search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    • கவர்னர் பதவி இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்திருக்க முடியும்.
    • கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் காலாவதியாகி உள்ளது. கவர்னர் பதவி என்பதே காலாவதியான விஷயம். கவர்னர் பதவி இல்லையென்றால் இந்நேரம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழித்திருக்க முடியும். கவர்னர் பதவி தேவையில்லாத ஒன்று. அந்த பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் தீர்ந்து விடும்.

    எதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை பாதுகாக்க துடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைத்த வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவர்களுக்கு புரியாது. மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இத்திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது.

    அப்போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதில் புரியும். மாணவர்கள் யூ-டியூப்பில் அறிவியல் சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, அதில் எழும் சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
    • ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை இயற்றி தமிழக அரசு கடந்த மாதம் 1-ம் தேதி கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா கடந்த அக்டோபர் 19-ம் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்பின், ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடந்த 24-ம் தேதி தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். அவர் கேட்டுள்ள விளங்கங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அரசு பதில் அளித்தது. எனினும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் காலாவதி ஆகிவிட்டது.

    இந்நிலையில், தி.மு.க. எம்.பி கனிமொழி கூறுகையில், ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்றுதான். அது காலாவதியான பதவிதான். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அந்த மசோதா காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

    • கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும்போதே மர்ம நபர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகின்றது.
    • இதனால் கனிமொழி எம்.பி. வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் மக்கள் பணிக்காக தூத்துக்குடி குறிச்சி நகர் பகுதிகளில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

    இதற்கிடையே, கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும்போதே மர்ம நபர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகின்றது. இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. அலுவலக தரப்பினர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். தற்போது, தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கனிமொழி எம்.பி.யின் தூத்துக்குடி இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கனிமொழி எம்.பி வசிக்கும் வீட்டில் மர்ம நபர் புகுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.
    • தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது.

    திருநெல்வேலியில் நடைபெற்ற பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இலக்கிய விழாக்கள் அதிகமாக நடத்தப்படுகிறது. தமிழை வளர்க்கவே இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது.

    முன்பு மதுரை, சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது.

    புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். கேரளா மாநிலத்தில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதில்லை. அதை மறந்து விட்டார்கள். மறந்து போனதை உருவாக்கி தருவது இந்த இலக்கிய திருவிழா.

    முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதியின் புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும். திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தியது.

    சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள்.இன்றைய சினிமாக்களில் பெண்ணடிமை இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை தொடர்பாக எழுதினார்.

    தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாச்சாரம் அழிந்து போய் விடக்கூடாது. தமிழகத்துக்குள் சாதி, மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்களே காரணம் ஆகும்.

    இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை. நீதிமன்ற மொழியில் தமிழை அனுமதிக்க மறுக்கிறார்கள். கீழடியை அவர்கள் ஏற்கவில்லை. நமது இலக்கியம், கருத்துகள், சுய மரியாதையை காக்க தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத்துறை ஆகும். அனைத்தையும் மூடிவிடலாம்.
    • மூடமுடியாத ஒரே துறை விவசாயம் தான். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வேளாண்மை துறை சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண்மை சார்ந்த பொருட்களை பார்வையிட்டனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள். சண்முகையா, மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. விவசாயம் தான் நாட்டின் ஆணிவேர்.

    கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது மூடப்படாத ஒரே துறை விவசாயத்துறை ஆகும். அனைத்தையும் மூடிவிடலாம். ஆனால் மூடமுடியாத ஒரே துறை விவசாயம் தான். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயிகளின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப விவசாயிகளை தயார்படுத்த வேண்டும். விவசாய ஆராய்ச்சியில் புதிய பயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டு முன்னோடியாக இருக்கிறோம். அது வெளியில் தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.
    • தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

    அப்போது நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். எங்களுக்கு அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.

    தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நேரத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 128-வது வார்டு சாரதா நகர் பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கி இருப்பதாக கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனை பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
    • ஏ.வி.எம். காலனி பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் கவுன்சிலர் ரத்னா தொடர்ந்து ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்று வருகிறார்.

    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தில் 128-வது வார்டில் பருவ மழையால் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளார் கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரன்.

    128-வது வார்டு சாரதா நகர் பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கி இருப்பதாக கவுன்சிலர் ரத்னா லோகேஸ்வரனை பொதுமக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே அவர் இரவு பகல் பாராமல் ஜே.சி.பி. எந்திரம் மூலமாகவும் மோட்டார் பம்பு மூலமாகவும் வடிகால் நீரை அகற்றி பணியாற்றி உள்ளார்.

    தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகராஜா அங்கு சென்று பார்வையிட்டு உள்ளார். தொடர்ந்து இளங்கோ நகர், சாய்பாபா காலனி, வெங்கடேஸ்வரா நகர், தாரா சந்த் நகர், சஞ்சய் காந்தி நகர், கிருஷ்ணா நகர், காமராஜர் சாலை, பங்காரு காலனி, மாரியம்மன் கோவில் தெரு, ஏ.வி.எம். காலனி பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் கவுன்சிலர் ரத்னா தொடர்ந்து ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அவருடன் வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜா உடன் சென்றிருந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு பெண் கவுன்சிலரை தான் பார்த்ததே இல்லை என்று பதிவு செய்துள்ளார். அதற்கு ரத்னா லோகேஸ்வரனும் மறுபதிவு செய்து நன்றி தெரிவித்தார்.

    சமூக வலைத்தளத்தில் இந்த பதிவை பார்த்த எம்பி கனிமொழியும் ரத்னா லோகேஸ்வரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு செய்துள்ளார்.

    • ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கனிமொழி கூறினார்.
    • கனிமொழியின் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

    சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

    தி.மு.க. இதை பொறுத்துக்கொள்ளாது. இதற்காக எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கனிமொழியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
    • தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் சைதை சாதிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.
    • பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

    அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    டுவிட்டரில் குஷ்பு, ஆண்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தால் அது அவர்கள் வளர்ந்த வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது.

    பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள், தங்களை கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லி கொள்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுதான் புதிய திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்.

    இதை யார் பேசியிருந்தாலும், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு போதும் இந்த நடத்தையை ஏற்க முடியாது.

    இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தனது தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

    • மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என கனிமொழி எம்பி தகவல்
    • அப்போதைய முதல்வர் மீதும் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய முதல்வரை விசாரிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும் கூறினார்.

    சரியாக விசாரித்து விட்டு இன்னும் என்னென்ன பண்ணவேண்டுமோ அதை செய்வார். மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

    அப்போதைய முதல்வர் மீதும் எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என எழுந்துள்ள புகார் குறித்து கேட்டபோது, இதுதொடர்பாக முழுமையாக விசாரித்து முதல்வர்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றார் கனிமொழி.

    • இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
    • முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நான் துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்பு முதன் முதலாக இந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். இதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எந்த அளவிற்கு அரசு மக்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    அதேசமயம், கடந்த ஆட்சியின் குறைகளையும் தற்போது தி.மு.க. அரசு சரி செய்து வருகிறது. 10 ஆண்டுகள் நடைபெற்ற பிரச்சினைகள் மக்கள் சந்திக்கக்கூடிய கஷ்டங்கள் இவை எல்லாம் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறார். மேலும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

    மக்களுக்கு என்ன வேண்டும் என சிந்தித்து மக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே நடவடிக்கைகள் எடுத்து அதனை நிறைவேற்றி தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார். இதனால் பெண்கள் தன்னம்பிக்கையோடு வெளியே சென்று வருகிறார்கள்.

    நம்ம வீட்டு பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அரசு ரூ.1000 வழங்கும் திட்டத்தை உருவாக்கி தந்தவர் முதல்-அமைச்சர். பெண்களின் உயர்கல்வி கனவு எந்த விதத்திலும் நின்று போகக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தந்து உள்ளார்.

    பள்ளிகளில், பசியோடு மாணவர்கள் மதிய உணவு வரை காத்திருக்க கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார். இந்த திட்டம் மதிய உணவு திட்டத்தை போல எல்லா பள்ளிகளிலும் விரைவில் கொண்டு வரப்படும்.

    தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு எல்லா பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கும் படித்த இளம்பெண்கள், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

    எல்லா பகுதிகளும் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக மாற வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான முதலீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகளை, வளர்ச்சியை கொண்டு வந்த ஆட்சி தி.மு.க . ஆட்சி.

    இந்த ஆட்சி தமிழக மக்களின் உரிமைக்காக, மொழி உணர்வுக்காக, இன உணர்வுக்காக உரிமைகளுக்காக போராடக்கூடிய ஆட்சி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    நாம் அனைவரும் அவருடன் நின்று நம்முடைய எதிர்காலத்துக்காக நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நம்முடைய சுயமரியாதைக்காக அவரோடு நின்று அவர் வழியில் பயணம் செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×