search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    லாஸ்பேட்டையில் வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை கொட்டுபாளையம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). எலக்ட்ரீசியன் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி. ஆசிரமத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    சுரேஷ் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்த அவர் வீட்டின் வெளிக்கதவு வாசல் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறை கதவு உடைக்கப்பட்டு பீரோ கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணம், 10 பவுன் நகையை காணவில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த சுரேஷ் இது குறித்து கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் விரைந்து வந்து சோதனை நடத்தி நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். #Robberycase

    சேலத்தில் தொழில் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    சேலம்:

    சேலம் காந்திரோடு ராமையா காலனியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 72). இவர் 4 -ரோடு பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் அமெரிக்காவிலும், மற்றொரு மகள் மதுரையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் மகள் தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்காவில் இருந்து சேலம் வந்தார். தந்தை வீட்டில் ஒரு வாரகாலமாக தங்கியிருந்த அவர் நேற்று இரவு அமெரிக்கா செல்ல புறப்பட்டார்.

    அப்போது ஜெயராமன் காரில் தனது மகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு வழியனுப்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார்.

    பின்னர் பெங்களூருவில் இருந்து இன்று காலை ஜெயராமன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் இருந்த நகை, வெள்ளி, பணம் போன்றைவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு ஜெயராமன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் 2 தளங்களிலும் பார்வையிட்டு கொள்ளையர்கள் எந்த வழியாக வந்திருப்பார்கள்? எத்தனை பேர் வந்திருப்பார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரிடம், ஜெயராமன் கூறுகையில் நான், வீட்டுக்குள் 15 கிலோ வெள்ளி, 15 பவுன் நகை, 2 லட்சம் பணம் ஆகியவை வைத்திருந்தேன். இவற்றை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டார்கள் என்றார்.

    மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜன்னல், கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தார்கள். துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. மோப்பநாய் வீடு முழுவதும் சுற்றி சுற்றி வந்தது. இந்த கொள்ளை சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Robberycase

    வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிச் சென்ற சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் குமரவேல். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் மாமியார் சரஸ்வதி தங்கி உள்ளார்.

    இன்று காலை குமரவேல் தனது மனைவியுடன் வெளியே சென்றார். வீட்டில் மாமியார் சரஸ்வதி மட்டும் இருந்தார்.

    காலை 7 மணி அளவில் காரில் டிப்-டாப் உடை அணிந்த 5 வாலிபர்கள் குமரவேல் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சரஸ்வதியிடம் குமரவேல் குறித்து விசாரித்தனர். பின்னர் தாங்கள் காஞ்சீபுரம் வருமானவரித்துறை அதிகாரிகள். வீட்டில் சோதனையிட வேண்டும் என்று கூறி வீட்டுக்கதவை உள்பக்கமாக பூட்டினர்.

    மேலும் செல்போன்களையும் சுவிட்ச்ஆப் செய்யும் படி கூறி சோதனையில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் 5 வாலிபர்களும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக் கொண்டனர். அப்போது சரஸ்வதியிடம் காஞ்சீபுரம் அலுவலகத்துக்கு குமரவேலை வரும்படி கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதற்கிடையே வீட்டிற்கு வந்த குமரவேலிடம் சோதனை குறித்து சரஸ்வதி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம் விசாரித்த போது சோதனையில் ஈடுபட்டது போலியானவர்கள் என்பதும், நகை-பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு அள்ளிச் சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து குமரவேல் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில், வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் வந்து சென்ற காரின் பதிவு எண் பதிவாகி உள்ளது. இதனை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Robberycase

    பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு திருமாந்துறை நோவா நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 43). இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் ஸ்டெல்லா தனது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். அவர் காண் டிராக்ட் முறையில் வீடுகள் கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்றிரவு கார்த்திக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார். வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் ஸ்டெல்லாவின் கை, கால்களை கட்டியதோடு, வாயில் பிளாஸ்திரிய ஒட்டியுள்ளனர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

    இதையடுத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, கார்த்திக் சமீபத்தில் வாங்கிய புதிய சொகுசு காரையும் கடத்தி கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கார்த்திக், கார் காணாததை கண்டும், வீட்டின் கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தனது தாய் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

    பின்னர் நடந்த சம்பவத்தை கேட்டறிந்த அவர், இது குறித்து உடனடியாக மங்களமேடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட சோதனை சாவடிகளில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு காரின் நம்பர் தெரிவிக்கப்பட்டு, சோதனையை தீவிரப் படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.டி.சி.நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் (வயது 62). ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர். இவருடைய மனைவி டல்சி எலிசபெத். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். பெங்களூருவில் உள்ள தனது மூத்த மகனின் குழந்தையை பார்ப்பதற்காக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 12-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு சென்றனர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேல் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ஜெயசீலன் சுந்தர்சிங் சாமுவேலிடம் தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 வெளிநாட்டு கேமராக்கள், 2 கைக்கெடிகாரங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 
    செட்டிப்பாளையம் அருகே கார் விற்பனை பிரதிநிதி வீட்டில் நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்தவர் கோமதிநாயகம் (வயது 60). கார் விற்பனை பிரதிநிதி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் ஜவுளி எடுக்க சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த கோமதிநாயகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 9½ பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து கோமதி நாயகம் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சூரமங்கலம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றார். அவரது மனைவி வளர்மதி நேற்று வீட்டை பூட்டி விட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.25ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

    வீட்டிற்குள் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #Robberycase

    என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். #Robberycase

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 56), விழுதூர் இயற்கை எரிவாயு பிளாண்டில் என்ஜினீயராக உள்ளார்.

    கடந்த 17-ந் தேதி புருசோத்தமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். அவரது கார் டிரைவர் தினமும் வந்து கார்டனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் செல்வார்.

    நேற்று முன்தினம் வந்த கார் டிரைவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சென்னையில் உள்ள புருசோத்தமனுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 5½ பவுன் நகைகள், ஒரு வைரத்தோடு, 2½ கிலோ சில்வர் பொருட்கள், 3 கைகடிகாரங்கள், எல்.இ.டி. டி.வி. என மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக கேணிக்கரை போலீசில் புருசோத்தமன் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பொருட்கள் திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Robberycase

    மதுரை அருகே வியாபாரியை வழி மறித்து பணம் மற்றும் செல்போனை 3 பேர் பறித்துச்சென்றனர். #Robberycase

    பேரையூர்:

    மதுரை திருநகர் பாலாஜி நகரைச்சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் நாகராஜ் (வயது 30). திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு, நாகராஜ் வீட்டிற்கு புறப்பட்டார். கருவேலம்பட்டியை ரெயில்வே கேட் அருகே மொபட்டில் அவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நாகராஜை வழி மறித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் நாகராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர், ஊராண்ட உரப்பனூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, அந்த கடைக்குள் யாரோ புகுந்து ரூ.4,150 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    சத்துவாச்சாரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-5, 6-வது தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 31). சென்னை ஆவடியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரேகா ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி நேற்று இரவு 10 மணி காட்சி சினிமா பார்க்க சென்றனர். இதனை நோட்ட மிட்ட வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 2 பீரோக்களில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறினான். அந்த நேரத்தில் சினிமாவுக்கு சென்றிருந்த பாபு. அவரது மனைவி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்களை கண்டதும் வாலிபர் வேகமாக ஓடினான். இதனை கண்டு திடுக்கிட்ட பாபு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். ஆனால் கொள்ளையன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்து ஓடிய கொள்ளையன் அரைக்கால் டவுசர் மற்றும் முகமூடி அணிந்து வந்ததாக கூறினர். கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை அருகே 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைஅய்யனார் (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, சில்வர் பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அலங்காநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (44). உடல்நலக்குறைவு காரணமாக இவர் வீட்டை பூட்டிவிட்டு பெருங்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 1½ பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews

    நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள தில்லை நகர் அண்ணாசாலை பகுதியில் குடியிருப்பவர் முருகேசன்(வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனது மகன் வீட்டுக்கு முருகேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரங்கநாதன் என்பவர், தினசரி மாலை நேரத்தில் முருகேசனின் வீட்டுக்கு வந்து மின்விளக்கு போட்டு செல்வார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனின் வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு ரங்கநாதன் வரவில்லை. இதை தொடர்ந்து மறுநாள், ரங்கநாதன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னையில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை காணவில்லை. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், கதவு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகையை பதிவு செய்து சென்றனர்.

    கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    ×