search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது.
    • 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். பின்னர் திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அதிகாலை 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து வருகிற 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட் டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொரிதல், சித்திரை தேரோட் டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    வேறு எந்த கோவிலிலும் காண முடியாதபடி இந்த கோவிலில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவங்கள் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமலும் பக்தர்களை காத்து வருகிறார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.

    பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வசக்தியையும் பெற்று, படைத்தல் (கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல் (ரிஷப வாகன காட்சி 5-ம் திருநாள்), அழித்தல் (திருத்தேர் 10-ம் திருநாள்), மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் 11-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம் 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிந்து வருவதாக புராண மரபு கூறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 10-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியாக சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை தலையில் சுமந்து தாரை, தப்பட்டைகள் முழங்க நேற்றிரவு முதல் இன்று காலை வரை சமயபுரத்திற்கு ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சமயபுரம் முழுவதும் பக்தர்கள் தலைகளாகவே காணப்பட்டன.

    தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையத்தை அடைந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.

    திருச்சி மாநகர நாடார் நற்பணிக்குழு சார்பில் சமயபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

    11-ம் திருநாளான நாளை அம்மன் வெள்ளிக்காமதேனு வாகனத்திலும், 12-ம் திருநாளன்று முத்துப்பல் லக்கிலும் வீதியுலா நடக்கிறது. விழாவின் 13-ம் நாளான வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 12 மணிக்கு மேல் பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளி இரவு 8 மணிக்கு தெப்போற்சவம் நடைபெறுகிறது. இந்த சித்திரை தேர்த்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார்.
    • 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று இரவு (திங்கட்கிழமை) அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட கோவிலை சுற்றியுள்ள இடங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலே சமயபுரம் வந்து குவிய தொடங்கினர்.

    முன்னதாக தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை உடுத்தி கடும் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப குளத்தில் புனித நீராடி, அங்கிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து சென்று கோவிலுக்கு முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலை வலம் வந்த அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் லால்குடி துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தெப்பகுளம், சமயபுரம் சந்தைகேட் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை தொடர்ந்து வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது
    • முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-போக்குவரத்து மாற்றம்

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு சிம்ம, பூத, அன்ன, ரிஷப, யானை, சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (18-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர்த்தேக்கத் தொட்டி வைக்கப்பட்டு வருவதுடன், தேர் சக்கரங்கள் முழுவதும் வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள் சரிசெய்யப்படுகிறது.நாளை மறுநாள் (புதன்கிழமை) அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாதரனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி செய்து வருகின்றார்.

    இதனையடுத்து தேர் திருவிழா முன்னிட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பெட்டவாத்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாக செல்லவேண்டும். சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து திருச்சிக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களும் இதே வழியில் வரவேண்டும்.

    திண்டுக்கல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறையில் இருந்து ஆண்டவர் கோவில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.மதுரை மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர் கோவில் சோதனை சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக செல்லவேண்டும்.

    திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் 'ஒய்' ரோடு சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை ஜங்ஷன், திருப்பட்டூர் கட் ரோடு, சிறுகனூர் ஜங்ஷன் வழியாக சென்னை சாலையை அடைய வேண்டும். சென்னையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சிக்கு வரவேண்டும்.

    சென்னை சாலையில் இருந்து வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர் ஜங்ஷன், லால்குடி ஜங்ஷன், கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதுப்பாலம் வழியாக திருச்சியை அடையவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    • பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
    • அக்னி சட்டிகளை ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12.15 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் திருச்சி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் 100-க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு வெக்காளியம்மன் கோவிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    • மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது.
    • தேருக்கு முன் பல்வேறு இசைக்கருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் பழமை யான மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவில் கடந்த மாதம், 28-ந்தேதி தேர்த்திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம், மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:15 மணிக்கு, சூலத்தேவருடன் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். மாரியம்மன் கோவிலில், 500 ஆண்டு பழமையான தேர் இருந்தது. நடப்பாண்டு, பழைய தேருக்கு பதிலாக, புதிதாக எண் கோணவடிவத்தில், அற்புத வேலைப்பாடுகளுடன், அகலம் மற்றும் உயரம் அதிகம் கொண்ட பிரமாண்ட தேர் வடிவமைக்கப்பட்டு, புதிய தேரில் சுவாமி திருத்தேரோட்டம் நடந்தது. மாலை, 4:10மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கப்பட்டது. பக்தர்களின் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழங்க அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் நீல பட்டு உடுத்தி ரத்தினக்கல் ஆபரண ங்களுடன் சூலத்தேவருடன் எழுந்தருளிய அம்மன் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேருக்கு முன் பல்வேறு இசைக்க ருவிகள், வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் பாரம்பரிய நடனம் என களைகட்டியது.

    தேரை முன்னே பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பின்னால் மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்ட 'குஷ்மா' யானை, தேரை நகர்த்தி பக்தர்களுக்கு உதவியது. தேரோட்டத்தை முன்னிட்டு, நீர் மோர் பந்தல், அன்னதானம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் என நகரம் விழாக்கோலமாக காணப்பட்டது. தேரோட்ட த்தை பொள்ளாச்சி பாராளு மன்ற தொகுதி சண்முக சுந்தரம் எம்.பி., மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம், அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி என்ற சுப்பிரமணியம், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர்.அட்சயா திருமுருக தினேஷ் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி, பன்னீர்செல்வம்,பிரேம்குமார்,அன்பரசன் பாலகிருஷ்ணன், கனகராஜன், ரவிக்குமார், மதுரை கிருஷ்ணன், பழனிச்சாமி, ஹரி கிருஷ்ணன், ராமராஜ் ராமானுஜதாசன் அறங்காவலர் தலைவர், செவ்வேள், சிவக்குமார், நியூ மேன், பினில், ராம்குமார், அருண்குமாரி வடுகநாதன், ரமேஷ், சதீஷ்குமார், ஜெயக்கனி, மஞ்சுளா தேவி, செல்வநாயகம், ஏவிஎம் தங்கமணி, கிருஷ்ணன் கலையரசன், கஜேந்திர பட்டாச்சாரியார் ,கண்ணன் திருச்சி ஸ்டீல், ஜஸ்டின் ராஜா, சதீஷ், கொக்கரக்கோ குழுமம், நூர் முகமது, கன்னியப்பன், கோபாலகிருஷ்ணன் பார்த்தசாரதி, ஆரியபவன் குடும்பத்தார்கள், திருமூர்த்தி ,ஜே வி ஏஜென்சீஸ்,முபாரக் அலி, குருவாயூரப்பன் பில்டர்ஸ், சலீம், ஹர்ஷா டைல்ஸ் சந்தான விக்ரம், ரஞ்சித் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 15-ந்தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு நடக்கிறது.
    • 16-ந்தேதி கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பதுமை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாவிளக்கு திருவிழாவும், காவடி, பால்குடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நாடியம்பாள் மகா ரகத்தில் பட்டுக்கோட்டை பக்தர்கள் மத்தியில் வீதி உலா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்கின்றனர்.

    தேர் திருவிழா முடித்து தேரில் இருந்து அம்பாள் இறக்கி கோவிலுக்கு வந்து காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 15-ந்தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும். இத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • தேர் ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் பங்குனி பெருவிழா கடந்த 4-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன்அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    பேர் சொல்லும் சாலைகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு நித்தியல் கோஷ்டியும் நடந்தது. அதனை தொடர்ந்து கோவில் கொடிபட்டம் நான்கு மாடவீதிகளில் சுற்றிவரப்பட்டது.

    10.30 மணிக்கு தங்கத் தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் திருவீதி உலா நடைபெற்றது. 10.45மணிக்கு வேதபாராயணம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, தேவராஜன், திருவேங்கடத்தான், கண்ணன், ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    11.45 மணிக்கு மனவாள மாமுனி சன்னதியில் நாலாயிர திவ்ய பிரபந்தம், தீர்த்த வினியோக கோஷ்டியும் நடந்தது. மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், 7 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடும் நடந்தது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும், தங்க மசகிரியில் திருமஞ்சனம், தீர்த்தவாரி வினியோக கோஷ்டியும், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், ஷேச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் திருநாளான காலை 9.30 மணிக்கு கள்ளபிரான், ஸ்ரீ காசினி வேந்தபெருமாள், விஜயாசனபெருமாள், சுவாமிகள் நம்மாழ்வார் மங்களாசாசனமும் நடைபெறுகிறது. கோவிலில் இருந்து கருட வாகனத்தில் நான்கு சுவாமிகளும் புறப்பட்டு இரவு 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேடைப் பிள்ளையார் கோவில் முன்பு கருடவாகனங்களில் கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீ பொலிந்து நின்ற பெருமாள், ஸ்ரீ காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் சுவாமிகள் 4 கருட வாகனத்தில் குடைவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர் சேவை நடக்கிறது.

    விழாவின் சிகர நாளான 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு பெருமாள் கொடிமரம் சுற்றி எழுந்தருளலும், 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளலும், 9.10 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலுடன் தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு வெற்றிவேர் சப்பரத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    • 15-ந்தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
    • 16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் திருநாளான நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இன்று ஆகாச ஊரணியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முன்னதாக சத்தியமங்கலம், நார்த்தாமலை, அன்னவாசல், கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து மாலை 3.20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5.50 மணியளவில் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகாச ஊரணியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    • 3-ந்தேதி சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

    மதுரை

    மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடக்கும் 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் மாசி வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது. நான்கு மாசி வீதிகளில் நடக்கும் தேரோட்டத்தை காண மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குவிவார்கள்.

    தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என கருதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துக்கு முன்பு தேரடி வீதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முகூர்த்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

    ×