search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • வைகாசி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர்.

    சோழவந்தான்

    மதுைர மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

    சங்கம்கோட்டை மந்தை களத்தில் பம்பையுடன் அம்மன் கரகம் எடுத்து பூசாரி சண்முகவேல் பூக்குழி இறங்கினார். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம், அலகு குத்தியும் காவடி சுமந்தும் பக்தி பரவசத்து டன் பூக்குழி இறங்கினர்.

    இந்நிகழ்வில் பேரூர் பகுதி வணிகர்கள், அ.ம.மு.க.வின் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், சர்பத் உள்ளிட்ட பானங்கள் வழங்கினர். இதையடுத்து இரவு அம்மன் மின்னொளி.அலங்காரத்துடன் கோர கத்தில் எழுந்தருளி வீதி உலா பவனி வந்தார் சோழவந்தான்.இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பசும்பொன் கண்ணன். மற்றும் வீரர்கள் மீட்பு குழுவினர் பங்கேற்றனர்.

    • அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அக்ரஹாரம் குன்னத்தூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ந் தேதி இரவு கிராம சாந்தி பூஜை நடைபெற்றது.

    கடந்த செவ்வாய்க்கிழமை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    இதையடுத்து மகா மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மதியம் சூரிய ஒளியிலிருந்து நேரடியாக அக்னி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது. இரவு முதல் கால யாக பூஜையும், இரவு 8 மணிக்கு மேல் பட்டு வஸ்தர சமர்ப்பணமும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் செய்தல், மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மகா மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் காலை யாக பூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி யும், அதனை தொடர்ந்து விநாயகர், மகா மாரியம்மன், கருப்பண்ண சாமி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • சுமார் 16 ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனி கருவறைகளும், தனி விமானங்களும் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் திருவிழாவின் போது நடைபெறும் கழுவன் திருவிழாவும், 9-ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும், 10-ம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் இக்கோவிலுக்கு மட்டுமல்ல சிங்கம்புணரி நகருக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

    அதிலும் தேர்த்திருவிழா அன்று சுற்று வட்டார 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனிதான். குறிப்பாக தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடி படிக்கட்டுகளில் பக்தர்கள் வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இக்கோவிலில் நடைபெறும் மற்றொரு மணிமகுட விழாவாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம்

    இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.

    கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இவ்வாறு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருப்பார்.

    அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்வேத்தியம் கொண்டு விநாயகருக்கு படையல் படைக்கப்படும். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்த கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 10 நாட்களும் அவருடன் சேவுகபெருமாளும் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    மற்ற நாட்களில் இந்த கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தியை மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாக கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் முன்னிலையில்தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படும். அப்போதுதான் பொய் சொல்லமாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

    இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்க கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

    தங்கமாக ஜொலிக்கும் கோவில்

    இக்கோவிலில் வெள்ளி தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளி தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலில் உள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம.அருணகிரியின் முயற்சியின் காரணமாக கோவிலில் உள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு தங்க கோவிலாக காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

    • சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன.
    • கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் நகரின் மத்தியில் திருமணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பழமையான பிரசித்திபெற்ற சுகவனேஸ்வரர், அழகிரிநாத பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த விழாவின்போது 2 நாட்கள் தேரோட்டம் நடத்தப்படும். முதல் நாளில் சுகவனேஸ்வரர் தேரும், 2-வது நாளில் பெருமாள் தேரும் வலம் வரும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாக திகழும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா 2 கோவில்களிலும் நடைபெற்று வருகிறது.

    சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் போற்றப்பட்ட சுகனவனேஸ்வரர் கோவில், அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடப்பட்ட தலமாகும். இந்த கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த ரதவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. 25-ந்தேதி கொடியேற்றமும், தொடர்ந்து காலை மாலை சாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருள்கிறார். பின்பு 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். 5 ஆண்டுக்கு பின்னர் இந்த தேரோட்டம் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம் கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து தேர்வீதிக்கு சாமி எழுந்தருள்கிறார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. பின்பு தேரோட்டம் தொடங்குகிறது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ராஜகணபதி கோவில் பகுதியிலிருந்து புறப்படும் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ராஜகணபதி கோவில் அருகே நிலை சேர்கிறது.

    அடுத்தடுத்து 2 நாட்கள் தேரோட்டம் நிகழ்வதால் சேலம் மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது. 2 கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தற்காலிக கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன. 2 தேர்களையும் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    தேரோட்டத்தை முன்னிட்டு சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி ஆனந்தா இறக்கம், லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், 2-வது அக்ரஹாரம், வரதராஜபெருமாள் கோவில்(பட்டைக்கோயில் ), சின்னக்கடைவீதி, பெரியக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் இறக்கம், முதல் அக்ரஹாரம் மற்றும் கடைவீதி ஆகிய பகுதிகளில் 2, 3-ந்தேதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்த்திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

    • தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இத்தலம் உள்ள ஊரான திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது.

    எம பயம் போக்கி பித்ரு தோஷங்களை நீக்கும் சிவாலயங்களில் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கோவிலாக தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது.

    வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படுத்தும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் தீராத வினைகளை தீர்த்து பக்தர்கள் மனதில் நி்ம்மதியை நிலையாக இருக்க செய்கிறார்.

    இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்பிகை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது இக்கோவில்.

    புண்ணிய பூமி

    இங்குள்ள ஈஸ்வரனை முப்பத்து முக்கோடி தேவர்களும் 4 வேதங்களும் வழிபட்டதாகவும், எமதர்மர் மற்றும் சித்ரகுப்தருக்கு சனி தோஷத்தை இக்கோவிலில் உள்ள இறைவன் நீக்கியதாகவும் புராண வரலாறுகள் கூறுகிறது.

    இத்தலம் உள்ள ஊரான திருக்கோடிக்காவல் புண்ணிய பூமி என்பதால் இங்கு இடுகாடு, சுடுகாடு கிடையாது. காவிரி ஆறு வடக்கு நோக்கி உள்ளது. நந்தி பெருமானின் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் இக்கோவிலின் வாசலில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி திருக்கோடீஸ்வர பெருமானை வழிபடுவோருக்கு எம பயம் , பிதுர் சாபம் நீங்கி புத்திர பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சன்னதிகள்

    கோவிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடது புறம் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியின் வலப்புறம் ஆடிப்பூர அம்மன் உள்ளார். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அடுத்து நடராஜர் சன்னதி உள்ளது.

    உள் மண்டபத்தில் வலப்புறம் சித்திரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வெளித்திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலியார், கணபதி, நாகர்,விசுவநாதர் விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகேசர் சன்னதிகள், கரையேற்று விநாயகர் சன்னதிகள் உள்ளன.

    கரையேற்று விநாயகர்

    அடுத்து ரிக்வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாமவேத லிங்கம், அதர்வணவேத லிங்கம் உள்ளன. தொடர்ந்து கஜலட்ஜமி, ஷேத்ரபாலகர்கள், வடுக பைரவர், சூரியன், சந்திரன், நாகேஸ்வரர், சண்டபீடேஸ்வரர், கஹானேஸ்வரர் உள்ளனர். பால சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நடராஜர், சிவகாமி, கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடணர், அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், அடுத்து சூரிய மண்டல பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

    கோவில் பிரகாரத்தில் வலதுபக்கம் வீற்றிருக்கும் பிள்ளையார் பல்வேறு சிறப்புகளை உடையவர்.

    முற்காலத்தில் காவிரி வெள்ளத்தில் மூழ்கிய முனிவர்களை கரையேற்ற வேண்டி துர்வாச முனிவர் மணலால் விநாயகரை செய்து வழிபட்டார். பின்னர் காவிரி வெள்ளத்திலிருந்து முனிவர்களை விநாயகர் மீட்டார் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த விநாயகருக்கு கரையேற்று விநாயகர் என்ற பெயர் வந்தது. இந்த விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது. எண்ணெய் மட்டுமே சாற்றி வழிபட்டு வருகின்றனர்.

    வடுகபைரவர்

    இதைப்போல துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வடுகபைரவர் பெருமானை வழிபடுவோருக்கு வறுமை நீங்கி செல்வம் பெருகி வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு வந்து எமதர்மர், சித்ரகுப்தரை வணங்குவோருக்கு மரண அவதி, எமபயம் இல்லை என கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் பிரம்பு ஆகும்.

    இக்கோவிலின் மூலவரான திருக்கோடீஸ்வரருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட நாகாபரணம் சாற்றப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    கல்வெட்டு சிற்பங்கள்

    இக்கோவில் ராஜகோபுரத்தின் இருபுரத்திலும் தேரோட்ட நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான வடிவத்தில் தேர்காட்சிகளும், நமது பாரம்பரிய நடன அபிநயங்களை சித்தரிக்கும் வகையில் நடன காட்சிகளும், யானை போர் போன்ற காட்சிகளும், கருங்கல்லில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவாமி சன்னதியினை சுற்றி கல்வெட்டுகளும் காணப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலில்

    ஆண்டுதோறும் சித்தரை மாதத்தில் பிரம்மோற்சவம் மற்றும் சித்ராபவுர்ணமி உற்சவம், புரட்டாசி மாதத்தில் அம்பாள் வேங்கடாஜலபதியாய் காட்சிதருதல், ஐப்பசி அன்னாபிஷேகம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவில் சன்னதியில் நுழைவுவாயில் சுமார் 60அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100 அடி உயரத்தில் பிரதான ராஜகோபுரமும், 50 அடி உயரத்தில் சுவாமியின் நுழைவு ராஜகோபுரமும், சுவாமி, அம்பாள் விமானங்கள், பஞ்சமூர்த்தி மண்டபங்கள், மடப்பள்ளி பெரியகருங்கல் மதில் சுவர்கள் கொண்ட பிரகாரங்களும் காணப்படுகிறது. கோவிலின் 4 வீதிகளிலும் விநாயகருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன.

    கோவிலுக்குசெல்வது எப்படி?

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து கதிராமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 18 கி.மீட்டர் பயணித்து திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.
    • ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோவில் உள்ளது. ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் தேரோட்டம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது.

    விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வராயப்பெருமாள், காவிரியம்மாள் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதையடுத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரோட்டம் நடந்தது. தேரை ஏற்காடு எம்.எல்.ஏ சித்ரா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சின்னவெள்ளை கோகிலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பு வெங்கடாஜலம், மஞ்சுளா ராமசந்திரன், செந்தில் பிரபு, தனலட்சுமி சின்னசாமி, ராஜேந்திரன், சிவசக்தி ரவிசந்திரன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், மலை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் ஏற்காட்டை சுற்றியுள்ள 72 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற பயிர்களை சாமிக்கு காணிக்கையாக படைத்து வழிபாடு நடத்தினர். தேர் வரும் வழியில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.

    • மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
    • துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான்.

    துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்துவிட்டான்.

    சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான். ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்று தூண்டினான். அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார்.

    துரியோதனன், நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள் என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டியிருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனிடம் கட்டளையிட்டான். அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான்.

    துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர்.

    திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை என ஓலமிட்டாள். அந்த அனாதரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான்.

    பீஷ்மப் பிதாமகன் போன்றவர்கள் குறுக்கிட்டு திருதராஷ்டிரனிடம் பாண்டவர், சூதாட்டத்தில் இழந்த நாட்டை அவர்களிடம் ஒப்படைப்பமே முறை என நல்லுரை கூறினார்கள். ஆனால் பிடிவாதமாக மறுத்த துரியோதனன், முடிவாக பாண்டவர்கள் பதினான்கு ஆண்டுகள் ஆரண்யவாசமும், 21 வருடம் அக்ஞாத வாசமும் (அதாவது யாரும் அறியாமல் மறைந்து வாழ்வது) போய்விட்டு திரும்பினால் அவர்களுக்குரிய பங்கை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டான்.

    • பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள்.
    • பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    ஒருநாள் பாண்டவர்களும், கிருஷ்ணரும் தோட்டத்தில் இருந்த குளத்தில் நீராடினர். அனைவரும் கரையேறிய பின்பும் கிருஷ்ணர் நீரிலேயே இருந்தார். கண்ணா, சீக்கிரம் வா! என்று குரல் கொடுத்துவிட்டு அர்ஜுனன் உலர் ஆடையை அணிந்து கொள்ளப் போய்விட்டான்.

    பெண்கள் பகுதியில் கடைசியாக கரையை அடைந்த திரவுபதி, கண்ணன் இன்னும் ஏன் வெளியே வராமல் நீரிலேயே துலாவிக் கொண்டிருக்கிறான்! என நின்று யோசித்தாள். அவன் கட்டியிருந்த உடை நீச்சலடிக்கும்போது நழுவி விழுந்திருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறான் என யூகம் செய்து புரிந்து கொண்டாள்.

    உடனே தன் புடவையில் ஒரு பகுதியை கிழித்து கண்ணனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்தாள். திரவுபதி கொடுத்த துணியை இடுப்பில் சுற்றிக் கொண்டு கண்ணன் கரையேறினான். இப்படி கண்ணன் அணிந்து கொள்ள திரவுபதி செய்த உதவியே, துரியோதனன் அவையில் அவளை துச்சாதனன் துகிலுரிய முற்பட்டபோது, அவளது மானம் காக்கப்பட பிரதியுபகாரமாக அமைந்தது என சான்றோர்கள் கூறுகின்றனர். பகவானுக்கு சிறிய அளவு நிவேதனம் படைத்தாலும், அவர் பன்மடங்கு அனுக்கிரகம் செய்வார் என்பதையே இது காட்டுகிறது.

    • ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.
    • ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.

    கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    • நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில் விரதம் இருக்க வேண்டும்.
    • பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    நடு இரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம்.

    தஹிகலா என்றால் என்ன தெரியுமா? பல திண்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலையும் வெண்ணையையும் கலா என்பர். வரஜபூமியில் கோபர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.

    மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணை மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணையை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணையைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    மக்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணை பால் போன்ற பலவிதமான பண்டங்களை உண்ணுவார்கள். பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் வ்ரஜபூமியில் ஸ்ரீகிருஷ்ணன் தனது உணவுடன் தன் சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

    • நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
    • திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் ரெட்டி மற்றும் 4 நன்கொடையாளர்கள் குழு சார்பில் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கும் விழா தி.நகரில் இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் ஏ.சி. சண்முகம், ஐசரிகணேசன், காயத்ரிதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது சேகர் ரெட்டி கூறியதாவது:-

    தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது.

    இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையொட்டி இக்கோவிலை மிகப் பிரமாண்டமாக புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விரைவில் கோவிலில் பாலாலயம் செய்யப்படுகிறது.

    இக்கோவில் ரூ.50 கோடி செலவில் பிரமாண்டமாக கற்கோவில் கட்டிடமாக மாற்றப்பட உள்ளது.

    இதற்காக அருகில் உள்ள நிலங்கள் நன்கொடையாக வாங்கப்பட்டு வருகிறது.இக்கோவிலில் நவீன வசதிகளுடன் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

    பக்தர்களிடமிருந்து நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ரூ.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி கோவில் சார்பில் விரைவில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்னபட்சி மற்றும் காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    28-ந் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருத்தேரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை தீமிதி விழாவும், நாளை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.

    2 மற்றும் 3-ந் தேதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    ×