத்தில் ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களின்  தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அங்கீகாரத்தை ஐபோன்களுக்கு ரத்து செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் டி.என்.டி. (DND) என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி டி.என்.டி. 2.0 என அழைக்கப்படுகிறது. இந்த செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் அனுமதிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. பயனரின் அழைப்பு மற்றும் குறுந்தகவல் விவரங்களை கோருவதால் டிராய் உருவாக்கியிருக்கும் செயலி பயனருக்கு தனியுரிமை பிரச்சனையை ஏற்படுத்தலாம் என ஆப்பிள் கருதுகிறது.



    ஐபோன் பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு ஆப்பிள் நிறுவனம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதன் காரணமாக பயனரின் தகவல் மற்றும் விவரங்களை சேகரிக்க கோரும் செயலிகளிடையே கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்பிள் விதித்து வருகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கும் கூகுள் நிறுவனம் இதுபோன்ற விதிமுறைகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை

    ஆன்ட்ராய்டு பயனர்கள் டி.என்.டி. செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலிக்கு பயனர்கள் மோசமான விமர்சனங்களையே வழங்கியிருக்கின்றனர். இந்த செயலியை ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்வது குறித்து டிராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    இந்த அறிக்கையில், நாட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட்போன் பயனர்களும் தங்களது மொபைல் ஆன்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ். என எவ்வித இயங்குதளம் கொண்டிருந்தாலும் டி.என்.டி. 2.0 செயலியை நிச்சயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை மொபைல் போன் நிறுவனங்கள் அன்றி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியதாகும்.



    "டிராய் விதிமுறைகளின் படி ஒவ்வொரு சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆறு மாத காலத்திற்குள், தங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற செயலிகளை இயக்க தேவையான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "விதிமுறைகளின் படி இதுபோன்ற செயலிகளை அனுமதிக்காத சாதனங்களில் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சாதனங்களை தங்களின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்-இல் இருந்து நீக்க முடியும்."

    அந்த வகையில், டி.என்.டி. 2.0 செயலியை ஐ.ஓ.எஸ். ஆப் ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் அனுமதிக்காத பட்சத்தில் நாட்டில் விற்பனையாகும் ஐபோன்கள் அனைத்திற்கும் 3ஜி, 4ஜி மற்றும் அடிப்படை டெலிகாம் நெட்வொர்க் சேவையை இழக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

    டிராய் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விவகாரத்தை பொருத்த வரை இரண்டு தரப்புமே ஒரே விஷயத்துக்கு போராடி வருகின்றன. இரண்டு தரப்பும் தனது பயனர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கவே நினைக்கின்றன. மொபைல் போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை டிராய் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது, ஆப்பிள் நிறுவனமும் இதே நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.



    எனினும் ஆப்பிள் தனது பயனரின் தனியுரிமை எவ்வித காரணங்களாலும் பறிக்கப்பட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் பயனரின் தனியுரிமை தகவல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எவ்வித செயலியாக இருந்தாலும், அது அரசாங்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பயனரின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் விவரங்களை சேகரிக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க ஆப்பிள் தயாராக இல்லை. 

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை குறைக்க பல்வேறு ஸ்மார்ட் வழிமுறைகள் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இதனால் புதிய ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளம் ஐபோனில் ஸ்பேம் அழைப்புகள் குறைக்கப்படுவதை விளக்கி, டிராய் செயலியை அனுமதிப்பதில் இருந்து விலக்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #telecommunications #Apple
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி செயலியை இவ்வாறு பயன்படுத்த முடியாது. #WhatsApp #Apps



    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகம் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நாடு முழுக்க சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் புதிய மாற்றங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்-இல் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களில் புகைப்படம், வீடியோ அல்லது ஜிஃப் போன்றவற்றுடன் ஃபார்வேர்டு பட்டன் நீக்கப்படுகிறது. இத்துடன் ஃபார்வேர்டு மெசேஜ் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது, எனினும் இந்தியாவில் மட்டுமே இவ்வாறு செய்யப்படுகிறது.

    இந்தியா தவிர்த்து மற்ற சந்தைகளில் ஃபார்வேர்டு செய்யப்படும் எண்ணிக்கையை 20-ஆக நிர்ணயம் செய்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா டெஸ்ட் செய்வோருக்கு வழங்கப்பட்டு அதன் பின் மற்றவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய அம்சம் சர்வெர்-சார்ந்த அப்டேட் கிடையாது என்பதால், பீட்டா அல்லத பயனர்களுக்கு சாதாரண ஆப் அப்டேட் போன்றே வழங்கப்படும். இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்தும் தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் எவ்வாறு இருக்கும் போன்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களில் ஃபார்வேர்டு லேபெல் சேர்க்கப்பட்டது. நாடு முழுக்க போலி செய்திகள் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தொடர்ந்து போலி செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் சோதனை செய்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை முடக்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp



    வாட்ஸ்அப் தலைமை அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய நிர்வாக அதிகாரிகள் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் தேர்தல் சமயங்களில் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

    இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல் காலத்தில் போலி குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய வசதிகளை வழங்குவது குறித்த பணிகளில் ஈடுபட இருப்பதாக வாட்ஸ்அப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த வசதிகள் தேர்தல் துவங்குவதற்கு சரியாக 48 மணி நேரத்திற்கு முன் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற போலி செய்திகளை சரிபார்க்கும் வழிமுறையை இந்திய பொது தேர்தலிலும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவுற்று இருப்பதாகவும். இதில் வாட்ஸ்அப் நிறுவன ஆராய்ச்சியாளர்கள், பொது கொள்கை மற்றும் வியாபார வளர்ச்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.


    கோப்பு படம்

    மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வழிமுறையை நடைமுறைப்படுத்த ரகசியம் காக்கவும், செயல்பட துவங்கியதும் அதிக எச்சரிக்கையாக செயல்பட ஒப்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆண்டு இறுதியில் பின்பற்றப்படும் வழிமுறைகளை 2019-ம் ஆண்டு பொது தேர்தல் காலத்தில் மேலும் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் இந்திய குழு இந்திய வங்கிகளை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய வங்கிகளுடன இணைந்து வாட்ஸ்அப் சேவையில் பண பரிமாற்றம் செய்யும் வசதி வழங்க வேண்டியிருப்பதால், இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    பிப்ரவரி 2018 வரை வாட்ஸ்அப் சேவையை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியா வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. மெக்சிகோ தேர்தல்களில் வாட்ஸ்அப் பயன்படுத்திய வெரிஃபிகாடோ மாடல் (சரிபார்க்கும் வழிமுறை) இந்தியாவில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்ப் செயலியில் போலி தகவல்கள் மற்றும் சந்தேத்திற்கிடமான பயனர்களை கண்டறிய மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. சமூக வலைத்தள பயன்பாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க 2014 ஜனவரியில் 14 பேர் கொண்ட குழுவை நியமித்தது. #WhatsApp
    ×