search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • 80 வயதை கடந்த வைணவ பாகவதர்கள் பங்கேற்று 10 நாட்கள் நாலாயிர திவ்விய பிரபந்த சாற்றுமுறை பாடல் நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர்.
    • தினமும் 1,000 பாடல்கள் வீதம் பாடி நித்திய கல்யாண பெருமாளை போற்றி பாடுகின்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் 62-வது தலமாக திகழும் இந்த கோவிலில் 10 நாள் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாள் விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நித்திய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். திருவிடந்தையில் முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி முன்னதாக வைணவ ஆகம முறைப்படி பஞ்ச கவ்விய அபிஷேக பொருட்களால் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவையொட்டி மாமல்லபுரம் குலசேகரஆழ்வார் ராமானுஜர் மடம் சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ணராமானுஜதாசர் சுவாமி தலைமையில் 80 வயதை கடந்த வைணவ பாகவதர்கள் பங்கேற்று 10 நாட்கள் நாலாயிர திவ்விய பிரபந்த சாற்றுமுறை பாடல் நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். தினமும் 1,000 பாடல்கள் வீதம் பாடி நித்திய கல்யாண பெருமாளை போற்றி இவர்கள் பாடுகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் உற்சவதாரர்கள், திருவிடந்தை ஊர் பஞ்சாயத்தார், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் உளிட்டவை நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புகழ் பெற்ற பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆதி கேசவ பெருமாளுக்கு 10 நாள் பிரம்மோற்சவமும், ராமானுஜருக்கு 10 நாள் அவதார உற்சவமும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராமானுஜர் 1006-வது ஆண்டு அவதார திருவிழா தொடங்கி 10 நாள் நடைபெற்றது. இதில் யானை வாகனம், குதிரை வாகனம், சூரிய பிரபை வாகனம் உளிட்ட வாகனங்களில் ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராமானுஜர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    சிம்ம வாகனத்திலும், ஷேச வாகனம், ஹம்ச வாகனத்திலும், கருட வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியாளித்தார். பிரம்மோற்சவதின் 7-ம் நாளான நேற்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

    மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், உளிட்டவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • சிலர் கோழிகளை கோவில் மேல் விட்டு நேத்திக் கடனை செலுத்தினர்.
    • நாளை வேலங்காடு கிராமத்தில் வீதி உலா நடக்கிறது.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பொற்கொடி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமை புஷ்பரத ஏரித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை வேலங்காடு, பனங்காடு, வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம் ஆகிய நான்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு ஏரியில் உள்ள பொற்கொடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவை முன்னிட்டு வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், கணியம்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ,சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே ஏரியில் குவிந்தனர். தொடர்ந்து நேற்று பக்தர்கள் ஆடு, கோழிகளை கோவில் முன்பு பலியிட்டும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    ஏரித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பரத தேரோட்டம் மாலை 4.30 மணி அளவில் நடந்தது. விழா குழுவினர் புஷ்பரதத்தை விரைவில் ஏரிக்கு கொண்டு வர வேண்டுமென ஒலிபெருக்கியில் அறிவித்தும் அண்ணாச்சி பாளையம் கிராம மக்கள் உடனடியாக புஷ்பரதத்தை ஏரிக்கு கொண்டு வராததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக வந்ததால் கடும் வெயிலில் பக்தர்கள் தவித்தனர்.

    காப்புக் கட்டி விரதம் இருந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலங்கரிக்கப்பட்ட புஷ்பரத தேரை தோள் மீது சுமந்தபடி ஏரிக்குள் கொண்டு வந்தனர். காலதாமதமாக ஏரிக்கு தேர் வந்ததால் வேலங்காடு கிராம மக்கள் தோள் மீது சுமந்து வந்த பக்தர்களை அப்புறப்படுத்திவிட்டு டிராக்டரில் புஷ்ப ரதத்தை அமர வைத்து ஏரி கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தாமல் வேலங்காடு கிராமத்திற்கு சென்றது.

    தரிசனம் செய்ய கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை சுற்றி வந்தும், அம்மனுக்கு கற்பூரம் ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். மேலும் தேர் மீதும், கோவில் மீதும் உப்பு, மிளகு, நாணயம் உள்ளிட்டவைகளை சூறையிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். சிலர் கோழிகளை கோவில் மேல் விட்டு நேத்திக் கடனை செலுத்தினர்.

    விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு எந்த நோயும் தாக்கக்கூடாது என்பதற்காக கால் நடைகளை அழைத்து வந்து ஏரியில் உள்ள பொற்கொடி அம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி வந்தனர்.

    பச்சை ஓலைகளை கட்டிக்கொண்டு சாரை சாரையாக மாட்டு வண்டிகளிலும், டிராக்டர்களிலும் பக்தர்கள் வந்தனர். திருவிழாவையொட்டி 50-கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வழிநெடுகிலும் பச்சைஓலை குடில் அமைத்து விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு நீர், மோர், பானம், கூழ், அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், பழனிமுத்து மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.லட்சுமணன், துணை ஆணையர் க.ரமணி, ஆய்வாளர் சுரேஷ்குமார், தக்கார் சி.நித்யா, வல்லண்டராமம் பொற்கொடி அம்மன் கோவில் செயல்அலுவலர் அண்ணாமலை, விரிஞ்சிபுரம் செயல் அலுவலர் ஸ்ரீதரன், வெட்டுவனம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, மேலாளர் ஆறுமுகம், ஆனந்தன் மற்றும் நான்கு கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து நேற்று மாலை வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத தேர் வீதி உலாவும், இரவு தங்குதலும் நடந்தது. இதை அடுத்து இன்று (வியாழக்கிழமை) பனங்காடு கிராமத்தில் புஷ்பரத வீதி உலாவும், அண்ணாச்சிபாளையம் கிராமத்தில் இரவு தங்குதல், நாளை (வெள்ளிக்கிழமை) வேலங்காடு கிராமத்தில் வீதி உலாவும் நடக்கிறது.

    • அரணாரை மாரியம்மன் கோவிலில் சப்பர தேரோட்டம் நடந்தது.
    • வீதிகளில் பொதுமக்கள் தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவற்றை படைத்து, வழிபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் அரணாரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் மாவிளக்கு வழிபாடு கடந்த 7-ந் தேதியும், தீமிதி திருவிழா நேற்று முன்தினமும் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சப்பர (சகடை) தேரோட்டம் நடந்தது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு, கோவிலில் இருந்து சகடை புறப்பட்டது.

    முக்கிய வீதிகளின் வழியாக சகடை இழுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. வீதிகளில் பொதுமக்கள் தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவற்றை படைத்து, வழிபட்டனர். அலங்காரம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரவி அய்யர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருவிழா கிராமக்குழு தலைவர் மணி, நிர்வாகிகள் சிவபிரகாசம், பிரபாகரன், வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ் மற்றும் கோவில் பூசாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எசனையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள காட்டுமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின்போது ஏகாந்தசேவை, அன்னம், சிம்மம், பள்ளி கொண்ட காட்சி, சூரியன், சந்திரன் பிரபை ஆகிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும், கடந்த 7-ந் தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

    நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜை, வெட்டுங்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தன.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பெரியசாமி, செல்லமுத்து, லோகுநல்லுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள், ஆய்வாளர் தீபாதேவி, வேணுகோபாலசுவாமி கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தாரை, தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் எசனை கடைவீதியில் இருந்து புறப்பட்ட தேர் புதுப்பிள்ளையார் தெரு, வேணுகோபாலசுவாமி, அக்ரகாரம், சிவன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் எசனை, அரும்பாவூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர், கோனேரிபாளையம், வேப்பந்தட்டை, தொண்டபாடி, அனுக்கூர், பெரம்பலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

    • இன்று இரவு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
    • 12-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 6-ந்தேதி கருட சேவை- கோபுரவாசல் தரிசனம், ஏகாந்த சேவை, அம்சவாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

    விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அனுமந்த வாகனம் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளல், காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 12-ந்தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரியும், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • 26 ந் தேதி கம்பம் போடப்பட்டு4-ந் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜை , மறு அபிஷேகம் நடைபெற்றது.
    • கிராம பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம். கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா மற்றும் வித்தகச் செல்வி உடனமர் விக்ரம சோழீஸ்வரர் கோவில் தேர் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும் இந்த கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி ,அதைத்தொடர்ந்து 26 ந் தேதி கம்பம் போடப்பட்டு4-ந் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜை , மறு அபிஷேகம் நடைபெற்றது.

    வித்தகச்செல்வி உடனமர் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 28-ந் தேதி தேர்முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.அதை தொடர்ந்து இந்த மாதம் 1ந் தேதி அன்று கொடியேற்றம், 4-ந் தேதி திருக்கல்யாண மகோற்சவம், தேரோட்டம் நடைபெற்றது.இந் நிகழ்ச்சியில் கண்ணபுரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை வீதிஉலா மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 8-ந்தேதி யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    இக்கோவிலில் தைப்பூசம், ஆவணி, மாசி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் 11 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இடும்பன், பூத, ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக வள்ளி-தேவசேனாவுடன் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷம் எட்டுத்திக்கும் ஒலிக்க தேரை வடம் பிடித்தனர்.

    மேலும், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும், சுவாமிமலை பேரூராட்சி சார்பில் விழாவை காண வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, நாளை 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதிஉலா மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    • கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    இக்கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தேவநாத சுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஹம்ச வாகனம், சூரிய பிரபை, வெள்ளி சிம்ம வாகனம், யாளி வாகனம், அனுமந்த வாகனம், ஸ்ரீ வேணுகோபாலன் சேவை, தங்க விமானம், சேஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (வெள்ளிக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 4.50 மணிக்கு மேல் 5.20 மணிக்குள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் முக்கிய வீதிகளில் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் முக்கிய வீதியில் சாமி வீதி உலா நடைபெற்று பின்னர் நிலையை வந்து அடைந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. மேலும் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரவு பானக பூஜையும், 6 -ந் தேதி மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 7- ந் தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மீண்டும் இன்று மாலை தேரோட்டம் நடந்தது.
    • பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்ததால் பாதி வழியிலேயே தேர் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தேரோட்டம் நடைபெறுகிறது.கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக தேர் வந்து நிலையை வந்தடைகிறது. நாளை (6-ந்தேதி) இரவு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் கோவில் கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.
    • மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககி ரியில் உள்ள சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    தினசரி இரவு சாமி அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அன்னபக்ஷி, சிங்கம், அனுமந்தம், கருடம், சேஷம், யானை ஆகிய வாகனங்களில் வீதி உலா நடந்தது.

    7-ம் நாள் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதி உலா, 9-ம் நாளான நேற்று காலை சாமியை தேருக்கு கொண்டு சென்று அபிஷேக ஆராதனை செய்தனர். மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    தொடர்ந்து பெரிய தேரில் சென்னகேசவ பெருமாள் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான டி.எம்.செல்வகணபதி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேர்வீதி, மலையடிவாரம், முஸ்லீம்தெரு வழியாக இழுத்து சென்று, நிலை நிறுத்தினர். திருத்தேர் உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடன் சென்னகேசவப் பெருமாள் அருள்பாலித்தார்.

    விழாவில் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, ஆர்.டி.ஓ(பொ) தணிக்காசலம், டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், தாசில்தார் அறிவுடைநம்பி, சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி, துணைத்தலைவர் அருண்பிரபு, செயல்அ லுவலர் சுலைமான்சேட், அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரன், திருவிழா ஆலோசனை குழுவினர் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரம், சங்ககிரி லாரி உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், பக்காளியூர் சரவணன், சண்முகசுந்தரம் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது.
    • மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ தர்ம சம் வர்த்தினி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவிதி உலா நடந்து வந்தது. நேற்று காலையில் அம்பாள் ரதத்திற்கு எழுந்த ருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், தக்கார் நந்தகுமார், ஆய்வர் கீதா மணி, பஸ் அதிபர் பரந்தா மன், நாயுடுகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜூ, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சங்கத்தினர் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேர் கதர்க்கடை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென்று மழை கொட்டியது. இருப்பினும் பக்தர்கள் மழையில் நனைந்து கொண்டே தேரை இழுத்துச் சென்றனர். நேற்று கடைவீதியில் பூக்கடை சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. இன்று மாலையில் தேரோட்டம் தொடர்ந்து நடக்கிறது. 8-ந் தேதி சத்தாபரணமும், 9-ந் தேதி வசந்தோற்சவமும் நடக்கிறது.

    ×