search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • திருப்புகழ் பாடலைப் பாடி முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.
    • முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் ஏராளமான தகோவில்கள் உள்ளன.

    தமிழ்க் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான திருக்கோவில்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    முருகப்பெருமானே வழங்கும் பிரசாதம்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாவது படைவீடாகத் திகழ்வது திருச்செந்தூர். இங்கு அமைந்துள்ள முருகப்பெருமான் ஆலயத்தின் கொடிமரத்தில் இருந்து வலது பக்கமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுப்பாதையானது 'ஓம்' என்ற வடிவில் அமைந்திருப்பதை அறியலாம். இந்தக் கோவிலில் தங்கக்குடங்கள் இருக்கின்றன. இவை ஆலயத்தில் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன் படுத்தப்படுகின்றன. அதேபோல் தங்க தேங்காய்களும் இங்கே உள்ளதாம். அவற்றை ஆலயத்திற்கு வரும் முக்கியமான பிரமுகர்களுக்கு, பூரண கும்ப மரியாதை கொடுக்கும்போதும், வேள்வி செய்யப்படும்போதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து, விபூதியை பிரசாதமாக வழங்குவார்கள். இந்த பன்னீர் இலையில், முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு நரம்புகள் பாய்வதைக் காணலாம். முருகப்பெருமான் தன் திருக்கரங்களாலேயே விபூதியை வழங்குகிறார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில்தான் பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மயில் மீது அமர்ந்தமுருகன்

    திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக, புதுச்சேரி செல்லும் சாலையில் இருக்கிறது திருவக்கரை திருத்தலம். 'வக்ரன்' என்ற அசுரன் வழிபட்டதால் இந்த தலத்திற்கு 'வக்கரை' என்று பெயா் வந்தது. இங்கே வடிவாம்பிகை சமேத சந்திரசேகரர் ஆலயம் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள், இங்கே கல்லாக மாறி இருப்பதை காண முடியும். இந்த சிவன் கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் பிரசித்தி பெற்றவராக திகழ்கிறார். இவர் பன்னிரு கரங்களுடன் ஆறு முகப்பெருமானாக, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி - தெய்வானை இருக்கிறார்கள். அருண கிரிநாதரின் திருப்புகழ் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. அந்த திருப்புகழ் பாடலைப் பாடி இத்தல முருகனை வணங்கினால், நினைத்த காரியம் நிறைவேறும்.

    சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன்

    சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், சென்னை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, சிறுவாபுரி என்ற ஊர். இங்கு அருள்புரியும் முருகப்பெருமானும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலில் உள்ள இறைவன் 'வள்ளி மணவாளப் பெருமான்' என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் அருளும் முகப்பெருமான் 'கல்யாண முருக'ராக அருள்பாலிப்பது கூடுதல் விசேஷம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், விரைவிலேயே அந்தத் தடை விலகி திருமணம் நடந்தேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இத்தல முருகப்பெருமானை வழிபாடு செய்தால் சொந்த வீடு கட்டும் கனவும் நனவாகும் என்கிறார்கள்.

    அதிகார முருகன்

    சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்ரோடு வழியில் பொன்னேரி சாலையில் இருக்கிறது, ஆண்டார்குப்பம் என்ற ஊர். இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் முருகப்பெருமான், அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். பிரம்மனிடம் பிரணவத்திற்கு பொருள் கூறும்படி, தன்னுடைய இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையில் இந்த முருகன் காட்சியளிக்கிறார். இதனால் இவரை 'அதிகார முருகன்' என்றும் அழைப்பார்கள். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத காரணத்தால், பிரம்மனை சிறையில் அடைத்ததோடு, அவர் செய்து வந்த படைப்புத் தொழிலையும், முருகப்பெருமானே செய்து வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றியதாலும் இவரை `அதிகார முருகன்' என்று சொல்கிறார்கள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அதிகாரம் நிறைந்த பதவிகளை இவர் வழங்குவதாக ஐதீகம்.

    • விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் .
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள செஞ்சேரிமலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மந்திரகிரிஸ்ரீ வேலாயுத சாமி கோவிலில் வளர் பிறை சஷ்டியை முன்னிட்டு திரிசங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது.

    மழை , உலக நன்மை,கல்வி, விவசாயம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ,திருமண தடை நீங்கி திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு வேலாயுத சாமியை தரிசனம் செய்தனர்.

    விரைவில் திருமணம் நடைபெற செவ்வரளி மற்றும் செவ்வாழைப்பழம் வைத்து ஜாதகத்துடன்வைத்து வழிபட்டனர் . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

    • இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது.
    • தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர்.

    தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    அபிராமி அந்தாதி

    தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.

    காலசம்ஹாரமூர்த்தி

    தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கட்டுப் பாட்டில் இந்த கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது. முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.

    பாசக்கயிற்றின் தடம்

    மார்க்கண்டேயன் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை இறுகப்பற்றி வழிபட்டபோது எமன் தனது பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்த்து சிவபெருமானையும் இறுக்கிறது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான் எமதா்மனை தனது காலால் உதைத்து தள்ளினார். எமதர்மன், சிவபெருமான் மீது வீசிய பாசக்கயிற்றின் தடம் தற்போதும் சிவலிங்க திருமேனியில் உள்ளது. அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது இந்த பாசக்கயிற்றின் தடத்தை காணலாம்.

    கங்கை தீர்த்தம்

    59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள். கோவிலின் மேற்கு திசை நோக்கி அமிர்தகடேஸ்வரரும், கிழக்கு திசையில் தனிக்கோவிலில் அபிராமி அம்மனும், அமிர்தகடேஸ்வரர் அருகில் காலசம்ஹாரமூர்த்தியும், உள்பிரகாரத்தில் முருகன், மகாலட்சுமி, நடராஜர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டு தான் இன்றும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது.

    சங்காபிஷேகம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. கார்த்திகை சோமவார நாட்களில் இந்த கோவிலில் 1008 சங்குகளை வைத்து நடைபெறும் சங்காபிஷேக விழா பிரசித்தி பெற்றது.

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பங்குனி அசுவதி நட்சத்திர தீர்த்தவாரி விழாவும் தற்போது வரை பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கருவி ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, போன்ற பகுதிகளில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறையை அடைந்து திருக்கடையூர் கோவிலை அடையலாம். திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    • பெண்களின் சபரிமலை என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது

    கேரளாவில் ஆலப்புழை மாவட்டம் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் புகழ்பெற்ற சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும், பெண்களின் சபரிமலை எனவும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    பம்பை ஆறும், மணிமலை ஆறும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் தேவி சர்வேஸ்வரியும், அன்ன பூரணியும் அருள்பாலிக்கிறார்கள். சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் விரதம் இருந்து புண்ணிய சுமையாக இருமுடி கட்டி வந்து சக்குளத்துகாவு பகவதி அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

    பொங்கலிடும் பெண்கள்

    சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது போல் இந்த கோவிலுக்கு பெண்கள் வருகிறார்கள். அதே போல சபரிமலைக்கு செல்லும் வழியில் அய்யப்ப பக்தர்களும் சக்குளத்துக்காவு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை அன்று அம்மனின் இஷ்ட நிவேத்யமான பொங்கல் வைத்து பக்தர்கள் அருளை பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும் இரு புறங்களிலும் திரண்டு புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள்.

    மிகவும் பிரபலமானது

    கோவில் முன்புறம் வைக்கப்படும் பண்டார அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி சுப முகூர்த்த வேளையில் தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.

    கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்த பிறகு நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை அன்று இங்கு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

    பெண்களுக்கு பாத பூஜை

    மேலும் இங்கு நடைபெறும் பெண்களுக்கான பாதபூஜையும் (நாரி பூஜை) மிக சிறப்பு வாய்ந்தது. அதாவது பெண்களை பீடத்தில் அமரச் செய்து அம்மனாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குவார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். 2022-ம் ஆண்டின் நாரி பூஜை அடுத்த மாதம் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சகோதரி கே.ஆர்.கவுரி அம்மாள், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கே.கருணாகரனின் மகள் பத்மஜா ஆகியோருக்கு கடந்த ஆண்டுகளில் பாத பூஜை நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கலச அபிஷேகம்

    டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள், ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும் வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலச பூஜை ஆகியவை நடைபெறும். அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை. அன்றைய தினத்தில் தங்கத் தேரில் திருவாபரணங்கள் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

    வெள்ளிக்கிழமை விசேஷம்

    இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும். வெள்ளிக்கிழமை அன்று பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப் பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ததும் அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் தீர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. மேலும் மது குடிப்பவர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று அழைத்து வரப்படுகிறார்கள். தலைமை பூசாரி மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, அம்மனின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பிறகு மது குடிப்பவர்கள் குடியை நிறுத்துகிறார்கள் என நம்பப்படுகிறது. மேலும் சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கிறதாம். இங்கு பார்க்கப்படும் ஜோதிட பிரசன்னமும் புகழ்பெற்றது.

    சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நேரடியாக கோவிலுக்கு தினசரி இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது. சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிட மக்கள் சேவை சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இது கேரளாவில் முக்கிய ஊர்கள் மட்டுமின்றி புதுடெல்லி, மும்பை, பெங்களூருவிலும் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டம் சின்னமானூரிலும் இந்த மக்கள் சேவை மையம் அமைந்துள்ளது.

    • பெரிய கோவில் வளாகத்தில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கியது.
    • பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது.

    தஞ்சாவூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர். காந்திஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று மீண்டும் பெரிய கோவிலுக்கு வந்தடைந்தது. 

    • ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.
    • மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம்.

    * மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

    * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

    * கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

    * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

    * மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

    * விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.

    * நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

    * தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

    * கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

    * சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

    * சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

    * தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

    * ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

    * திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    * திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

    * கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

    * திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

    * தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

    * தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

    • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூலானது.
    • இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வல்மீகநாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமைகளில் கோவிலில் தங்கியிருந்து தெப்பக்குளத்தில் நீராடி நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உலோகத்தில் உருவம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறந்து எண்ணும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில் நடந்தது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

    • சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது.
    • நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில்.

    தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.

    மகாமகம்

    சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு வந்து மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.

    கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.

    மாடக்கோவில்

    நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான்(மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார்.

    அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் 'மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இந்த கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.

    7 மாதர்கள்

    இந்த கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் ஆகியவையும் சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய 4 கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தெற்கு வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னதி அமைந்துள்ளது.

    மாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளார். இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகரான காசிப் பிள்ளையார் உள்ளார். தென்மேற்கு மூலையில் 7 மாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியோருடன் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

    குந்தி தேவி

    உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்துக்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலை வடிவங்கள் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேஸ்வரர், துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.

    வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.

    5 நிறங்களில்....

    மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் 5 நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் என்றும், அகத்தியருக்கு தன் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் என்றும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.

    கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.

    நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.

    7 கடல்கள்

    ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.

    இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தீர்த்தவாரி

    பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திருநல்லூர் கல்யாண சுந்தரப்பெருமானுக்கு மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் இந்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நரசிம்ம வடிவம்

    கொடிய அரக்கனாகிய இரணியனை கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்துக்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.

    பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

    இக்்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழி மாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் ஆகும்.

    5 நிறங்களில் காட்சி அளிக்கும் கல்யாணசுந்தரர்

    நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் 6 நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் 6 நாழிகையில் தாமிர நிறத்திலும் அடுத்த 6 முதல் 12 நாழிகையில் இளஞ்சிவப்பு நிறத்திலும், அடுத்த 12 முதல் 18 நாழிகையில் தங்க நிறத்திலும், 18 முதல் 24 நாழிகையில் நவரத்தின பச்சை நிறத்திலும் அடுத்த 24 முதல் 30 நாழிகையில் என்ன நிறம் என்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் வழி

    தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.

    • சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது.
    • கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

    குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.

    வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

    சுயம்புவாக சிவன்

    அப்போது கோவிலில் சிவலிங்கம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலின் மேற்கில் தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் உயரம் 160 செ.மீ. இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர் என்பது ஐதீகம். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைபட்டு நின்றதாம்.

    அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டாராம். எனவே அந்த இடத்தில் கோவிலை கட்டினார் என்கிறது தலப்புராணம். ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.

    இங்கு கிழக்கு பிரகாரம் கி.பி.17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இங்குள்ள மண்டபத்தை மதுரை நாயக்க மன்னனாரன திருமலை நாயக்கர் கட்டினார் என்பது மரபுவழி செய்தி.

    பரிவார தெய்வங்கள்

    கணபதி, சாஸ்தா, பூதத்தான், மாடன்தம்புரான், ஆதிமூல சிவன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர். கிழக்கு பிரகாரம் வடக்கே சிறு கருவறையில் நடராஜரும், சிவகாமியும் உள்ளனர். இவை செப்பு படிமங்கள்.

    இக்கோவிலில் ஒரே இடத்தில் இரண்டு சன்னதிகள் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்பட்டு விடும் என்பதால் சிவபெருமான் சன்னதிக்கும், ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கும் இடையில் ஒக்கத்துப்பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு கொடிமரங்கள் கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

    திருவிழா

    10-ம் நாள் விழாவில் நடக்கும் தேர்திருவிழாவின்போது பெரிய தேரில் சிவபெருமானும், ஆனந்தவல்லியும் அமர, சிறிய தேரில் ஒக்கத்து பிள்ளையார் அமர்ந்து வீதி உலா வருவார்கள்.

    இதுபோல் நவராத்திரியின் போது கோவில் குளத்தில் தெப்பத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது வண்ண விளக்கில் ஒளிரும் தெப்பத்தில் அமர்ந்து சுவாமிகள் குளத்தை வலம் வரும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இது போல் தினமும் இருவேளை பூஜை என அனைத்து சம்பிரதாய சடங்குகளும் இக்கோவிலில் நடந்து வருகிறது. இங்கு தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.

    காலை 5.30 மணிக்கு நிர்மால்யம், 6 மணிக்கு உஷபூஜை, 10 மணிக்கு அபிஷேகம், 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு சாயராட்சை, இரவு 7.30 மணிக்கு அர்ச்சாம பூஜை நடக்கிறது.

    • கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    அன்னதானப்பட்டி: 

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது.
    • இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.

    மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று. ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.

    இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான். அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும்

    ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.

    மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு, ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு, மங்களகிரியில் பானகம் அருந்தி, திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு, ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.

    திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம். சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு. அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

    பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை ஸ்பதகுல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன. வேதபுராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.

    இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான். அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி, மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.

    மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற, அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற, அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.

    கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது, அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின. இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன், எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.

    இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார். அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக, பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.

    தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க, பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க, நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு, அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார். அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.

    அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர் திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும், நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம். மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும், தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர். சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.

    ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார். புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய, அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது. வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில் மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.

    வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

    அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம். இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர், சங்கு - சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய் அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார். இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.

    ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் "மடக் மடக்" என பருகும் சத்தம் கேட்கும்.

    சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

    கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில் அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர். பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற, இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது. பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது.

    தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர். பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது. அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

    இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது. தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம். மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு, இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம் வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க, மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.

    அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால், ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர். ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார். ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.

    ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது. ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார். இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார். இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது. இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.

    குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான். அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து, மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை. மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.

    ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம். உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு, இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன், நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.

    ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில் பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை. பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில், ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார். தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன. இக்கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது. முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.

    லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில் பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும், கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள். இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.

    பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது. தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார். மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.

    இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர். இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.

    கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும், பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர். போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.

    மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும், மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம், நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது. இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

    • பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • இந்த மலையில் கோவிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது.

    பர்வதமலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட ஒரு மலை ஆகும்.

    இந்த மலையில் மல்லிகார்ஜுனசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

    இந்த பருவத மலையின் அடிவாரத்திலேயே கரிகாற் சோழனின் வீர வரலாறு தொடங்குகிறது.கரிகாற் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கியது இந்தக் காடுகளில்தான்.அந்த யானைகளை கொண்டு ஓர் அமாவாசை இரவில் கடலில் ஒர் நீர் மூழ்கி கப்பலைப்போல் மிதக்க வைத்து சென்று கடற் கொள்ளையர்களை நிர்மூலமாக்கினார்..இதை படிக்கும்போதே கரிகாற் சோழன் யானைகளை எப்படிப் பழக்கினார் என்பது புரியும்.

    இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

    பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

    இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும். இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

    இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

    மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

    போக்குவரத்து வசதி

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

    ×