search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97071"

    சாரதா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது பலவந்தமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #NaliniChidambaram
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த சிட்பண்ட் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.



    அந்த மனுவில் பெண்களை அவர்கள் இருப்பிடம் அன்றி வேறு இடத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது கட்சிக்காரருக்காக வாதாடியதற்கு சம்பளம் பெற்றதற்காக வக்கீல்களை விசாரிக்க முடியாது என்றும் அதனை துவக்கத்திலேயே கிள்ளி எரிய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண்களை வேறு பகுதிக்கு விசாரணைக்காக அழைக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தாது என்றும், சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த அசோக் புசான், ஏ.கே.ஷிக்ரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் நளினி சிதம்பரத்துக்கு எதிராக பலவந்த நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், நளினி சிதம்பரத்தின் இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SupremeCourt #NaliniChidambaram
    பாரத ஸ்டேட் வங்கி மோசடியில் ஈடுபட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. #NathellaJewellery
    சென்னை:

    சென்னையில் செயல்பட்ட நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ரூ.380 கோடி மோசடி செய்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள நாதெள்ள சம்பத் ஜூவல்லரி நகைக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்புள்ள 37 அசையா சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #NathellaJewellery
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #INXmediacase
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரது மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை கைது செய்ய சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #PChidambaram #INXmediacase
    குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GutkaScam
    சென்னை:

    சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் குட்கா புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை நடைபெற்றது.

    இந்த நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் செங்குன்றத்தில் சில குடோன்களில் சோதனையிட்டபோது அங்கு ரகசியமாக குட்கா போதை பொருள் தயாரித்து பொட்டலங்களாக மாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்தது தெரியவந்தது. மேலும் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் யார்- யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இடம் பெற்று இருந்தது.

    இந்த விவகாரத்தை தி.மு.க. சட்டசபையில் கிளப்பியது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சேகரித்தது. அதில் குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கிடையே குட்கா ஊழலில் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது புகார் கூறப்படுவதால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே குட்கா ஊழலில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவு தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடிதம் எழுதினர். ஆனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து விட்டதாகவும், தங்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் லஞ்ச ஒழிப்பு துறை மறுத்துவிட்டது.

    இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் ஒரு விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு 2-வது விசாரணை அமைப்புக்கு அனுப்பி வைக்க தேவையில்லை என்றனர்.

    இதை மறுத்த மத்திய விசாரணை அதிகாரிகள் அதுபோன்ற விதிகளோ, தகவல் பரிமாற்ற வழிமுறைகளோ எதுவும் கிடையாது என்றனர்.  #GutkaScam
    மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.
    மும்பை:

    மராட்டியத்தை சேர்ந்த தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக தனது நிலக்கரி சுரங்கத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் விரிவுபடுத்தியது. அந்த நிறுவனம் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளனர்.

    இதன்படி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள ரூ.80 கோடி மதிப்பிலான தொழிற்சாலை மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ரூ.21 கோடி நிலம் ஆகியவை முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.


    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. #PNBFradu #NiravModi
    மும்பை:

    ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  #PNBFradu #NiravModi #Tamilnews 
    வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்வதற்காக அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #VijayMallya
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த விஜய் மல்லையா மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர்.

    நிதி மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி, வழக்கு விசாரணை முடிந்த பின்னரே முறைகேட்டில் ஈடுபட்டவரின் சொத்துகளை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்தின்’ படி தப்பியோடிய குற்றவாளியின் அனைத்து சொத்துகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    எனவே இந்த சட்டத்தின்படி மல்லையாவை ‘தப்பியோடிய குற்றவாளி’ என அறிவித்து, மல்லையா மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை கோர்ட்டில் புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்.

    அமலாக்கத்துறையின் இந்த கோரிக்கைக்கு கோர்ட்டு அனுமதி அளித்தால், புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நபர் மல்லையாவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayMallya
    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் பெற்று மோசடி செய்துள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது இரண்டாவது குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #MoneyLaundering
    மும்பை :

    பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

    இந்நிலையில், 2005 - 10 காலத்தில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, விஜய் மல்லையா, 6,027 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது.

    இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவிற்கு செந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #VijayMallya #MoneyLaundering 
    நாட்டையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் கொல்கத்தா அலுவலகத்தில் ஜூன் 20-ம் தேதி ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலத்தில் நிறுவப்பட்ட சாரதா நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஈடுபட்டிருந்ததால் அம்மாநிலத்தின் ஆட்சியே ஆட்டம் கண்டது.

    இந்த வழக்கு தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்சா சென் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய மந்திரியின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தின் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தது. சாரதா சிட் பண்டு நிறுவனத்திடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோரஞ்சனா சிங் என்பவருக்கு அளிக்கப்பட்ட பண விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.



    முன்னதாக, ஏப்ரல் 7-ம் தேதி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார்.

    இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    பண மோசடி வழக்கு தொடர்பாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #VijayMallya #MoneyLaundering
    புதுடெல்லி:

    பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

    இந்த நிலையில் 2005-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.6,027 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை வாங்கிய கடனை போலியான பல்வேறு கம்பெனிகளில் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தது.

    இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

    அண்மையில் மத்திய அரசு தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.

    மேலும், இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.  #VijayMallya #MoneyLaundering
    ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை தனியாரிடம் ஒப்படைத்த ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவிற்கு சொந்தமான ரூ.44.75 கோடி மதிப்புடைய இடத்தை அமலாக்கத்துறையினர் இன்று ஜப்தி செய்துள்ளனர். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரெயில்வேதுறை மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமான 2 ஓட்டல்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

    ராஞ்சி மற்றும் பூரி நகரில் உள்ள மேற்கண்ட இரு ஓட்டல்களின் நிர்வாகத்தையும் விஜய் கோச்சார், வினய் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தற்கு கைமாறாக பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பினாமி நிறுவனத்துக்கு 3 ஏக்கர் வீட்டுமனை லஞ்சமாக பெறப்பட்டதாக தெரியவந்தது.

    இந்த விவகாரம் முடிந்த பின்னர் வேறொருவருக்கு சொந்தமாக இருந்த அந்த பினாமி நிறுவனம் லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் பெயரில் மாற்றப்பட்டது. 2010-2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த பரிமாற்றங்கள் முடிவடைதற்குள் ரெயில்வே மந்திரி பதவியை லாலு ராஜினாமா செய்தார்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் லாலு குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக லாலு, ரப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவின் தனாபூர் பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலம் மற்றும் பாட்னாவில் உள்ள 11 பிளாட்களை உடைய மற்றொரு இடத்தையும் பரிமுதல் செய்ய அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வணிக வளாகம் கட்டுவதற்காக இருந்த 11 பிளாட்களை உடைய சுமார் 44.75 கோடி மதிப்புடைய லாலுவின் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தை இன்று அமலாக்கத்துறையினர் ஜப்தி செய்துள்ளனர்.  #LaluPrasadYadav
    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 2-வது முறையாக அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் ஆஜரானார். #Chidambaram #AircelMaxiscase
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, ஜூன் 5-ம் தேதி ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலகட்டங்களாக நடைபெற்ற அந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற்றது.



    இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று நடைபெறும் விசாரணையின்போது சிதம்பரம் அளிக்கும் வாக்குமூலத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, சற்றே மாறுபட்ட கோணத்தில் ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. #Chidambaram #AircelMaxiscase
    ×