search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
    • இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

    திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அம்மன் தெற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருகிறார். அம்மன் அருகே வலது புறத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும், அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது. இந்த கொடிமரத்தின் இடது புறம் கொடி மர முருகரும், வலது புறமும் கொடி மர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள். கொடி மரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவ கிரகங்கள் காட்சி அளிக்கிறது.

    கொடிமரத்தை தரிசிப்பவர்கள் நவக்கிரகங்கள் மற்றும் முருகர், விநாயகரை தரிசித்து விட்டு சன்னதிக்குள் நுழையலாம். அதன் பிறகு அழகம்மன், சுந்தரேஸ்வரரின் அருள் காட்சியை தரிசிக்கலாம்.

    இந்த கோவிலில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், நாகராஜர், சாஸ்தா, காசி விஸ்வநாதர், வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சந்திரன், ஸ்ரீதேவி- பூதேவியுடன் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

    இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அழகம்மன் கோவிலில் ஆடி மாதம், ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம் ஆகிய வையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது தேரோட்டமும், 10-ம் நாளில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா ஆகியவை நடைபெறுகிறது.

    கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கள் கிழமை தோறும் கடை பிடிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. அதே போல சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    மார்கழி மாதம் நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவும், ஆனி மாதம் நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அதே போல வருஷாபிஷேகம் மற்றும் புனர்பூசமும் சிறப்புடன் நடைபெறுகிறது. அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 14-6-1991-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 3 நிலைகளுடன் தெற்கு கோபுரமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்ப குளத்தின் கரையில் தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும்.

    அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

    • இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
    • இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலானது குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் மார்த்தாண்டம் - தேங்காய்பட்டினம் வழியில் பைங்குளம் சந்திப்பு அருகே அமைந்துள்ளது.

    கோவில்செம்பன் என்னும் பெரியவர் தனது மகளுக்கு குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து வழிபட்டார்.

    நாளடைவில் செம்பன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த அதிசயத்தை செம்பன், மக்களிடையே பக்தி பரவசமாக சொல்ல தொடங்கியதை தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதிக்கு வந்து பத்திரகாளி அம்மனை வழிபட தொடங்கினர். பின்னர் பீடத்தை சுற்றி ஒரு சிறு கோவில் கட்டினர். காலரா நோயினால் பாதிக்கப்பட்ட தனது ஒரே குழந்தையை கண்டு கண் கலங்கிய தாய்ஒருவர் நம்பிக்கையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து கதறி அழுதார். இரவு அப்பெண்மணியின் கனவில் அம்மன் தோன்றி வலது கையால் குழந்தையை தடவி நோயில் இருந்து உன் குழந்தை குணமடைந்து விட்டான் என்று கூறி மறைந்தது. அம்மன் கனவில் கூறியபடி அந்த குழந்தைக்கு காலரா நோய் முற்றிலும் தீர்ந்தது.

    அதன்பின்பு இக்கோவிலில் அம்மனின் அற்புதங்கள் ஏராளம் நடந்ததால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த திருவிழாவில் நடைபெறும் பால்குட ஊர்வலமும், அம்மன் தென்வீதி ஆறாட்டும், 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவில் நடைபெறும் போட்டி வாண வேடிக்கையும் பிரசித்தி பெற்றது.

    குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். பின்னர் நேர்ச்சையாக வாழைக் குலைகளை வழங்குவர். மேலும் பால்குட நேர்ச்சை, பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்பார்கள்.

    • ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது.
    • அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளி உள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

    தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவள்ளித் தாயார் எழுந்தருளியுள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலின் வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை தரிசனத்துக்கு எழுத்தருள செய்யும் கிழக்கு நோக்கிய மண்டபம் உள்ளது. இக்கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார். இந்த மூலவருக்கு அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள், ருக்மணி-சத்யபாமாவுடன் அருள் பாலிக்கிறார்.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் எழுந்தருளி உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சி அளிக்கிறார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக்கோவிலில் மட்டுமே உள்ளது.

    அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து கடந்த 1978-ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் ஆகிய சாமி சிலைகள் கொள்ளை போனது. இந்த சிலைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து மீட்கப்பட்டு தற்போது இந்த கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். ஆனந்த வாழ்வு தரும் அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் தல வரலாறு மிகவும் பிரசித்தி பெற்றது.

    இலங்கையில் யுத்தம் செய்து சீதையை மீட்டபின், புஷ்பக விமானத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் ஆயோத்திக்கு திரும்பினர். வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர், ராமபிரானிடம், ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு உள்ளனர். அவர்களுள் இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவேறினால் அவர்கள் ராவணனைப்போல பலம் பெற்றுவிடுவார்கள். எனவே உலக நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதை ஏற்ற ராமபிரான், அரக்கர்களை அழிக்க மாவீரனான அனுமனை பணித்தார். அனுமனோ, அழியாவரம் பெற்றவர். அளவில்லா ஆற்றல் உடையவர். இருப்பினும் அரக்கர்களை அழிக்க திருமால் தன் சங்கு சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார். பிரம்மா, பிரம்ம கபாலத்தை அனுமனுக்கு வழங்கினார். ருத்ரன் மழுவையும், ராமபிரான் வில்- அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்கினா்.

    இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார். அப்போது கருடாழ்வார் தன் இரு சிறகுகளையும் அவருக்கு தந்தார். கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், 10 கரங்களிலும் ஆயுதங்களுடன் நின்ற ஆஞ்சநேயரை கண்டு தான் என்ன தருவது என சிந்தித்து தனது 3-வது கண்ணை அனுமனுக்கு அளித்தார்.

    3 கண்கள்(திரிநேத்ரம்), 10 கைகளுடன் வீர அனுமான் புறப்பட்டு சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமரை சந்திக்க வந்தார். வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள இடத்தை கண்ட அனுமன் ஆனந்த மிகுதியால் அங்கு தங்கினாா். அந்த இடமே அனந்தமங்கலமானது. இந்த கோவிலில் 6 கால பூஜை நடந்து வருகிறது. அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவராதனங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் அமாவாசையின்போதும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது.

    ஆஞ்சநேயர் வழிபாட்டின் பயன்கள்

    * அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மன், ராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பயன் கிடைக்கும்.

    * சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம்.

    * ஆஞ்சநேயர் வழிபாட்டால் அறிவு கூர்மையாகும்.

    * உடல் வலிமை பெருகி மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய்கள் நீங்கும்.

    * வாக்கு வன்மை வளமாகும்.

    நவக்கிரக njhஷம் நீக்கும் ஆஞ்சநேயர்

    அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும்போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

    மாதந்தோறும் அமாவாசை திதியிலும் மூல நட்சத்திரத்திலும் ஆஞ்சநேயரை வழிபட்டு் பயன்பெறலாம். ராகுகாலம், அஷ்டமி திதி ஆகிய தீய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கி கொள்ளலாம். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சம்பழ மாலை ஆகியவை அனுமனுக்கு உகந்தவை ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அனுமனுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்தும், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல், வடைமாலை ஆகிய பிரசாதங்களை நைவேத்யம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கியும் நலம் பெறலாம். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளதால் அவரை வழிபட்டால் நவக்கிரகங்களால் பாதிப்புகள் ஏற்படாது. உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், ஊழ்வினையால் துன்பப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டால் அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்க சென்னையில் இருந்து வரும் பக்தர்கள் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக திருக்கடையூருக்கு சென்று அங்கிருந்து அனந்தமங்கலம் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சென்னையில் இருந்து ரெயில் மூலம் வர வரும்பும் பக்தர்கள் சோழன் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து அனந்தமங்கலத்துக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து பின்னர் அங்கிருந்து அனந்தமங்கலம் வந்து ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

    • பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.
    • இது அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த `விரஜபூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜபூமி'யில் உள்ளன. `பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுக்குவாரி பாளையம் பகுதியில் கொண்ண மரத்தையன் கோவில் உள்ளது. இத கோவில் பூசாரி தங்கவேல் தினமும் காலை கோவிலுக்கு வந்து பூைஜ செய்து விட்டு இரவில் பூட்டி விட்டு செல்வது வழக்கம்.

    இந்த கோவிலுக்கு தின மும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணி க்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் கோவில் பூசாரி தங்கவேல் நேற்று முன்தினம் பூைஜ செய்வ தற்காக வழக்கம் போல் கோவிலை திறந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்த தன வேலுக்கு தகவல் கொடுத் தார். அவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது உண்டியலில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்க ப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் தர்மகர்த்த தனவேல் சிறு வலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை.
    • இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீட்டர் கொண்டது.
    • இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு நிறைவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தாய்லாந்து நாட்டில் பட்டாயா என்ற இடத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, ஆன்மிகமும், கலைநயமும் கலந்த ஒரு ஆலயம். இதனை அங்குள்ளவர்கள் சான்சுவரி ஆப் ட்ருத் (sanctuary of truth) என்று அழைக்கிறார்கள். அதாவது, 'சத்தியத்தின் சரணாலயம்' என்பது இதன் பொருள். இந்த சத்திய சரணாலயமானது, கோவில் மற்றும் அரண்மனையின் கலப்பில் கட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மரத்தால் மட்டுமே கட்டப்பட்ட பிரமாண்டமான, வித்தியாசமான கட்டிடமாகவும் இது திகழ்கிறது.

    இந்த கட்டிடத்தின் சிந்தனைக்கு சொந்தக் காரர், தாய்லாந்து நாட்டின் தொழிலதிபரான லெக் வீரியப்பன் என்பவராவார். 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும் அங்கு பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மரத்தால் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தை காணச் செல்லும் மக்கள், அங்கு கட்டிடத்தின் ஒரு பாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையும் கூட பார்க்க முடியும்.

    இந்த ஆலயத்திற்குள் அயோத்தியை ஆட்சி செய்த ராமரின் வாழ்க்கை வரலாறு, புத்த மதத்தின் வரலாறு, இந்து மதத்தில் உள்ள பல்வேறு புராணங்களைக் கூறும் சிற்பங்கள் அனைத்தும் மரத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மைடீயாங், மைடாக்கியன், மாய் பஞ்சட் மற்றும் தேக்கு போன்ற மரங்களால் இந்த சத்தியத்தின் சரணாலயம் எழுப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், ஒரு மரக்கட்டைக்கும், இன்னொரு மரக்கட்டைக்குமான இணைப்பாக கூட, எந்த இரும்பு பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. இணைப்பிற்கும் கூட மரத்தால் ஆன 'ஆப்பு' கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் 105 மீட்டர் கொண்டது. இதன் வெளிப்புறம் மேற்கூரையில் படைப்பின் கடவுளான பிரம்மாவின் முகம் மரத்தால் பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலய வடக்கு மண்டபத்தில் புத்த குவான்யின் மற்றும் ஞானம் பெற்ற பல புத்த பிட்சுகளின் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டபத்தில் நவக்கிரகங்களான சூரியன், சந்திரன் உள்ளிட்ட கிரகங்களும் செதுக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டபத்தில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவற்றை உணர்த்தும் சிற்பங்களும் அழகுற உருவாக்கப்பட்டுள்ளன.

    பணி நடைபெற்று வருவதால், மக்கள் அனைவரும் இதற்குள் தலைக் கசவம் அணிவிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு நிறைவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது.
    • இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார்.

    மூலவர் - பிரசன்ன வெங்கடாஜலபதி

    உற்சவர் - ஸ்ரீனிவாசர்

    தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம்

    ஆகமம்/பூஜை - வைகானஸம்

    புராண பெயர் - பத்மசக்கரபட்டணம்

    இந்தக் கோவிலில் உள்ள பெருமாள், தரைதளம் விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். கோவிலின் அருகில் காவிரி நதியும் எதிர்ப்பக்கத்தில் பாபவிநாச அருவியும் உள்ளது. இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார். புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சுவாமி, குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும்...

    மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தல வரலாறு

    குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசிலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசிலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.

    குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது.

    ஞானவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.

    மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. குணசீல மகரிஷிக்கு முன்பாக திருப்பதி இறைவன் தோன்றினார் என்பதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குணசேலனைப் பார்வையிட முடியுமென்று நம்புகிறார்கள்.

    கோவில் அமைப்பு

    கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.

    கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.

    திருவிழா:

    சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

    பலன்கள்

    உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், பகுவிராஜ மன்னன் கால் பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோவிலுக்கு வந்து குணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தரிசன நேரம்:

    காலை 6.30AM – 12.30PM மாலை 4.00PM – 8.30PM

    கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விஸ்வரூபம் – 6:30am. காலசந்தி – 8:30am. உச்சிகாலம் – 12:30pm. திருமல்வடை – 5:30pm. சாயரக் ஷை – 6:30pm. அர்த்தஜாமம் – 8:30pm. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகள் உள்ளன – அபிஷேக (புனிதமான) குளியல், அலங்காரம், நெய்வேத்யம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை.

    முகவரி:

    அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்,

    குணசீலம் 621 204,

    திருச்சி மாவட்டம்.

    • கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும்
    • 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழா குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப் பட்டுள்ளது.

    தொலைக்காட்சியில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்டதிருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார். அய்யப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண் ணன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரு கின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வர லாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியா ளர்கள் 3 பேரை சுற்றுலா வழி காட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    • கமுதி அருகே அழகு வள்ளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம்,.கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி மாத பொங்கல் விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

    இந்த கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளி அம்மனுக்கு வருடா வருடம் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இத் திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நிறைவு நாளான நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம்,களிமண் சேறு பூசி நேர்த்திக்கடன் மற்றும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

    அழகுவள்ளியம்மன் கேட்டதை தரும் சக்தி கொண்டதாக இருப்பதால் இந்த கிராமத்துகாரர்கள் வெளியூரில் வசித்தால் கூட வருடத்திற்கு ஒருமுறை இந்த கோவிலுக்கு வந்து பொங்கல் மற்றும் முளைப்பாரி, சாக்கு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சாக்குகளை பேண்ட் மற்றும் சட்டை மாதிரி தைத்து அதை அணிந்து பின்பு வைக்கோல்களை திணித்து கனமான மனிதர் போல மாற்றி முகத்தையும் சாக்கு வைத்து மூடி வைத்த வைக்கோல் மனிதர்கள் 6 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது பெண்களின் கும்மி மற்றும் ஆண்களின் கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் கும்மி அடித்து முளைப்பாரிக்கு முன்பு நடனம் ஆடி சென்றனர்.

    மேளதாளம்,வான வேடிக்கையுடன் இந்த ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளோடு அழகு வள்ளி அம்மன் கோவிலுக்கு சென்று கிராமத்தில் உள்ள ஊரணியில் பாரிகளை கரைத்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • கருவறையில், ‘அகத்தீஸ்வரர்’ என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
    • இத்தல இறைவியின் திருநாமம், ‘ஆனந்தவல்லி’ என்பதாகும்.

    திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.

    ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கருவறையில், 'அகத்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவியின் திருநாமம், 'ஆனந்தவல்லி' என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது.

    பல கோடி யுகங்களுக்கு முன்பாக சிவபெருமான், தமிழ் மொழியை முருகப்பெருமானுக்கு கற்றுத்தந்தார். முருகப்பெருமான், தமிழின் சுவையை சித்தர்களின் தலைவராக கருதப்படும் அகத்தியருக்கு போதித்தார். அத்தகைய சிறப்புமிக்க அகத்தியருக்குரிய 'ஓம் அகத்தீசாய நமக' என்ற குரு மந்திரத்தை நாம் ஜெபித்தால், அனைத்து விதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.

    இந்த பூமியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலயங்களிலும் அகத்தியர், வழி பாடும், பூஜையும் செய்திருக்கிறார். தவிர, அகத்தியரால் உருவான ஆலயங்களும் ஏராளமாக இருக்கின்றன. அகத்தியரால் உருவாக்கப்பட்ட சிவலிங்கங்கள் மூலவராக அமைந்த ஆலயங்களுக்கு 'அகத்தீஸ்வரர் கோவில்' என்றே பெயர் அமைந்திருக்கும்.

    அகத்தியர் சித்தர்களின் தலைவராகப் போற்றப்படுவது போல, பெண் சித்தர்களின் தலைவியாக அகத்தியரின் மனைவி லோபமுத்ரா போற்றப்படுகிறார். அகத்தியருக்கும், லோபமுத்ராவிற்கும் திருமணம் நடந்த இடமாகவே திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் திகழ்கிறது.

    ஒரு தலைசிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டும் என்று லோபமுத்ரா சபதம் எடுத்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்காக, அகத்தியர் பல்வேறு விதமான உபதேசங்களை, லோபமுத்ராவுக்கு வழங்கினார். அதன் முடிவாக, தான் எதிர்பார்த்த தலைசிறந்த சிவடினயார் அகத்தியர் என்பதை லோபமுத்ரா உணர்ந்துகொண்டார். அதன் பிறகு அவர்கள் இருவரும் இங்கு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

    30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது 'அகத்தீசாய நமக' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.

    ×