search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுமலதா (வயது 31). இவருடைய பெற்றோர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் நேற்று சுமலதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுமலதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மதிப்புடைய செல்போன், ரூ.150 ஆகியவற்றையும் பறித்தனர்.

    இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவர், ‘‘திருடர்கள்... திருடர்கள்.. யாராவது வந்து அவர்களை பிடியுங்கள்’’ என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். உடனே அந்த வாலிபர்கள் கத்தியை எடுத்துக்காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சுமலதா கண்ணீர் மல்க அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுமலதாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் தாதகாப்பட்டி, சண்முகாநகரை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து செல்போனையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வழிப்பறி செய்த நகை ஆகியவற்றை என்ன செய்தார்கள்? என்பது பற்றி 2 பேரும் சொல்லவில்லை. இவர்கள் மீது 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சர்க்கஸ் பார்க்கச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த முத்துராமன் மனைவி லதா (வயது 49). இவர் அய்யர்பங்களா பகுதியில் நடைபெற்ற சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றார்.

    பஸ்சில் இருந்து இறங்கி புதுநத்தம் ரோட்டில் நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி லதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து தல்லாகுளம் போலீசில், லதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், நகை பறித்ததாக கே.புதூர் குட்டை கார்த்திக், வண்டியூர் சேவுகப் பெருமாள், தெற்குவாசல் தினேஷ், ஆனையூர் பிரகாஷ், காரைக்குடி சூடாமணிபுரம் காளிமுத்து, வில்லாபுரம் மொட்டை செல்வம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள முனிப்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் நோக்கி சென்றார். மண்டையூர் சாலை அருகே சென்றபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மறித்து, ரவியின் கழுத்தில் அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 வாலிபர்களையும் விரட்டி சென்றார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மண்டையூர் போலீசார், 2 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் விரட்டிச்சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த செல்வக்குமார்(34), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டி(35) என்பதும், அவர்கள் மாத்தூர் சிதம்பரம் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமாருடன்(35) சேர்ந்து கடந்த 7 மாதங்களாக கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர்களை சிதம்பரம் நகர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கிருந்த வினோத்குமாரை பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து, கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், புதுக்கோட்டை , திருச்சி, பெரம்பலூரில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் சுந்தரபாண்டி மீது 7 கொலை வழக்குகளும், 3 கொள்ளை வழக்குகளும், செல்வக்குமார் மீது 4 கொள்ளை முயற்சி வழக்குகளும், 6 வழிப்பறி வழக்குகளும், 7 கொலை வழக்குகளும், வினோத்குமார் மீது 2 கார் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் 3 பேருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. இளை ஞரணி துணைஅமைப்பாளர் பாலச்சந்தர், வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார், சுந்தரபாண்டி, வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம், 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பாலச்சந்தர் மீது மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்காடு அருகே நகை கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

    பாலக்காடு:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் டி.எஸ்.பி. கிருஷ்ணதாசுக்கு நகை கடை கொள்ளையர்கள் பாலக்காடு பகுதியில் சுற்றி திரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து ஆலத்தூர் இன்ஸ்பெக்டர் எலிசபெத் தலைமையில் போலீசார் ஆலத்தூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது நகை கடை கொள்ளையர்களான கண்ணம்பிரையை சேர்ந்த அப்துல் சலாம் (24), பாம்பாடி ரெலின் ஜோசப் குரியன் (24), சங்கனாச்சேரி ஜாக்சன் (24) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம், தங்க செயின்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் விசாரித்த போது ஆலத்தூர், வடக்கஞ்சேரியில் பாதுகாப்பு இல்லாத நகை கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது.

    மேலும் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நகை கடைகளில் கொள்ளையடிக்க திட்டம தீட்டி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து 3 பேரும் 5கைது செய்யப்பட்டனர். பின்னர் பாலக்காடு சிறையில் அடைக்கப்பட்டனர்

    வேலூரில் திருடிய பைக் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேபி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், அந்த மோட்டார் சைக்கிள் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த சந்தானம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஆரணியில் திருடப்பட்டதும் தெரியவந்தது.

    மேலும் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில், வாலாஜாபேட்டையை அடுத்த சாத்தம்பாக்கத்தை சேர்ந்த சத்யா (வயது 25), ராணிப்பேட்டை பெரியதாங்கலை சேர்ந்த கருணாகரன் (48) என்பதும், இவர்கள் ஆரணி, களம்பூர், வேலூர், ஆரணி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 15 மோட்டார் சைக்கிள்களை எஸ்.யு.வனம் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறினர்.

    இதையடுத்து 15 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து சத்யா, கருணாகரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் ஏற்கனவே வழிப்பறி, ஆடு திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    போடி பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைதானான்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் பீதியில் உறைந்து போனார்கள்.

    எனவே கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு பகலாக போடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் ரோந்து வந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி நகரை கலக்கிய பிரபல கொள்ளையன் மனோஜ் என்பது தெரிய வந்தது.

    போடி தேவர் காலனியைச் சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். இவரிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.20 ஆயிரம ரொக்கப்பணம் ஆகியவை மீட்கப்பட்டது. கொள்ளையனை போலீசார் கைது செய்து போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    மதுரவாயலில் 3 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர உதிரி பாகங்கள் கடை, டிஜிட்டல் பேனர் கடை மற்றும் ஒரு பெட்டி கடை அடுத்தடுத்து உள்ளன.

    காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது 3 கடைகளின் ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடைகளில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. 3 கடைகளிலும் மொத்தம் ரூ. 48 ஆயிரத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றனர்.

    இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 1½ லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    செங்குன்றம்:

    சோழவரம் காரனோடை நாரணம்பேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 22-ந் தேதி செங்குன்றத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதேப்போல் செங்குன்றத்தை சேர்ந்த மின் ஊழியர் யுகேந்திரனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

    குற்றவாளிகளை பிடிக்க புழல் உதவி கமிஷனர் வெங்கடேசன் மேற்பார்வையில், சப்-இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருவொற்றியூர் இந்திரா நகர் பேசின் சாலையை சேர்ந்த கருணாகரன் (38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ரூ.1½லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கருணாகரனை போலீசார் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    புதுவையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் வங்கி ஊழியர் உடந்தையா? என்று கைதான பெண்ணிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் இந்த ஏடி.எம். மையத்தில் ஒரு இளம்பெண் நுழைந்தார்.

    அந்த பெண் முறை கேட்டில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக மும்பையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து புதுவை வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

    மேலும் அருகில் உள்ள உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால், அதற்குள் அந்த பெண் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளயடித்து விட்டு தப்பி சென்று விட்டார். மொத்தம் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 700 கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை அடையாளம் கண்டனர்.

    இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை வெளியூருக்கு தப்பி செல்ல முயன்ற அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த சித்ரா என்ற ஏஞ்சல் (வயது 28) என்பதும், கணவரை விட்டு பிரிந்த இவர் புதுவை கரியமாணிக்கம் பூந்தோட்டம் பகுதியில் தங்கி எய்ட்ஸ் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தன்னார்வலராக இருந்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் ஏ.டி.எம். மையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் சித்ரா கூறியதாவது:-

    சம்பவத்தன்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் கதவு திறந்து இருந்ததால் பணத்தை எடுக்க சென்றதாக தெரிவித்தார்.

    ஆனால், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 120-ஐ மட்டுமே போலீசார் கைப்பற்றினர். மீதி பணம் எங்கே? என கேட்ட போது, செலவு செய்து விட்டதாக சித்ரா தெரிவித்தார்.

    இதற்கிடையே நள்ளிரவு 11 மணிக்கு கரியமாணிக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சித்ரா வர காரணம் என்ன? மேலும் ஒரே நாள் நள்ளிரவில் ரூ. 1 லட்சம் ரூபாயை செலவு செய்ததாக சித்ரா கூறியது போன்றவற்றால் போலீசாருக்கு சித்ரா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த கொள்ளையில் அந்த வங்கியை சேர்ந்த பணம் நிரப்பும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அந்த வங்கியில் பணம் நிரப்பும் ஊழியர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து ஊழியர் வீட்டில் புகுந்த கட்டிட தொழிலாளி பீரோவில் இருந்த 11 பவுன் திருடிச் சென்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே சென்னிகுளத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி ஞானவள்ளி. சிவஞானம் கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கும் சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருத்தப்பாண்டி (39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் சில நேரங்களில் கருத்தப்பாண்டி சென்னிகுளத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஞானவள்ளி வீட்டில் குழந்தைகளை விட்டு விட்டு கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவின் லாக்கரை மர்ம நபர் உடைத்து உள்ளே இருந்த 11 பவுன் நகைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் வந்த நபர் யார் என்று தெரியவில்லை.

    இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஞானவள்ளி புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சித்ரகலா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு கருத்தப்பாண்டி வந்து சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் அருகே இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கருத்தப்பாண்டியை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞானவள்ளியின் வீட்டில் புகுந்து 11 பவுன் நகையை திருடியதை கருத்தப்பாண்டி ஒப்புக்கொண்டார்.

    மேலும் திருடிய நகையை விற்று செலவு செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கருத்தப்பாண்டி மேலும் இது மாதிரியான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு சிங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் வேலுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி மீனாட்சியையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர். இது குறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    சிங்கராஜபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துக்குமார் வேலை வி‌ஷயமாக வருசநாடு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 மற்றும் கடிகாரத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப் பறியால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் கணபதி நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

    கிறிஸ்தவரான இவர் தனது மனைவி ஜெனிபர் மற்றும் மகன் சுஜன் ஆகியோருடன் நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக இரவு 11 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சுரேந்தர் மற்றும் குடும்பத்தினர் வழிபாட்டை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 31 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

    சுரேந்தர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தடவியல் நிபுணர்கள், துப்பறியும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர்.

    மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரு கிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நெருக்கடியான குடியிருப்பு பகுதியில் நகைகள் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×