search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • “ஓம் நவசிவாய” என்ற மந்திர உச்சரிக்கவேண்டும்.
    • சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும்.

    இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

    மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

    1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக்குறிக்கும்.

    2. லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

    3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

    4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

    5.எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

    6.வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

    இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

    வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.

    ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ரநாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக்கொண்டும் பூஜிக்கலாம்.

    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அன்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

    சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.

    • அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும்.
    • தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும்.

    ராத்திரி என்ற பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும்.

    இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.

    அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த ராத்திரி மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

    உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமாதேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

    சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது.

    சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.

    முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

    முதலாவது அபிஷேகம். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது.

    அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.

    மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவதையும் குறிக்கும்.

    நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல்வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து முழுதிருப்தி அடைய முடியும்.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைச்சு மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

    மறுநாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்துச் சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவசிந்தனையோடு கோவிலுக்குப் போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

    அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

    தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுகிறது? சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

    வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ. மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    • சிவ லிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது.
    • சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.

    அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப்பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம். ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.

    சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடை பெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது. சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும்.

    நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பலாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார். கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

    வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எரிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவ லிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

    வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

    இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.

    • தானத்தில் சிறந்தது அன்னதானம்.
    • அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது.

    இன்று (வியாழக்கிழமை) ஷட்திலா ஏகாதசி ஆகும். ஷட் என்றால் ஆறு என்ற பொருள். தில என்றால் எள் என்று பொருள்.

    ஆறு வகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்தி இருப்பது ஷட்திலா ஏகாதசி. இந்த ஏகாதசி நிறைவின் போது (துவாதசியில்) அன்னத்தை அளிப்பதன் மூலமாக பெரும் பலனை அடைய முடியும்.

    தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னதானம் செய்து அற்புதமான பலன்களை அடைவதற்கான ஏகாதசி விரதத்தில் ஒன்று ஷட்திலா ஏகாதசி. ஆனால், இந்த அன்னதானத்தை ஏகாதசி அன்று செய்யக்கூடாது. துவாதசி அன்று செய்யவேண்டும்.

    இந்த மாதம் ஏகாதசி விரதம், குரு வாரத்தில் வருகிறது. அதாவது பசிப் பிணி தீர்ப்பதற்கு வழி சொன்ன குருவின் தினமாகிய வியாழக்கிழமை இந்த ஏகாதசி விரதம் வருவது மிக மிகச் சிறப்பு.

    • ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

    பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.  நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான். பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

    ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம்.

    சர்வ ஏகாதசி நாளான நாளை, பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது. 

    இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும்.

    ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

    புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

    • பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார்.
    • அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

     

    சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

     

    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

    ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

    சிவ ரூபத்தில் இருக்கும் பைரவருக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் தயிர் சாதம். தயிர் சாதத்தை நைவேத்யமாக செய்து கொண்டு கோவிலுக்கு சென்று பைரவருக்கு படைக்கலாம். அது போல் பைரவருக்கு செந்நிற மலர்கள் மிகவும் பிடித்தமானவை. செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களில் இருந்து நீங்கி அதிர்ஷ்டமான யோகங்களை பெறலாம்.

    பைரவருக்கு மிளகு முட்டை வைத்து தீபம் ஏற்றினால் தீராத எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாக தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அதுபோல் ஒரு முழு எலுமிச்சையை அவருடைய திருவடியில் வைக்கப்பட்டு பின்பு அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறி நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கும். இதனால் வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி ஒற்றுமை ஓங்கும்.

    ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரை வீட்டில் நாணயத்தால் அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட்டால் வருமானம் பெருகும். செல்வ வளம் அதிகரிக்கும். இத்தகைய பலன்களை நல்கும் பைரவரின் அருள் கிடைத்தால் வாழ்வில் யோகம் தான். அதனால் நாளைய நாளை தவற விட்டுவிடாதீர்கள். பைரவரை வணங்கி நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

    • இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது.
    • இன்று விரதம் இருந்து தானம் செய்வது சிறப்பானது.

    இன்று பானு சப்தமி தினமாகும். ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு சப்தமி. இந்த நாள் சூரிய கிரகண நாளுக்கு இணையானது. அதாவது பானு சப்தமி நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை காட்டிலும் சுமார் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தை தரக்கூடியவை.

    இன்று காலையில் புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய இருதயம் போன்ற சூரிய மந்திர பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பட்சணங்களை தருவதும், தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளை பெற்றுத் தரும். மேலும் கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும்.

    விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்வது நல்ல பலன்கள் கிடைக்க உதவும்.

    • எல்லா விரதங்களையும் விட சிறப்பானது இந்த மௌன விரதம்.
    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது மௌன விரதம் இருக்கலாம்.

    மௌனவிரதம் இருப்பதில் இரண்டு நன்மைகள் நமக்கு நடக்கின்றது. ஒன்று, செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும். புதியதாக அந்த சமயத்தில் நாம் பேசி வரக்கூடிய பாவங்களை வர விடாமல் தடுக்கும். எல்லா விரதங்களை விட சிறப்பான விரதம் இந்த மௌன விரதம் தான்

    தினமும் வரக்கூடிய ராகுகால நேரம் என்பது 1 1/2 மணி நேரம். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ, அது பலிதம் ஆகும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.

    ராகு கால வேளையில் தானே தீராத கட்டத்திற்கான வேண்டுதலை துர்க்கை அம்மனிடம் வைத்து, பிரார்த்தனை செய்கின்றோம். அந்த சமயத்தில் நாம் வைக்கும் வேண்டுதல் விரைவாக பலிக்குதா? இல்லையா? முடிந்தவரை இந்த ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு திட்ட எதிர்மறை எண்ணங்களையும் உங்களுடைய மனதிற்குள் கொண்டு வரவே கூடாது.

    நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இந்த ராகுகால சமயத்தில் மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. வெளியில் சென்று வேலைக்கு செல்பவர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், அந்த ராகு கால சமயத்தில் அனாவசியமான பேச்சை தவிர்த்துக் கொள்ளலாம். அந்த சமயத்தில் அம்மன்களின் பெயரையோ அல்லது 'ஓம் சக்தி' என்ற மந்திரத்தையும் மனதிற்குள் உச்சரித்துக் கொள்வது நமக்கு பல நன்மையை தேடித்தரும்.

    நீங்கள் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் உங்களுடைய பாவங்களை குறைப்பதற்கும் இந்த ஒன்றரை மணி நேரம், முடிந்தால் மௌன விரதம் இருக்கலாம். மௌன விரதம் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் நல்ல பலன் உண்டு என்பது மட்டும் உறுதி. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது இந்த மௌன விரதத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.)

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த ஞாயிற்றுக் கிழமையில் 4.30 யிலிருத்து 6 மணி வரை ராகு காலமாகும். அந்த தினத்தில் பிரதோஷ காலமும் சேர்ந்து வரும் பட்சத்தில், அந்த 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் மௌன விரதம் இருந்து, எந்த வேண்டுதலை எம்பெருமான் இடமும், சக்திதேவி இடமும் வேண்டி கேட்டுக் கொண்டால், உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

    • கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.
    • விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது.

    இறைவனின் அருளை பெற பக்தர்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் விரதம் என்பது அனைத்து தெய்வத்துக்கும் ஒன்றாக உள்ளது. தேவர்களில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரதர், விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகிறது.

    முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும் என்றால் பக்தர்கள் கீழ்கண்ட முறையில் விரதம் இருக்க ஆன்மிக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    கார்த்திகை நட்சத்திரத்துக்கு முதல்நாள் வரும் பரணி நட்சத்திரத்தன்று இரவில் உணவு உண்ணாமல் இருந்து, மறுநாள் அதிகாலையில் நீராடி, அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடவேண்டும். அன்று பகல் முழுவதும் விரதம் இருந்து முருகப்பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

    மாலையில் வீட்டில் முருகப் பெருமான் திருவுருவப் படத்தை அலங்கரித்து, தீபம் காட்டி, அரிசியும், துவரம்பருப்பும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பொங்கலை நைவேத்தியம் செய்து, அந்தப் பொங்கலையே பிரசாதமாக உண்டு விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

    • விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
    • பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்றும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.

    இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறைகிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாமும் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.

    • உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
    • கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.

    கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.

    அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.

    • பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
    • வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். பவுர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த பவுர்ணமி ஒளிமயமான தினத்தில் விரதம் இருந்து அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பவுர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் விரதம் இருந்து இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும். பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது. அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

    உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

    தை மாதம் வரும் பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ×