search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிலக்கு"

    பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
    பாட்னா:

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற நிதிஷ், ஏப்ரல் 5-ம் தேதி அன்று மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி, வர்த்தகம், சேமிப்பு, போக்குவரத்து, விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

    பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு

    எனினும் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு, மாநிலத்தில கள்ளச் சாரயம் குடித்து 47 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்து அமைச்சர்கள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    அந்த கூட்டத்தில், மதுவிலக்குஉத்தரவை மீறும் போலீஸ் மற்றும் கலால் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலர் சைதன்ய பிரசாத் கூறியதாவது:  

    சமீபத்திய கள்ளச்சாரய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மதுவிலக்கை மீறும் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், காவல்நிலைய அதிகாரிகள்(எஸ்.எச்.ஓ) உள்ளிட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தந்த பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்தத் தவறிய போலீசார் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஸ்டேஷன் இன்சார்ஜ் பதவி வழங்கப்படாது என்றும் முதல்வர் கூறினார்.

    மேலும், கலால் மற்றும் பதிவுத் துறையின் மூத்த அதிகாரிகளும், காவல் துறையினரும் அடிக்கடி கூட்டங்களை நடத்தி விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    பிற மாநிலங்களில் இருந்து பீகாருக்கு மதுபானம் கடத்தப்படும் வழிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

    மதுபானங்களை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநில அரசு விரைவில் பிரச்சாரத்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மது அருந்துவதால் 200 வகை நோய்கள் தாக்குகின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உலகின் புனித இதழாகப் போற்றப்படும் லான்செட் இதழில் உலக அளவிலான மதுநுகர்வு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டி.யூ. டிரெஸ்டன் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், இந்தியாவில் மதுநுகர்வு கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியாவில் வயதுக்கு வந்தவர்களிடையே சராசரி தனிநபர் மதுநுகர்வு 4.30 லிட்டராக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 5.90 லிட்டராக அதிகரித்திருக்கிறது. இந்தியர்கள் மது குடிக்கும் அளவு மட்டுமின்றி, குடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தான் இதற்குக் காரணம் என்பதை உணர முடிகிறது.

    இதேநிலை தொடர்ந்தால் விரைவில் இந்தியா குடிகார நாடு என்ற பெயரைப் பெறும் என்பது உண்மை. 2030-ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள வயதுக்கு வந்தோரில் 50 விழுக்காட்டினர் குடிகாரர்களாகி இருப்பர்; 23 விழுக்காட்டினரால் மாதத்திற்கு ஒரு முறை குடிக்காமல் இருக்க முடியாது என்ற மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

    மதுவால் ஏற்படும் தீமைகளை 38 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நான், அதற்கு ஒரே தீர்வு மதுவிலக்கு தான் என்பதையும் அறிவுறுத்தி வருகிறேன். மது குடிப்பதால் சிறிது நேரம் கிடைக்கும் போதை மட்டும் தான் குடிகாரர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

    ஆனால், மது அருந்துவதால் 200 வகையான நோய்கள் தாக்குகின்றன; குடிகாரர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள் சீரழிகின்றன; களவு முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான குற்றங்களும் நிகழ்கின்றன. இந்தத் தீமைகள் எதுவும் குடிக்கு அடிமையானவர்களுக்கு உரைப்பதில்லை. இது தான் என்னை வாட்டும் கவலையாகும்.

    பெரும்பான்மையான மாநிலங்கள் மதுவிற்பனையை வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறையாக மாற்றி இருக்கிறது. வருவாய்க்கு ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது.

    தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மது விலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

    நாடு முழுவதும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு மதுவிலக்கு பாதையில் பயணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

    மது விலக்கை நடை முறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். #TNLiquorBan #RajendraBalaji
    ராஜபாளையம்:

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஒரு சில பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அரசின் மதுவிலக்கு நடைமுறை குறித்து விளக்கம் அளித்தார்.



    “மது குடிப்பவர்கள் திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. எனவே, குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார் அமைச்சர்.

    முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து கேட்டபோது, அவர் விலகி சென்றதால் அதிமுகவுக்கு ஒரு ஓட்டுதான் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. #TNLiquorBan #RajendraBalaji
    கொடைக்கானலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி பெண்கள் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோடை குறிஞ்சி பெண்கள் அமைப்பு சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து டாக்டர் சிவந்திஆதித்தினார் திருமணமண்டபம் வரை பெண்கள் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.

    அதன் பின் கருத்தரங்கம் நடைபெற்றது. பூம்பாறை கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கருத்தரங்கில் மகளிர் தினம் எப்படி உருவானது எப்போது அறிவிக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தை பெண்களுக்கு எடுத்துரைத்தனர்.

    மேலும் பெண்களை காட்சி பொருளை பார்க்காமல் பெண்களை ஆண்கள் மதிக்கவேண்டும்.பெண்கள் வீட்டில் டிவி நாடகங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் பெண்களை மதிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.மதுவினால் குடும்பப் பெண்கள் அதிகமான இடையூறுகளை சந்திப்பதால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று இந்நாளில் கோரிக்கை வைப்பதாகக் கூறிப் பேசினர். நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர். #tamilnews
    மிசோரம் மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. #MizoramCabinet #LiquorProhibitionBill
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், மதுவிலக்கை அமல்படுத்த வகை செய்யும் மசோதாவுக்கு (மிசோரம் மதுபான தடைச் சட்ட மசோதா -2019) அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    எனவே, வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, இந்த மதுவிலக்கு மசோதா தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி, கடந்த நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்’ என வாக்குறுதி அளித்திருந்தது.

    மிசோரம் மாநிலத்தில் 1997 முதல் ஜனவரி 2015 வரை பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் இருந்தது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடைகளை திறக்க காங்கிரசு அரசு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #MizoramCabinet #LiquorProhibitionBill
    உத்தரபிரதேசம் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி தரமான மது விற்கப்படும் என சட்டசபையில் மந்திரி இன்று தெரிவித்தார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநில சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முஹம்மது பயீம் இர்பான் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. அமான் மானி திரிபாதி ஆகியோர் மதுவிலக்கு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் பதில் அளித்தார்.

    மதுவிலக்கு என்பது இந்த மாநில அரசின் கொள்கை. ஆனால், மாநில அரசின் வருமானத்தில் மது விற்பனை மூலம் கிடைக்கும் லாபம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள், பீர் அல்லது நாட்டு மது வகைகளின் விற்பனையை தடை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை.

    அப்படி மது விற்பனையை தடை செய்து மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளத்தனமான மது விற்பனை பெருகிவிடும். இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடும். மது வகைகளின் மீதான ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருமானம் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, வாடிக்கையாளர்களுக்கு தரமான மதுவை விற்பதில் மாநில அரசு அக்கறை செலுத்தும் என்று ஆயத்தீர்வை துறை மந்திரி ஜெய் பிரகாஷ் சிங் குறிப்பிட்டார். #UPgovernment #prohibition #UPgovernmentprohibition
    பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அறிவிக்கப்பட்டதால் ஒரு ஆண்டிற்கு சுமார் 5,280 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. #Biharliquorban
     
    பாட்னா:

    பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கடந்த 2016-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மதுவை தடை விதித்தார். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் வர்த்தகம் குறித்து ஆசிய அபிவிருந்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.
     
    அந்த ஆய்வில் மதுவிலக்கு அமலானதால் தேன் விற்பனை 380% வரை அதிகரித்துள்ளதாகவும், சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி விற்பனை 200% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுவிலக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தரமான உணவுப்பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதில் பெண்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. விலை உயர்ந்த சேலைகளின் வர்த்தகம் 1,751 சதவிகிதமும், உயர்தர ஆடைகளின் வர்த்தகம் 910 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 
     
    மேலும் 19% குடும்பங்கள் மதுவிற்கு செலவழிக்கு பணத்தில் புதிய சொத்துக்களை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. மது மீதான தடையை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் மாதந்தோரும் ரூ.440 கோடி சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் 5,280 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Biharliquorban
    ×